திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம் - எமது தலையங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014 (சனிக்கிழமை)
திரு.றஞ்சனதாஸ் - வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம்
மனித வாழ்வில் ஒருவரின் அருமை அவரின் இழப்பின் பின் தான் உணரப்படுகின்றது. அதுவும் அவர் ஒரு தன்னலமற்ற சேவையாளனாக இருந்தால் இன்னும் உணரப்படுகின்றது.
வைஸ்வா (Vaiswa) எனப்படும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் உருவாக்கத்திற்கும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் இறுதி நாள்வரை பங்காற்றியிருந்தவர் திரு.காத்தாமுத்து றஞ்சனதாஸ் அவர்கள். நேற்று முன்தினம் 13/02/2014 அன்று மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ள திரு.றஞ்சனதாஸ் அவர்கள் வைஸ்வாவின் தலைவர் என்ற தலைப்புக்கு அப்பால் நின்று வைஸ்வாவிற்காக உழைத்தவர்களில் முதன்மையானவர்.
இலங்கையிலே ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கென முதலாவதான வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்த பொழுது ஏற்பட்ட இடர்களைக்கண்டு பின்வாங்காது, சங்கத்தை ஒரு உத்தியோக பூர்வ நிறுவனமாகப் பதிவுசெய்து, அதனை CINEC (Colombo International Nautical and Engineering College) அடையாளம் காணுவதற்கும் முன்நின்றவர் திரு.றஞ்சனதாஸ் அவர்கள்.
CINEC இதனுடைய யாழ் கிளையின் தொடர்ச்சியான தொழிற்பாடுகளுக்கு கருத்தரங்குகள், புதிய மாணவர்களைச் சேர்த்தல், அறிவிப்புக்கள், ஆரம்பப் பயிற்சி வகுப்புக்கள் என பல வழிகளில் உதவியிருந்தார். மேலும் ஆரம்ப காலங்களில் கப்பலில் பொறியியலாளராக பணிபுரிந்திருந்த அனுபவங்களால் CINEC (யாழ் கிளை) இல் ஒரு பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.
கப்பலை விட்டு இறங்கி வெளிநாடுகளில் தஞ்சம் கோருதல் (Jump ship), உயர் கல்வித் தகமை, ஆங்கிலமொழி அறிவு போன்ற காரணங்களால் எம்மூர் இளைஞர்களுக்கு (புதியவர்களுக்கு) கப்பல் வேலை வாய்ப்புக்களில் தடங்கல்கள் இருந்து கொண்டிருந்தபோதிலும் சில இளைஞர்களையாவது இத் துறையில் புகுத்துவதற்கு காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் திரு.றஞ்சனதாஸ் அவர்கள். மேலும் வல்வை இளைஞர்கள் மட்டுமல்லாது யாழ்பாணத்தைச் சேர்ந்த வேறும் சில இளைஞர்கள் இத்துறையை அறியக்காரணமாக இருந்திருந்தார்.
இறுதி வரை கப்பல் துறையை மேலும் வளர்ப்பதற்கு அயராது பாடுபட்டுக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், பிந்திய நாட்களில் வைஸ்வா – கப்பல் துறை என்பதற்கு அப்பால் சென்று, வல்வையில் இளைஞர்களை வேறு துறைகளிலும் உட்செலுத்துவதற்கு, VEDA வுடன் இணைந்து செயல் ஆற்றிக் கொண்டிருந்தார். தற்பொழுது வல்வையில் நடாத்தப்பட்டுவரும் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு (Manual Textile screen printing) இதன் ஒரு முயற்சியேயாகும்.
இவற்றை விட ஆலயத் திருப்பணிகளிலும், குறிப்பாக நெடியகாடு. திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தர்மகர்த்தாசபையில் அங்கம் வகித்து அவ் ஆலயத்தின் திருப்பணிகளிற்காகவும் தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருந்தவர்.
இவ்வாறாக - மாலைகளை எதிர்பாராமல், தற்புகழ்களுக்கு அப்பால் நின்று, தன்னை எங்கும் முதன்மைப்படுத்தாமல், சர்ச்சைகளை வளர்க்காமல் – ஒரு உயரிய உன்னதமான சேவையை செய்துள்ளார் .
இவர் எங்கள் எல்லோருக்கும் ஒரு உதாரணம்.
திரு.றஞ்சனதாஸ் அவர்கள் வல்வையின் குறிப்பேட்டில் ஒரு பக்கம் என்பது நிதர்சனம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.