மணலுக் கிணற்றுக்கு ஆபத்து நெருங்குகிறதா ? - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2022 (வெள்ளிக்கிழமை)
மணலுக் கிணற்றுக்கு ஆபத்து நெருங்குகிறதா ?
வல்வையூர் அப்பாண்ணா
"தாசிந்தான் கலட்டி" என்பது சிவன் கோவிலையும் - சிவன் கோவில் சார்ந்த கற்கண்டங்களுடனான சுற்று வீதியையும் குறிப்பன போன்று, "தாசிந்தான் மணல்" என்பது அம்பாள் திருக்கோவிலையும் – மணல் சார்ந்த வீதிகளையும் குறிக்கும்.
"தாசிந்தான் மணல் தாயே மகமாரி" எனும் வாசகத்தில் உள்ள "மணல்" என்ற சொல்லே கிணற்றின் பெயராகி "மணலுக் கிணறு" என்று இன்றுவரை வழங்கி வரலாயிற்று. இது "மணற் கிணறு" என்று அழைக்கப்படும்.
எமது பேரன் பூட்டன் ஆகியோர் எமக்குச் செல்லிய தகவல்களின்படி காடு மண்டிக் கிடந்த அம்பாள் கோவிலின் ஸ்தாபித காலம் (1795) முதலே பாதையின் வடகிழக்கு மூலையில் மணலுக் கிணறு இருந்தது தெரிகிறது. பின்னர் காலத்துக்கு காலம் கோவிலும் மாற்றம் பெற்று – வீதியும் தார் போடப்பட்ட அகன்ற வீதியாக மாறியதும் வரலாறு.
வ.இ.அப்பா மணியமாக இருந்த காலத்தின் போது கோவில் உள்வீதி முற்றாக புனரமைக்கப்பட்டது. அதுவரை உட்பிரகாரத்தில் நிலத்தில் பதிக்கப்படிருந்த 4‘*3‘ சதுர கருங்கற் பாளங்கள் பழைய மணலுக் கிணற்றின் பத்தலிலும் இருந்தது என்பதும் உண்மையானது.
கோவிலின் உள்ளே தீர்த்தக் கிணறு – மடைப்பள்ளிக் கிணறு – கொல்லைக் கிணறு ஆகியவை தோண்டப்படுவதற்கு முன்னர், இந்த மணலுக் கிணற்றிலிருந்துதான் அம்பாளின் திருமஞ்சனத்திற்கு வேண்டிய நீர் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் நமது மூதாதையர் கூறக் கேட்டிருக்கிறோம்.
இக்கிணறு எக்காலமும் துலாக் கிணறாகவே இருந்து வந்து, மிக அண்மைக்காலத்திலேயே கப்பிக் கிணறாக மாற்றம் பெற்றது. அத்துடன் துலாவும், துலா நின்றாடிய பேணும் இல்லாது போயிற்று.
பகலில் குளிர்ச்சியாகவும், இரவில் சூடாகவும் இருப்பது மணலுக் கிணற்று நீரின் சிறப்பம்சமாகும். மார்கழி மாதத்தில் சங்கு ஊதும் நாட்களில் அதிகாலையில் இந்த கிணற்று நீரின் கதகதப்பில் குளித்த அனுபவம் இன்றும் பசுமையாக நிற்கிறது.
துலாவுக்கு சரி வடக்காக இருந்த சிவப்பிரகாசம் வாத்தியாருக்குச் சொந்தமான காணியிலேயே நீண்ட காலமாக தபாற்காந்தோர் இயங்கி வந்தது. கடத்தல் தொழில் மும்மரமாக நடைபெற்று வந்த, கைபேசி இல்லாத அந்த நாளில், தபாற்காந்தோரில் போன் தொடர்புகளுக்கு பதிவு செய்த பின்னர், இரவிரவாக மோர் மடத்திற்கு முன்பாக நம்மவர்கள் காத்துக் கிடந்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.
துலாவின் நின்றாடும் இடம் குப்பை கொட்டப்படும் இடமாக இருந்தமையால், குப்பை மேட்டிற்கு மேய வரும் ஆடு மாடுகளைப் பதம் பார்க்கும் சம்பவங்களும், அவரசரமாகத் தபாற்காந்தோருக்கு ஓடிவரும் சிறுவர்களும் அடித் துலாவால் பாதிக்கப்பட்டதும் உண்டு.
தற்பொழுது உடுப்பிட்டி சர்ச் ஒழுங்கையில் வசித்துவரும் மெம்பர் நவரத்தினத்தின் தகப்பன் தில்லையம்பலம் என்பவரின் வீடு இன்றைய அம்பாள் பேக்கரியின் மேற்குப் புறமாக அமைந்திருந்தது. அதே தில்லையம்பலம் தான் தினமும் அதிகாலை 4 மணிக்கு முதலாவது ஆளாக மணலுக் கிணற்றில் குளிக்க வருவார். அந்த அதிகாலைப் பொழுதில் துலா ஆடத் தொடங்கினால் இரவு 10 மணிவரை துலா ஓயாது சேவையாற்றியபடியே இருக்கும். இரவு சாம வேளை மட்டுமே துலாவுக்கு சற்று ஓய்வு கிடைக்கும்.
சிவகுரு வித்தியாசாலை ஒழுங்கையில் வசித்து வந்த செல்லத்துரை எனும் பெரியவரின் அயாராத முயற்சியினால், மதவடி வீடுகளிலெல்லாம் பொருள் சேர்த்து மணலுக் கிணற்றினை (61-62) முழுமையாக புதுப்பித்தார்.
கிணற்றுக் கட்டினை உயர்த்திக் கட்டி, உட்புறம் முழுமையாகப் பூசி, சுற்றுச் சுவர் வைத்து, கிணற்றுப் பத்தலை உடைத்துச் சீமெந்துத் தரையாக்கி, துலா நின்றாடும் "பேண்" பகுதியினை முழுமையாக புதுப்பித்து, புதிய கிணறு போன்று ஒரு தோற்றம் பெற வைத்தவர் அப்பெரியார்தான் - இன்றும் கிணற்றின் தோற்றம் அந்தப் பெரியவரை நினைவுபடுத்தியபடி உள்ளது.
அதே சிவகுரு வித்தியாசாலை ஒழுங்கையில் அந்நாளில் தில்லைமுத்து ஆசாரி என்பவர் இரும்பு பட்டடைத் தொழில் பார்த்து வந்தார். அதனால் தொழில் நிமித்தம் மிகுந்த அக்கறையுடன் துலாவுக்குக் கம்பி போடும் வேலையை செய்துவந்தார். அவரும் கிணற்றின் பாவனையாளர் என்பதால் – பெரியவர் செல்லத்துரையுடன் இணைந்து கருமங்களைச் செவ்வையாகக் கவனித்து வந்தார்.
மேற்குறித்த தில்லைமுத்து ஆசாரியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த லட்சுமண ஆசாரியும் இணைந்து, கந்தப்பர் வளவினுள்ளே (தற்பொழுது நவரெத்தினம், ஞானவேல் ஆகியோரின் வீடுகள் அமைந்துள்ள இடம்) வைத்து அம்பாள் கோவிலின் கண்டாமணி வார்த்து எடுக்கப்பட்டது. இது 1958 க்கு ஒரு சில ஆண்டுகள் முன்பாக இருக்க வேண்டும். சரியான ஆண்டைக் குறிப்பிட முடியவில்லை.
மணலுக் கிணற்றிற்கு மேற்காக – கிணற்றை அண்டியபடி அகன்று – நீண்டதாக இருந்த தண்ணீர் தொட்டி கால் நடைகள் நீர் அருந்துவதற்குப் பெரிதும் உதவியது. கோவிலின் புற வீதியில் பைப் மூலம் தண்ணீர் பெறப்படுவதற்கு முந்திய காலங்களில் – கொழுத்தும் வெயிலில் அம்பாள் வீதி உலாவரும் திருவிழாக் காலங்களில் தொட்டியிலிருந்து வாளிகளில் நீரினை அள்ளி கோவிலின் வாசற்புறம் – வடக்கு வீதி முழுவதும் நீரூற்றிக் குளிச்சியாக்குவர்.
இப்போதுதான் நான் தலைப்புக்கு வருகிறேன். இத்தனை பெருமை வாய்ந்த மணலுக்கிணறு இன்று உயிராபத்தில் உசாலடிக் கொண்டிருக்கிறது. வீதி அகலிக்கும் பணியினை மேற்கொள்ளும் R.D.A குழுவினர், பிரதான வீதியின் வடப்புறமாக நகரசபை எல்லை தாண்டி தங்கவேல் வீடு வரையிலும் வந்து,கிணற்றினைத் தவிர்த்து, கிணற்றிற்கு கிழக்காக மண்ணைக் கிண்டி அகலப்படுத்தும் வேலை நடைபெற்று வருகிறது.
கிணற்றிற்கு என்ன நடக்கப் போகிறது ? கிணற்றுக்கும் வீதிக்கும் இடைப்பட்ட திண்ணையிலும் – திண்ணையில் அமைந்துள்ள குட்டிக் கோவிலும் முழுமையாக உடைபடும் சாத்தியமே உள்ளது. அதே வேளை கிணற்றுக்குப் பெரிய பாதிப்பின்றி பிளாற் போட்டு சுவர் கட்டித் தரப்படும் என்ற எதிர்பார்ப்பே அனைவரிடமும் உள்ளது.
பழம் பெருமை வாய்ந்த மணலுக்கிணறு அவ்வித மாற்றங்களுடன் தப்பிப் பிழைத்துக் கொண்டால் நமது அதிஷ்டமே. எல்லாம் "அவன்" செயல் யார் "அவன்" R.D.A CHIEF ENGINEER தான் அவன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: February 04, 2022 at 23:04
மணல்கிணறுக்கு இந்த நிலையென்றால் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நின்று பறவைகளுக்கு வீடாகவும் உணவாகவும் மக்களுக்கு தூய்மையான காற்றையும் நிழலையும் தந்து வரும் வேம்படியில் நிற்கும் வேப்பம் மரத்தின் நிலை நினைப்பதற்கே கவலையாக வேதனையாக இருக்கிறது
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.