முச்சந்தி, நடுவில் ஒரு சுற்றுவட்டம். முச்சந்தியின் வளைவில் ஒரு மூன்று தட்டு மாடி வீடு. மாடி வீட்டின் சுவருக்கும் ரோட்டுக்கும் இடையில் சுமார் 5 அடிகள். இந்த 5 அடிக்கு இடையில் நான்கு கம்புகளை நாட்டி, பழைய பொலித்தீன் மற்றும் பழைய துணிகள் கொண்டு தற்காலிமாக அடைக்கப்பட்ட ஒரு வடிவம். குடிசை என்றோ அல்லது கூடாரம் என்றோ பெயரிடக் கடினமான - அவ்வப்போது மறைந்து மீண்டும் துலங்கும் ஒரு வடிவம்.
இதற்குள் ஒரு குடும்பம் குறைந்தது சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கின்றது.
மேலே குறிப்பிட்டுள்ள மாடிவீட்டில் முதலாவது மாடியில் சுமார் 2 வருடங்கள், வெவ்வேறு ஆண்டுகளில், எனது கடல்சார் கற்கை நெறிகளை கற்பதற்காக தங்கியிருந்தேன். இங்குதான் இலங்கையிலிருந்து (சிங்களவர்கள் உட்பட) கடலியல் கற்கைநெறியை கற்கவருபவர்கள் தங்குவது வழக்கம், குறிப்பாக ஊரவர்களும்.
இந்தியாவின் பிரதான வர்த்தக நகரான மும்பாயின் 'சாந்தாகுருஸ்' பகுதியில் அமைந்துள்ளது இந்தப்பகுதி. விமான நிலையம், பிரபல்யமான ஜூகு பீச் மற்றும் அமிதாப்பச்சன் வீடு போன்றவை எல்லாம் இங்குதான் அமைந்துள்ளன. நாங்கள் தங்கியிருந்த காலங்களில், எந்தவொரு பகுதியினரிடம் இருந்தும் எதுவித பிரச்சனைகளும் இன்றி தங்க முடிந்தமையானது எம் எல்லோரையும் இந்த இடத்தின்பால் அதிக விருப்புகொள்ளவைத்திருந்தது.
மும்பாய் – உலகின் பல பாகங்களுக்கும் பல நகரங்களுக்கும் நான் சென்றிருந்தாலும், இன்றும் என்னை ஆச்சரியப் பட வைக்கும் ஒரு நகரம் இது. இலங்கைத் தீவின் முழுச் சனத் தொகைக்கு ஒப்பானோர் இந்த நகரத்தில் வாழ்கின்றார்கள். இதைப்பற்றி இன்னொமொரு பக்கத்தில் எழுத வேண்டும்.
முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு மும்பாய் சென்றேன். நாம் தங்கியிருந்த மாடி வீட்டைச் சுற்றிலும் மாடி வீடுகள், தங்கியிருந்தவர்கள் சராசரிக்கு மேல் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மராத்தியர்களுடன் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகம் அடக்கம்.
இவற்றுக்கு மத்தியில் தான் மேற்குறிப்பிட்ட குடும்பம், ரோட்டு ஓரத்தில் வசித்து வந்தது. முன்னர் படங்களில் இது போன்ற காட்சிகளைப் பார்த்திருந்தாலும் நேரடியாக பார்த்த அனுபவம் சிலிர்க்க வைத்தது.
நீண்ட நேரம் அறைக்குள் அடைபட்டுப் படிக்க முடியாது என்பதாலும் மன ஆறுதலுக்காகவும் பெருமளவு நேரத்தினை பல்கனியில் களிப்போம். கண்ணுக்கு குளிர்மையாகவும் இருக்கும். பல்கனியில் இருந்து படிப்பதும் வழக்கம்.
இவ்வாறு நீண்ட நேரம் பால்கனியில் பொழுதைக் கழித்ததால், வீதியில் வசித்து வந்த அந்தக் குடும்பத்தைப் பார்ப்பதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும் எம்மிடையே தவிர்க்க முடியாத ஒன்றாகியிருந்தது.
கணவன், மனைவி, கணவன் தாய் தகப்பன் தங்கை, சுமார் 60 வயதுமிக்க மூதாட்டி - இவர்கள் தான் இந்தக் குடும்பத்தின் நிரந்தர உறுப்பினர்கள். இவர்கள் எவரினதும் பெயர் சரியாகத் தெரியாததால், மனைவிக்கு 'மாதுரி' என்றும், கணவனுக்கு 'சுனில் செட்டி' என்றும், தங்கைக்கு 'மனிசா' என்றும் எம்மவர்கள் பெயர் வைத்திருந்தார்கள். ஏனையவர்களை இவர்கள் மூவரின் பெயரை உறவுமுறையுடன் குறிப்பிட்டுக் கதைத்து வந்தோம்.
குறைத்த காரணப் பெயர்களை நகைப்புக்காக வைக்கவில்லை, எம்மிடையேயான உரையாடலுக்காகவே சூட்டியிருந்தோம்.
நான் (உறவினன் பாலராஜனும்) முதன்முதலில் அங்கு சென்ற பொழுது, மாதுரி நிறைமாதக் கர்ப்பிணி. ஓரிரு மாதங்களில் பிள்ளையும் பிறந்தது. பிள்ளைக்கு ஒரு நாள் குளியல், 11 ஆம் நாள் நிகழ்வு எல்லாம் ரோட்டில் தான்.
பிள்ளை பிறந்து ஓரிரு நாட்கள் கழிந்து பிள்ளையை குளிப்பாட்டினார்கள். அதற்குரிய தண்ணீரை ரோட்டின் அடுத்த பக்கத்தில் - வாய்க்கால் அமைந்திருந்த பள்ளத்தில் இருந்த ஒரு குழாய் ஒன்றிலிருந்து எடுத்துவருவது போல் எனக்குத் தோன்றியது - எனது எண்ணம் மற்றும் எதிர்பார்ப்பு அப்படித்தான் என்னைச் சிந்திக்க வைத்தது.
இதுவே ஒரு சராசரிக்கு கீழான விடயம் போல் எனக்குத் தென்பட, பாலராஜனிடம் ‘பாரடப்பா வாய்க்காலில் உள்ள குழாயில் உள்ள நீரை எடுத்து பிறந்த பிள்ளைக்கு குளிப்பாட்டுகின்றார்கள்’ என்றேன்.
அதற்கு பாலராஜன் ‘நீங்கள் வேறு, அது குழாய் நீரல்ல, வாய்க்காலில் வடிந்தோடும் கழிவுநீர்’ என்றான். அதற்கு நான் ‘அப்படி இல்லை’ என்றேன். ‘எவ்வளவு பெட்’? என்றான்.
இருவரும் கீழிறங்கி, அவர்கள் நீர் எடுத்த இடத்தை சென்று பார்த்தோம். இன்றும் சகிப்பதற்கு கடினமாகவுள்ளது. அங்கு குழாய் என்று ஒன்று இல்லை. கழிவு நீர் தான் வழிந்தோடியது.
இந்த நீரைக் கொண்டுதான் பிறந்த பிள்ளைக்கு குளிப்பாட்டினார்கள். முழுக் குடும்பமும் இந்த நீரில் தான் குளிப்பு.
சமையல் வீதியில் தான், படத்தில் பாருங்கள். ஏதும் விசேடம் என்றால் கோழியின் விரல் கறி. (படத்தில் நாலு கம்புக் குடிசை மிஸ்ஸிங்)
குறித்த குடும்பத்தைப் பார்க்க அவர்கள் உறவினார்கள் வருவார்கள். சில நேரங்களில் சில நாட்கள் தங்குவார்கள். அப்பொழுது நாலு கம்பு எட்டுப் கம்புகளாக மாறும் அவ்வளவுதான்.
இவர்களின் அல்லது இவர்களின் உறவினர்களின் தோற்றம் பிச்சைக்காரர்கள் போல் தெரிவதில்லை. அன்றி இவர்கள் ஒரு நாளும் பிச்சை கேட்டதையும் நாங்கள் பார்த்ததும் இல்லை.
இவர்களின் பிரதான உழைப்பு ‘காட்டுக்கட்டில்’ செய்து விற்பதுதான். யாவாரம் எப்பொழுதும் சுமாராக இருந்து கொண்டேதான் இருந்தது. கட்டிலுக்கு தேவையான கம்புகளை, சுடலைக்கு வரும் பாடைகளில் இருந்து எடுப்பதாக யாரோ கூறினார்கள், உண்மை தெரியவில்லை.
கதவை மூடி, குட் நைட் கொளித்தி, ஒடோமாஸ் பூசி, மின்விசிறியைப் போட்டாலும் நாங்கள் இருந்த பகுதியில் நுளம்பிலிருந்து தப்ப முடியாது. ஆனால் இது ஒன்றுமே இல்லாமல் இவர்கள் இன்றும் எவ்வாறு நுளம்பில் இருந்து தப்புகின்றார்கள் என்பதும் ஒரு ஆச்சரியம் தான்.
சில மாதங்கள் செல்ல, குழந்தை ஒரு நாள் நாடு இரவில் அழுதது. குழந்தைக்கு அடிக்கும் சத்தம் கேட்டது. எழும்பிப் பார்த்தேன். அழுகை கூட, அடி கூட இதனால் அழுகை கூட மீண்டும் அடி கூட.......... என நீண்டு ஒரு கட்டத்தில் அழுகையின் உச்சத்தில் பிரக்கேறி – அதற்கு அப்பாலும் குழந்தையால் அழ முடியாமல் அழுகையை நிறுத்தி தூங்கியது. யாவரும் பரிதாபப்படக்கூடிய விடயம் இது. ஆனால் இதை ஒன்றையும் அறியாதவர்கள் போல் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் நன்றாகக் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
மனிசா குமர்ப்பிள்ளையாக இருந்தபடியால், பொதுவாக தாய் தகப்பனுக்கு நடுவில் தான் தூங்குவது வழக்கம்.
இன்னொரு நாள் இரவு. சாமத்தில் அடிதடி சத்தம். என்னவென்று பார்த்தால் மனிசாவிடம் ஒருவன் தகாத செயலில் ஈடுபட முனைந்து மாட்டிக்கொண்டு அடிபட்டுக் கொண்டிருந்தான்.
மனைவி மாதுரி கணவனை மிகவும் உடம்பு பெருத்தவர். பொதுவாக அதிகம் கதைப்பதில்லை. ஒரு நாள் கட்டில் கம்பு எடுத்து கணவனுக்கு நல்ல சாத்து சாத்தினார்.
(படம் - கடந்த மாதம் எடுத்தது. மாதுரி சமைக்கின்றார். ரோடு ஓரத்தில் TP exchange ற்கு முன்னாள் சட்டி, அவர்கள் வசிக்கும் கூடாரம் தற்காலிகமாக மிஸ்ஸிங், நீல நிற வேலிக்குள் நாங்கள் தங்கியிருந்த மாடி வீடு. தற்பொழுது புதிதாகக் கட்டப்படுகின்றது)
இவ்வாறு இவர்கள் பற்றிய கதைகள் ஏராளம்.
எவரைப் பற்றியும், குறிப்பாக எங்களைப் பற்றி இவர்கள் ஒரு நாளும் சட்டை செய்ததில்லை.
இவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் கூடங்களை அவ்வப்போது இடித்து அகற்ற முனிசிப்பல் கார்கள் வருவார்கள். அவர்கள் ஒரு பக்கத்தால் வரும் போது, சகலதையும் கழற்றி தூக்கிக் கொண்டு இன்னொரு தெருவுக்கு ஓட்டுவார்கள். முனிசிப்பல் கார்கள் போன பின்னர் மீண்டும் வருவார்கள்.
மும்பையில் மழை என்பது பொதுவாக அதிகம், சில வேளைகளில் கடுமை. கடுமையான மழையின் போது இரவு நேரங்களில் பேசாமல் எழும்பி நனைந்தும் நனையாமலும் நிற்பார்கள்.
96 இன் பின்னர் 2000 மற்றும் 2003 இல் மீண்டும் போய் அதே இடத்தில் தங்கிப் படித்தேன்.
அதே கூடாரம், அதே குடும்பம் அதே வாழக்கை. ஒரே ஒரு வித்தியாசம் தற்பொழுது 5 பிள்ளைகள்.
பிள்ளைகளுக்கு பாடசாலை, டியூஷன், பியானோ, மியூசிக் போன்றதெல்லாம் ..........அறவே நஹி.
மிக நீண்ட காலத்தின் பின்னர், கடந்த மாதம் மும்பாய் சென்றிருந்தோம். கப்பல் நிறுவனத்தின் பயிற்சிநெறிக்காக அழைக்கப்பட்டிருந்ததால், நியூ மும்பாயின் ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டோம்.
ஒரு ஓய்வு நாளில் நாங்கள் முன்பு தங்கியிருந்த சாந்தாகுருஸ் பகுதிக்குச் சென்றோம்.
கடைகள், கட்டங்கள், வீதிக்கு மேல் நீண்ட பாதசாரிகள் பாதை.... என நாங்கள் இருந்த பகுதி குறிப்பிடக்கூடியளவு மாறியிருந்தது. மாறாமல் இருந்தது மாதுரி குடும்பத்தின் வாழ்க்கை.
கணவன் மனைவியைத் தவிர ஏனையவர்களைக் காணவில்லை. (ஆனாலும் கடந்த வருடம் தம்பியார் மும்பாய் சென்றபொழுது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் இருந்ததாக கூறினார்). நாலு கம்புக் கூடாரத்தையும் காணவில்லை. முனிசிப்பல் காரர் வந்திருக்கக் கூடும். ஆனாலும் சமையல் ரோட்டு ஓரத்தில் வழமையான இடத்தில் இடம்பெற்றுக் கொண்டு இருந்தது.
மேலே ஆரம்பத்தில் குறிப்பிடப்படாத விடயம் – இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார், இந்தியாவின் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது.
இவர்கள் தமிழர்கள், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
பிரதமர் மோதியின் 2022 இல் ‘இந்தியாவில் அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம் நூறுவீதம் நிறைவேற்றப்பட்டால், ஒரு இந்தியனாக இல்லாவிட்டாலும் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: September 11, 2018 at 09:18
சிறப்பு உண்மைதான் சொந்த நாடு இல்லாமல் அகதியாக வாழ்வது எவ்வளவு அவலமான வாழ்வோ அதைப்போலத்தான் சொந்தகாணியோ சொந்த வீடோ இல்லாமல் பிறந்த மண்ணில் வாழ்வது எவ்வளவு கொடுமையான வாழ்வென்பதை நாங்கள் சிறுவயதில் அனுபவித்து இருக்கின்றோம் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.