அதிகாலை வழக்கம் போல் 5 மணிக்கு எழும்புகின்றார். காலைக்கடன், அதிகாலை உடற் பயிற்சி, 6 மணிக்கு தானே தனக்கு தேநீர், பின்னர் கோவில் வீதிகளில் பூப்பறிப்பு. குளியல், தியானம் காலை உணவு. எழுத்து வேலை.
ஆறுமுகம் சீதாலட்சுமி – அப்பா அப்பாச்சி
10 மணியளவில் சந்தி வாசிகசாலை செல்கின்றார். திரும்பி வரும் பொழுது நண்பன் கர்ணன் கதைக்கும் பொழுது “மாஸ்டர் நீங்கள் அதிகமாக மூச்சு வாங்குகின்றீர்கள், டொக்டரிடம் காட்டுங்கள்” என்கின்றான். “ஓமடா பாப்பம்” என்றாராம்.
வந்தவுடன் மீண்டும் எழுத்து வேலை, மதிய உணவு பின் நித்திரை. மாலை 4 மணிக்கு எழும்பி தனது அறையை அடங்க வைத்து தேநீர் அருந்திவிட்டு, 5 மணிக்கு தனது கதிரையை எடுத்துக் கொண்டு வழமைபோல் அம்மன் கோவில் வீதியில் அமர்கின்றார்.
சில நிமிடங்களில், ஒவ்வொரு வாரமும் அடுத்த நாள் காலை (வெள்ளிக் கிழமைகளில்), போன் எடுக்கும் அக்கா, வழமைக்கு மாறாக அதுவும் நேரடியாக ஐயாவிற்குப் போன் எடுக்கின்றார்.
அம்மாவும் ஐயாவும்
ஐயாவுடன் கதைக்கும் பொழுது, குரலில் மாறுதலைக் கண்ட அக்கா, “ஐயா நீங்கள் வீட்டுக்குப் போங்கள் நான் வீட்டு போனில் கதைக்கின்றேன்” என்று கூற உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார்.
பக்கத்து வீட்டு அன்ரி (பிரேம்குமார் மாமா மனைவி) “என்ன அண்ணா உடனடியாக மீண்டும் உள்ளே வருகின்றார்” என்று கூறியுள்ளார்.
அக்கா வீட்டுக்கு போன் எடுக்க, வழமைக்கு மாறாக ஐயா அக்காவிடம் “செல்வம் எனக்கு கதைக்க கொஞ்சம் கஷ்டமாக உள்ளது, 15 நிமிடம் செல்ல கதைக்கின்றேன்” எனக் கூறியுள்ளார். அக்கா அம்மாவிடம் ஐயாவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டுபோகக் கூறுகின்றார்.
அம்மா இதை ஐயாவிடம் கூற, “வேண்டாம் எனக்கு ஒன்றும் இல்லை” என்று கூறுகின்றார். ஆனாலும் அக்கா வற்புறுத்த அம்மா, பிரேம்குமார் மாமா, பாலச்சந்திரி அண்ணா மற்றும் முரளி அண்ணாக்களுடன் சேர்ந்து ஆட்டோவில், முதலில்
Dr.ராமசந்திரனிடம் கொண்டு செல்கின்றார்கள்.
அம்மன் கோவில் வீதியில்,
குலம் மாமா எடுத்த படம்
கொண்டு போகும்பொழுது மூவருடனும் சண்டை, “ஒன்றும் இல்லாத என்னை நோய் காரன் ஆக்குகின்றீர்கள்” என்று.
Dr.ராமசந்திரன் ஊரணிக்கு கொண்டுபோகச்சொல்ல, ஊரணியில் மந்திகைக்கு கொண்டுபோகச் சொல்கின்றார்கள். அம்புலன்சில் மந்திகைக்குக் கொண்டு சென்று, சுமார் 7 மணியவில் ICU வில்.
முன்பு ஒரு முறையும் இவ்வாறு நடந்திருந்து. அந்தச் சம்பவத்தில் தனது மோதிரத்தை கழற்றியிருந்ததால் , இந்த முறை அம்மா மோதிரத்தை முன்னதாகவே கழற்றுகின்றார்.
இடையில் ஒரு முறை சைகை மூலம் “மோதிரம் எங்கே” என்று ஐயா கேட்க, அம்மா தன்னிடம் உள்ளது எனக்கூற, சைகையால் நல்லது கூறுகின்றார்.
நேரம் நகர்ந்து காலையாக, காலையில், Dr தமிழ் படங்களில் வருவது போல் “மக்கள் இருந்தால் அவர்களைக் கூப்பிடுங்கள்” என்று மச்சான் ஞானத்திடம் கூறுகின்றார்.
60 களில் வல்வையில் சங்கூதியில்
அந்தவேளை, அம்மாவும் கூடவே நின்ற பாலச்சந்திரி அண்ணாவும் ஐயாவிற்கு அருகில் போக, ஒரு கண்ணால் திரும்பிப் பார்க்கின்றார். அம்மா ஐயாவின் கையைப்பிடித்து தடவ மீண்டும் இடக் கண்ணால் பார்த்து இமையை உயர்த்தி – நிரந்தரமாக கண்களை மூடினார், உறங்கினார் ஐயா.
ஏற்கனவே அமுதா (மனைவி) ஐயாவை ICU வில் வைத்துள்ளார்கள் என்று கூறியிருந்தார். எனது கப்பல் சீனாவில் துறைமுகம் ஒன்றில் நின்றதால், எனது போன் வேலை செய்து கொண்டிருந்தது. மச்சான் ஞானத்தின் Incoming call, உடனடியாக புரிந்து கொண்டு விட்டேன்.
“நல்லசாவு” என்று இதைத்தான் கூறுவார்கள் – எல்லோரும் கூறினார்கள். “சந்நிதிமுருகனுக்கு செய்த தொண்டின் பலன்” என்றார்கள் சிலர்.
தனக்கு ஏதோ பிரச்சனை என்பதை - சில நிமிடங்கள் மட்டும் தான் உணர்ந்திருப்பார். தனது வாழ்நாளின் கடைசி நாள் அன்றும் வழமையான வாழ்க்கை ஒன்றை வாழ்திருந்தார்.
இறுதி யாத்திரை
ஜூலை 6 ஆம் திகதி ஐயா பிரிந்தார். அக்கா கனடாவில், நானும் தம்பியும் கப்பலில். ஒரு மாதம் சென்றாலும் நாங்கள் மூவரும் வந்துதான் இறுதிக் கிரியைகள் என்று முடிவு. அக்கா 4 நாட்களிலும், தம்பி 5 ஆவது நாளும், நான் 6 ஆவது நாளும் வந்து சேர்ந்தோம்.
இறுதிக்கிரியைகளில் - கழக அங்கத்தவர்கள்
வரும்வரை மரணவீட்டைப் பலர் பார்த்துக்கொண்டார்கள். ஆனாலும் ஐயாவினதும் எனதும் நண்பர்கள் - கலைநேசன், கர்ணன், நவகோடி, டைசன் மற்றும் அயலவர் பிரேம்குமார் மாமா, பாலச்சந்திரி அண்ணா, மச்சான் ஞானம், கண்ணன் அத்தான் போன்றோரை வாழ்நாளில் மறக்க முடியாது.
இறுதி ஊர்வலத்துக்கான சகல ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக இவர்கள்தான் - பிள்ளைகள் நாம் இல்லாத சூழலில் - செய்தார்கள்.
கடைசி நாட்கள்
விடயம் தெரிந்த பெரியவர்களிடம் சென்று ஊரைப் பற்றிய பழைய விடயங்களைக் கூறுங்கள், தமிழ் பெயர்கள் கூறுங்கள் என்றால் அவர்கள் கூறுவது ‘தம்பி உங்கள் ஐயாவிற்குத் தெரியாததை விட எங்களுக்கு அப்படி என்ன கூடுதலாக தெரியப் போகின்றது” என்பது தான்.
ஐயாவிடம் 2016 இல் இறுதியில் “ஊரைப் பற்றி, உங்கள் வாழ்க்கையைப் பற்றி தெரிந்த முழுதையும் எழுதித் தரும்படி” கேட்டிருந்தேன், தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்துள்ளார்.
கனடா அஞ்சலி
நானும் தம்பியரும் கடல் வாழ்வைத் தொடக்கிய பின்னர், ஐயா கப்பலில் எங்களை சந்திக்கவில்லை.
முதற்தடவையும் இறுதித் தடவையுமாக 3 வாரங்கள் முன்பு தம்பியனின் கப்பல் கொழும்பு வர கப்பலுக்கு சென்றார்.
அடுத்த நாள் கொழும்பில் எனது வீட்டில் இருந்த பொழுது Skype இல் கதைத்தார். மிகவும் ஆறுதலாக கதைத்தேன். அன்றுதான் இறுதியாக கதைத்தது.
ஐயாவின் சிறு பிராயம்
ஐயா பிறக்கும் பொழுது, ஐயாவின் தந்தையார் (அப்பா) 2 பாய்மரக் கலங்கள் வைத்து வல்வெட்டித்துறைக்கும் தமிழகத்தின் தென் கோடிக்கும் இடையில் தொழில் புரிந்து வந்தார். (அந்தக் காலத்தில் – அன்னபூரணி காலத்திற்கு முன்னர் - இவைதான் இங்கு கப்பல்கள் என அழைக்கப்பட்டன)
இதனால் ஐயா பிறக்கும் பொழுது மிகவும் வசதி படைத்தவராகவே பிறந்தார். ஐயாவின் 7 வயதில் அப்பா கப்பலில் அரிசி கொண்டு வரும்பொழுது கடலில் விபத்து ஒன்றில் இறந்துள்ளார்.
தனது தந்தையாரை பற்றி சில ஒரு சில நினைவுகளை ஐயா நினைவில் வைத்திருந்தார்.
கொண்டை வைத்திருந்த அப்பா ஒரு நாள், “அதிரூபர் உம்மை அம்மா கூப்பிடுகிறார்’ என்று கூறியதை எங்களுக்கு அடிக்கடி கூறுவார். தங்கச் சங்கிலி போட்டிருக்கும் அப்பா, “தன்னை தோளில் தூக்கிச் சென்றது, இன்னும் தனக்கு ஞாபகம் உள்ளது” எனவும் கூறுவார்.
சந்நிதியில் வீதியில் முருகனுடன்
அப்பா இறக்க, தமிழ் படங்களில் வருவது போல், அப்பாச்சி மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஒன்றும் செய்ய இயலாமல், ஐயா இளையையாவுடன் சன்னதிக்கு குடி புகுந்தார் அப்பாச்சி. மடம் தான் தஞ்சம்.
“கற்பூரம், கச்சான் விற்று மனுசி தங்களை கஷ்டப்பட்டு ஆளாக்கியது” என்பதை அடிக்கடி நினைவு கூறுவார்.
இவ்வாறு சந்நிதியில் சிறு வயதிலிருந்தே வாழ்ந்ததால் - சந்நிதி மண்ணும் மணமும் என்றால் - எல்லாவற்றையும் மறந்துவிடுவார். தொண்டைமானாறு, ஐயர்மார் பரம்பரை, சந்நிதி சுற்றம் – ஐயாவுக்கு அத்துப்படி.
அங்கும் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு, சந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு வாசிகசாலையை ஸ்தாபித்து அதற்கு ‘பொன்னொளி’ என்ற பெயரும் சூட்டினார்.
என்னையும் 4 வயதில் பூ எடுக்கச் சேர்த்தார். சந்நிதி பற்றி ஏராளமாக கூறியுள்ளார் சுற்றிக் காட்டியுள்ளார், ஏராளமான பெரியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐயாவிடம் ஒரு நல்ல பண்பு ஒருவரை ஒருவருக்கு அறிமுகம் செய்துவைப்பது.
(இப்படித்தான் ஒரு முறை 86 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன், எங்கள் அம்மன் கோவிலடி வீட்டு எமது வெளி விறாந்தையில் வைத்து, ஐயா தனது சகா ஒருவருக்கு, அப்பொழுது அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரத்தினம் யோகியை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து, வேறு ஒரு இடத்தில் வைத்து அதே நபர் ஐயாவிற்கு “மாஸ்டர் இவர்தான் யோகரத்தினம் யோகி, இயக்கத்தின் அரசியல் துறைப்பொறுப்பாளர்’ என்று அறிமுகப்படுத்தியதாக எங்களுக்கு கூறினார்).
ஆற்றங்கரை வேலன் இவன் ஆறுமுகப்பாலகன்
சந்நிதி திருவிழாக்களின் போது, சைக்கிளில் என்னைச் சிறு வயதில், அதிகாலை இரவு என தொண்டைமானாறு – வல்வெட்டித்துறை வீதி வழியாக அழைத்து வந்திருந்தது பசுமை. அங்குலம் அங்குலமாக இவை எல்லாம் 40 வருடங்கள் கழிந்தும் இன்றும் நினைவில் உள்ளது.
நான் எப்பொழுது லீவில் வந்தாலும் சைக்கிளில் ஒருமுறை சந்நிதி சென்று, வட்டம் ஒன்று அடித்து கற்பூரம் வாங்கி கொழுத்தி, அங்குள்ள ஏழைகளுக்கு காசு கொடுத்து கச்சான் வாங்குவது இன்றும் வழமை. லீவின் திருப்தி அப்பொழுதான வரும்.
“ஆற்றங்கரை வேலனும் ஆறுமுகப் பாலகனும்” – இது ஐயா எழுதிய புத்தகங்களில் ஒன்று, சந்நிதி பற்றியது.
தம்பியார் மரங்கள் நாட்ட விரும்பி, அம்மன் கோவில் நிர்வாகத்தைக் கேட்க, ஐயாதான் சந்நிதியில் மரங்களை வை என்றார். இது பற்றி சந்நிதி ஆலய பரிபாலன சபையிடம் கேட்கச் சென்றபோது – எதிர்பார்ததற்கும் மேல் ஆதரவு கொடுத்தார்கள்.
சிறுவயதிலும் பின்னர் இளம்பிராயாயத்திலும், தொண்டைமானாறு மற்றும் பொலிகண்டிப் பகுதிகளில் கம்படி, மல்யுத்தம் போன்ற தற்காப்புக் கலை பயின்றுள்ளார். கம்பாட்டத்திகு பாவித்த 2 கம்புகள் 90 ஆம் ஆண்டு வரை வீட்டில் இருந்தது. இடையிடையே பாவித்ததை பார்த்துள்ளோம்.
வெல்லங்கராய், தொண்டைமானாறு –
நடப்பட்ட மரங்களை அடிக்கடி பார்ப்பது வழக்கம்
வாழ்க்கை
ஆரம்பக் கல்வியியை சிவகுருவிலும், பின்னர் சிதம்பராவிலும் கற்றார். வறுமை காரணமாக உயர் கல்வியை தொடராமல் திருகோணமலை சென்று அங்கு துறைமுகத்தில் – கப்பலில் - Teleclerk ஆக சில காலம் வேலை செய்தார். பின்னர் இ.போ.ச வில் கண்டக்டர் வேலை.
(திருமணம். அம்மன் கோவில் குருக்கள் திரு.தடாயுத பாணிக தேசிகர் அவர்களால் நடாத்தி வைக்கப்பட்ட முதல் திருமணம் ‘ஐயா அம்மா திருமணம்’ தான். சிவன் கோயில் குருக்கள் மனோகரக் குருக்கள் அந்தியேட்டி கிரியைகள் செய்ய வந்தபோது முதலில் கூறியது, “நான் உங்கள் ஐயாவிடம் படித்த மாணவன்” என்று)
கண்டக்டர் வேலை செய்யும் காலங்களில் அம்மன் கோவிலடியில் பஸ் வரும் பொழுது, நாங்கள் பஸ்ஸை மறிக்க 5 அல்லது 10 சதம் தருவார். தரும் பொழுது நால்வருக்கும் தான் தருவார்.
பின்னர் ஒரு பொழுது முல்லைத்தீவு பஸ் டிப்போவில் வேலை செய்த பொழுது முல்லைத்தீவிற்கு (கொக்கிளாய், நாயாறு) அழைத்துச் சென்றார். பல நாடுகளுக்கு சென்று விட்டேன். ஆனால் அன்று முல்லைத்தீவு சென்றது தான் ஏதோ வெளிநாடு சென்றது போல் இன்றும் பசுமையாக உள்ளது.
நாகர்கோயில் திருவிழாவிற்கு கூட்டிச் சென்றது, அதன் வரலாற்றை விபரித்தது, காட்டில் நாவற்பழம் பறித்தது இன்றும் பசுமையான ஞாபகங்கள். இவ்வாறு உள்ளூரில் பல பாடங்கள்.
நாங்கள் நால்வரும் பிறந்த பின்னர் கண்டக்டர் வேலை செய்து கொண்டிருந்தபொழுது, தனது தமிழ் BA படிப்பை வெளிவாரியாக மேற்கொண்டார்.
அப்பொழுது செல்லத்துரை மாஸ்டர் பல்கலைக் கழகத்தில் தமிழ் BA படிப்பை மேற்கொண்டிருந்தார். பல குறிப்புக்களை ஐயாவிடம் தான் எடுத்திருந்ததாக கூறியிருந்தார். (ஐயா அடிக்கடி கூறுபவர்களில் ஒருவர் செல்லத்துரை மாஸ்டர், ஏனெனில் படிப்பு, நடிப்பு, எழுத்து என பல துறைகளில் ஐயாவோடு ஒன்றாகப் பயணித்தவர் இவர்) தேகத்தில் கவனம்
காலை 4 மணிக்கு சின்ன அறையை போட்டி படிக்க ஆரம்பிப்பார். நாங்கள் எழும்பியவுடன் அந்த அறைக்குத்தான் முதலில் செல்வோம். சிறிது நேரம் மடியில் வைத்திருந்துவிட்டு, பாடசாலைக்கு வெளிக்கிடச் சொல்வார்.
படிப்பின் பின்னர் வேலைக்குச் செல்வார். பின்னர் 5 மணிக்கு வந்து அரை மணித்தியாலத்தில் வல்வை கல்வி மன்றத்துக்குச் செல்வார். வல்வை கல்வி மன்றம் முடிய பொது வேலைகளைப் பார்த்து விட்டு 9 மணியவில் வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் படிப்பார்.
BA படித்த முடிந்த காலங்களில் ஏராளாமான எழுத்து வேலைகளில் ஈடுபட்டிருந்தார். 11, 12 மணிக்குத்தான் நித்திரைக்குப் போவார். பனடோல் ஏதும் போட்டதை நாங்கள் கண்டது இல்லை. அந்தக் காலங்களில் பகலில் தூங்கியதையும் நாங்கள் கண்டதில்லை. அப்படியொரு கடின உழைப்பு, ஆனாலும் பொது வேலைகளுக்கும் அதிக நேரம் செலவழித்ததால் அவ்வப்போது பணக்கஷ்டம் தான்.
ஆனாலும், அம்மாவும் பாடம் சொல்லிக்கொடுத்ததாலும், ஐயாவிடம் குடி, சூது போன்ற பழக்கங்கள் இல்லாததாலும் ஒருவாறு எங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டினார்கள்.
BA பட்டம் பெறவும், பருத்தித்துறை டிப்போவிற்குள் முதலில் கிளார்க் வேலை. பின்னர் படிப்படியாக உயர்ந்து “பிரதி சாலை அத்தியட்சகர்” ஆகப் பதவி உயர்வு பெற்றார்.
பருத்தித்துறை டிப்போவில் வேலை செய்த காலத்தில் நாங்கள் ஹாட்லியில் படித்ததால், டிப்போவிற்கு போகச் சந்தர்ப்பங்கள். டிப்போ lay out இன்னும் ஞாபகம் இருக்கின்றது. அங்கு கான்டீனில் எங்களுக்கு பால் டீயும் வாப்பனும் வாங்கி தந்து, தனக்கு ப்ளேன் டீ மாத்திரம் வாங்கிக் குடிப்பார்.
ஐயா வீட்டில் நிற்கின்ற பொழுதெல்லாம், சின்னனில் நாங்கள் 6 பேரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். மீனில் உள்ள சலுப்புக்களை எங்களுக்குத் தான் தீத்துவார். ஒரு சமயம் கொழும்பில் இருந்து வருகின்ற பொழுது, முஸ்லீம் நண்பர் ஒருவரிடம் சொல்லி, “வட்டில் அப்பம்” வாங்கி வந்தார். வந்த அன்று ஏதோ ஆமி பிரச்சனை வர வீட்டை விட்டு ஓடி விட்டோம். திரும்பி வந்து முதலில் பார்த்தது வட்டில் அப்பத்தை தான். பூஞ்சணம் பிடித்திருந்தது. மிகவும் வாடிப் போய் விட்டார்.
“தனது தாய் தங்களை கஷ்டப்பட்டு ஆளாக்கியதாக” அடிக்கடி குறிப்பிடுவார், அதே போல் அவரும் எங்களை ஒரு நிலைக்கு மேல் உருவாக்கிவிட்டார்.
வேலையை விட்டார்
90 களில் பொருளாதாரத் தடை தொடர, கஷ்டமும் கூடிக்கொண்டு போனது. இந்தச் சமயத்தில் கை கொடுத்தது ஐயா பலரிடம் கொண்டிருந்த நட்பு தான்.
சந்நிதி பூ அறை வாசலில், பேரனுடன்
“இப்படியே எவ்வளவு காலம் ஊரில் கஷ்டப்படப் போகின்றீர்கள்” என்று குட்டி மாமா (சுந்தரகுமார்) கேட்டு, ஐயாவை கொழும்புக்கு அழைத்து ஐயாவை ஒரு மேனேஜர் ஆக வைத்திருந்தார்.
ஐயா மிகவும் கடமைப்பட்ட, மிகவும் பாசமுள்ள ஒரு உறவினர் சுந்தரகுமார். ஐயாவின் சொந்த மாமா மகன்.
3 வருடங்கள் நன்றாக உருண்டோடியது. வவுனியா ‘No man land’ மற்றும், கிளாலி கடற்பயணம் ஊடாக எங்களுக்கு ஏராளாமான பொருட்களைப் பல தடவை சுமந்து வந்துள்ளார். கிளாலியில் ஹய்ப்போதேமியாவிற்கு ஆளாகியுள்ளார். குளிர் ஐயாவிற்கு எப்பொழுதும் இருந்துவந்த ஒரு பிரச்சனை.
இந்தக் காலத்தில் சுமார் 2 வருடங்கள் தற்காப்புக் கலை பழகுவதற்கு எங்கள் இருவருக்கும் சகல வசதிகளும் செய்து தந்தார்
என்னை அடுத்த நிலைக்கு
வழமையாக வரும் வயதுக் கோளாறு, ஆர்வக் கோளாறுகளில் அப்படி இப்படி திரிந்து, உயர்தரம் வாய்க்காமல் போய் - என் என்ஞ்சினியர் கனவு கலைய, 93 இல் அம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்த ஐயா, திருவிழாவின் பின்னர் மே மாதம் கொழும்பிற்கு என்னையும் கூட அழைத்து வந்தார். மே 1 ஆம் திகதி தான் பிரேமதாச கொல்லப்பட்டார். கெடுபிடிகள் சொல்லிவேலையில்லை.
இரவு கிளாலி பயணத்தின் போது, பயண முடிவில் ஐயாவிற்கு ஹபெர்தேமியா (குலப்பன்) - ஐயா எங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் எனத்தெரிய வைத்த சம்பவங்களில் ஒன்று.
ஓமந்தையில் ‘No man land’ இல் மறித்தார்கள், பின்பு வவுனியாவில் “பிரவுன் பில்டிங்” இல் (என நினைக்கின்றேன்) கேள்விகள் – ஐயா இல்லை ஒரு வேளை உள்ளே போயிருப்பேன்.
கொழும்பில் ராம்மோகன் அண்ணாவிடம் கொண்டு வந்து கணணி படிக்க விட்டார். ராம்மோகன் அண்ணா நன்றாகத்தான் பாடம் கற்பித்தார். ஆனால் எனக்கு என்னவோ இது சரியாகப் படும்போல் படவில்லை.
சின்னக்கா இளவேணி
கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் கொழும்பில் என்னை பாதுகாப்பாக எல்லா இடமும் கொண்டுதிரிந்தார். காணிவேலில் இருந்து தெகிவள ஜு என சகல இடமும் காண்பித்தார். ஊரவர்கள் இருந்த ரஞ்சன் லோட்ச், சீ வியு இன் போன்றவற்றுக்கும் கூட்டிச் செல்வார்.
“கணணி சரிவராது கப்பலுக்கு அனுப்புங்கள்” என்றேன். அதிர்ந்தே போய்விட்டார். காரணம் நாங்கள் ஒரு Degree holder ஆக வர வேண்டும் என்பதே ஐயாவின் ஒரே விருப்பம். தன்னால் உரிய நேரத்தில் அதைப் பெறமுடியாததன் வலி. கப்பல் என்றால் இன்னொமொரு பிரச்சனை – அப்பா கடலில் இறந்ததால் ஐயா கடற்பக்கமே சென்றதில்லை.
(யோகரத்தினராசா அவர்கள் 80 ஆம் ஆண்டு ரேவடியில் நீரில் மிதந்த போது எங்கள் எல்லோரையும் படகில் கொண்டு சென்று காட்டினார். அப்பொழுது படகை வைத்திருந்தவர்கள் ‘வாங்கோ மாஸ்டர்’ என்ற பொழுது ‘கன ஆட்களை ஏத்தாதையடா’ என்று கூறியது இன்னும் ஞாபகம்)
ஆனாலும் நான் விடயத்தை எடுத்துச் சொல்லி நிரந்தரமாக எங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டும் என்றால் நான் கப்பலுக்கு போவதே சிறந்தது என்றேன். குட்டி மாமாவிடம் விவரத்தை கூற அவரும் திரு.சாந்தலிங்கத்திடம் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டார்.
வெள்ளவத்தையில் முன்னர் இருந்த அலேரிக்ஸ் கட்டடத்தில் தான் தங்கியிருந்தோம். காலையும் இரவும் சமைத்து தருவார். வயதுக் கோளாறு – கடைச் சாப்பாடுதான் வேண்டும் என்பேன். ‘ஏன் கடைச் சாப்பாட்டை சாப்பிடப் போகின்றாய், அது உடம்புக்கு நல்லது அல்ல’ என்பார். அப்பொழுது கேட்கவில்லை. இப்பொழுது கொழும்பில் கடையில் சாப்பிடுவதே இல்லை.
3 மாதம் கழிய, ஓகஸ்ட்டில் எதிர்பாராத செய்தி. வவுனியா பல்கலைக் கழகத்திற்கு என வந்த ‘சின்னக்கா’ கிளாலிக் கடலில் படகு கவிழ்ந்து இறந்து விட்டார் என்பது. 5 லாம்பு சந்தியடியில் அப்பொழுது நின்று கொண்டிருந்தோம். வாழக்கையில் எனக்குத் தெரிய முதலும் கடைசியுமாக ஐயா அழுதது அப்போதுதான்.
மீண்டும் அதே கிளாலி ஊடாக ஊர் நோக்கிப் பயணம்.
எங்களில் A/L அதிக சித்தி பெற்றவர் சின்னக்கா தான், 2A, B. கட் அவுட் பிரச்சனையால் யாழ்ப்பாண கம்பஸ் கிடைக்காமல் வவுனியா கம்பஸ் கிடைத்தது. தனது கனவான டிகிரி பெற போகின்றவர் என்பதாலும், அதற்கு முன்னர் சிறு வயதில் சின்னக்கவைப் பார்ப்பவர்கள் அப்பாச்சி போல் அவர் உள்ளார் என்று கூறியதாலும். சின்னக்கா மீது சற்றுக் கூடவே பாசம் வைத்திருந்தார்.
சின்னக்காவின் அந்தியேட்டியும் முடிய Cadet ஆக வாய்ப்பு. மீண்டும் கிளாலிப் பயணம். கப்பலிலும் ஏறி விட்டேன்.
கப்பலில் பாவிக்கப்படும் ஆங்கில சொற்களை (Shipping terms) தேடிக்கண்டுபிடித்து அதற்கு தமிழாக்கம் செய்து தபாலில் அனுப்பியிருந்தார் – இது தான் எனது தந்தையாருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். நான் கப்பல் ஏறிய சில நாட்களிலேயே இவற்றை கற்றுக் கொண்டுவிட்டதால் ஐயா அனுப்பியதைப் படிக்க வேண்டி இருக்கவில்லை.
எனது மகளும் பகுதி ஆங்கில மீடியத்துக்கு தேர்வானவுடன், ஐயா எனக்கு எழுதி அனுப்பியது போல் கப்பலில் மிகவும் சிரமப்பட்டு (நேரம், அனுப்பவதில் பிரச்சனை) மகளின் பாடங்களை தமிழாக்கம் செய்து கடந்த 2 வருடம் முன்னர் அனுப்பியிருந்தேன். அவளுக்கும் அது தேவைப்பட்டிருக்கவில்லை.
நான் எதோ படிக்க மட்டும் கப்பல் போகின்றேன் என நினைத்து, கப்பலில் சம்பளமே தர மாட்டார்கள் என ஐயா நினைத்திருந்தார்.
பேச்சாளாராக – கொழும்பில்
முதன்மாத சம்பளம், 10 டொலரை மாத்திரம் எடுத்துவிட்டு மீதியை ஐயாவிற்கு அனுப்பிவிட்டு, ஐயாவிற்கு ‘காசு அனுப்பியுள்ளேன்’ எனக் கூறினேன். ஐயாவால் சில வினாடிகள் பேச முடியவில்லை. தனது வாழ்வில் ஒரு பாரம் குறைவதை அன்றுதான் உணர்ந்தார்.
(25 வருட காலத்தில், எத்தனையோ பேர் நான் கப்பலால் இறங்கிவரும் பொழுது, ‘இது வாங்கி வா அது வாங்கி வா’ என்பார்கள். ஐயா இந்த 25 வருடத்தில், இதுவரை தனக்காக என்னிடம் எதுவும் வாங்கி வா என்று கேட்டதில்லை).
போதாத காலம் அடுத்த மாதமே குட்டி மாமா தனது வியாபாரங்களை மூட வேண்டிய துர்பாக்கியம்.
எனது சிறுதொகை பணத்தை வைத்து குடும்பத்தையும் சமாளித்து, தம்பியரையும் ஒருவாறு கப்பலுக்கு ஏற்றினார். அதன்பின்னர் வருடங்கள் ஆக ஐயாவின் சுமைகள் குறைந்து, பின் முற்றாக நின்றுவிட்டது. கடன்பட்டவர்கள் அனைவரினதும் கடன்களை, அவர் மறுத்த போதும், திருப்பிக் கொடுத்தார்.
கப்பல் ஏறி இறங்க, பாம்பேக்கு படிக்க போக, ஷிப்பிங் ஒபீஸ்..... என எல்லா இடங்களுக்கும் ஐயாதான் என் பாதுகாப்பு.
வாழ்க்கையின் இன்னொரு பக்கம்
ஐயாவின் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் ஆரம்ப கால ரெலோ, புலிகள் இயக்க உறுப்பினர்கள். இயக்கங்கள் உருவானபோது நாங்கள் மிகச் சிறு வயதில் இருந்ததாலும், எங்கள் பாதுகாப்புக் கருதி பல விடயங்களை மறைத்ததாலும், எங்களை இதற்குள் உள் வாங்காததாலும், பின்னர் நாங்கள் கப்பல் வாழ்க்கையில் புகுந்தாலும் - இவை பற்றி முழுமையாகத் தெரியாது. ஆனாலும் தெரிந்த சில விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
இயக்கங்கள் ஊரில் இரண்டாக இருந்த போதும் இரு தரப்பினருடனேயும் ஒரே மாதிரியாகவே நெருங்கிப்பழகியிருந்தார்.
நாடகம் ஒன்றில் – நான் ஐயா சசி
‘பிரபாகரன்’ அவர்களை விட ‘குட்டிமணி’ அவர்கள் ஐயாவிற்கு மிக மிக நெருக்கம் என்பது பல தடவைகளில் ஐயாவின் கதைகளில் தெரிந்திருந்தது. குட்டிமணி உறவினர் என்பதும் ஒரே கழகம் என்பதும் காரணமாக இருந்திருக்கக்கூடும். குட்டிமணியை விட ஏனைய சில மூத்த டெலோ உறுப்பினர்களான சின்னண்ணா (சரியாக பெயர் ஞாபகம் இல்லை, கட்டையான ஒருவர்), உலகராசா, சிவாஜிலிங்கம் போன்றோரும் ஒரே கழகத்தைச் சேர்ந்தவர்கள், ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள், ஐயாவோடு மிக நெருக்கமானவர்கள்.
மாத்தையா, கிட்டு, ரகு (கண்ணன்), லிங்கம், முத்து, பண்டிதர் (பண்டிதரின் தமையனார் ஐயாவுடன் டிப்போவில் ஒன்றாக வேலை செய்தவர்), இன்றும் சிவாஜிலிங்கம் போன்றோருடன் ‘டேய்’, ‘புடேய்’ என்றுதான் கதைப்பார். அவரின் மேடைப் பேச்சும், தமிழ் வாத்தியாருக்கான பேச்சும் அப்பொழுது அவரின் பேச்சில் தெரியாது.
ஐயாவை அரசியலுக்கு அம்மா செல்ல தடை போட்டிருந்தாலும், இவர்களுடன் பழகுவதை தவிர்க்க முடிந்திருக்கவில்லை. ஏனெனில் இவர்கள் எல்லோரும் அம்மாவுடனும் அக்கா என்று மிக அன்பாக பழகியிருந்தரர்கள்.
வீட்டில் இவர்களுக்கு ப்ளேன் டீ தான். சில வேளைகளில் இரண்டு தரம்.
பிரபாகரன் அவர்களைச் சந்தித்தார்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர், 88 செப்டெம்பரில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த பொழுது அவருக்கு ஆதரவாக கருணானந்தராசா (தற்பொழுது நகரசபைத் தேர்தலில் போட்டியிடுபவர்) உட்பட்ட இருவர் வல்வை சனசமூக சேவா நிலையத்தில், திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தனர்.
இவர்களைப் பார்க்க ஒரு நாள் இரவு சுமார் 9, 10 மணியளவில் பிரபாகரன் அவர்கள் வந்தார். அவர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு, சூசை அவர்கள் ஐயாவிடம் வந்து ‘அண்ணே வருகின்றார், உங்களை கூட்டி வரட்டாம்’ என்றார்.
ஐயா அங்கு சென்று சிறிது நேரத்தில் பிரபாகரன் அவர்களும் வந்தார். ஒரு சில நிமிடங்கள் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கதைத்துவிட்டு, பின்னர் “என்ன மாஸ்டர்” என்று ஐயாவோடு மட்டும் தான் சுமார் 20 நிமிடங்கள் பேசினார். பழைய சனசமூக நிலையத்தில் முற்பக்க திண்ணையில் தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஆரம்பத்தில் இதன்போது வெறும் ஒரு சிலரே நின்றார்கள் ஆனால் பிரபாகரன் அவர்கள் புறப்படத் தயாரான போது அந்த இரவிலும் வல்வெட்டித்துறைச் சந்தி அரைவாசியாக நிறைந்துவிட்டது
மீண்டும் சந்திப்பு
மீண்டும் சமாதான காலத்தில் பிரபாகரன் அவர்கள் ஐயாவை அழைத்திருந்தார். கூடவே அம்மாவையும். இந்தச் சந்திப்பில் பிரபாகரனும் தனது குடும்பத்துடன் இருந்தாராம்.
ஐயா எப்பொழுதும் தனது பேர்சில் சின்னக்கா மற்றும் அப்பா அப்பாச்சியின் படங்களைக் (கொண்டுசெல்வது வழக்கம். சமதான காலத்தில் பிரபாகரன் அவர்களின் அரிய படம் ஒன்றையும் கூடவே வைத்திருந்துள்ளார்).
இறுதியாக என் வீடு வந்த போது
அன்றைய கதைத்துக் கொடிருந்த பொழுது ஐயா, அவரின் அந்தப் படத்தை எடுத்துக் காட்ட, அதை வாங்கிப் பார்த்துவிட்டு, படத்தின் பின்னால் “அதிரூபசிங்கம் மாஸ்டர் – எனக்குக் கற்பித்து என்னை ஆளாக்கிய ஆசான். வே.பிரபாகரன்” என்று எழுதிக்கொடுத்திருந்தார்.
மேலும் தொடர்ந்து கதைக்கும் பொழுது ‘மாஸ்டர் நான் இருவரைத்தான் மாஸ்டர் என்று அழைப்பது வழக்கம் - ஒன்று வேணுகோபால் மாஸ்டர், மற்ற ஒருவர் நீங்கள் தான்’ என்றாராம்.
சமாதான காலத்தில் நிகழ்ந்த சந்திப்பு என்றபடியால் அந்தச் சந்திப்பு பற்றி, நாங்கள் கப்பலால் இறங்கிய பின்பு, ஐயா எங்களுக்கு கூறினார். குறித்த அந்தப் படத்தையும் காட்டினார். சில செகண்ட்கள் தான் கையில் அதனை வைத்திருக்கவிட்டார்.
பின்னர் பிரச்சனை வந்து ஓய, எவ்வளோவே தடவைகள் அந்தப் படம் பற்றிக் கேட்டோம், வாயே திறக்கவில்லை. அண்மையில் “எங்கோ வன்னியில் வைத்துள்ளேன் என்றும் மட்டும்” கூறியிருந்தார்.
மாத்தையாவும் ஐயாவும்
87 இல் யாழில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த ஈழநாதம் பத்திரிகையில், மாத்தையா அவர்கள் “போராட்டமே எதிர் காலத்தைத் தீர்மானிக்கும்” என்னும் தலைப்பில் வாரம்தோறும் ஆக்கங்கள் எழுதப்போவதாகக்கூறி ஐயாவோடு கதைத்திருந்தார். ஆனால் தொடர்ந்தும் இந்த வாரக் கட்டுரையில் ஐயா ஏதும் உதவினாரா என்று தெரியவில்லை.
89 ஆரம்பத்தில் என்று நினைக்கின்றேன். வன்னியிலிருந்து மாத்தையா அவர்கள், தனது உறுப்பினர்களுக்கு ஐயாவை தமிழ் இலக்கியம் கற்ப்பிப்பதற்காக அழைத்திருந்தார். ஐயா வன்னி சென்றார், ஆனாலும் வன்னிக் காட்டின் குளிர் காரணாமாக ஒரு சில வாரங்களில் மீண்டும் வீடு வந்தார்.
அந்த வேளை இளையையா பிரபாகரன் அவர்களுடன் வன்னியில் இருந்தார். அப்பொழுது மாத்தையா அவர்கள் ஐயாவுடன் கூறினாராம், ‘அண்ணன் என்னுடன், தம்பி அண்ணாவுடன்’ என்று. (அல்லது பிரபாகரன் அவர்கள் இளையையாவுடன் கூறி இருக்கவேண்டும். ஐயாவோ, இளையையாவோ கூறினார்கள், யார் என்று சரியாக ஞாபகம் இல்லை)
உலகத் தமிழாராச்சி மாநாட்டுக்கு
கொண்டு சென்ற அன்னபூரணிக் கப்பலில்
அறிவிப்பாளராக
90 நாலு நாள் குண்டு வீச்சின் சில நாட்கள் பின்னர், மாத்தையா அவர்கள் ஊரில் சேதங்களைப் பார்வையிட வந்தார். இது எமக்கு தெரியாது. திடீர் என்று வீட்டில் பலரின் குரல்கள். ‘மாஸ்டர்’ என்று அழைத்துக் கொண்டு மாத்தையா வீட்டுக்குள் வந்தார்.
ஐயா அவர் வந்த நோக்கத்தை மறந்து சுகம் விசாரித்து, தேநீர் பருகக் கொடுத்தார். அப்பொழுது மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு (முக்கியமாக மலசல வசதி) மாத்தையாவின் பணிப்புக்கு அமைய, இயக்கம் 1 அல்லது 2 பைக்கற் சீமெந்து கொடுத்தார்கள். போகும்போது மாத்தையா அவர்கள், இந்தப் பணிக்கு வந்த சம்பந்தப்பட்டவர்களிடம், ‘மாஸ்டருக்கு 5 பைக்கற் சீமெந்து கொடுங்கோ’ என்று கூறினார். ஐயா வழமையாக செய்வதைப் போல் அவரின் சொக்கைப் பிடித்துத் தட்டினார்.
அந்தச் சம்பவத்தில் 5 பைக்கற் சீமெந்து எங்களுக்கு மாத்திரம் தான் கொடுக்கப்பட்டது. இதில் என்ன இருக்கின்றது, வெறும் பைக்கற் சீமெந்து தானே என எண்ணாதீர்கள். அந்த நேரம் கோடி கோடியாகக் கொடுத்தாலும் ஒரு பைக்கற் சீமெந்தும் வாங்க முடியாத நிலை.
இன்று அம்மன் கோவிலடியில் எமது வீடு மாடியாக உள்ளது, ஆனால் இன்றும் மலசல கூடம் அவர்கள் கொடுத்த அந்த 5 பக்கற்றில் கட்டப்பட்டதுதான்.
மாத்தையாவின் பிரச்சனை பற்றி ஒரு போதும் ஒருவரிடமும் பின்னாட்களில் கதைக்கவில்லை, பலர் நோண்டிக் கேட்டிருந்தார்கள்.
சூசையும் ஐயாவும்
ஐயாவிடம் படித்ததைவிட மற்றவர்கள் போல ஆரம்பத்தில் சூசை, ஐயாவிடம் அவ்வளவு நெருங்கிப் பழகியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
85 இல் என்று நினைக்கின்றேன். சத்தியநாதனுக்கு மலர் ஒன்று வெளியிடுவதற்காக, அப்போது ஊரில் அரசியலுக்கு பொறுப்பாளராக இருந்தவரால், வல்வையின் எழுத்தாளர் ஒருவரிடம் மலர் உருவாக்கத்திற்கான பணி கொடுக்கப்பட்டது.
மலர் எழுதி முடிக்கப்பட்ட பின், அது சூசையிடம் கொடுக்கப்பட, அவர் “இவர் என்ன அரசியல் எழுதி இருக்கின்றாரா அல்லது சங்கரைப் பற்றி எழுதி இருக்கின்றாரா” எனக்கேட்டு அதைப்போட்டுவிட்டு, “மாஸ்டர் இருக்கும் பொழுது ஏன் மற்றவர்களிடம் கொடுக்கின்றீர்கள்” எனக்கேட்டு ஐயாவிடம் வந்தார்.
அதன்பின்னர் உருவானதுதான் சங்கர் பற்றிய மலர் ‘களப்பலியில் முதற்புலி’.
“மாஸ்டர் வீரச்சாவடைந்த வீர்ர்கள் பற்றி முதல் வெளி வரும் புத்தகம், புத்தகம் மிக நன்றாக வர வேண்டும்” என்றார் சூசை.
புத்தகமும் அவ்வாறே நன்றாக வந்தது.
வல்வை கல்வி மன்ற சரஸ்வதி பூசையில்
ரகுமானிடம் ஒரு பொழுது கேட்டார்கள், “மணிரத்தினத்துக்கு இயற்றும் பாடல்கள் சற்று மேம்பட்டவை போல் தெரிகின்றது” என்று. அதற்கு ரகுமான் கூறினார் “மணிரத்தினத்துக்கு தான் என்னுள் உள்ள திறமையை முழுமையாக எடுக்கத் தெரிகின்றது” என்றார்.
அது போல் ஐயாவின் தமிழை, உழைப்பை முழுமையாக பயன்படுத்தியவர் என்றால் அது சூசை தான்.
சூசை - ஐயா பற்றிய உறவை முழுமையாக எழுதினால் இந்தப்பக்கம் இரட்டிப்பாகிவிடும், தவிர்க்கின்றேன்.
மூவரைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இறந்தவர்கள், இருப்பவர்கள் என ஏராளமானோர் ஐயாவின் வாழ்வில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
இவ்வாறாக உலகம் பார்க்கும் பிரபல்யங்கள் மாணாக்கர்களாக ஐயாவுடன் பழகியுள்ளனர். ஆனால் இறக்கும்வரை இது பற்றி எங்களுடன் கூட பெருமைபட்டுக்கொண்டதில்லை.
அரசியில் வாழ்வு
ஆரம்ப காலங்களில் மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார், கடந்த MP தேர்தலில் வாக்குக் கேட்க வந்த மாவை, ஐயாவைப் பார்த்து “நீங்கள் அந்தக் காலத்தில் எம்மோடு இருத்தது ஞாபகம் இருக்கின்றது” என வீட்டு வாசலில் வைத்து கூறினார்.
‘துரைரத்தினம், இராசலிங்கம் ஆகியோரின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர், மேடைகளில் முழங்கியவர்’ என்று பலர் கூறியுள்ளார்கள். ஆரம்பகால அரசியல் கதைக்கும் பொழுது சக்கோட்டை மோகன் தன்னுடன் சேர்ந்து இயங்கியதாக அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் அவர்களின் மகன் (திக்கம்) என்னோடு ஹாட்லியில் ஒன்றாகப் படித்தவர். அதிகம் பேசாதவர். ஒரு முறை என்னையும் ஐயாவையும் பருத்தித்துறையில் ஒன்றாகப் பார்த்த பின்னர், என்னிடம் கேட்டார் “யார் இவர் என்று”, நான் “எனது தந்தை” எனக் கூறினேன். ‘தான் சிறு வயதில் இவரை எங்கள் வீட்டில் அடிக்கடி பார்த்ததாகவும் அப்போவோடு நல்ல நெருக்கம் கொண்டிருந்ததாகவும்’ கூறினார்.
2012 ஆம் ஆண்டு ரேவடி கழக போட்டியில்
நாங்கள் மிகச் சிறு வயதாக இருந்தபொழுது ஞானமூர்த்தி அப்பா, ஐயாவை வல்வை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்திக் கேட்டாராம். அம்மா நாங்கள் எல்லோரும் சிறு பராயத்தினராக இருந்ததைக் கூறி கண்டிப்பாக மறுத்து விட்டதாகச் சொன்னார். ஐயாவின் பாதையை மாற விடாமல் பார்த்ததில் அம்மாவிற்கு பெரும்பங்கு உண்டு.
பின்னர் 1998 - 2000 அளவில் நாங்கள் கொழும்பில் இருந்த பொழுது, மிகவும் நெருக்கடியான சூழலில் வல்வை நகரசபை தேர்தலில் போட்டியிடவேண்டும் பல ஊர்ப் பிரமுகர்கள் வந்து கேட்டார்கள். அப்பொழுது நாங்கள் (பிள்ளைகள்) விடவில்லை. ஐயா இல்லை, ஆனால் கேட்டவர்கள் இன்றும் உள்ளார்கள்.
தற்பொழுது இடம்பெறும் தேர்தலிலும் ஐயாவை நிறுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஐயா தேர்தலில் நின்று இருக்க மாட்டார் என்பது வேறு விடயம்.
தத்துவஞானி வேதாந்திரி மகரிஷி கூறியுள்ளது போல் ‘40 வயது வரை வளர்ச்சி 80 வயதில் தளர்ச்சி’ என்பதை ஐயா நன்றாகவே உணர்திருந்தார். தனது வயதுக்கு ஏற்ப தனது கடைசி காலத்தில் தனது உடல் ஆரோக்கியம், பிள்ளைகள், தனது அடிப்படையான எழுத்து, வாசிப்பு மற்றும் ஆன்மிகம் அவ்வப்போது நண்பர்கள் உறவினர்களுடன் உறவாடல் என்ற சிறிய வட்டத்தக்குள் தன்னை வைத்துக் கொண்டார் - 80 வயதில் தான் இறங்கக் கூடாததில் அவர் இறங்க முனையவில்லை.
ஐயா இளமைக் காலத்தில் இருந்து இன்று வரை 3 முறைகளிலும் வல்வை நகரசபை தேர்தலில் இலக்கு வைக்கப்பட்டதன் ஒரே காரணம், தொண்டைமானாற்றில் இருந்து பொலிகண்டி வரை அதிகபட்சம் அறியப்பட்ட மிகச் சிலரில் ஐயா ஒருவர்.
2 இயக்கங்களும் வளர, தோற்றுவிப்பாளர்கள் அனைவருமே ஐயாவின் மாணாக்கர்கள் ஆதலாலும், இளையையாவும் ஆரம்பத்திலேயே இயக்கத்துடன் இணைத்தாலும், ஐயா கட்சி அரசியலில் இருந்து முற்றாகவே விலகி விட்டார். பின்னரும் நன்றிக் கடனுக்காக கட்சி அரசியலுக்குள் அடி எடுத்து வைக்கவில்லை.
நாடகத்துறையில்
அண்மையில் வல்வை வந்திருந்த ஜெயபாலசிங்கம் அங்கிள் என் கைகளை பற்றி “மாஸ்டரை பார்க்க முடியாவிட்டாலும் மகனைப் பார்க்கின்றேன்” என கண்கள் ததும்பினார். ஐயாவுடன் சேர்ந்து நாடகம் நடித்தவர்களில் பிரதானமானவர்களில் ஒருவர்.
ரேவடி அணைக்கட்டு திறப்பு விழாவில்
கதைக்கும் பொழுது 2 தடவைகள் கூறினார், “தம்பி மாஸ்டர் தமிழகத்தில் இருந்திருந்தால் மிகபெரிய ஒரு இயக்குனர் ஆக வந்திருப்பார்” மாஸ்டர் இன் அரச நாடக இயக்கம் போன்று தான் கண்டதில்லை” என்றார்.
மேலும் “மாஸ்டர் இறந்த பொழுது பலர் மாஸ்டரைப் பற்றி எழுதியுள்ளார்கள். உண்மையில் எழுத வேண்டியவன் நான் தான், எனக்குத் கணனியில் வாசிக்கத்தான் தெரியும், எழுத தெரியாது, தெரிந்திருந்தால் நிறைய எழுதியிருப்பேன்” என்றார்.
“மகனே கண்”, “கொடையா படையா”, “அந்தக் குழந்தை” இவற்றின் கொப்பிகளும் சில படங்களும் 90 வரை வீட்டில் இருந்தது, குண்டில் எல்லாமே அழிந்து விட்டது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் கலாபூசணம் விருதுக்கு ஐயா பரிந்துரை செய்யப்பட்ட பொழுது, ‘பழைய ஒரு ஆவணம் ஆவது எடுத்துத் தாருங்கள்’ என்றார்கள்.
வீட்டில் பலர் வந்து நாடகம் நடித்தது இன்னும் ஞாபகம் இருக்கின்றது. ஆனாலும் ஐயா மேடையில் நடித்தது ஞாபகத்தில் இல்லை.
பிற்காலங்களில் என்னையும், தம்பியையும் வேறு வேறாக இயக்கி 90 களில் நாடகங்கள் சில அரங்கேற்றினார். அவற்றில் நான் பங்கேற்ற ‘நக்கீரன்’ நாடகம் வல்வை கல்வி மன்ற கலை விழாவில் முதலாவதாக அரங்கேற, ‘மிகவும் சிறப்பாகவுள்ளது’ என்று நெடியகாடு கணபதி படிப்பக விழாவில் மீண்டும் அரங்கேற்றம் செய்தார்கள்.
பட்டி மன்றங்கள் பலவற்றில் சிறப்பாக வாதம் செய்துள்ளார். நான் பார்த்தது இல்லை. ‘வல்வெட்டி’ யில் ஒரு முறை இடம்பெற்ற பட்டிமன்றம் ஒன்றில் ஐயாதான் கலக்கயிருந்தார் என நண்பன் நந்தகுமார் கூறினான்.
அறிவிப்பாளராக
ஆழிக்குமரன் ஆனந்தன் பாக்கு நீரினை கடந்து ரேவடியில் கால் பதித்த பொழுது, அந்த நிகழ்விற்கு மெருகூட்டியவர் ஐயா. இந்த நிகழ்வு சம்பந்தமாக அடுத்த நாள் வந்த ஈழநாடு பத்திரிகையில் ஐயாவின் “அறவிப்பு” பற்றி புகழாரம் சூட்டி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
வரலாற்று ஆய்வாளர் ராஜகோபால் அவர்கள், ஆனந்தனுக்கு - ரேவடியில் தான் அன்றைய விழாவில் ‘ஆழிக்குமரன்’ எனப் பெயர் சூட்டப் பட்டது - என்று தெளிவாக தனது நூலில் கூறியுள்ளார். ஆனாலும் மிகக் கவனமாக யார் அந்தப் பெயரைச் சூட்டினார் என்பதை தவிர்த்துள்ளார்.
அன்னபூரணி மாதிரிக்
கப்பலைத் திறந்து வைக்கின்றார்
வல்வையின் வரலாற்றை தேடும் ஒருவருடன் இதைப் பற்றி கதைக்க ஆரம்பித்தவுடனேயே ‘இல்லை இல்லை வீரகேசரி ஆசிரியர் தான் ஆனந்தனுக்கு ஆழிக்குமரன் எனப் பெயர் சூட்டினார்” என்றார்
வீரகேசரியில் ஆழிக்குமரன் பற்றிய செய்தி வந்தது நிகழ்வின் அடுத்ததற்கு அடுத்த நாள்.
(படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. கதை இதுதான். பிரபல ஓவியர் ஒருவர், ஒருவராலும் அறியப்படாத ஓவியன் ஒருவன் வரைந்த ஓவியத்தை சிறு தொகை பணத்துக்கு வாங்கி, தனக்கு இருக்கும் பெயரை வைத்து தனது ஓவியமாக வெளியிட்டார், புகழைத் தனதாக்கினார்.)
“உங்கள் சுவடுகளில் தொடரும் எங்கள் பாதங்கள்”, “களப்பலியில் முதற்புலி”, “விடுதலை விடுவிப்பு”..... என நீளும் அடுக்குச் சொற்கள் ஆதவன், ஆசுகன், ஆரணன், ஆகமன் (பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு சூட்டிய பெயர்கள்) போன்றவை ஐயாவின் நாவில் இருந்த வந்த வாசகங்கள் - வல்வையின் வரலாற்றை தேடுபவர்களுக்கு.
வல்வையில் சிங்கிரி என்று ஒரு விளையாட்டுக் கழகம் இருந்தது. தமது ஆண்டு விழா ஒன்றை மிகச் சிறப்பாக செய்தார்கள், 84 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நெடியகாட்டு “இ” அவர்களின் (நகரசபையில் வேலை பார்த்தவர், வாச்சர் மாமா என்றழைப்போம், இயக்க ரமணின் தமையனார்) பச்சைக் கலர் காரில் வீதி வீதியாக ஐயாவின் அறிவிப்பு – இன்றும் காதில் ஒலிக்கின்றது.
“அறிவிப்பாளர் என்றால் மாஸ்டர் தான் எங்களுக்கு ரோல் மாடல் என்றார்” விஷ்ணு அருட் செல்வம் (‘கொத்தன்’ என்று ஐயா அழைப்பர்).
அண்மையில் இடம்பெற்ற வல்வை பட்டப் போட்டியில் சிவகுரு ஆசிரியர் ஒருவரின் அறிவிப்பை கேட்டேன். ஐயாவின் அறிவிப்புக்கும் இவரின் அறிவிப்புக்கும் இடையில் ஒரு சிறந்த அறிவிப்பை நான் கேட்டது இல்லை.
வல்வை சன சமூக சேவா நிலையத்தில்
அன்றைய காலகட்டத்தில் வல்வையில் சேவைகளின் மைய நாடி இது. இதற்குள் பலர் வந்து போயுள்ளார்கள். ஆனால் நிர்வாகம், விழாக்கள், போட்டிகள், இதர சேவைகள் என சகலவற்றிலும் கலந்து கொண்டவர் ஐயா. இவருடன் கூட இருந்தவர்கள் தான் இதனைக் கூறுகின்றார்கள். முக்கியமாக 76 இல் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி போல் இதுவரை ஒரு விளையாட்டுப் போட்டி நடாத்தப்படவில்லை என்கின்றார்கள்.
பொக்கிஷம் - குகன் ஸ்டுடியோவில் எடுத்த படம்
சன சமூக சேவா நிலையத்தில் மிக நீண்ட காலம் சேவையாற்றினார்.
வல்வை சன சன சமூக சேவா நிலையத்தில் ஐயாவின் காலத்தில் ஒரு துறையில் பணி புரிந்திருந்த மதிப்பிற்குரிய ஒருவர், சன சமூக சேவா நிலையம் பற்றி எழுதிய நூல் ஒன்றில், சன சமூக சேவா நிலையத்தில் பங்காற்றிய சகலரையும் குறிப்பிடுள்ளார் – ஐயாவைத் தவிர. இதற்காக ஐயா ஒன்றும் கோபப்படவில்லை ஆனாலும் ஆதங்கம். கேட்டுள்ளார். “ஓம் மாஸ்டர் மறந்துவிட்டேன்” என்று பதிலளித்தார் – காழ்ப்புணர்ச்சி
இரவுப் பாடசாலை
ஐயா முதலில் கற்பிக்க ஆரம்பித்தது ஆலடியில் ஆரம்பிக்கப்பட்ட இரவுப் பாடசாலையில் தான். பிரபாகரன் உட்பட பலர் இந்தப் பாடசாலையில் கல்வி கற்றனர். இரவுப் பாடசாலை என்றவுடன் இன்றும் ஐயாவைத்தான் முதலில் கூறுகின்றார்கள். காரணம் இங்கு கற்பித்தவர்களில் இறுதிவரை கற்பித்தலில் இருந்தவர் ஐயா என்பது காரணமாகலாம். இரவுப் பாடசாலையில் ஐயா கற்பித்திருந்தபோதும், இரவுப் பாடசாலையின் உருவாக்கத்தில் ஐயா இல்லை
வல்வைக் கல்வி மன்றத்தில்
இரவுப் பாடசாலை அதனைத் தொடர்ந்து தோற்றம் பெற்ற வல்வைக் கல்வி மன்றம் என இரண்டிலும் கற்பித்த ஒரே ஆசிரயர் ஐயாதான். பலநூறு மாணவர்களின் ஆசிரியர் ஆனார். வல்வைக் கல்வி மன்றத்தில் நடாத்தப்பட்ட கலை விழா, நவராத்திரி பூசை மற்றும் விழாக்களை முன்னின்று நடாத்தினார்.
இப்பொழுதும் வல்வைக் கல்வி மன்றம் என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள் – ஐயாவின் பெயரைத் தான் முதலில் உச்சரிப்பார்கள்.
ஐயாவின் தமிழ்
“ழ” உச்சரிப்பை எப்பொழுதும் சரியாகவேதான் உச்சரிப்பர்.
சில நிமிடங்களில் கவிதை எழுதும் வல்லமை, அதுவும் இலக்கணத்துடன்.
மேடையில் பேசும் பொழுது, எழுதி வைத்துப் பேசுவதில்லை. தமிழ் அறிவிப்பில் தனக்கென ஒரு வழி – “வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் வெற்றிப் பீடத்திற்கு அழைக்கப்படுகின்றார்கள்” இவ்வாறு செயற்ப்பாட்டு வினையில் பேசுபவர்கள் மிகக் குறைவு.
இளமதி, இளவேணி, ஆதவன், ஆசுகன், ஆரணன், ஆகமன், அற்புதை, அச்சுதை, அனிந்திதை, அமிழ்தினி, வாசவி என தன் வாரிசுகளுக்கு தமிழ் பெயர்கள். எனது இரண்டாவது மகளின் பெயர்தான் வாசவி. எல்லோருமே கேட்டார்கள் ‘மாஸ்டர் ஏன் அ,ஆ,இ வை விட்டார் என்று.
தம்பியாரின் கப்பலில்
அடுத்த பக்கத்தில் ‘உங்கள் சுவடுகளில் தொடரும் எங்கள் பாதங்கள்’, ‘விடுதலை விடுவிப்பு’, ‘களப்பலியில் முதற்புலி’, ‘வைகறை, ‘விடிவெள்ளி’............. என மிக நீளும் பட்டியில் ஒரு காலத்தில் வான் அலைகளில் பறந்து கொண்டிருந்தது.
சட்டத்தரணி கனக மனோகரனின் தமிழை எனக்கு மிகவும் நன்றாக பிடிக்கும். (அவரின் அரசியல் அல்ல), கனகமனோகரன் தனது பதிப்பு ஒன்றில், ‘தமிழ் மேடைப் பேச்சு என்பதை, நான் கற்றது மாஸ்டரிம் இருந்துதான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சில சிறு கதைகள் வரைந்துள்ளார்.
பல ஆண்டுகள் ஒரு கழகத்தின் தலைவராக
வல்வையில் முதலாவதாக உருவாக்கப்பட்ட கழகம் ரேவடி, மற்றையது நெடியகாடு என்று கூறுவார்.
ரேவடி விளையாட்டுக் கழகத்தின் தலைவராக எனக்குத் தெரிந்த சிறு வயதில் இருந்து கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை மிக நீண்ட காலம் வரை இருந்தார். இது ஒரு சரித்திரம். இனிமேல் எந்தவொரு கழகத்திலும் இது போன்று நிகழப்போவது இல்லை.
இயல்புநிலை அற்றிருந்த, 96 ற்கும் 2012 ற்கும் இடையில் வல்வையில் நடாத்தப்பட்ட – குறிப்பிட்டு கூறக்கூடிய விளையாட்டுப் போட்டி ரேவடி விளையாட்டுக் கழக விளையாட்டுப் போட்டிகள் தான். 2004 இல் தீருவிலிலும், 2012 இல் இராணுவ முகாமுக்கு மத்தியிலும் நடாத்துவதற்கு முன்னின்றார்.
ஐயாவின் குண அம்சங்கள்
பயம் என்பது கிடையாது. குடி, சூது கிடையாது. கடற்கரை, சந்தி, வாசிகசாலை என்று போவார். ஆனாலும் வட்டம் கட்டி அரட்டை அடிப்பதை விரும்புவதில்லை. ஏதாவது ஒன்றைப் பற்றி எப்பொழுது யோசித்துக் கொண்டேயிருப்பார்.
யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டார். முகத்துக்கு நேராக வாதிடுவார்.
கப்பலில் தம்பியுடன்
எந்தப் பிரபலம் என்றாலும் அவர்களின் சேர்ந்து படம் எடுப்பதில்லை.
தனது பொருட்களை எறியவே மாட்டார். இதனால் நாங்கள் கப்பலால் இறங்கும் பொழுது, அம்மா எங்களுக்கு ஏற்றி விட, ஐயா இல்லாத நேரம் பார்த்து நாங்கள் அவற்றை எறிய உண்மையாகவே சண்டை போடுவார், வருந்துவார். அப்படி செய்தது இப்பொழுது பிழை போல் தெரிகின்றது.
பலருக்கும் காரணப் பெயர்களை வைத்து விடுவார்.
“பததுமம் இங்கே வந்து பார் அச்சகம் வந்து வந்திருக்கின்றான்” – “பத்துமம்” அம்மா பதமலோசனா. “அச்சகம்” – கிட்டு அவர்கள். பருத்தித்துறையில் குமார் அச்சகம் என்பது கிட்டு அவர்களின் பெயரில் தான் இருந்தது.
அதேபோல் ஊரவர்கள் சும்மாவா என்ன? ஐயாவை ‘அதிரப்பா’ என தமக்குள் அழைத்தனர். அண்மையில் கப்பலால் வந்து இறங்கியவுடன் வீட்டுக்கு வந்திருந்த கலைஞர் ‘தங்கம் அண்ணா’ கூட இதை ஞாபகப் படுத்தினார். ஐயா அறிவிப்பில் அதிர்வதால் தாங்கள் ‘அதிரப்பா’ என்று தான் தமக்குள் அழைப்பதாக.
அதே போல் பொருட்களுக்கும் – சோடா ஒரு புலுடா, பிசா என்னும் பிசாசு
பஸ் பிரயாணம் என்றால் அலாதிப் பிரியம்.
பழைய பாடல்கள் பிடிக்கும். சிவாஜி கணேசன், சந்திர பாபு, நாகேஷ் நடிப்புகள் பற்றி அவ்வபோது கதைப்பார்.
சாதி, தராதரம் பார்ப்பதில்லை.
20 வயதில், வடமராட்சியில் நண்பன் ஒருவன் வீட்டுக்கு போயிருந்தேன். சைக்கிளில் வரும்பொழுது நண்பனின் வீடு வழியில் இருந்ததால் கூப்பிட்டுக் கதைத்தேன். சாப்பிட வா என்றேன். (நான் அப்பொழுதுதான் கராத்தே பயிற்சி முடித்து வந்ததால்), வேண்டாம் என்றேன். “ஏன் எங்கள் வீட்டில் சாப்பிட மாட்டாயா” என்றான். உடனே இறங்கி சாப்பிடப் போனேன் - சாதி, தராதரம் எமது இரத்தத்துக்குள் வராமல் ஐயா வளர்த்த வளர்ப்பு.
விஸ்வமடு வித்தியாலயத்தில் நான்
இறுதியாக கூட்டிச் சென்றபோது
தீவிர இந்துத்துவவாதி. தீவிர முருக பக்தன். நாம் (நான் அல்ல) மற்ற மத தெய்வங்களை வணங்குவதை விமர்சிப்பார். வீட்டில் பாவா, மகான், மேல் சாமி போன்றவர்களுக்கு எல்லாம் இடமில்லை. இவர்களை சாதாராண மனிதர்களுக்கு மேல் உயர்த்திப்பார்க்க மாட்டார். அதற்காக மற்ற மதங்களை ஒப்பிட்டு கதைப்பதில்லை. வல்வை சென் செபஸ்தியார் பற்றிய ஐயாவின் கவிதையைத்தான் இதுவரை படித்துள்ளேன்.
நகைகள் அணிய விரும்பியதில்லை. எமது வற்புறுத்தலுக்காக இறுதிக் காலங்களில் ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருந்தார்.
பிள்ளைகள் எங்களுக்கு நல்ல சாத்து சாத்தியுள்ளார். அம்மாவுடனும் சண்டை போட்டுள்ளார். ஆனால் பேரப்பிள்ளைகள் ஒருவரையும் ஒரு போதும் அடித்ததில்லை. மருமக்களை பன்மையில் தான் அழைப்பார்.
வல்வையில் ஒவ்வொருவருடனும் ஒவ்வொரு விதமாக பழகியுள்ளார். ஐயா இறந்த பொழுது எல்லோரும் இதைத்தான் கூறினார்கள். ஒரு சில சமூகவலைத் தள பதிவுகளைப் பார்த்தேன். இளவயதினர் சிலரும் ‘Our best friend’, RIP என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
எவருடனும் ஏதாவது கசப்பு ஏற்பதால் அவ்வளவுதான், அதற்கு பின் அவர்களுடன் கதை இல்லை. ஆனால் அம்மாவிற்கு எங்களுக்கோ அவர்களுடன் பழகுவதற்கு எதுவித தடையும் போடமாட்டார். சம்பந்தப்பட்டவர்கள் பற்றி வேறு ஒன்றும் கதைக்கவும் மாட்டார்.
தான் செய்த எந்தவொரு சேவையையும் உதவியையும் ஒரு போதும் திருப்பிக் கூறியதில்லை. தான் ஒரு சிறந்த அறிவிப்பாளன், பேச்சாளன், எழுத்தாளன்...... என்று கூறியதில்லை. தனக்கு இருந்த பெயரை வைத்து எதுவித விளம்பரமும் தேடவில்லை.
தேகத்திலும் உணவிலும் மிகவும் கவனமாக இருந்தார். எனக்கு உடம்பில் ஏதாவது பிரச்சனை என்றால் ஐயாவிடம் முதலில் கூறுவேன். மருத்துவம் சம்பந்தப்பட்ட விடயங்களை அதிகம் வாசிப்பது வழக்கம்.
மூட நம்பிக்கைகளுக்கு மிகவும் எதிரானவர்
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மிகவும் துணிந்து எதிர்த்துச்செயற்படுபவர். இரண்டு சம்பவங்கள்.
சந்நிதியில் பூத்தொண்டில் ஈடுபடும் பொழுது அங்கே தலை சீவக்கூடாது என்பது எழுதப்படாத மரபாகவிருந்தது. ஐயா தலை சீவிக்கொண்டுதான் செல்வார். மணியமாக இருந்தவர்கள் தலை சீவக் கூடாது என்றார்கள், ஐயா முடியாது என்று வாதிட்டார். காரணம் சுகாதாரக் கேடு என்றார். இன்று எல்லோரும் தலை சீவித்தான் செல்கின்றார்கள்.
கண்ணீர் அஞ்சலி – ரேவடியில்
இரண்டாவது சம்பவம் அம்மன் கோவிலடியில் தற்பொழுது இருக்கும் இரண்டு தட்டு வீடு.
7 வருடங்கள் முன்பு கட்ட முடிவெடுத்தோம். ஊரில் நிலத் தட்டுப்பாடு, கிணற்றுக்கு நீர் போக மழை நீரைத் தேக்கி வைக்க வீடுகளில் நிலம் இல்லை.
வீட்டு நிலத்தில் 60 % மண் நிலமாகவும், மற்ற 40% இல் மட்டும் கட்டடம் வர வேண்டும் எனவும் ப்ளான் போட்டோம்.
கோயிலுக்கு முன்னால் மாடி வீடு – கண்டிப்பாக “நோ” தான் கூறுவார்கள்.
ஐயாவிடம் விவரத்தைக் கூறினேன். கட்டு, மற்றவர் பிரச்சனையை தான் பார்க்கின்றேன் என்றார். முணுமுணுப்புக்கள் மட்டும் தான் அப்போ.
ஊரில் ஒரு முன் மாதிரியாக நாம் செய்த விடயம். இன்று இதன்பின்னர் மதவடிப் பகுதியில் கடற்கரைப் பக்கமாக மட்டும் பத்து மாடிவீடுகள்.
இணையத்தில்
நாங்கள் எழுந்தவுடன் தொடங்குவது இதில் தான் என்கின்றார்கள் பலர் - வல்வையர்களால் பெரிதும் பார்த்துப் பேசப்படும் இணையதள வெற்றியின் காரணகர்த்தா. செய்திகள் இவ்வாறுதான் அமைய வேண்டும், இலக்கணப்பிழைகள், தமிழ் வசனங்கள், இணையதளத்தில் பிரதான குறிப்புக்கள், இணைய தள வரம்புகள், கவிதைகள் என இன்றைய நவீன உலக நடப்பிகேற்ப சிறந்த மற்றும் நிரந்த இணையதளத்தை ஒரு உண்ணத நிலைக்கு கொண்டுயர்த்தி விட்டுச் சென்றுள்ளார்.
சில வேறு விடயங்கள்
ஐயா இறந்த பின் கிடைத்த JP பட்டத்திற்கு அழைப்பு வந்திருந்தது.
காது கேட்பது வயதுக்கு ஏற்றாற் போல் குறைந்திருந்தது, மெசின் வாங்கிக் கொடுத்தோம், போடவில்லை. காது மெசின், வீல் செயார் இவை எல்லாம் ஐயா கனவிலும் பாவிக்க விரும்பாதவை.
வரைபடத்தில்
கார், மோட்டார் பைக், சோஸல் மீடியா, பண வசதி, ஐயாவின் பெயரை கூறி அறிமுகப்படுத்தக் கூடிய கசதி போன்ற எல்லாம் இருந்தும், எனது இதே வயதில்ஐயா சேர்த்த நட்பு வட்டாரத்தை – இந்த எந்த வசதிகளும் கொண்டிராத ஐயா அந்தக் காலத்தில் எப்படிக் கொண்டிருந்தார் என்பது எனக்கு இன்றும் ஆச்சரியம்.
ஐயாவின் ஆவணங்கள் முதிலில் 90இலும், பின்னர் 96 இடப் பெயர்விலும், அதன் பின்னர் வன்னியில் ஏற்பட்ட இடப்பெயர்விழும் என கிட்டத்தட்ட முழுமையாக அழிந்து விட்டது. இதுதான் ஐயாவிற்கும், இப்பொழுது எனக்கும் உள்ள பெரிய கவலை.
ஐயாவை பொதுவாக மாஸ்டர் என அழைத்தாலும் வகுப்புத் தோழர்கள் ‘அதிரூபர்’ என்றே அழைப்பது வழக்கம்.
ஐயாவால் பலர் பலவித பலன்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்கள். பரிகளில் ஓரிரு நரிகளும் அடக்கம்.
அவருக்கு இருந்த மிகப் பெரிய கவலைகளில் ஒன்று - நான் மெலிவாக இருப்பது. எப்பொழுதும் இதைப்பற்றி கூறுவார்.
கப்பலில் இருந்து யாருக்கும் போன் எடுத்தாலும் – அம்மா, மனைவி, நண்பர்கள் என யாராக இருந்தாலும் - ஏதாவது சின்ன Issue வை சொல்லியே தீருவார்கள் – தவிர்க்க முடியாதவைதான். ஆனால் கப்பலில் வேலை செய்பவர்களுக்கு இவை போன்றவை சில நேரங்களில் பெரிய தலைவலி. ஆனால் ஐயாவுக்கு போன் எடுத்த இந்த 25 வருட கப்பல் வாழ்க்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு பிரச்சனையையும் கதைக்கவில்லை. சுகம் மட்டுமே விசாரிப்பார்.
கதைத்து முடியும் பொழுது தவறாமல் ‘சந்தோசம்’ என்பார்.
ஒரே ஒரு குடும்பப் படம் எடுப்பதற்கு பருத்தித்துறை குகன் ஸ்டுடியோ கூட்டிச் சென்றார் – இன்று ஆயிரம் படங்கள் எடுத்தாலும் அதுதான் பொக்கிஷம் . 4 வயது அப்போது, போகும் பொழுது வீதியில் கீழே இருந்து ஒரு ரப்பர் பேண்ட் ஒன்று எடுத்தேன், இன்றும் படத்திலும் உள்ளது நினைவிலும் உள்ளது.
சிறுவயதில் எங்களுக்குப் பாடம் சொல்லித் தந்ததில்லை. காரணம் நோ டைம். இப்பொழுது நானும்..... அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் இருந்த சொத்துக்கள் 2 சூட் கேசுகள் இருந்தவை மட்டும்தான். அதற்குள் அம்மாவின் கல்யாணப் புடவை போன்றவை, சில முக்கிய ஆவணங்கள. அந்த துணிப் பைகளுக்குள் ஏராளமானபாவித்த மைப் பேனைகள். 2 சிறிய துணிப் பைகள். வருடப் பிறப்பிற்கு பூஞ்சடித்து வீடு கழுவும் போது இரண்டு சூட் கேசுகளும் திறக்கப்படும். அப்பொழுது அதற்குள் இருக்கும் 2 துணிப் பைகளில் இருக்கும் பேனைகளை எடுத்து மை நிரப்பி எழுதி விளையாடுவோம். ‘டேய் எடுக்காதேங்கோடா அவை என் சொத்து’ என்பார். இன்று அவற்றில் ஒன்றுமில்லை.
புனை பெயர்களில் எழுதியதில்லை. பெயருக்கு முன்னால் ‘வல்வை’ என்றும் பாவித்ததில்லை.
70 களில் ஐயா
தனது தம்பியுடன் ஒரு முறையும் சண்டை இட்டதையோ அல்லது கருத்து முரண் பட்டதையோ நான் கண்டதில்லை. ஆனால் பிள்ளைகள் நாம் அப்படியல்ல.
என் பிள்ளைகள் கொழும்பில் பிறந்த பொழுது என்னை ‘ஐயா’ என்றுதான் அழைக்க வேண்டும் எனப் பழக்கினேன். சரிவரவில்ல. காரணம் Pre school இல் பல மொழிக்காரர். அங்கே ஆசிரியைகள் எல்லோருக்கும் பொதுவாக ‘டாடி’ என்று பழக்கினார்கள். ‘ஐயா’ என்றால் சிங்களத்தில் ‘அண்ணா’ என்று வேறு. (எனது மூத்த மகளிடம், அவளின் சிநேகிதி ஒருத்தி ‘யார் இவர், உன் அண்ணாவா’ என்று அண்மையில் கேட்டாளாம் என்பது வேறு விடயம்). நிலைமையை உணர்ந்து பேசாமல் சில காலம் போகட்டும் என்று விட்டு விட்டேன்.
பிள்ளைகள் ‘டாடி’ என்று என்னைக் கூப்பிடும்போது, ஐயா சங்கடப்படுவதைப் பார்த்து இருக்கின்றேன். தற்போது பிள்ளைகள் முழுக்க ‘ஐயா’ என்றுதான் கூப்பிடுகின்றார்கள்.
அம்மாவும் ஐயாவும்
அடிக்கடி சிறு சிறு சண்டை பிடிப்பார்கள். ஐயாவின் பாதையை மாற விடாமல் பார்த்தவர்.
ஐயாவின் நாடகங்களில் அம்மா தான் பின்னணி பாடகியாம்.
ஐயாவின் இறுதி ஊர்வலம் ஜூலை 12 ஆம் திகதி இடம்பெற்றது. இது அம்மாவின் ‘பிறந்தநாளுக்கு’ ஐயா கொடுத்த இறுதிப் பரிசு.
என்னுள் இருந்த உள்ளுணர்வு
ஐயா பிரிவார் என்பது போன்ற என்னணம் எனக்குள் கடந்த வருடத்தில் இருந்தது. அதே போல அக்காவும் கூறுகின்றார்.
கடந்த கப்பலுக்கு முதற் கப்பலில் இருக்கும்பொழுது, ஒரு வேளை ஐயா இப்பொழுது இறந்தால் எப்படி ஐயாவை பார்க்க முடியும் என்று மனதில் எண்ணினேன்.
அந்தக் கப்பலில் இருந்து இறங்கியவுடன், ஊர் சென்று ஐயாவை அவர் வேலை செய்த இடங்கள், சில நண்பர்கள் வீடுகள், வன்னி.... என அழைத்து சென்றேன். அவர் கற்பித்த விஸ்வமடு வித்தியாலயத்திற்கும் அழைத்துச் சென்றேன். பாடசாலையை விட்டு வர, ரெட்பானா சந்தி வரை இந்த வீடு அடுத்தவீடு என பலர் மாறி மாறி வந்து ஐயாவைச் சந்ததினர்.
இணையதள ஸ்தாபகர்
மாலை வீடு திரும்பி சில நேரம் கழித்து எனது சொக்கில் தட்டி “நன்றியடா, நல்ல வேலை இன்று செய்தாய், மிகவும் சந்தோசம்” என்றார். இப்படி எங்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பொழுதும் முன்னர் ஐயா செய்ததில்லை.
அதே போல் கொழும்புக்கும் அழைத்து வந்து, அவர் சம்பந்தப்பட்ட இடங்களைக் காண்பித்தேன். அக்கா இருந்த வீட்டு ஒழுங்கைக்கு வந்த பொழுது பேரன்களை நினைத்து மிகவும் கலங்கினார்.
அப்படியே கடற்கரையால் நடந்த பொழுது ‘சே எப்படியெல்லாம் நடந்தனான், இப்பொழுது அப்படி நடக்க முடியவில்லை’ என்றார். முதன்முதலாக அவர் அப்படி கூறினார் - தளர்ச்சி தெரிந்தது.
இறுதியாகக் கதைத்த பொழுது கதைத்தபோழுது கூறினார், “நீ கேட்ட படி எல்லாம் எழுதி விட்டேன் – இனி நீ வந்து பார்க்க வேண்டியது தான் மிச்சம்”. என்றரர்.
பேசும் பொழுது “உனது கப்பல் வர இன்னும் 1 மாதம் அளவில் இருக்கின்றது தானே” என்றார். புதுக் கப்பல், எலிவேட்டரில் சின்ன பிரச்சனை, நிலத்திலிருந்து எண்ணினால் சுமார் 10 மாடித் தட்டுக்கள், கண்டிப்பாக ஐயாவால் நடந்து ஏறி வர முடியாது, ஐயா வந்தால் தூக்கிக் கொண்டுதன்னும் போக வேண்டும் என எண்ணியிருந்தேன்.
ஆனால் உள்ளுணர்வு ஐயா கப்பலுக்கு வர மாட்டார் எனபது போல் இருந்தது.
மனைவியுடன் கதைக்கும் பொழுது, இன்னும் ஒரு மாதத்தில் கப்பலால் இறங்கப் போகின்றேன். இந்த முறை ஊர் போகும் பொழுது Voice Recorder கொண்டு போய் ஐயாவிடம் கதைத்து பல விடயங்களைப் பெறவேண்டும் என்று கூறியிருந்தேன். நிறைவேறாமல் போய்விட்டது.
இறுதியாக ஐயாவின் உள்ளுணர்வும்
கடைசியாக கொழும்பு வந்த போது கொட்டஹேனா சென்று அங்கு நாம் முன்னர் இருந்த வீட்டுக்குச் சென்று அங்கு வீட்டுக்குள்ளும் சிறிது நேரம் இருந்து கதைத்துள்ளார். கொழும்பு வந்தால் கோனேஸ் (Dr.கோணேஸ்வரன்) அண்ணா வீட்டுக்கு கட்டாயம் செல்வார். (தாயார் ஐயாவுடன் ஒன்றாகப் படித்தவர்), கடைசி முறையும் தவறவில்லை.
இறப்பதற்கு சில நாட்கள் முன்பு, அம்மா தூங்கிக் கொண்டிருந்த போது அயலவர் பாலச் சந்திரி அண்ணா அம்மாவிடம் சில பொருட்கள் கொடுக்க வந்திருந்தார். பொதுவாக அம்மா தூங்கிக் கொண்டிருந்தாலும் அவர் அம்மைவைக் கூப்பிட்டு கதைத்து விட்டுச் செல்வது தான் வழக்கம், எழுப்பும் போது ஐயா ஒன்றும் கூறுவதில்லை. ஆனால் அன்று மட்டும் ஐயா பாலச் சந்திரி அண்ணாவிடம் கூறியுள்ளார் “அவ வேலை செய்து விட்டு தூங்குகின்றா, எழுப்பாதே’ என்று
பிரியும் போது ஐயா
அம்மா ஐயாவை கவனித்துக் கொண்டிருந்த பாலச் சந்திரி அண்ணா வீட்டுக்கு போய் வேட்டி போன்றவை கொடுத்துள்ளார்.
ஏராளமானோர் மாஸ்டர் அண்மையில் தம்மைச் சந்தித்து கதைத்தார் என்றார்கள்.
வீட்டில் பல சம்பவங்கள் தனது இறுதிப்பயணத்துக்கு ஏற்றாற்போல் செய்திருந்தார். முக்கியமாக எழுதி முடிக்கப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டிருந்த அவரின் படிப்பு மேசை.
அஞ்சலிகள்
Face book, Twitter, இணைய தளம் எனப் பலர் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஒருவர் மட்டும் காழ்புணர்ச்சியுடன் ஐயாவின் ‘இறுதி ஊர்வலத்தைத் தாங்கிக் கொண்ட கப்பல்’ பற்றி கேட்டிருந்தார்.
கப்பலில் தான் இறுதி ஊர்வலத்தைக் கொண்டு போகவேண்டும் என்பது நாம் எடுத்த முடிவல்ல. ஆனாலும் அந்தக் கருத்தை வெளியிட்டவருக்கான பதில்.
ஐயாவின் தகப்பன் 2 பாய்மரக் கலங்களை வைத்திருந்தவர். இலங்கையில் எனக்குத் தெரிய இரு மகன்களையும் கப்டன்கள் ஆகப்பெற்றவர் எமது தந்தையே - இது அரைவாசி பதில் தான், மிகுதியை ஒரு காலத்தில் சந்தர்ப்பம் கிடைத்தால் தெரிவிக்கின்றேன்.
உலகின் பல பாகங்களிலும் வாழும் பலரும் பல அஞ்சலிகளை வெளியிட்டுர்ந்தனர். மனமார்ந்த நன்றிகள்
அதிரூபசிங்கம், வல்வெட்டித்துறை
•ஐயாவிற்கு, கனடா வல்வை நலன்புரிச் சங்கம் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலியில், “ஒருவரைப் பார்த்து, உனக்கு அதிரூபசிங்கம் மாஸ்டரைத் தெரியுமோ எனக் கேட்க, அவர் தெரியாது எனக் கூறினால் அவர் வல்வெட்டித்துறையர் அல்லர், இது தான் அதிரூபசிங்கம் மாஸ்டரின் அடையாளம்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
•ஒருமுறை எமது விலாசம் தெரியாத ஒருவர் இலங்கையின் வேறு ஒரு பாகத்தில் இருந்து ஐயாவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதிரூபசிங்கம், வல்வெட்டித்துறை – இது தான் அவர் போட்டிருந்த விலாசம் - ஐயாவிற்கு மகனாகவும், வல்வையில் பிறந்ததற்கும் என்ன பேறு பெற்றோனோ?
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
கனக.மனோகரன் (Canada.)
Posted Date: January 15, 2018 at 10:50
அன்பு சால் ஆதவனுக்கு ! .... உங்களை நான் 'தம்பி' என விழிக்கவில்லை. ஏனெனில் உங்கள் தாய் வழிப்பேத்தி என் மைத்துனி. உங்களைப் 'பேரன்' என அழைப்பதில் எனக்குப் பெருமிதம்!
உங்கள் இணையத் தளத்தை தினந்தினம் இரு தடவைகளாவது பார்ப்பது என வழக்கம், பழக்கமும் கூட.
உங்கள் தாதை எனக்கு ஆரம்பத்தில் ஆசான், பிந்நாளில் நண்பன். அவர், படிகவெட்டுகள் கொண்ட பளிங்குபோல் பல்திறன்களையும் பல முகங்களையும் கொண்டவர்.
தண்டியலங்காரம் உலகத்து இருளகற்றுபவை இரண்டு என்கிறது. ''மின்னோர் தனியாழி வெங்கதிர்'' ஒன்றாம்; ''தன்னிகரில்லாத தமிழ்'' மற்றொன்றாம். உங்கள் பிதா இந்த இரண்டையும் தந்தவர். ஆதவனை மகனாய்த் தந்தார். அருந்தமிழை என்போன்ற மாணவர்களுக்குத் தந்தார்.
உங்கள் தொடர் எழுத்தின் தொடக்க உலா எனை வெகுவாகக் கவர்ந்தது. உங்கள் பெற்றவர் பற்றிய அறியாத விடயங்களை - விபரங்களை அறியப்பெற்றேன்.
அவையத்து முந்தி இருக்கச் செய்வது தந்தை கடன் என்றான் வள்ளுவன். ஆனால் தத்தம் பிள்ளைகளை தமிழ் அவையத்து முந்தி அல்ல குந்தி இருக்க வைக்க இயலாத அவலத்தில் இன்று பல பெற்றவர்கள். அந்த ஆதவனின் விரிகதிர் போல இந்த ஆதவனின் வீச்செல்லையும் இப் பரந்த உலகில் படர்ந்திடப் பார்க்கிறோம்.
தங்கள் இன் பணிகள் இனியும், இனிதும் தொடரட்டும் ! வல்வை முத்துமாரி ஆத்தாளின் அருட்பார்வை பக்கத்து ஆத்துக்காரனில் பதியாமலா? அம்மாடி உன் அயல் மாடிக்கும் அருள்வாய் நீ!,....
இவை, அன்பன் - கனக.மனோகரன்
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: January 14, 2018 at 00:14
தம்பி ஆதவன்! உங்கள் கட்டுரை படித்து மகிழ்ச்சி அடைந்தோம். தொடராக எழுதி நூலாக அடுத்த வருடம் நினைவு நாளில் வெளிவர வேண்டும். புத்தகம் என்றும் நிலைத்து நிற்பவை. வல்வையில் முதல் முதல் ஆரம்பிக்கப்பட்டது 'இரவுப் பாடசாலை' அதில் அதிரூபசிங்கம் ஆசிரியரிடம் தமிழ் சமயம் படித்தோம். அப்பொழுது பெற்றோல்மக்ஸ் ஏற்றித்தான் படித்தோம். மாதம் ஐந்து ரூபாய்கள் கொடுத்தோம். தி.பரமசிவம் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். நாங்கள் ஒவ்வொரு தடவையு ஊர் வரும்போது எங்கள் ஆவணக்காப்பகத்திற்கு வந்து எங்களுடன் கலந்துரையாடிச் செல்வார். நீங்கள் Captain ஆக இருப்பதோடு சிறந்த எழுத்தாளராகவும் வருவீர்கள். அதற்கு உங்கள் அப்பாவின் எழுத்தும், அலை ஒளி பத்திரிகையின் அநுபவமும் உதவி புரியும்.
நன்றி
குமுதினி (இலங்கை)
Posted Date: January 13, 2018 at 16:44
மாஸ்டரின் பல தெரியாத விடயங்களை அறிந்தேன். பல இடங்கள் மனதை நெகிழவைத்தது.இவ் முதல் ஆக்கமானது அவரின் ஆத்மாவை மகிழ்வித்திருக்கும்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: January 13, 2018 at 07:44
அவரோடு பேசி பழகிஇருக்கின்றேன் அவருடைய தமிழ்மொழி மீதான காதலும் தாய்மண் மீதான அன்பும் நேரடியாக பார்த்து தெரிந்துகொண்டவன் .அவரைபற்றி தெரியாத நிறைய விடயங்கள் வாசித்து அறிந்துகொண்டேன் . மிக சிறப்பு ஆதவண்ணா படித்து முடிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.