கடந்த அக்டோபர் மாதம், நான் பணி புரியும் கப்பல் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வாறு கொழும்பை அடைய 3 நாட்கள் இருந்த வேளையில், கப்பலை “விழிஞ்சம்” என்னும் துறைமுகத்துக்கு திருப்பும்படி அறிவுறுத்தப்பட்டது.
எனது நீண்ட கடற்பயணத்தில் இவ்வாறானதொரு அறிவுறுத்தல் கிடைக்கப் பெற்ற சம்பவம் இதுதான் முதற் தடவை. இது ஒரு புறமிருக்க….
விழிஞ்சம் – நான் இதுவரை கேள்விப் படாத ஒரு சொல், துறைமுகம்.
நான் பணிபுரியும் கப்பல் 'அளவில்' பெரியது. உலகில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில துறைமுகங்கள் மட்டுமே இவ்வகைக் கப்பல்களை கையாளக்கூடியவை.
சரி, எங்கு குறித்த துறைமுகம் உள்ளது என்று தேடி பார்த்தால், அது கேரளாவில் – கொழும்புக்கு அண்மையாக அமைந்திருந்தது. நம்ப முடியவில்லை. “கேரளாவில் பாரிய கப்பல்களை கையாளக் கூடிய துறைமுகமா” என்று?
விழிஞ்சம் பற்றி எவருமே எங்குமே இதுவரை இங்கு இலங்கையில் கதைக்கவில்லை.
2000 இல் மும்பாயில் படித்துக் கொண்டிருந்த போது, விரிவுரையாளர் ஒருவர் கூறிய விடயம் ஞாபகம் வந்தது – “உலகில் பொதுவாக கப்பல் ஒன்றை சுமார் 8 மாதங்களில் கட்டி முடிக்கின்றார்கள், ஆனால் இங்கு கொச்சினில் (கேரளாவில்) ஒரு கடற்படை கப்பல் ஒன்று 8 வருடங்கள் ஆகியும் கட்டிமுடிக்கப்படவில்லை” என்று.
Chart இல் கூட குறித்த விழிஞ்சம் துறைமுகத்துக்குரிய போதிய விபரங்களை (இடம், ஆழம்) காணமுடியவில்லை.
“குறித்த Pilot Station க்கு வரவும், கப்பலை உள்ளெடுக்கும் Pilot, கப்பலில் ஏறும் போது, தன்னுடன் துறைமுகம் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய Chart ஐ கொண்டு வருவார்” என Agent அறிவித்திருந்தார்.
கடைநிலையில் உள்ள துறைமுகங்களுக்கு சென்றபோது கூட இவ்வாறானதொரு அனுபவம் எனக்கு இது போன்று முன்னர் ஏற்படவில்லை.
மிகுந்த சந்தேகத்துடனும் அவாவுடனும் விழிஞ்சம் துறைமுகத்தை அடைந்தேன்.
துறைமுகத்தைப் பார்த்ததும், பைலட் இடம் கேட்ட விடயங்களும் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தின.
காரணம் இந்தியாவின் முதலாவது ஆழமான – பாரிய கொள்கலன் கப்பல்களை கையாளக் கூடிய (India’s first deep water container port) கொள்கலன் துறைமுகமாக இது அமைந்திருந்தது.
பைலட் கூறியதன் அடிப்படையிலும், பின்னர் Goggle பண்ணிப் பார்த்ததிலும், குறித்த துறைமுகம் அதானி நிறுவனத்தால் கட்டப்படுகின்றது.
துறைமுகத்தின் 20 வீதம் முடிந்துள்ளது, இன்னும் 80 வீதம் வரும் வருடங்களில் விஸ்தரிக்கப்பட்டு பூர்த்தியாக்கப்படவுள்ளது.
துபாய், கொழும்பு, சிங்கபூர் ஆகிய நாடுகள் மூலம் ஏற்றுமதியாகும் இந்தியாவின் 50 வீதமான கொள்கலங்கள், இந்த விழிஞ்சம் துறைமுகமூடாக மேற்கொள்ளப்படமுடியும். அதாவது Transshipment hub ஆக இது விளங்கவுள்ளது.
துறைமுகம் இன்னும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவில்லை.
மேற்கூறியவை விழிஞ்சம் துறைமுகம் பற்றிய சுருக்கம் தான்.
கொழும்புக்கு – இலங்கைக்கு இது ஒரு இனிப்பான செய்தி அல்ல என்பது தான் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
ஏன் என்றால் இந்தியாவின் 80 வீதமான கொள்கலன்களை கடந்த சில வருடங்கள் வரை கையாண்டு வந்தது கொழும்பு துறைமுகம் தான். இதனை பிரதானமாக கருத்தில் கொண்டே கொழும்பு துறைமுகமும் கடந்த காலங்களில் மழ மழவென பெருத்து விரிந்தது என நான் நினைக்கிறேன்.
சரி, விழிஞ்சம் துறைமுகத்தால் கொழும்புக்கு பாதிப்போ என்றால் – விடை 'ஆம்' மற்றும் 'இல்லை' என்று இரண்டையும் கூற வேண்டும்.
மேற்கு இந்தியாவின் பெரும்பான்மையான கொள்கலங்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் விழிஞ்சதிலிருந்தே செல்லவுள்ளது. இதுவரை இந்திய கொள்கலன் ஏற்றுமதி மூலம் இலங்கை பெற்று வந்த அந்நிய செலாவணியின் கணிசமானதொரு பங்கு விழிஞ்சம் மூலம் இழக்கவுள்ளது இலங்கை.
1995 இல் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமட் – சிங்கபூர் ஊடாக ஏற்றுமதியாகும் கொள்கலங்களுக்கு 200 வீத வரி விதிக்க – மலேசியா மாபெரும் கொள்கலன் துறைமுகங்களை கண்டது. மலேசியாவின் கொள்கலன்கள் நேரடியாக வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தது. இவ்வாறானதொரு முடிவு இந்தியாவிலும் எடுக்கப்பட்டால் இங்கு மேலும் பாதிப்பு தான்.
விழிஞ்சம் துறைமுகம் கேரள அரசாங்கத்தின் கீழ் கட்டடப்படுவதாக விழிஞ்சம் துறைமுகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் லால் பஹதூர் சாஸ்திரிக்கு பின்னர் இந்தியாவில் துறைமுகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்றால் அது தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி (தி) தான். ஏனெனில் மோதி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்த காலத்தில் தான் குஜராத்தில் இந்தியாவின் சிறந்த துறைமுகம் முந்திரா உருவாக்கப்பட்டதுடன், இவர் பிரதமராக வந்த போது சாகர் மலா திட்டம் (Sagar mala project) என்னும் 'பாரிய துறைமுகங்கள் அபிவிருத்தி திட்டம்' ஒன்றை ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
சரி அப்ப கொழும்பு அப்படியே அடிபட்டுப் போய் விடுமோ என்றால் விடை ‘அப்படி இல்லை”. காரணம் கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்த நெருக்கடி (Port congestion) தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகளாவிய வாணிபம் அதிகரித்தமை, கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை போன்ற காரணிகள் கொழும்பு துறைமுகத்தை தொடர்ந்து தக்க வைக்கும்.
(40 வருடங்கள் முன்பு 4 Switch, 4 பாய், 2 தலையணை என்று இருந்து எல்லோர் வீடுகளில் இன்று எவ்வளவு பொருட்கள் – இதுதான் பிரதான காரணம்) கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் Port congestion ஐ சமாளிக்க கொழும்பு துறைமுகமும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
2 வருடம் கழிந்து, 3 வாரங்கள் முன்பு கொழும்பு துறைமுகம் சென்றேன். ஆச்சரியமாக இருந்தது – அதானியின் முனையம் ஒன்றின் ஒரு பகுதி கட்டப்பட்டு, முனையம் பகுதியளவில் தொழிற்பட ஆரம்பித்துள்ளது.
“நாங்கள் எதிர்பார்த்த வேகத்தை விட வேகமாக முனையம் கட்டப்பட்டு வருகின்றது” என்று கப்பலுக்கு வனத் Pilot கூறினார்.
“நாங்கள் வந்தால் அதானிக்கு இடமில்லை” என்று கூறியதமை இன்று பின்வாங்கப்பட்டுள்ளமையானது, ஆட்சி செய்வது அவ்வளவு இலகுவானதல்ல என்பதையும், NPP யின்பக்குவத்தையும் காட்டிநிற்கின்றது?
(விழிஞ்சம் – உலகில் இந்த துறைமுகத்தை சரியாக உச்சரிக்கக் கூடியவர்கள் மலையாளிகள், தமிழர்கள் மட்டும் தான். காரணம் சொல்லில் உள்ள “ழ”” எழுத்து, ஆங்கிலத்தில் ZH சேர்த்து Vizhinjam என பெயரிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: December 30, 2024 at 06:17
சிறந்த பதிவு நன்றி ஆதவன் அண்ணா
வல்வெட்டித்துறையில் இருந்து எமது முன்னோர்கள்
காற்றை பயன்படுத்தி பாய்க்கப்பல்கள் மூலமாக
கடல் வணிகத்தில் ஈடு பட்டார்கள் என்று சிறுவயதில் எனது ஐயா சொல்ல கேள்விபட்டிருக்கின்றேன்
அது குறித்த யாராவது பதிவு செய்திருக்கின்றார்களா?
அன்னபூரணி கப்பல் குறித்து பதிவுகள் இருக்கும் அளவுக்கு எமது முன்னோர்கள் செய்த கடல் வணிகம் குறித்து பதிவுகளை நான் பார்க்கவில்லை
தயவு செய்து அது குறித்து உண்மையான வரலாற்று பதிவுகளை எமக்கும் எமது தற்போதய இளம்தலமுறையினருக்குமாக பதிவிடவேண்டும்
எமது முன்னோர்களின் கடல் வணிகம் குறித்த பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்னும் சிறப்பாக இருக்கும் .
நன்றி
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.