ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
கட்டுரைப் போட்டிகள், கையெழுத்துச் சஞ்சிகை என எழுத்துத்துறையில் 20 வயதில் ஆர்வம் காட்டியிருந்தாலும், பின்னாட்களில் கேட்பதை எல்லாம் சிறப்புற எழுதித்தர தந்தையார் இருந்ததாலும், 21 வயதில் கப்பற் துறைக்குள் நுழைந்து 10, 15 வருடங்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டியதாலும், எழுதவேண்டும் என்று பெரிதாக ஆர்வம் காட்டியிருக்கவில்லை.
ஆனாலும் கடந்த 10 வருடங்களாக என்னை மிகவும் உறுத்திவரும் வரும் விடயம், தமிழர்கள் பலர் தமது சந்ததிக்கு சூட்டிவரும் பெயர்கள்.
இலங்கை. இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேசம், சிங்கபூர், மலேசியா, இந்தோனிசியா, சீனா, மியன்மார், கென்யா, கானா, செர்பியா, போலாந்து என உலகின் பல்வேறு பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் (Multi National Crew) பணிபுரிந்து வருவது என்னை இந்த விடயத்தில் மேலும் உறுத்தத் தொடங்கியது.
இது சம்பந்தமான எனது எண்ணத்தை கருத்துக்களை முடிந்தவரை பலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவா இருந்து வந்தது.
இந்த நோக்கில், இது சம்பந்தமாகவும், தொண்டைமனாறின் சுற்றுலா அபிவிருத்தி சம்பந்தமாகவும் எழுத விரும்பி, கடந்த சுமார் 7, 8 வருடங்கள் முன்பு யாழில் உள்ள சகல பத்திரிகைகளுக்கும், கொழும்பின் முன்னணி தமிழ் பத்திரிகைகளுக்கும், அவர்கள் குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல்களுக்கு எனது விருப்பத்தை தெரிவித்திருந்தேன் ௦- அதாவது ‘இரண்டு கட்டுரைகள் எழுத விரும்புகின்றேன் அவற்றை பிரசுரிப்பீர்களா’ என்று?
என்ன ஆச்சரியம்! ஒருவரும் பதில் அளிக்கவில்லை. பத்திரிகைத் துறை – ஒரு Curtsey ஆகத்தன்னும் ‘உமது மெயில் கிடைக்கப்பெற்றது’ என ஒரு பதிலை குறைந்தது அனுப்பியிருக்க வேண்டும்.
இப்பொழுது எழுத சந்தர்ப்பம்.
கீழேயுள்ள 'Crew list' ஐப் பாருங்கள். எனது முன்னைய கப்பல் ஒன்றில் பணி புரிந்த மாலுமிகள் விபரம்.
இதில் ஒவ்வொரு மாலுமிகளினதும் பெயர்களையும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உற்று நோக்குங்கள். குறித்த பெயர்கள் அவர்களது நாட்டை, அவர்கள் இனத்தை அல்லது மதத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பதை தெளிவாக அறிவீர்கள்.
சர்வதேச ரீதியாகத் தொழில் புரியும் நாங்கள் (பிற நாட்டவர்களும்), ஒருவரின் பெயரைப் பார்த்தவுடனேயே அவர் எந்தை நாட்டைச் சேர்ந்தவர், எந்த இனம் அல்லது எந்த மதம் என்பதை தெரிந்துவிடுவோம்.
தற்போது சூட்டப்பட்டுவரும் பெயர்கள்
ஆகாஷ், சஞ்சய், கெவின், த்ரிசா, ஸ்நேகா, அஸ்வந், இஸா, ஆதித்........இப்படி நான் நீட்டிக்கொண்டு போவதற்குப் பதிலாக, நீங்கள் ஏதாவது மூன்று எழுத்துக்களை போட்டு, அல்லது இந்தியாவின் தமிழகத்தை தவிர்ந்து ஏனைய ஏதாவது ஒரு மாநிலக்காரரின் முழுப்பெயரில் ஒரு பகுதியப் போடுங்கள். இதுதான் இன்றைய பெரும்பாலான பிள்ளைகளின் பெயர்கள்.
இந்த தமிழ் பெயர்களை, மேலேயுள்ள ‘Crew list’ க்குள் சேர்த்தால் – அது கண்டிப்பாக புதுமையாகத்தான் இருக்கும். இந்தப் பெயர்களுக்குச் சொந்தக் காரர் எந்த நாட்டவர், எந்த இனத்தவர் அல்லது எந்த மதத்தவர் என்பதை கண்டறிய முடியாது.
வடநாட்டவர் பெயர்கள்
வட நாட்டவர்களின் முழுப் பெயர்களில் ஒரு பகுதியினை பெயர்களாக சூட்டுகின்றோம்
இரண்டு உதாரணங்கள்
விஜய் சங்கர் பாண்டே – உத்தரப்பிரதேச மாநிலக்காரர்
மோகன் தாஸ் கரன் சந்த் காந்தி (மகாத்மா காந்தி) – குஜராத் பிரதேச மாநிலக்காரர்
“அப்பனோட அப்பன் பெயரை மறக்கின்றோம்,
பிள்ளைக்கு சச்சின் டோனி பெயர் வைச்சு வளர்கின்றோம்” (face book லிருந்து )
நான் பம்பாயில் 2 வருடம் கல்வி கற்றேன். இதனால் இந்தியாவின் சகல மாநிலகாரர்களுடனும் பழகும் வாய்ப்பு. ஒருவேளை எனக்கு எனது தந்தையார் ‘சச்சின்’ என்று பெயர் வைத்திருந்தால் – இந்த 2 வருடமும் கூனிக் குறுகியிருந்திருப்பேன். பாம்பே மகாராஸ்திர மாநிலத்தின் தலைநகர், சச்சின் டெண்டுல்கர் மகாராஸ்திரத்தைச் சேர்ந்தவர். நான் ஒரு இலங்கைத் தமிழன் எனக்கு மகாராஸ்திர மாநிலத்தவரின் பெயர். அதுவும் ‘அரைப் பெயர்’
இந்திய சினிமாவின் தாக்கம்
70 – 80 களில் தான் தமிழ் பெயர்கள் ஆட்டம் காணத் தொடங்கியது. இவற்றுக்கு பிரதான காரணம் இந்திய சினிமா.
ராஜேஷ் கண்ணா, ஜேசுதாஸ், மதுபாலா, தர்மேந்திரா, ஹேமமாலினி, தேவ் ஆனந்த் - சில உதாரணங்கள். அத்துடன் இதே காலப் பகுதியில் இந்திய தொடர்பு இலகுவடைந்து அதிகரித்தது. சினிமாவை விட இந்திய பத்தரிகைகள் சஞ்சிகைகள் இங்கு அதிகளவில் மலிவு விலையில் வியாபிக்க தொடங்கின. இந்தியா என்றால் தமிழ் தான் என நினைத்த பலரும் அவற்றில் பார்த்த பெயர்களுக்கு தாவத் தொடங்கினார்கள்.
இது போன்ற பெயர்களை உலகில் வைத்து வருபவர்கள் தமிழர்கள் மாத்திரமே. ஒரு இனத்தின், மதத்தின் அடையாளம் சிதைக்கப்பட்டுவருகின்றது.
தமிழர் சூட்டியுள்ள பிறமொழிப் பெயர்கள்
உசுரே உசுரே பாடலின் பிறகு அனன்யா பற்றின் பேரில் உள்ள அனன்யாவும் இனி எம்மில் பலருக்குப் பெயராகும்.
விக்கிப்பீடியா என்ன சொல்கின்றது
நான் கூறுவதை ஒரு புறம் இருக்க விக்கிப்பீடியா ‘தமிழர் சூட்டியுள்ள பிறமொழிப் பெயர்கள்’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பெரிய குறிப்பு என்னவென்று பாருங்கள்.
பல்கலைக் கழக மட்டத்தில் ஆய்வு
ஏன் தமிழர்கள் மாத்திரம் இப்படி செய்கின்றார்கள் என எவரும் இன்னும் பெரிதாக ஆய்வு செய்து வெளியிடவில்லை. இது பல்கலைக் கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்படவேண்டிய முக்கியமானதொரு விடயம்.
தமிழ் பெயர்கள் தற்பொழுது தடம் புரள சில காரணங்கள்
•தமிழ் பெயர் சார் கல்வி அறிவு போதாமை
•சாத்திரியார்கள். பெரும்பாலான சாத்திரிமார் குறிக்கோள் பணம். இதை வை, அதை வை என்று நாடுவோரை பயப்படுத்துகின்றார்கள்
•எண் சாத்திரத்தை மட்டுமே பார்த்து பெயர்கள் வைத்தல் (சாத்திரம் பிழை என்று சொல்வதல்ல என் வாதம்)
•இணையதளங்களில் உள்ள ‘தமிழ் பெயர்கள் பட்டியல்’ என இடப்பட்டுள்ள பெயர்கள்
•சமய இறுக்கம் குறைவாக இருப்பது
•பாசன்
(அண்மையில் ஊரில் தெரிந்தவர் மகனுக்கு பெயர் வைக்க எண் சாத்திரத்தை நாடியதாகவும் அதில் மூன்று பெயர்களை தெரிவு செய்ததாகவும் கூறினார். அதில் ஒன்று ஆதவன். மற்றைய இரண்டு ‘ஆ’ இல் தொடங்கும் 2 ½ எழுத்துப் பெயர்கள். இறுதியில் ஆதவனைத் தட்டி ஒரு 2 ½ எழுத்துப் பெயரை வைத்தார்களாம். தகப்பன் தானே கூறினார் ‘ஆதவன் கொஞ்சம் பழசு’ என்று!
ஜெகத் கஸ்பார் – புலிகள் இராணுவ சண்டை மேலோங்கியிருந்த காலத்தில் வெரித்தாஸ் வானொலிக்குப் பொறுப்பாக இருந்து, போர் பற்றிய செய்திகளை வெளியிட்டவர். புலிகளின் ஆதரவாளர் என்று பரவலாகக் கூறப்பட்டவர். இவர் ஒருமுறை கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதன் சாராம்சம் இதுதான்.
‘தமிழர்கள் முன்பு கூலி மனோபாவம் கொண்டிருந்தவர்கள், கூலிகளாக பல நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், கூலிகளாக பல நாடுகளில் பார்க்கப்பட்டுவந்தவர்கள். ஆனால் இந்த தமிழர்களுக்கான ‘கூலி’ என்னும் பதத்தை மாற்றி, அதற்கு ‘வீரம்’ என்ற பதத்தை மாற்றி அமைத்தவர் பிரபாகரன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதில் பிரபாகரனையும் வீரத்தையும் அகற்றிவிட்டுப் பாருங்கள். தமிழர் பெயர்கள் தடுமாறுவதற்கு இன்னொமொரு ஒரு காரணம் தெரியவரும்.
(ஜெகத்கஸ்பார் அவர்கள் கூற்று பொய்யானதொன்றன்று. தமிழர் வாழும் சில தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பிற இனத்தவர் இப்படி கூறுவதை நான் நேரடியாகவே முன்னர் பார்த்துள்ளேன்)
புலிகளும் தமிழும்
எமது பகுதிகளில் வேற்று மொழிப்பெயர் உருவாக்கத்தில் புலிகளும் ஒரு காரணம். 80 களில் போராட்ட மரபுகளுக்கிணங்க சங்கேதப் பெயர்களை இட நேர்ந்தபோது, இயக்கம் பல வட இந்தியப் பெயர்களையும், ஆங்கில மற்றும் இஸ்லாமியப் பெயர்களையும் உறுப்பினர்களுக்கு வழங்கியிருந்தது. அதே போல் முகாம்களுக்கும் கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ என்று பல வேற்று மொழிப் பெயர்களைச் சூட்டியிருந்தது.
ஆனாலும் சில வருடங்களில் மிகவும் காத்திரமாகச் சுதாரித்துக் கொண்ட இயக்கம் தமிழுக்கு – தனித் தமிழுக்கு தன்னை கிட்டத்தட்ட முழுமையாக மாற்றிக்கொண்டது. சகல உறுப்பினர்களுக்கும் தமிழ் பெயர் சூட்டப்பட்டது. வடமொழிப் பெயர்கள் கூட மாற்றப்பட்டது.
உதாரணமாக புலிகளின் மூத்த உறுப்பினர் ‘பேபிசுப்ரமணியம்’ அவர்களின் பெயர், ‘இளங்குமரன்’ என மாற்றப்பட்டது. (பேபி – இளமை, சுப்ரமணியம் – குமரன்) ஆனாலும் சூசை, கடாபி போன்ற சில பெயர்கள் ஏற்கனவே மிகப் பிரபல்யம் அடைந்திருந்ததால் தொடர்ந்து அவ்வாறே அழைக்கப்பட்டு வந்தன என்பது கட்டுரைக்குச் சார்பில்லாத ஒரு விடயம்.
இறுதிக் காலங்களில் தமது கட்டுப்பாட்டிலிருந்த வன்னிப் பகுதியில் ‘பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்கள்’ என்பதில் எழுதாத சட்டம் ஒன்றை புலிகள் நடைமுறைப்படுத்தி வந்திருந்தார்கள் எனக் கூறப்படுகின்றது. ‘அபிஷேகா’ போன்ற பெயர்கள் வைத்தவர்கள் கூட அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார்கள் என சிலர் கூறுகின்றார்கள்.
சமதான காலத்தில் தமிழக இருந்த வந்த பல தமிழ் தலைவர்கள் வன்னியில் பார்த்த நந்தவனம், குளிரகம், சுவையகம், வெதுப்பகம் போன்ற தூய தமிழ் பெயர்களை வீதிகளில் பார்த்து தாம் வியந்துபோனதாக பல நேர் காணல்களில் தெரிவித்திருந்தார்கள்.
இது மட்டுமல்லாது, புலிகள் சுமார் 40,000 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து இணையதளத்திலும் ஏற்றிவிட்டிருந்தார்கள்.
மேற்குறித்த போராளிகளின் தமிழ் பெயர்கள் மற்றும் தமிழ்பெயர் பட்டியல் தயாரிப்பில் எனது சிறிய தந்தையார் பங்கு பெரிதாக இருந்தது எனவும் அறிகின்றேன்.
தமிழ் பெயர்களின் சொந்தக்காரர்கள்
தமிழர் வாழும் இந்தியா, மலேசியா, சிங்கபூர், மொரிசியஸ், ரீயூனியன், தென் ஆப்ரிக்கா என சகல நாடுகளுக்கும் சென்றுளேன். நான் அறிந்தவரை வீதளவில் இன்றளவும், முற்றுமுழுதாக என்று சொல்ல முடியாவிட்டாலும், தூய தமிழ் பெயர்களை சூட்டியுள்ளவர்கள் மலேசியா மற்றும் சிங்கபூர் தமிழர்கள் என்றால் மிகையாகாது.
‘இராவணன் S/O ஆறுமுகசாமி’ சிங்கபூர் டாக்ஸி ஒன்றில் பார்த்த பெயர்.
இங்கு நான் பார்த்தவர்கள் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் தம் பிள்ளைகளுக்கு எப்படி பெயர் வைத்துள்ளார்கள் என்பது பற்றி இன்னும் நான் அறிந்துகொள்ளவில்லை.
எமது புலம் பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நாடுகளில் உள்ள அந்த நாட்டுக் காரர்கள் தமது பெயர்களை உச்சரிக்க திணறுகின்றார்கள். அதனால் பிள்ளைகளுக்கு அவர்கள் உச்சரிக்கக் கூடிய வைகையில் பெயர் வைக்க வேண்டிய சூழல் என்கின்றார்கள் சிலர். ஆனாலும் விதி விலக்காக சிலர் இயக்கம் சூட்டியிருந்த சங்ககாலப் பெயர்களையும் தம் பிள்ளைகளுக்கு சூட்டியுள்ளார்கள்.
“எனது மொழியும் எனது உடையும் தவறு என்று நீ நினைப்பாயானால் – மாற வேண்டியவன் நான் அல்ல – அது நீ தான்”.
‘எனது பெயரும்’ என்று சேர்த்திருக்கலாம். எப்படி சேர்ப்பது?
அதிரூபசிங்கம் ஆதவன் நீண்ட பெயர் என்பார்கள் பல நாடுகளில் கப்பல்களுக்கு வரும் அதிகாரிகள். உங்கள் பெயரை என்னால் வாசிக்க முடியும் போது எனது பெயரை ஏன் உங்களால் வாசிக்க முடியாது என்பேன். முயற்சித்து வாசிப்பார்கள்.
சீனாவில் தமிழ்மொழிக்கு கிடைத்த அந்தஸ்த்து
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
சீனா –மொழி, மதம், இனம் என்று இலகுவில் பிறநாடுகளுக்கு எதற்கு இடம் கொடுக்காத நாடு. அதுவும் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் மிக இறுக்கம். அந்தக் காலத்தில் கூட சீன பீக்கிங் வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிபரப்புச்சேவை இடம்பெற்றது. (இப்பொழுது தொடர்கின்றதா என்று தெரியவில்லை).
இவ்வாறானதொரு தமிழைத் தான் தற்பொழுது நாம் தொலைத்து வருகின்றோம்.
என்ன செய்யலாம்
ஒன்றும் செய்ய முடியாது.
பிற மொழிகளின் தாக்கம், அவற்றின் மீதான நாட்டம், இந்திய சினிமாவின் தாக்கம்,தமிழக தொலைக்காட்சிகளின் தங்கிலிசின் தாக்கம், டிரெண்ட், பாஷன், அறியாமை, குறைந்த தமிழ் மொழி அறிவு, புலம்பெயர் நாடுகளில் சூழலை அனுசரித்துப் போக வேண்டிய நிலைமை, சிலருக்கு சராசரிக்குக் கீழான மனோபாவம், சில அரைகுறை சாத்திரிமார்கள், எண் ஜோதிட நாட்டம், போதிய சமய, மொழி கட்டுப்பாடுகள் அற்ற தன்மை, நாத்திகம்........ என நீண்டு மிக வேகத்தில் ஓடிப்பாய்ந்துவரும் மிகப்பெரிய தமிழ் பெயர் குலைப்புக்கு முன்னால் – தமிழ் பற்றாளர்கள் ஏற்படுத்த முயற்சிக்கும் முயற்சிகள் எல்லாம் – இலகுவாகத் தூக்கி எறியப்பட்டுவிடும்.
நான் அறிந்தவரை தமது இனத்தின் பெயரை மாற்றி வைத்து வருகின்றவர்கள் தமிழர்கள் தான். கட்டுரை ஒன்று எழுத வேண்டும் என்றளவிற்கு எனது மண்டையைக் குடைந்து கொண்டிருந்த விடயம் இது. நான் எழுதுவதால் ஒன்றும் மாறப்போவதில்லை, தெரிந்த விடயம் தான். ஆனாலும் ஒரு சிலர் இதைபார்த்து தமிழ் பெயர் தமது பிள்ளைகளுக்கு வைப்பார்களேயானால், தமிழுக்கு நான் செய்த சிறு தொண்டாக இது அமைந்துவிடட்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Elayathamby Thevaguru (Canada)
Posted Date: October 18, 2021 at 05:40
அருமையான கட்டுரை. போற்ற வேண்டிய எண்ணக்கரு.
தமிழே விழித்தெழு! தமிழா விழித்தெழு! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!--இளையதம்பி தேவகுரு, கனடா, ஊருணி வல்வை
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: February 24, 2018 at 09:51
மிக சிறந்த பதிவு ;பெற்றோரிடத்தில் சரியான விழிப்புணர்வு இல்லாமலும் இதற்கொரு காரணம் ஏன் எனில் எது தமிழ் பெயர் எது தமிழ் பெயர் இல்லை என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை .எதோ பிள்ளைகளுக்கு பெயர்வைத்தால் சரி அது என்ன பெயராக இருந்தாளும் பரவாயில்லை .பெயரென்பது எமது அடையாளம் என்பதை உணர்ந்து கொள்வதில்லை .
எமது பெற்றோரின் காலத்து பெயர்கள் பெரும்பாலானவை தூய தமிழ் பெயர்களாகவே இருந்தன தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது .சினிமா ஒரு காரணமாக இருந்தாலும் தமிழ் பெயர்கள் அழிந்து போவதற்கு மதங்களும் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றது என்பதை புறந்தள்ளிவிட முடியாது .
தமிழ் பெயர் என்பது எந்த மதத்தையும் சாராதது ,வேற்று மொழி கலப்பில்லாதது .இயற்கையோடு சேர்ந்திருக்கும் .தமிழ் பெயர்களில் வீரமிருக்கும் காதலிருக்கும் அன்பிருக்கும் அமைதியிருக்கும் கவலையிருக்கும் மகிழ்ச்சி இருக்கும் .......உயிர்ப்பிருக்கும்
நன்றி ஆதவன் அண்ணா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.