ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
‘ஐயா, கப்பல் வாழ்க்கையில் உங்களுக்கு மிகப்பிடித்த விடயம் எதுவாக இருந்தது?’ என்றேன், ‘சிறந்த சாப்பாடுதான்’ என்றார். கடந்தமுறை நான் விடுமுறையில் நின்றபோது திரு.நவரத்தினம் அவர்களிடம் சென்று பல கேள்விகளைக் கேட்டு அவர் அளித்த பதில்களை ஒலிப்பதிவும் செய்திருந்தேன்.
நவரத்தினம் அவர்கள் தனது 98 ஆவது வயதில் கடந்த 8 ஆம் திகதி இயற்கை எய்தினார்.
வல்வையின் மூத்த கடலோடி நவரத்தினம் அவர்கள் தான். ஏன் இலங்கைத் தமிழர்களில் மத்தியில் என்று கூடக்கூறலாம்.
அமெரிக்கா சென்ற அன்னபூரணி பாய்மரக் கப்பலில் தான் பணிபுரியவில்லை, ஆனாலும் அதனையொத்த இதர பல பாய்மரக் கப்பல்களில் தனது இளம்பராயம் முதல் பணிபுரிந்ததாக மிகவும் அடக்கமாக மேலும் கூறினார்.
மூன்று ஆண்டுகள் முன்பு எமது குடும்பத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்ட அன்னபூரணி மாதிரி வடிவக் கப்பலுக்குப் பாய் அமைப்பதற்கு, அமரர் சிவனடியார் நவரத்தினம் (கட்டி அண்ணா) அவர்களிற்கு ஆலோசனைகள் வழங்கியவர் நவரத்தினம் அவர்களே.
நான் பணிபுரியும் சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திலும், ஆரம்ப காலங்களில் சுமார் நாற்பது வருடங்கள் முன்பு இவர் பணிபுரிந்துள்ளார். நவரத்தினம் அவர்களின் பெறுமதி ஒரு சிலருக்கு மட்டும் தான் அதிகம் தெரியும். அவரின் ஈழத்தமிழர் கடல்சார்ந்த அனுபவம் ஆனது இனிமேல் எந்தவொரு அகராதியிலோ அல்லது விக்கிப்பீடியா போன்றவற்றிலிருந்தோ பெறக்கூடிய தொன்றல்ல.
நவரத்தினம் அவர்கள் பெற்றிருந்த அனுபவத்திற்கு நிகர் அவரேதான்.
கடந்த இரண்டு வருடங்கள் முன்பு யாழில் இருந்து வெளிவரும் ஒளிஅரசி சஞ்சிகைக்கு என்னை நேர்காணல் காண வந்திருந்தார்கள். வந்தவர்களை திரு.நவரத்தினம் அவர்களிடம் அழைத்துச சென்றேன். அவரைப்பற்றிய தகவல்களும் குறித்த சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது.
முடிந்தவரை அவரிடம் இருந்து பலவிடயங்களை அறியவிரும்பி அணுகினேன். அவரின் முதுமை எனது எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்றாலும், மிகவும் அரிய பல தகவல்களைப் பெற்றுள்ளேன். குறித்த தகவல்கள் அனைத்தும் இப்பத்திக்கு ஏற்புடையதல்ல என்றாலும் காலப்போக்கில் அவற்றை உரிய இடத்தில் ஆவணப்படுத்துவேன்.
ஆனாலும் நவரத்தினம் அவர்கள் கூறிய ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அது கப்பல் வாழைப்பழம் பற்றிய கதை.
கப்பல் வாழைப்பழத்துக்கு பெயர் வரக் காரணம் ‘அக்காலங்களில் விலைகூடிய குறித்த இந்த வாழைப்பழத்தை கப்பல்காரர்கள் அதிகம் வாங்கியதாலேயே கப்பல் வாழைப்பழம் எனப் பெயர் பெற்றது’ என அடித்துக்கூறினார். ‘அப்படி என்றால் அதற்கு முன்னர் கப்பல் வாழைப்பழம் எவ்வாறு அழைக்கப்பட்டது’ எனக்கேட்டேன். ‘ஏதோ பெயர் இருந்தது.......’ எனக்கூற முயற்சித்தார். முதுமை இடம்கொடுக்கவில்லை.
பொதுவாக கப்பற்துறை சார்ந்த செய்திகள் சர்வதேசரீதியில் விமானத்துறை சார்ந்த செய்திகள் போல் ஒரு பொழுதும் பேசப்படுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் மயிலிட்டியில் தரைதட்டி கைவிடப்பட்ட கப்பல். இதேபகுதியில் ஒரு விமானம் இவ்வாறு விபத்தை சந்தித்து இருந்திருந்தால் அது முழு இலங்கை மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் செய்தியாக பேசப்பட்டிருக்கும்.
இன்று பல சமூகவலைத்தளங்களைப் பொறுத்தவரை, பொதுவாக தாமாக சுயமாக செய்தி தேடி தயாரித்துப் பிரசுரிப்பது என்பது குறைவு. இதர பிற மூல சமூகவலைத்தளங்களில் தங்கியுள்ள இவர்கள், அத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளை கொப்பி செய்து அதற்குள் உப்பு, மிளகு போன்றவற்றை சேர்ப்பது போல் தமது பங்கிற்கு சிலவற்றை சேர்த்து, தமது செய்திகள் போல் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள். மூல சமூக வலைத்தளங்கள் செய்தியாக்க தவறிய பல விடயங்களை இவர்கள் செய்தியாக்குவதும் இல்லை. இதற்கு வல்வை சார் சமூக வலைத்தளங்களும் விதி விலக்கல்ல.
வல்வையின் மூத்த கடலோடி எனப்பலராலும் அறியப்பட்ட ஒருவர், பலமுறை கெளரவிக்கப்பட்ட ஒருவர், அவரின் மறைவின் போது செய்தியாக்கப்படாதது இதற்கு சிறந்த உதாரணம்.
நவரத்தினம் அவர்களின் ஈமைக்கிரியைகைகளில் வெறும் முப்பதுபேர்கள் அளவில்தான் கலந்துகொண்டுள்ளார்கள். வருத்தமளிக்கும் விடயம் இது.
வாழும்போது பேசப்பட்டும் கெளரவிக்கப்பட்டும் ஆனால் இறக்கும்போது பிரபல்யமாக இல்லாமல் சமூகத்தில் கவனிக்கப்படாமல் மறைந்தவர்கள் பலர். இவர்களில் நவரத்தினம் அவர்களும் ஒருவர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: April 25, 2018 at 08:12
சிறந்த பதிவு ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.