2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல், வழக்கம்போல ஊகத்துக்கு அப்பால் ஒருவருக்கு கிடைத்திருக்கிறது.
ஆம், 53 வயதான தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங் இம்முறை நோபல் பெறுகிறார். இந்தப் பரிசை வெல்லும் முதல் தென் கொரிய எழுத்தாளர் ஹான். நோபல் வென்ற 18வது பெண் எழுத்தாளர்.
ஒரு எழுத்தாளரின் இயல்பு எப்படியிருக்கும்? வெற்றியாளரை அறிவித்த பிறகு, ஸ்வீடிஷ் அகாடமியின் நிரந்தரச் செயலாளர் மேட்ஸ் மால்ம் கூறுவதைக் கேட்போம். 'ஹான் காங்குடன் என்னால் தொலைபேசியில் பேச முடிந்தது .
அவர் ஒரு சாதாரண நாளைக் கொண்டிருந்தார் . மகனுடன் இரவு உணவை முடித்திருந்தார் . ஹான் காங் உண்மையில் இதற்குத் தயாராக இல்லை. ஆனால் நாங்கள் டிசம்பர் மாதத்திற்கான விழாத் தயாரிப்புகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம்' என்கிறார் மால்ம்.
'வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்கிற மனித வாழ்வின் பலவீனத்தை வெளிப்படுத்தும் தீவிர கவித்துவ உரைநடைக்காக' ஹான் காங்குக்கு நோபல் வழங்கப்பட்டிருப்பதாக 'ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்' கூறுகிறது.
கீழைத் தத்துவத்தில் ஆழமாக வேரூன்றியவர் ஹான் காங். மனம் மற்றும் உடல் ரீதியான துன்பங்களுக்கு இடையேயான தொடர்புகளை வலியுறுத்தும் விசாரணையாக, அவரது எழுத்துகள் அமைந்திருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஹானின் நாவல்கள், சிறுகதைத் மற்றும் கட்டுரைத் தொகுப்புகளில் ஆணாதிக்கம், வன்முறை, துக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவை கருப்பொருளாகத் திகழ்கின்றன.
2007 ஆம் ஆண்டு வெளியான அவரது நாவலான 'தி வெஜிடேரியன்' 2015 இல் டெபோரா ஸ்மித்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2016 இல் ஹான் புக்கர் பரிசை வென்றார்.
'அவள் இந்த உலகில் வாழ்ந்ததில்லை என்ற உணர்வு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது ஒரு உண்மை. அவள் வாழ்ந்ததில்லை. சிறுவயதில் கூட, அவள் நினைவுக்கு வரும் வரை, அவள் சகித்துக்கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.' இது தி வெஜிடேரியன் நாவலில் வரும் வரிகள்.
'நான் உன்னை விழுங்க விரும்புகிறேன், நீ என்னுள் உருகி என் நரம்புகள் வழியே பாய வேண்டும்.' இதுவும் அதே நாவலில் வருகிற ஒரு வரிதான். ஹான் பெண்களுக்கே உரிய விசித்திரமான, மர்மம் நிறைந்த தீவிரமான மொழிநடையைக் கொண்டிருக்கிறார்.
ஸ்மித்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைத்(தி வெஜிடேரியன்) திருத்தியவர் நாவலாசிரியர் மாக்ஸ் போர்ட்டர். அவர் சொல்கிறார்.
'ஹான் ஒரு முக்கிய குரல் மற்றும் அசாதாரண மனிதநேயத்தின் எழுத்தாளர். அவளுடைய பணி நம் அனைவருக்கும் ஒரு பரிசு. நோபல் கமிட்டியால் அவர் அங்கீகரிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புதிய வாசகர்கள் அவரது அற்புதப் படைப்பைக் கண்டுபிடித்து மாற்றப்படுவார்கள்.'
'விதிவிலக்கான அழகு மற்றும் தெளிவை எழுதுகையில், மனிதனாக இருப்பதன் அர்த்தம் என்ன? ஒரே நேரத்தில் கொடூரமான செயல்கள் மற்றும் அன்பின் செயல்களைச் செய்யக்கூடிய ஒரு இனமாக இருப்பதன் அர்த்தம் என்ன? என்ற வேதனையான கேள்வியை ஹான் தயக்கமின்றி எதிர்கொள்கிறார்.' என்கிறார் ஹானுடைய ஆங்கிலப் பதிப்பக நிறுவனமான ஹாமிஷ் ஹாமில்டனின் வெளியீட்டு இயக்குனர் சைமன் ப்ரோஸ்ஸர்.
நோபல் விருதுதான் உலக இலக்கியத்துக்கான அங்கீகாரமா? எனில் இல்லை. நோபல் கவனிக்கத் தவறிய எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில், லியோ டால்ஸ்டாய், எமிலி ஜோலா, ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோருக்கு நோபல் வழங்கப்படவில்லை. ஆனாலும் ஒரு ஆசிய நாட்டவர், ஒரு பெண். பெண்ணிய அரசியல் பேசுபவர் உலகின் கவனத்தைப் பெறுகிறார்.
இந்த நாவல் தமிழ் உட்பட இருபத்து ஐந்து மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.