வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இம்முறையும் தோற்கடிப்பு, த.தே.கூ இன் இருவர் ஆதராகவும், ஐவர் எதிராகவும் வாக்களிப்பு, ஈ.பி.டி.பியின் 2 உறுப்பினர்களும் நடுநிலை
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இம்முறையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டமானது இன்று முற்பகல் பொதுவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் ஆதராகவும், ஐவர் எதிராகவும் வாக்களித்திருந்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருந்தனர்.
இதனால் சம்பந்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் போதிய பெரும்பான்மையின்றி வெற்றி பெறத்தவறியுள்ளது. இது தொடர்பான விரிவான செய்தி பின்வருமாறு.
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கூட்டம் நகரசபைத் தவிசாளர் திரு ந.அனந்தராஜ் அவர்கள் தலைமையில் கூடி, தவிசாளரின் உரையைத் தொடர்ந்து, தவிசாளரினால் வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது குறித்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிரான பிரேரணை முன்மொழியப்பட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான திரு.க.சதீஸ் (வல்வை நகரசபை உபதலைவர்) திரு.எஸ்.எக்ஸ்.குலநாயகம் (தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர்) திரு.கோ.கருணானந்தராசா, செல்வன் ம.மயூரன், செல்வன் ச.பிரதீபன் ஆகிய ஐவரும் பிரேரணைக்கு எதிராகவும், நகரசபைத் தவிசாளர் திரு ந.அனந்தராஜ், திரு. க.ஜெயராஜா ஆகிய இருவரும் பிரேரணைக்கு ஆதரவாகவும், வாக்களித்திருந்தனர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) இரு உறுப்பினர்களான திரு.பொ.தெய்வேந்திரன் மற்றும் திருமதி.இ.கைலாஜினி ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருந்தனர்.
இதனால் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் போதிய பெரும்பான்மையின்றி வெற்றி பெறத்தவறியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு சில வாரங்களில் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. ஆனாலும் இதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.