புளூஸ் உதவி நிதி (Blues foundation) - சிறந்த எதிர்காலத்தை உருவாக்க
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014 (புதன்கிழமை)
BLUES FOUNDATION FOR BETTER FUTURE
புளூஸ் உதவி நிதி
(சிறந்த எதிர்காலத்தை உருவாக்க)
முகவுரை
அதிகமான வல்வை மக்கள் வல்வையினதும் அதன் மக்களினதும் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. எப்போதெல்லாம் அவர்கள் ஒரு குழுவாகச் சந்திக்கிறார்களோ, அப்போதெல்லாம் வல்வையின் தற்போதைய நிலை, கடந்த காலப் பொற்காலம், எப்படி எதிர்காலத்தைச் சிறப்படைய வைக்கலாம் என்பதுபற்றி விவாதிப்பார்கள். இதன் விளைவாக சில முயற்சிகள் செய்யப்பட்டு ஓரளவிற்கு வெற்றியும் அடைந்துள்ளார்கள். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் துண்டுதுண்டாக இருந்தனவே தவிர பணவசதிகளையும், எமது திறமைகளையும், கடுமையான அர்ப்பளிப்புகளையும் ஆகக்கூடிய பலன்களை அளிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பலமான தளமாக அமைப்பதில் தோற்றுவிட்டோம். பல விதமான காரணங்களினால் பண உதவி செய்ய வேண்டுமென்ற உள் எண்ணத்துடன் உள்ள பலரை இதுவரை அணுகத் தவறியதோடு தொடர்ந்து செயல் படக்கூடியதான இளைஞர் முன்னேற்றத் திட்டம் எதையும் தீர்க்கமான திட்டமிடுதலுடன் ஆரம்பிக்கவில்லை.
தற்சமயமுள்ள வல்வெட்டித்துறையின் நிலையை மிகவும் பிரமாண்டமானதாக விருத்தி செய்யலாம். இது ஒரு தூங்குகின்ற நகரம். நித்திரையால் எழுப்பப்பட்டு முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் செலுத்தப் படவேண்டும்.. முதல் ஆரம்பமாக எம்மிடமிருக்கும் சிறிய வசதிகளைக் கொண்டு சிறுவர்களின் முன்னேற்றத்தில் கவனம் எடுக்கப்போகிறோம். அங்கத்தவர்களிடையே இருந்து வரும் கருத்துக்களையும் ஆதரவையும் பொறுத்து வல்வையின் முன்னேற்றத்திற்கான மற்ற அம்சங்களிலும் கவனம் எடுக்கப்படக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
அங்கத்தவர்களைக் கொண்ட 'புளூஸ் அறக்கட்டளை - -சிறந்தஎதிர்காலத்தைஉருவாக்க ' என்ற தர்ம அமைப்பை உருவாக்க எண்ணியுள்ளோம்.
சாதாரண அங்கத்தவராகச் சேர விரும்புவோர் வருடத்திற்கு ரூபா 100,000/= கட்டவேண்டும்.
வருடத்திற்கு ரூபா 100,000/= என்பது சற்றுக் கடுமையானது என்று எமக்குத் தெரிந்தபோதிலும், உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டு வல்வெட்டித்துறைக்குத் தாங்கள் திருப்பித் தர வேண்டுமென்ற ஆவல் உள்ளவர்களை உள்ளுக்குக் கொண்டுவந்து அவர்களிடம் நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பைக் கொடுக்கவேண்டும் என்பதே நோக்கம். ஆனால், உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்கள் பணவசதி இல்லை என்ற காரணத்திற்காக வெளியே விடப்படமாட்டார்கள். அவர்களும் நிர்வாக சபைக்குள் வரக்கூடியதான வழிமுறை இருக்கும்.
இந்த உதவி நிதி பற்றிய தகவல்கள் பரவலாகத் தெரியப்படுத்தப்பட்டாலும், ஒரு அங்கத்தவராக வருமாறு ஒருவர் மீதும் அழுத்தம் பிரயோகிக்கப்படமாட்டாது. எவரும் தங்களை யாராவது நேரடியாக வந்து அணுகும் வரை காத்திராமல், அங்கத்தவராக வர விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வெளிநாட்டில் வசிக்கும் பலரும் அங்கத்தவராகச் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
உதவி நிதியுடன் இரண்டு விதமான அங்கத்தவர்கள் சம்பந்தப் பட்டிருப்பார்கள்.
(i) உதவுவோர்: இந்தத் திட்டத்தின் முதுகெலும்பே
இவர்கள்தான். இந்த அமைப்பை நடத்துவதற்கான பணம், நேரம், சக்தி ஆகியவற்றைத் தந்துதவுவார்கள்.
(ii) உதவி பெறுவோர்: இவர்கள் கல்வி சம்பந்தமான
பொருட்கள், விளையாட்டுச் சாதனங்கள்,
கல்விச் சுற்றிலா, ஊட்டச்சத்து உணவு
என்ற பல நேரடி அனுகூலங்களை
இவர்கள் பெறுவார்கள்.
இத்திட்டத்தின் குறிக்கோளை அடைவதற்காக இந்த இரண்டு குழுவினரும் இணைந்து வேலை செய்வார்கள்.
பெயர்:
புளூஸ்உதவிநிதி - சிறந்தஎதிர்காலத்தைஉருவாக்க
தொலைநோக்கு:
ஒரு ஆரோக்கியமான, ஒற்றுமையான, வலுவான, பண்பட்ட வல்வெட்டித்துறையை உருவாக்குவது
செயற்பாடு:
வல்வெட்டித்துறையின் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திப்பவர்களில் தமது பணத்தையும், நேரத்தையும், சக்தியையும் அந்த முயற்சிக்காகத் தன்னிச்சையாகச் செயல்பட விரும்பும் வல்வையர்களை ஒரு கூரையின் கீழ் திரட்டி, பாதுகாப்புள்ளதும் துடிப்பு மிக்கதுமான ஒரு சூழலில் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கான வசதிகளைச் சிறுவர்களுக்குச் செய்துகொடுப்பது.
எதிர்பார்ப்புகள்
கல்வி பற்றிய தமது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி தமது சுயபிம்பத்தையும் சுய கௌரவத்தையும் வளர்ப்பதற்குச் சிறுவர்களைத் தூண்டுதல்
· தமக்குள்ளே இருக்கும் திறமைகளை வெளியே கொண்டுவரச் சிறுவர்களை வழி நடத்துதல்
· வாழ்நாள் வெற்றிகளை அடைவதற்குச் சிறுவர்களுக்கு உதவுதல்
· சுற்றாடலிலுள்ள சமூகங்களுடனும் உலகிலுள்ள மக்கள் எல்லோருடனும் நட்புணர்வை வளர்த்தல்
· பெருமைப்படக்கூடிய ஒரு நகரமாக வல்வெட்டித்துறையை ஆக்குதல்
அங்கத்துவம்
7 ரகமான அங்கத்தவர்கள் உள்ளனர். இவர்களில் 6 ரகம் உதவி புரிவோர் பிரிவிலும் 1 ரகம் உதவி பெறுவோர் பிரிவிலும் இருப்பார்கள்.
(i) சாதாரண அங்கத்துவர்: ஒரு வருடத்தில் ரூபா 100,000/= மோ அதற்கு மேலோ தானம் செய்பவர்கள் சாதாரண அங்கத்துவர் ஆவார்கள். அவர் நிர்வாகசபை உறுப்பினராகத் தெரியப்படலாம். நிர்வாகசபைத் தெரிவில் வாக்களிக்கலாம்.
உதவி நிதியின் கணக்கு விபரங்களையும், மற்றைய விபரங்களையும் அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதோடு, உதவி நிதி பற்றி நடைபெறும் விவாதங்களில் பங்கு பற்றலாம்.
ரூபா 100,000/= கட்டிய நாளிலிருந்து ஒரு வருட்த்திற்கு அங்கத்துவம் செல்லுபடியாகும். அங்கத்தவர் கேட்டுக்கொண்டால், தாமதமாகப் பணத்தைச் செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் கொடுக்கலாம்.
(ii) குடும்ப அங்கத்துவர்: ஒரு குடும்பமோ அல்லது 10 பேருக்கு அதிகமில்லாமல் ஒரு நண்பர் குழுவோ ரூபா 100000/= அல்லது மேலாக்க் கட்டினால் அவர்கள் குடும்ப அங்கத்துவர்கள் ஆவார்கள். அவர்கள் தெரிவு செய்யும் அவர்களில் ஒருவருக்கு ஒரு சாதாரண அங்கத்தவருக்குரிய சகல உரிமைகளும் உண்டு. அவர் நிர்வாகசபை உறுப்பினராகத் தெரியப்படலாம். நிர்வாகசபைத் தெரிவில் வாக்களிக்கலாம்.
ரூபா 100,000/= கட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அங்கத்துவம் செல்லுபடியாகும். அவர்கள் கேட்டுக்கொண்டால், தாமதமாகப் பணத்தைச் செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் கொடுக்கலாம்.
(iii) இணை அங்கத்தவர்: ஒரு வருடத்தில் ரூபா 5,000/= மோ அதற்கு மேலோ தானம் செய்பவர்கள் இணை அங்கத்துவர் ஆவார்கள். அவர் நிர்வாகசபை உறுப்பினராகத் தெரியப்படமுடியாது. நிர்வாகசபைத் தெரிவில் வாக்களிக்கவும் முடியாது .உதவி நிதியின் கணக்கு விபரங்களையும், மற்றைய விபரங்களையும் அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதோடு, உதவி நிதி பற்றி நடைபெறும் விவாதங்களில் பங்கு பற்றலாம்.
ரூபா 5,000/= கட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அங்கத்துவம் செல்லுபடியாகும். அங்கத்தவர் கேட்டுக்கொண்டால், தாமதமாகப் பணத்தைச் செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் கொடுக்கலாம்.
(iv) சங்க அங்கத்துவர் : வல்வையிலுள்ள சங்கம் ஏதாவது, உதாரணமாக ஒரு விளையாட்டுக் கழகம் ரூபா 100,000/= அல்லது மேலாகக் கட்டினால் அவர்கள் சங்க அங்கத்துவர் ஆவார்கள். அவர்கள் தெரிவு செய்யும் சங்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு சாதாரண அங்கத்தவருக்குரிய சகல உரிமைகளும் உண்டு. அவர் நிர்வாகசபை உறுப்பினராகத் தெரியப்படலாம். நிர்வாகசபைத் தெரிவில் வாக்களிக்கலாம்.
ரூபா 100,000/= கட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அங்கத்துவம் செல்லுபடியாகும். அவர்கள் கேட்டுக்கொண்டால், தாமதமாகப் பணத்தைச் செலுத்துவதற்கு 3 மாத அவகாசம் கொடுக்கலாம்.
(v) தொண்டர் அங்கத்தவர்: காலத்திற்குக் காலம் நிர்வாகசபை தமது நேரத்தையும் சக்தியையும் செலவழித்து சரீர உதவி செய்ய விரும்புகிறவர்களைத் தொண்டர் அங்கத்தவர் ஆக நியமிக்கலாம். அவர் நிர்வாகசபை உறுப்பினராகத் தெரியப்படமுடியாது. நிர்வாகசபைத் தெரிவில் வாக்களிக்கவும் முடியாது .உதவி நிதியின் கணக்கு விபரங்களையும், மற்றைய விபரங்களையும் அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதோடு, உதவி நிதி பற்றி நடைபெறும் விவாதங்களில் பங்கு பற்றலாம்.
நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு அவர்களின் அங்கத்துவம் செல்லுபடியாகும். எத்தனை முறையும் மீண்டும் மீண்டும் அவர்கள் நியமிக்கப்படலாம்.
(vi) விசேட அங்கத்துவர்: நிர்வாகசபை எவரையும் விசேட அங்கத்துவராக வரும்படி அழைப்பு விடுக்கலாம். அவர் நிர்வாகசபை உறுப்பினராகத் தெரியப்படலாம். நிர்வாகசபைத் தெரிவில் வாக்களிக்கலாம்.
உதவி நிதியின் கணக்கு விபரங்களையும், மற்றைய விபரங்களையும் அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதோடு, உதவி நிதி பற்றி நடைபெறும் விவாதங்களில் பங்கு பற்றலாம்.
நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு அவர்களின் அங்கத்துவம் செல்லுபடியாகும். எத்தனை முறையும் மீண்டும் மீண்டும் அவர்கள் நியமிக்கப்படலாம்.
(vii) உதவிபெறும்அங்கத்தவர்: கல்வி சம்பந்தமான
பொருட்கள், விளையாட்டுச் சாதனங்கள்,
கல்விச் சுற்றிலா, ஊட்டச்சத்து உணவு
என்ற பல நேரடி அனுகூலங்களை
இவர்கள் பெறுவார்கள். கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குச் சம்மதிக்கும் வல்வையைச் சேர்ந்த 12 வயதிற்கு மேற்பட்ட எந்த சிறுவனும்/ சிறுமியும் உதவி பெறும் அங்கத்தவராகச் சேரலாம்:
· ஏதாவது ஒரு கல்வி நிலையத்தில் மாணவனாக இருக்கவேண்டும்
· பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி வேண்டும்
· (பாடசாலை, பாடம் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைத் தவிர) தாமாகவே குறைந்தது ஒரு கிழமையில் 10 மணித்தியாலங்கள் படிக்கவேண்டும்.
· துடிப்புள்ள விளையாட்டு ஏதாவது குறைந்த்து கிழமையில் 6 மணித்தியாலங்கள் விளையாட வேண்டும்.
· Chess, Scrabble, Sudoku போன்ற மூளைக்கு நல்ல வேலையைக் கொடுக்கும் விளையாட்டு குறைந்த்து கிழமையில் 2 மணித்தியாலங்கள் விளையாட வேண்டும்.
· மாத்த்தில் ஒரு நாள் நன்னடத்தைச் சோதனை எடுக்கவேண்டும். (விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்)
· மாதத்தில் குறைந்த்து 2 மணித்தியாலங்கள் சமூகசேவை செய்யவேண்டும். ( பொது இடங்களாகிய பாடசாலை, கோயில், வைத்தியசாலை, கடற்கரை ஆகிய இடங்களைச் சுத்தப்படுத்துதல் போன்ற சேவைகள்).
· ஒரு மாதத்திற்குக் குறைந்தது 2 புத்தகங்கள் வாசிக்கவேண்டும்.
(உதவிபெறும்அங்கத்தவருக்கான) நன்னடத்தைச் சோதனை
கீழ்வரும் விடயங்களில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்:
· பெற்றோர், ஆசிரியர்கள், மூத்தவர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் சந்திக்கும் அனைவரையும் மதிக்கவேண்டும்.
· மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது பொறுமை வேண்டும். கவனமாகக் கேட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்களென்று புரிந்து கொள்ளவேண்டும்
· மென்மையான ஆனால் கவரக்கூடியதான தொனியில் புரியும்படியாகப் பேசிப் பழகவேண்டும். அதிக சத்தமாய்ப் பேசியும், மற்றவர்கள் நீங்கள் சொல்வதில் அக்கறையுடன் இருக்கிறார்களோ என்பதைப் பொருட்படுத்தாமல் பேசியும் மற்றவர்களை எரிச்சல் படுத்தக் கூடாது.
· கெட்ட வார்த்தைகள் பாவிக்கக்கூடாது. மரியாதையில்லாமல் மற்றவர்களை அழைக்கக்கூடாது.
· எல்லா வேலைகளையும் நேரத்திற்குச் செய்யவேண்டும்.
· நீங்கள் எடுத்த தீர்மானங்களையும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும்.
· மிருகங்களிடம் அன்பாக இருக்கவேண்டும்.
· உங்களையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
· மது, சிகரெட், போதைப்பொருள் ஆகியவற்றை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.
அளவை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நன்னடத்தைச் செயலுக்கும் புள்ளிகள் ( கூடியது 10) கொடுக்கப்பட்டு, சராசரிப்புள்ளி கணக்கிடப்படும். இது நன்னடத்தைப்புள்ளி என்று அழைக்கப்படும். ஒவ்வொரு மாதமும் இந்தச் சோதனை நடத்தப்பெற்று, சிறந்த மாணவர்களுக்குப் பரிசும் 5 புள்ளிகளுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கு தேவைக்கேற்றமாதிரி ஆலோசனை வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட மாணவனுக்குப் புள்ளிகள் போடும் 5 நபர்களையும் மாணவனே தெரிவுசெய்வான்.
அந்த 5 பேரும் பின்வரும் முறையில் அமையவேண்டும்
பெற்றோர் அல்லது பாதுகாவலர் - ஒருவர்
மாணவனுக்குமப் படிப்பிக்கும் ஆசிரியர்கள் - இருவர்
அமைப்பு அங்கத்தவர் (உதவிபெறும் அங்கத்தவர் தவிர்த்து)
- ஒருவர்
மாணவனின் நண்பன் ( அங்கத்தவராக இருக்கவேண்டும். ஆனால் ஒருவர் மாறி ஒருவருக்குச் செய்யமுடியாது)
- ஒருவர்
நிர்வாகசபை
· நிர்வாக சபை 10 அங்கத்தவர்களைக் கொண்டதாக இருக்கும்.
· வாக்களிக்கும் உரிமையுள்ள அங்கத்தவர்களால் இவர்கள் ஒரு வருட காலத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
· உரிமையுள்ள அங்கத்தவர்கள் 10 ற்குக் குறைவாக இருந்தால் அனைவரும் நிர்வாக சபை உறுப்பினராவார்கள்.
· அமைப்பின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு இவர்களே பொறுப்பாயிருப்பதோடு, நிதிக்கணக்குகளுக்கும் பொறுப்பாயிருப்பார்கள்.
· ஏதேனும் ஒரு காரணத்திற்காக அமைப்பு தொடர்ந்து செயல் பட முடியாவிடில், உள்ள நிதி/ கடன் சம்பந்தமாக என்ன செய்யவேண்டுமென்ற முடிவை நிர்வாக சபை எடுக்கும். மற்றைய அங்கத்தவர்களுடன் சரியானபடி கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்படவேண்டும்.
· நிர்வாக சபைக்கூட்டத்திலும், பொதுக்கூட்டத்திலும் பெரும்பானமை வாக்குகளால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ((அதிகமான வெளிநாட்டில் வசிக்கும் வல்வையர்கள் அங்கத்தவராக இருப்பார்கள் என்றபடியால், கூட்டங்கள் நடத்தவும் வாக்கெடுப்பு எடுக்கவும் சரியானதொரு வழிமுறை கண்டு பிடிக்கப்படும்)
நிர்வாகசபைஉத்தியோகத்தர்கள்:
· தங்களுக்குள் இருந்து ஒரு தலைவர், ஒரு காரியதரிசி, ஒரு பொருளாளர் ஆகியோரைத் தெரிவு செய்யவேண்டும்
· இவை ஒரு வருட்த்திற்கு செல்லுபடியாகும்.
· தலைவர் நிர்வாகசபை மற்றும் பொதுக்கூட்டங்க்ளுக்குத் தலைமை வகிப்பார். கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மான்ங்கள் சரிவர நிறைவேற்றப்படனவா என்று இவர் கண்காணிக்க வேண்டும்.
· தலைவர் சமூகமளிக்காத பட்சத்தில், நிர்வாகசபை உறுப்பினர் ஒருவர் தற்காலிகத் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார்.
· கூட்ட அறிக்கைகளைத் தயார் செய்வதும், மற்றைய அங்கத்தவர்களுடனும் வெளியாரோடும் தொடர்புகளுக்குப் பொறுப்பாயிருப்பதும் காரியதரிசியின் கடமைகளாகும்.
· அமைப்பின் நிதிவிடயங்களுக்குப் பொருளாளர் பொறுப்பாக இருப்பார். தலைவர், காரியதரிசி ஆகியோருடன் இணந்து பிரபலமான ஒரு வங்கியில் கணக்குத் திறப்பார். எப்படிப் பணத்தை வெளியில் எடுக்கலாமென்ற நடைமுறையை வங்கி முகாமையாளருடன் கலந்தாலோசித்து நிர்வாகசபை முடிவெடுக்கும்
பிரச்சனைக்குத்தீர்வு
எந்த நிலையிலும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏற்பட்டால், இறுதி முவெடுக்கும் அதிகாரம் தலைவருக்கு உண்டு.
தலைவர் மேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் பட்சத்தில் நிர்வாக சபை அங்கத்தவர்கள் பெரும்பான்மையோர் விருப்ப்ப்படி தீர்மானிப்பார்கள். இந்த வாக்கெடுப்பில் தலைவருக்கு வாக்கு கிடையாது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.