வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நிலாவரைப் பகுதியிலிருந்து கடந்த சில மாதங்கள் முன்பு, பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்திருந்தார்.
யாழ்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் 'பார்த்தீனியம்' செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஏதுவான சூழலைக் கொண்டிருப்பதால், இவை மிகவும் அபாயகாமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றன. .
கீழே உள்ள 'பார்த்தீனியம்' பற்றிய கட்டுரை நேற்று தமிழகத்தின் நக்கீரன் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டதாகும். எதுவித மாற்றமுமின்றி மீள் பிரசுரிக்கின்றோம். .
(ஆனாலும் படங்கள் எம்மால் உடுப்பிட்டி - தொண்டைமானாறு வீதியில் எடுக்கப்பட்டவையாகும்).
மெல்லக் கொல்லும் 'பார்த்தீனியம்' செடிகள்
இப்போது தமிழகமெங்கும் உள்ள விவசாயிகளின் தீராத பிரச்சனைகளுள் ஒன்றாக உருவாகி விட்டது “பார்த்தீனியம்” என்ற நச்சு செடி. தோட்டம், வயல், தென்னத்தோப்பு, சாலையோரங்கள், கழிவுநீர் போகுமிடம் என பார்க்குமிடமெல்லாம் இந்த பார்த்தீனியம் செடிகள் செழித்து வளர்ந்து வருகிறது.
கால்நடைகள், பறவைகள், பூச்சி புழுக்கள், மனிதர்கள் என இந்த உலகத்தில் யாருக்கும் பயனில்லாமல் இருக்கும் இந்த செடியின் வரலாறு பற்றியும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நாம் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரிடம் தகவலறியும் உரிமைச் சட்டம்-2005,ன் கீழ் கேட்டிருந்தோம். இதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த பதிலை அப்படியே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
பார்த்தீனியம் என்றால் என்ன ?
(தொண்டைமானாறு - உடுப்பிட்டி வீதியில், வல்லை வெளிக்கு அண்மையில் காணப்படும் பார்த்தீனியம் செடிகள்)
பார்த்தீனியம் என்பது தேசிய அளவில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு “களை”ச்செடியாகும். இக் ”களை”ச்செடி யானது ஓராண்டு வரை வளரக்கூடிய சிறு செடி. இது, “ஆஸ்ட்ரோஸியே” தாவரக்குடும் பத்தை சேர்ந்தது. பார்தீனியத்தை நட்சத்திரக்“களை’, கேரட்“களை”, வெள்ளைத்தொப்பி, மேல்வெள்ளை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக் “களை”ச்செடி இயற்கையாகவே, மெக்சிக்கோ, தென் மற்றும் வட அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் பல நூற்றாண்டு களாக காணப் படுகின்றன.
பார்த்தீனியம் “களை”ச்செடி, நமது நாட்டில் 1956-ல், கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட போது, மகராஷ்டிரா மாநிலத்தில் ஊடுருவியதாக தெரிகிறது. 1997-ம் ஆண்டுவரை இக் “களை”செடி உலகத்தில் கட்டுப்படுத்த முடியாத ஒரு “களை”யாக இருக்கவில்லை. அதன் பிறகு, வெகு வேகமாக வளரத்தொடங்கிய பார்த்தீனியம் உலகிலுள்ள ஏழு முக்கிய “களை” செடிவகைகளுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 35, மில்லியன் ஏக்கர் நிலங்களில் இந்த “களை”செடி ஊடுருவியுள்ளது.
சாலை ஓரம், இரயில்வே பாதைகளின் ஓரங்கள், தரிசு நிலங்கள், தொழிற்ச்சாலை, குப்பை மேடுகள், சாக்கடை ஓரங்கள், நீர் கால்வாய் ஓரங்களில் ஊடுருவிய இக்களை செடிகள், தற்போது விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் காடுகளிலும் வேகமாக உடுருவி வருகிறது.
“பார்த்தீனியம்” வேகமான வளர்ச்சிக்கான காரணங்கள்:-
*இயற்கை எதிரிகள் இல்லாத காரணத்தால் இனப்பெருக்கும் அதிகரித்தது.
*அதிக விதைகளை உற்பத்தி செய்தல்.
*விரைவாக பரவக்கூடியது.
*இக்”களை” உற்பத்தி செய்யக்கூடும் நச்சுத்தன்மையால் ஏற்ப்படக்கூடிய பாதிப்பு.
கால் நடைகள் கூட உண்ணாத நச்சு செடியாக உள்ளது.
*எல்லா நிலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா பருவத்திலும் வளரக்கூடியது.
பார்த்தீனியத்தின் பண்புகள்;-
பார்த்தீனியனம் செடிகள் அதிவேகத்தில் வளர்ந்து முதிர்ச்சியை எட்டக்கூடியது. இக்”களை” செடியானது 1.5 முதல் 2.0 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. முட்டை வடிவமான இலையைக்கொண்டது. இலையின் மேல் பகுதியில் வெள்ளை நிற ரோமங்களை கொண்டுள்ளது. செடியின் முதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுப்பகுதியில் ரோமங்கள் தெளிவாக தெரியும்.
இந்த “களை”செடியானது அதிக ஆழம் செல்லும் ஆணிவேர் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த “களை” செடியின் இலைகள் பச்சை மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும், அதன் “பூ”க்கள் வெள்ளை நிறத்தில் கொத்து கொத்தாக காணப்படும். இந்த “களை”செடியின் விதைகள் தட்டையாகவும், இரண்டு மி.மி நீளம் கொண்ட “வைர”வடிவம் கொண்டது. சாதரணமாக ஒரு செடியானது ஒரு பருவத்தில் 50,000 விதைகளை உருவக்கக்கூடிய வல்லமை படைத்தது.
பார்த்தீனியம் செடியின் ஒவ்வொரு பூங்கொத்திலும் நான்கு விதைகள் காணப்படும். இந்த விதைகள் நான்கே வாரங்ககளுக்குள் பூவிலிருந்து கீழே விழுந்து மீண்டும் முளைத்து வளரும் தன்மை உடையது. ஒரு முறை பார்த்தீனியம் செடி முளைத்து விட்டால் அந்த இடத்தில் எந்த சூழ்நிலையிலும் இந்த “களை”செடி அழியாது. வறட்சி, மழை என எப்படிப்பட்ட பருவ மாற்றத்தையும் தாங்கி இந்த “களை”செடிகள் அந்த இடத்தில் வளரக்கூடியது.
பார்த்தீனியம் ஒரு அபாயகரமான செடி..?
(தொண்டைமானாறு - உடுப்பிட்டி வீதியில், வல்லை வெளிக்கு அண்மையில் காணப்படும் பார்த்தீனியம் செடிகள்)
பொதுவாக பார்த்தீனியம் ஒரு விஷச்செடி. மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதகமான செடி. பிரச்சனைக்குரிய இக் “களை”யானது மனிதனுக்கு ஒவ்வாமை ஏற்படுதக்கூடிய விஷமுள்ள “களை”செடியாக பரவி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் ஆஸ்துமா, காசநோய், தொழுநோய் மற்றும் சுவாசம் சம்மந்தமான பல நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.
நாம் குடியிருக்கும் வீடுகளின் பக்கங்களிலும், தோட்டங்களிலும், கால்நடை மேச்சல் நிலங்களிலும் அதிகமாக வளர்ந்து வருவதால், மனிதனுக்கு தோல்,ஆஸ்துமா சம்மந்தமான பல வியாதிகளை உருவாக்கிவருகிறது.
ஒரு பார்தீனியத்தினியம் செடி 624-மில்லியன் மகரந்த துகள்களை உற்பத்தி செய்து காற்றின் மூலமாக பரவச்செய்யக்கூடியது. இதனால், ஆண்டு முழுவதும் இந்த நச்சு செடியின் மகரந்த துகள்கள் கற்று மண்டலத்தில் பரவிக்கொண்டிருக்கும். இதனால், பலவிதமான நோய் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும், ஜுலை, ஆகஸ்ட்டு மாதங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
கால்நடைகள் பார்தீனியம் செடியை உண்பதில்லை என்றாலும், பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ள நிலங்களின் வழியாக செல்லும் போது அவற்றின் உடலில் பார்த்தீனியம் செடிகள் மோதுவதன் மூலமும், அந்த செடிகள் வளர்ந்துள்ள இடங்களில் கிடைக்கும் காற்றை சுவாசிக்கும் போதும் கால்நடைகளுக்கு அரிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.
குறிப்பாக, பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ள பகுதியில் மேய்ந்துவிட்டு செல்லும் ஒரு எருமை அல்லது மாடு தன்னுடைய கன்றுக்கு பால் கொடுக்கும் போது, பார்த்தீனியம் செடியின் கடுமையான நச்சுத்தன்மை கன்றுகளுக்கு போய் சேருகிறது. இதனால், கன்றுகள் மற்றும் தாய் இரண்டுக்கும் ஈரல், சிறுநீரக பகுதிகளில் ஏற்ப்படும் பாதிப்புகளால் கால்நடைகளின் மறு உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ள இடங்களில் சென்று மேயும் கால்நடைகள் மூலம் பெறப்படும் பால் மனிதர்களுக்கு பலவகையிலும் தீமை விளைவிக்ககூடியது.
(தொண்டைமானாறு - உடுப்பிட்டி வீதியில், நெசவு ஆலைக்கு முன்னால் காணப்படும் பார்த்தீனியம் செடிகள்)
பார்தீனியத்தை “களை” மேலாண்மை மூலம் கட்டுப்பத்துவது மிகவும் அவசியமாகிறது. இதனை கூட்டு முயற்சியாக அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய கூட்டமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் இனைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே பார்த்தீனியம் களைச்செடிகளின் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வகைகளில் பார்தீனியத்தின் வளர்சியை கட்டுப்படுத்தலாம்:-
*பொது இடங்கள் அல்லது பயிரிடப்படாத இடங்களில் இருக்கும் தாவரங்களையும் இயற்கை சூழலையும் வளர்க்கவேண்டும்.
**துத்தி, ஆவாரம் செடி போன்ற சில செடிகள் பார்தீனியம் செடியை வளர விடாமல் செய்கிறது. எனவே வீதிகளில் இது போன்ற செடிகளை நட்டு வளர்க்கலாம்.
***மெக்சிகன் வண்டுகள் பார்த்தீனியம் செடியை மட்டுமே உண்டு வாழக்கூடியது. எனவே இந்த வகை வண்டுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விடவேண்டும்.
****நிலங்களில் உள்ள பார்தீனியம் “களை”செடிகளை ஆட்கள் கையுறை அணிந்துகொண்டு “களை” செடிகள் பூப்பதற்கு முன்பாக அவற்றை வேரோடு பிடுங்கி எரிவதன் மூலமும் ஓரளவு கட்டுப் படுத்தலாம், வேரோடு பிடுங்கி அகற்றும் போது, மனிதர்களுக்கு தோல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
வேதிபொருட்களை கொண்டு பார்த்தீனியம் செடிகளை அகற்றும் முறை.
1) ஒரு ஹெக்டேருக்கு 2.5 -கிலோ அட்ரசின் மருந்தை கலந்து பார்த்தீனியம் விதை முளைப்பதற்கு முன்பாக நிலத்தில் அடிக்கவேண்டும்.
2) உப்பு 200-கிராம்+2-மி. டிப்பால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து பார்த்தீனியம் களை செடி பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
3) பத்து கிராம் 2-4-டி சோடியம் உப்பு+20கிராம் அம்மோனியம் சல்பேட்+2மி.லி சோப்பு கரைசல் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பார்த்தீனியம் களை செடிகள் பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
4) 15கிராம் கிளைப்பொசெட்+ 20-கிராம் அம்மோனியம் சல்பேட்+2 மில்லி சோப்பு கரைசல் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
5) 4 கிராம் மெட்ரிபூசின்+2 மில்லி சோப்பு கரைசல் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
இதன் மூலம் பார்த்தீனியத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம் என்று கோவை வேளாண்மை பல்கலைகழகத்தின் சார்பில் சொல்லபடுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.