வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையின் வசதியின்மைகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களே மலசலகூடத்தைக் கழுவும் அவலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2013
About writer: Web Team, Valvettithurai.org
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் மிகவும் குறிப்பிடக்கூடிய வசதியின்மைகள் தற்பொழுது நிலவிவருகின்றன.
பாடசாலைக்கட்டடம், ஆட்பற்றாக்குறை, சில பொருட்தேவைகள், குறைவான மாணவர் எண்ணிக்கை எனக்காணப்படும் பிரச்சனைகளில், பாடசாலைக் கட்டடத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தவேலைகளை முன்னெடுக்கு முடியாதுள்ளமை, வரும் மழைகாலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.
இதை விட காவலாளி,துப்பரவுத் தொழிலாளி என யாரும் இல்லாததால் அதிபர் மற்றும் ஆசிரியர்களே மலசல கூடத்தை துப்பரவு செய்யும் அவலமும் நீடிக்கின்றது.
இவற்றை வெளிகொணரும் முகமாகவும் அதிபர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதற்காகவும் றோ .க.த.க பாடசாலை அதிபர் திருமதி.மங்களேஸ்வரி அவர்களை பாடசாலையிலேயே நேரில் சந்தித்தோம்.
அதிபரிடமிருந்து திரட்டிய தகவல்களையும், நாம்எடுத்திருந்த சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் கீழே தருகின்றோம்.
றோ.க.த.க பாடசாலைக் கட்டடம்
இது சுனாமியின் பின்னர் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. வெளிப் பார்வைக்கு மிகவும் அழகாகவும் முழுமையாகவும் தென்படுகின்றது.
கட்டடத்தில் உள்ள தற்போதைய குறைபாடுகள்
2 மாடிகளைக் கொண்டுள்ள இக்கட்டத்தின் மேல் மாடியில் உள்ள அதன் பக்கங்கள் அதிகளவு இடைவெளிகளைக் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை காலத்தில் மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிகளவு மழை நீர் உட்புகுகின்றது. அத்துடன் புறா, காகம் போன்ற பறவைகளினால் வகுப்பறைகள் எச்சப்படுத்தப்பட்டுவருகின்றன.
மேலும் மேல் மாடிக்கான வழியானது திறந்தவாறே அமைக்கப்பட்டுள்ளதாலும், கட்டடத்தின் விளிம்புச் சுவர்களின் உயரம் சுமார் 3அடியே உள்ளதாலும் - கட்டம் ஆனது சிறந்த முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பதும் தெளிவாகின்றது.
இதனால் கீழ் மாடிக் கட்டடத்துக்குரிய மின்விசிறி போன்ற உபகரணங்கள் பொருத்தப்படாமல் பாடசாலையின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பொது மண்டபத்தின் குறைபாடுகள்
மேலும் கீழே உள்ள பொது மண்டபமானது இரு பக்கங்களில் மூடப்படக் கூடிய வகையில் இல்லாததால், மண்டபத்திலும் மழை நீரின் தேக்கம் அதிகம் எனக் கூறப்படுகின்றது
அதிபரின் முயற்சிகளும், கல்வி வலையத்தின் வரையறைகளும் (Restrictions and limitations)
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிபரினால் வடமாரட்சி கல்வி வலயத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாடசாலையில் 50 மாணவர்களே கல்வி கற்று வருகின்றமையினால் - குறைந்தளவு மாணவர்கள் என்ற விடயம் காரணமாக - கல்வி வலயத்தினால் 'நிதி ஒதுக்குதல்' அல்லது 'மேற்கொண்டு உடனடியாக பாடசாலைக்கு உதவுதல்' என்பனவற்றில் வரையறைகள் மற்றும் நடைமுறைச்சிக்கல்கள் உள்ளதாகத் தெரியவருகின்றது.
இதனால் அதிபரினால் அண்மையில் 'கல்வி அபிவிருத்திக் சங்கக் கூட்டமானது' (SDS Meeting) கூட்டப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான 'நலன் விரும்பிகளிடம் உதவிகோருதல்' எனும் தீர்மானம் பற்றி அதிபரினால், வலயக் கல்வி பணிப்பாளரினால் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அதிபரின் தேவை
மேற்குறிப்பிட்டுள்ள கட்டடப் பிரச்சனைகளால் மழைக்காலங்களில், இங்கு கல்வி பயலும் 1 தொடக்கம் 5 வரையான சிறார்கள் நனைய வேண்டிய சூழ்நிலை உள்ளதைக் கருத்திற்கொண்டு உடனடியாக மேல்மாடித் திருத்த வேலைகளுக்குத் தேவையான சுமார் 5 லட்சம் ரூபாவினை நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.
.
மேலும் வல்வை சிவகுரு வித்தியாசாலையில் உள்ள பொது மண்டபமானது அறிக்கைப் படுத்தப்பட்டுள்ளது போல், இப்பாடசாலை மண்டபத்தையும் அறிக்கைப் டுத்தத் தேவையான சுமார் 5 லட்சத்தையும் நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.
அதிபர் ஆசிரியரே மலசலகூடத்தைக் கழுவும் அவலம்.
இதை நாம் பார்த்தபொழுது நம்புவதற்கு மிகவும் கடினமாகவிருந்தது. அதிபர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பெண்கள் ஆவர். ஒரு காவலாளியோ அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளியோ இல்லாத காரணத்தால் அதிபர் மற்றும் ஆசிரியர்களே மலசலகூடம் உட்பட்ட பல துப்பரவுத் தொழிலிலும் ஈடுபடுகின்றனர்.
யாரை குறை சொல்வது, குறைந்தளவு மாணவர்கள் என்பதால் கல்வி வலயத்திலிருந்து நிதியைப் பெறுவதில் சிக்கல், 'பழைய மாணவர் சங்க நிதி' என்று ஒன்றில்லாத நிலை, மறுபக்கம் மழையால் திண்டாடும் மாணவர்களும் ஆசிரியர்களும், துப்பரவுத் தொழிலாளி இல்லாதபடியால், பாடசாலை முடிந்தவுடன் தாமே மலசலகூடத்தை துப்பரவு செய்தல் என திண்டாடுகின்றார் அதிபர்.
எல்லோரும் வரலாம் - புறா எச்சங்கள் - தேவை ஒரு துப்பரவுத் தொழிலாளி
வலையிலினால் தற்காலிகத் தடுப்பு - தேவை நிரந்தரக் கதவு
துப்பரவுப் பணியில் மாணவர்களும் ஆசிரியர்களும் (ஆசிரியர் படம் இணைக்கப்படவில்லை)
அறிக்கையற்ற மேல் தட்டு - உடைந்த கண்ணாடி யன்னல்கள்
மேல் தட்டு, 1 ஆம் மாடி - அதிகளவு திறந்த வெளி - மாரி காலங்களில் பாவிக்கவே முடியாத நிலை
(இதுவே மோசமான பிரச்சனையாக அதிபரால் குறிப்பிடப்படுகின்றது)
இருபக்கம் திறந்த வெளியாகவுள்ள மண்டபம் - மழை காலங்களில் சிறந்த நீர்த்தேக்கி - தேவை சிவகுருவில் அமைக்கப்பட்டுள்ளது போல் திறந்து மூடக் கூடிய யன்னல்கள்
மின்குமிழ்கள் அற்றுக் காணப்படும் மண்டபம்
தர்மசங்கடத்தில் அதிபர்
மேலதிக விபரங்களுக்கு அதிபரைத் தொடர்பு கொள்ள:-
திருமதி மங்களேஸ்வரி சேதுலிங்கம்
தொலைபேசி இல - 00 94 77 41 38 637
(பாடசாலைக்கென பிரத்தியேக தொலைபேசி எண்கள் எதுவுமில்லை)