நினைவுகள் ஒன்றித்த ஒருஇடம் - வல்வை முத்துமாரியம்மன் ஆலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015
About writer: ச.ச.முத்து
தலைமுறைகள் பலகடந்தும் இன்றும் அந்த இடத்தினில் எங்கள் அனைவரின் ஒன்றித்த நினைவுகளும், வேண்டுதல்களும், பரவசங்களும் கூடுகின்றன. சாமிகளுக்குள் பேதம் பார்க்கும் அளவுக்கு மனங்கள் இல்லாதுவிட்டாலும் எல்லோருக்கும் ஏதோ ஒரு கடவுளில் ஈர்ப்பு அதிகமாக இருக்கும்.
சில வேளைகளில் அதற்குரிய காரணங்கள் கூட எம்மால் தெளிவாக சொல்ல முடியாததாகவும் இருக்கலாம். எங்கள் எல்லோருக்கும் எங்கள் ஊர் அம்மன் ஏதோஒரு விதத்தில் மிகவும் பக்தியுடன் வணங்கத்தக்கதானதாகவும், தாயின அரவணைப்புக்கு இணைந்த அருள் நிறைந்ததாகவும் இருக்கின்றது. முத்துமாரிஅம்மன் எப்போது எங்கள் ஊருக்கு வந்தார்
என்பதில் பல வாய்வழிக்கதைகள் இருந்தாலும் எங்கள் நினைவு தெரிந்த நாள் முதலாக அவர் எங்களில் ஒருவராகவே இருந்து வந்துகொண்டிருக்கிறார்.
எங்களின் காலப்பெருஞ் சோகங்களிலும் இனிமையான சந்தோசபொழுதுகளிலும் அவர் எங்கள் கூடவே வந்துகொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. நாங்கள் பிறந்தபோதும் அன்னப்பால் ஊட்டியபோதும் அந்த ஆலயத்தின் வீதிகளில் தவழ்ந்து விளையாடிய பொழுதுகளிலும் இருந்த அதே வண்ணக்கோலத்துடனும் அருளுடனும் இன்னும் அந்தக் கிழவி இருந்துகொண்டுதான் இருக்கிறார்.
இந்தப் புலம்பெயர் பொழுதுகளிலும் எங்காவது ஒளிப்படங்களிலோ வேறு எங்காவதோ அந்த ஆயிரம் கண்ணுடைய தெய்வத்தை பார்க்கநேரும் பொழுதுகளில் எம்மை நாமே இழந்து நிற்கும் எல்லாம் கடந்த கடந்த உணர்வுகள் தோன்றுகின்றன. நீண்ட நாட்களாகவே இதற்கான விஞ்ஞானபூர்வமான காரணங்கள் தேடித்துலாவிய போதும் இல்லை.
எங்களின் முத்துமாரிகோவிலுக்குள் உள்நுழையும்போது ஏற்படும் ஆனந்தப்பரவசமும், ஒரு விதமான அத்வைதநிலையும் எல்லாவற்றையும் விட ஏதோ மிகநெருங்கிய ஒரு வாசனையும் வேறுஎந்தக் கோயிலுக்குள் நுழையும்போதும் ஏற்படுவதில்லை.
எழுத்துக்களில் வர்ணித்துவிட முடியாத அந்த அற்புதநிலையை நாம் எமது முத்துமாரி கோயிலுக்குள் மட்டுமே பெறமுடிவதற்கான காரணம் அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்கும்போது விளங்கமுடிந்தது. எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த இடம் திருச்சி ஸ்ரீரங்கம் ஆகும். அவருடைய இளமைக்காலமும் வாலிப காலமும் அங்குதான் இனிமையாக கழிந்தது. இதனை அவர் தனது நாவல்களிலும் விபரித்துள்ளார்.
'ஸ்ரீரங்கத்துப்பைங்கிளிகள்' என்ற அழகான ஒரு நாவல்கூட எழுதியும் இருக்கிறார். அப்படியான சுஜாதா அடிக்கடி ஸ்ரீரங்கத்திலுள்ள சிறீரங்கநாதர்ஆலயத்துக்கு சென்றுவருவார். அவர் மரணிப்பதற்கு சிலநாட்கள் முன்பதாகவும் தனது சகோதரருடன் அந்த சிறீரங்கநாதர் ஆலயத்துக்கு சென்றார்.
மிகவும் பரவசத்துடனும், என்றுமேயில்லாத அமைதியுடனும் காணப்பட்ட எழுத்தாளர் சுஜாதா தனது சகோதரரிடம் அன்று தான் தனது நீண்ட நாளைய சந்தேகத்தை கேட்டிருக்கிறார். சுஜாதா இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறார். அங்குள்ள எல்லாக் கோவில்களுக்கும் போய்வந்திருக்கிறார். அந்தக் கோவில்களின் விக்கிரங்களை வணங்கி இருக்கிறார். ஆனால் அந்தக் கோவில்களுள் ஏற்படாத நிம்மதியும், மனம்ஒன்றிப்பதும் சிறீரங்கம்கோவிலில் மட்டுமே ஏற்படுவது ஏன் என சகோதரனிடம் வினாவி இருக்கிறார்.
அதற்கு சுஜாதாவின் சகோதரர் மிக அழகாவும் ஆழமாகவும் விளக்கம் சொன்னார். 'மற்றக் கோவில்களிலும் இதே கடவுள்தான் கொலு இருக்கிறார். ஆனால் இந்த சிறீரங்கநாதர் ஆலயத்தில் மட்டும் எமது பெற்றோரினதும் அவர்களின் முன்னோர்களதும் பிரார்தனைகளும், நினைவுகளும், வாழ்வுபற்றிய வேண்டுதல்களும் கண்ணுக்கு தெரியாத அலை வடிவங்களாக உலாவிக் கொண்டிருக்கின்றன.
ஆதலால்தான் இந்த ஸ்ரீரங்கஆலயத்துள் நுழையும்போது மட்டும் இனம்புரியாத அமைதியும், பரவசமும்ஏற்படுகின்றன' என்றார். இந்த விளக்கம் தான் எங்களின் முத்துமாரிஅம்மன் கோவிலுக்குள் எங்களுக்குள் உருவாகும் மனஅமைதிக்கும், ஏதேதோ உணர்வுகளுக்கும் காரணமாக அமைகிறது.
ஏனென்றால், எங்களின் பாட்டனுக்கு பாட்டனும் அவனின் கொள்ளுப்பாட்டனுமாக பல நூறு தலைமுறை மனிதர்களின் வேண்டுதல்களும், மெய்சிலிர்த்தலும், பிரார்த்தனைகளும் அந்த அம்மன் கோவிலுக்குள் என்றும் எப்போதும் இப்போதும் அலைவடிவமாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் மேலாக எங்கள் முன்னோர் தமது மேனி தவழ வீழ்ந்து அம்மனை வணங்கிய நிலம் அது.
இனிவரப்போகும் காலத்தின் நவீனத்துவம் எமது ஊரின் அனைத்து வடிவங்களையும் அதன் இயல்புகளையும் ஒருவேளை மாற்றமுடியலாம். ஆனால் எங்களின் தாயவள் சன்னதியின் கண்ணுக்குத்தெரியாத அருளையும், அருளுக்காக வேண்டிய எங்கள் முந்தைய சந்ததிகளின் நினைவுகளையும் எப்போதும் மாற்றீடுசெய்யமுடியாது.