சுமார் 12 வருடங்கள் முன்பாக, கார்த்திகை மாதமாக இருக்கக்கூடும். தென்சீனக்கடலில் பழைய சரக்குக் கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருக்கின்றது. கம்போடியாவிற்கு வடகிழக்குத் திசையில் ஒரு சூறாவளி. சூறாவளியின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பல் சேதமாகி மெல்ல மெல்ல தாழத் தொடங்குகின்றது.
கப்பல் தலைவனால் கப்பலைவிட்டு நிரந்தரமாகாவே வெளியேறும் உத்தரவு (Abandon ship order) வழங்கப்படுகின்றது. ஒரு பக்கத்து உயிர் காக்கும் படகில் (Lifeboat) கப்பலின் பாதி மாலுமிகள் செல்ல, அது அடுத்த நொடியில்
கடலுடன் சங்கமம்.
ஏனையவர்கள் புத்திசாதுரியமாக 2 உயிர் காக்கும் மிதவைகளில் (Life raft) தப்பி, கப்பலை விட்டு வெளியேறுகின்றார்கள். Titanic கப்பல் போல், குறித்த கப்பல் இவர்களின் கண் முன்னாலேயே கடலுக்குள் மூழ்கிவிடுகின்றது.
கடலுக்குள் பாயும் பொழுது தத்தளித்த சில சகமாலுமிகளை ஒரு 6 அடி மாலுமி 2 உயிர் காக்கும் மிதவைகளினுள் (Life raft) கொண்டுசெல்கின்றான். சூறாவளிக் காற்று, அதுதான் பேய்காற்று, குளிர், கடும் மழை, கடும் அலை - உயிர் காக்கும் மிதவைகள் சுழலத்தொடங்குகின்றன.
ஒரு சில மணித்தியாலங்களில் ஒரு உயிர் காக்கும் மிதவை பெருங்கடலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் மாயமாகின்றது. அதில் இருந்த ஐவரில் இருவரை அதே 6 அடி மாலுமி காப்பாற்றி தனது உயிர்காக்கும் மிதவைக்குள் கொண்டுவருகின்றான்.
இறுதியாக மிஞ்சியிருந்த ஒரேயொரு மிதவைக்குள் 7 பேர். பெருங்கடலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இந்த மிதவையும் பெரும் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. இரவும் தாண்டுகின்றது. கடலின் கடும் கொந்தளிப்பால், மிதவை தலைகீழாய் நிலையெடுத்துக்கொண்டிருக்க, மிதவையை நிமித்தி சக மாலுமிகளின் உயிர்களை காத்துக்கொண்டிருந்தான் அந்த 6 அடி மாலுமி. ஆனாலும் மூவரைக் காவுகொள்கின்றது கடல்.
சுமார் 16 மணி நேர போராட்டத்தின் பின், அவ்வழியால் வந்து கொண்டிருந்த பிரபல கப்பல் ஸ்தாபனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்றால் மிஞ்சியிருந்த நால்வரும் காப்பாற்றப்பட்டு இந்தோனிசியா கொண்டுவரப்படுகின்றார்கள்.
இறுதியாக மிஞ்சியிருந்த மிதவையையும் சக 3 மாலுமிகளையும் தக்க (தப்ப) வைத்த அந்த 6 அடி மாலுமி வேறு யாருமல்ல, நேற்று முன்தினம் வல்வையில் அகால மரணமடைந்துள்ள ஹரிதாஸ் தான்.
வெறும் 2 நிமிடத்தில் வாசிக்கக் கூடிய கதை. Titanic கப்பல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஹரிதாஸ் உடைய இந்த வீர நிகழ்வை யாரும் வல்வையில் கூட பெரிதாக அறிந்திருக்கவில்லை, ஆவணப்படுத்தியுமிருக்கவில்லை.
வல்வை பல வரலாறுகளைக் கொண்டுள்ளது என பழையதைத் தேடும் நாம், எம்முடனேயே உள்ள பலவற்றை அறியாமல் இழந்துவருகின்றோம். அதில் ஒன்று தான் ஹரிதாஸ்.
ஹரிதாஸ் – A brave seaman from VVT என்று தான் ஆங்கிலப் பத்திரிகைகள் அன்று தலையங்கம் தீட்டியிருக்கும், ஹரிதாஸ் ஒரு ஆங்கிலேயனாக இருந்திருந்தால்.
(மேலே குறிப்பிட்டுள்ள சிறு கட்டுரையில் இலக்கங்கள் மிகத் துல்லியமானவையல்ல, ஹரிதாஸ் உயரம் உட்பட)