ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
About writer: வ.ஆ.அதிரூபசிங்கம்
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இதனையொட்டி இந்த சிறப்புக் கட்டுரை வெளியாகின்றது. கட்டுரை ஆசிரியர் திரு.வ.ஆ.அதிர்ரூபசிங்கம் அவர்கள், செல்வசந்நிதி முருகன் கோயிலில் விழாக் காலங்களில் தங்கியிருந்து கடந்த 70 ஆண்டுகளாக இந்த பணியைச் செய்துவரும் 'பூக்காரர்' என்னும் ஒரு அடியவர் ஆவார்.
ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
அன்னதானக் கந்தனுக்கு அரோகரா! ஆற்றங்கரை வேலனுக்கு அரோகரா! செல்வசந்நிதி முருகன் ஆலயச் சூழலில் காலத்திற்குக் காலம் ஒளித்துக் கொண்டிருக்கும் பக்திமயமான குரல்கள்.
அண்டிவரும் தம் அடியார்களையும் பக்தர்களையும் அரவணைத்து அன்போடிருத்தி அன்னம் கொடுத்து வயிற்றுப் பசி போக்கி ஆறுதல் அளித்திடும் தன்மையில் சந்நிதி முருகன் அன்னதானக் கந்தன் ஆகின்றான். கரந்தனில் வேல் தாங்கி – தீயனவற்றை அழித்து – நல்லனவற்றை ஆற்றிடும் தன்மையில் சந்நிதி வேலன் ஆற்றங்கரை வேலன் ஆகின்றான்.
ஆற்றங்கரை வேலனின் அமர்விடம் கந்தனாம் முருகனுக்கு வேலனாம் முருகனுக்கும் காலத்திற்குக் காலம் திருவிழாக்களும் காலத் திருவிழாக்களும் எடுக்கப்பட்டு முருகன் பக்தியுடன் போற்றப்படுகின்றான் – பக்தர்களால் துதிக்கப்படுகின்றான்.
மௌனச் சிறப்புக்கள் பலவற்றையும் தம்பாற்கொண்டு அடியார்களுக்கு நல்லருள் சுரந்திடும் செல்வசந்நிதி முருகனுக்காகிய 2015ம் வருடத்திற்கான மகோற்சவ காலத் திருவிழாக்கள் இன்று 14 – 08 – 2015 (ஆடிமாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மங்களகரமாக ஆரம்பமாகின்றது ) . புலம் பெயர் வாழ் முருகன் அடியார்கள் உட்படச் சைவப் பெருமக்கள் யாவரும் சுப தினமாம் இத்தினத்தைப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.
14 – 08 – 2015 வெள்ளிக்கிழமை இரவு 08.00 மணிக்குக் கொடியேற்றத்துடன் முருகனின் வருடாந்த மகோற்சவ காலம் ஆரம்பமாகின்றது. கொடியேற்றமாம் மங்கள நிகழ்வு பெரும்பாலும் இரவு நேரத்திலே வந்தமையால் சுப நேரத்திலேயே நடைபெறும். சில சந்தர்ப்பங்களிலே சுப நேரத்திற்கு அமைவாக காலை நேரங்களிலும் நிகழ்வதுண்டு.
இந்நியதிக்கமைய இவ்வருடம் இரவு நேரத்திலேயே பெருமானின் கொடியேற்றமாம் புனித நிகழ்வு நடைபெறுகின்றது. காலை நேரத்திலே கொடியேற்றம் நடைபெற்றால் ஆத்தினம் இரவு 2ம் திருவிழாவாகக் கொல்லப்பட்டு திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று முடிவடையும் இதற்கமைய 5ம் திருவிழாவன்றே முருகன் காலையிலே வெளிவீதி உலா வந்தருலுவார்.
ஆவணி மாதம் 1 ஆம் நாள் (18.08.2015) செவ்வாய்க் கிழமை சதுர்த்தி விரத தினத்தில் எம்பெருமானின் காலைத் திருவிழா மங்களகரமாக ஆரம்பமாகின்றது. எம்பெருமானுக்குரிய விசேட – சிறப்புத் திருவிழாக்கள் என்ற தன்மையில் 10 ஆம் திருவிழாவாகிய பூங்காவனம் ஆவணி மாதம் 6 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை (23.08.2015) காலை 9 மணிக்கு நடைபெறும்.
அடுத்து 11 ஆம் திருவிழாவன்று (24.08.2015) திங்கட்கிழமை திருக் கைலாச வாகனத்தை தமது சிறப்பூர்த்தியாகக் கொண்டு எம்பெருமான் வீதிவலம்வந்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, நல்லருள் சுரந்திடுவார். அடுத்து வரும் ஆவணி 10 ஆம் நாள் (27.08.15) வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு சப்பரத் திருவிழா நடைபெறும். அன்றைய தினம் ‘சப்பரம்’ என விசேடமாக அமைக்கபெற்ற திருவிருக்கையில் எம்பெருமான் அமர்ந்து வீதி வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்து நல்லருள் பொழிந்திடுவார்.
வேலனுக்குரிய தேர்த் திருவிழா ஆவணி மாதம் 11 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 28.08.15 காலை 8 மணிக்கு ஆர்மபமாகி நடைபெறும். முருகனுக்குரிய தீர்த்தத் திருவிழா ஆவணி மாதம் 12 ஆம் நாள் சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும்.
தீர்த்தத் திருவிழா அன்று மாலை மௌனத் திருவிழா எனச் சிறப்பிக்கப்படும் திருவிழா நடைபெறும். மௌனத் திருவிழாவின் பொழுது ஆண்டவனாம் முருகனும் மௌன நிலை. அவன் அடியார்களும் மௌன நிலை. மௌனத் திருவிழாவின் சூச்குமம் வேலன், தெய்வானை, வள்ளி மூவருக்குமே உரியதாகும். இத் திருவிழா அன்றைய தினம் 6 மணிக்கு நடைபெறும்.
தீர்த் தோற்சவ தின மாலையிலேயே நடைபெறும் மௌனத் திருவிழாஒரு புதுமை நிறைந்த திருவிழாவாகக் கொள்ளப்படுகின்றது. இந்தத் திருவிழாவுடன் தொடர்புபட்ட நிகழ்வுகள் யாவும் மௌனமாகவே நடைபெறும்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து மோதல்கள் ஈற்றிலே தீர்க்கப்பட்டு யாவும் வழமைக்குத் திரும்பும் தன்மையில் இவ்விழா அமையும்.
மகோற்சவ கால விழாக்கள் யாவும் நிறைவெய்திய மறுநாள் ‘பூக்காரர் பூசை’எனச் சிறப்பிக்கப்படும் விசேட பூசையும் வழிபாடுகளும் முருகனுக்காய் நடைபெறும். எம்பெருமானின் திருவிழாக் காலங்களில் பெருமானுக்கு பூத் தொண்டு புரிந்து பல்வேறு பணிகளும் மேற்கொண்டு தொண்டர்களாகிய விளங்கிய பூக்காரர்களும், பெருமான் வீதி உலா நிறைவு செய்த பின் ஆலயத்தினுள் வந்தமர்ந்த பின் எம்பெருமானுக்கு ‘ஆராத்தி’ எடுத்துச் செய்யும் விளக்கெடுப்போர் என சிறப்பிக்கப்படும் சிறுமிகளையும் மற்றும் பல்வேறு பணிகளையும் திருவிழாக் காலங்களில் மேற்கொண்ட தொண்டர்களையும் கௌரவிக்கும் தன்மையில் ‘பூக்காரர் பூசை என சிறப்பிக்கப்படும் சிறப்பு நிகழ்வு நடைபெறும். யாவும் முருகனுக்கே .
இவ்வருட உற்சவ காலப் பிரதமகுரு சிவஸ்ரீ சிவானந்த ஜயர், செல்வகணேஷ் ஜயர்
இவ்வருட உற்சவ கால உரிமையாளர் – ஜயர் திரு/திருமதி செல்வா கணேஷ் ஜயர், அபிராமி