வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை - கி.செல்லதுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2014
About writer: கி.செல்லதுரை
வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை
சமீபத்தில் யாழ். குடாநாட்டுக்கான பட்டமேற்றும் போட்டியில் வல்வையின் பட்டக்கலைஞர்கள் பெற்ற வெற்றியும், அதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருந்ததும் வல்வை பற்றிய நம்பிக்கைகளில் ஒரு புதிய அலையை வீசவைத்தது என் உள்ளத்தில்.
வல்வை இளைஞர்கள் காற்றில் பறக்கவிட்ட பட்டங்களின் அமைப்பு வல்வையின் பட்டக்கலையின் தயாரிப்பில் முற்றிலும் புதுமையாக இருந்தது, கொக்கு, படலம், செம்பிராந்து, பாறாத்தை, பெட்டிக்கொடி, கட்டுக்கொடி, கூழ்குண்டான் கொடி, மூன்று மூலை, வவ்வால், கப்பல்கொடி என்ற வல்வையின் கடந்தகால பட்டம் கட்டும் பாரம்பரியத்தில் இது மிகவும் புதிதாக இருந்தது.
யாழ் துரையப்பா அரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற பட்ட போட்டியில் வல்வை பட்டம் ஒன்று
இதைப்பற்றி எழுத வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது, ஆனால் நேரம் கைகூடவில்லை.. பின்னர் நேற்று முன்தினம் வல்வையில் ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்ததைப் பார்த்ததும், என் மகிழ்வு இரட்டிப்பானது.. புதிய தடங்களில் வல்வை நடக்கிறது என்ற நம்பிக்கை துளிர்த்தது, எழுத வேண்டும் என்ற ஆவலும் பெருக்கிட்டது.
ஆகாயத்தைப் பார்க்காதவனுக்கு வானம் இருப்பது தெரியாது என்பார் வானம் நீலமாகத் தெரிவதற்கான காரணத்தை விளக்கிய விஞ்ஞானி சி.வி.ராமன்.
அதுபோல ஆகாயத்தைப் பார்க்காதவனுக்கு அங்கே அந்தரத்தில் தொங்கும் நட்சத்திரங்களின் அழகு தெரியாது.. ஆண்டவன் எவ்வளவு பலமானவன் என்பதை ஆகாயத்தில் தொங்கும் நட்சத்திரங்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும் என்பார்கள் பக்தர்கள்.
அறுபதுகளில் வாடைக்காற்று வீசும் காலத்தில் வல்வையின் வானத்தைப் பார்த்தால் யாழ்க்குடாநாட்டில் அதி உயர் நாகரிகம் கொண்ட கலைஞர்கள் வல்வையில்தான் வாழ்கிறார்கள் என்ற முடிவுக்கு எவருமே வந்துவிடலாம்.
வாடைக்காற்று வீசும் காலத்தில் ஊறணியில் இருந்து ஊரிக்காடுவரை ஆகாயம் எப்படியிருக்கிறது சுமார் மூன்று கி.மீ தூரம் கடலில் சென்று பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
வானத்தில் நிறைந்துள்ள நட்சத்திரங்கள் போல பட்டங்களால் நிறைந்து கிடக்கும் வல்வையின் வானம், அந்தளவு பெருந்தொகை பட்டங்களை ஆகாயத்தில் நீங்கள் வேறெங்குமே காணமுடியாது.
வாடைக்காற்றுத்தான் வாழும் மனிதர்களின் நாகரிகத்தைச் சொல்லும் காற்று என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்திற்குச் சொல்லி வைத்தவர் நக்கீரர், அவர் எழுதிய நெடுநல்வாடையே அதற்கு ஆதாரமாகும்.
வாடைக்காற்று ஆரம்பித்ததும் அது தமிழகத்தின் தெருக்கள் வழியாக பயணம் செய்து ஒவ்வொரு வீடாக நுழைந்து தமிழர்களின் வாழ்க்கை முறைகளை எல்லாம் சொல்லிச் சென்று மறைகிறது என்பது அவர் கற்பனை.
ஆதித் தமிழனின் வாழ்க்கையையும், அவன் நாகரிகத்தையும் சொல்ல நெடுநல்வாடையில் நக்கீரர் எடுத்த ஆயுதம்தான் வாடைக்காற்று.
அதுபோல வல்வை மக்களின் சமுதாய நாகரிக வாழ்வை நமது பட்டங்கள் மூலம் ஆகாயத்தில் எழுதியது வாடைக்காற்று.. நக்கீரன் வல்வையில் பிறந்திருந்தால் தரையால் ஓடிய நெடுநல்வாடையை ஆகாயம்வரை உயர்த்தி மங்காப்புகழ் பெற்றிருப்பான்.
இயல்பாகவே வல்வை மக்கள் கடலோடிகளாக இருந்த காரணத்தினால் காற்றுக்கு பாய்மரம் பிடித்த அனுபவம் அவர்களுக்கு உண்டு, காற்றில் எப்படி ஜாலம் புரியலாம் என்பது அவர்களுக்கு மூதாதையர் வழிவழியாக வந்த கலையாக இருந்தது.
காற்றினால் அவன் கடலை வென்றான் என்பதுதான் இன்றுவரை நம்மால் எழுதப்பட்ட எழுத்துக்களாக இருக்கின்றன, ஆனால் ஆகாயத்தையும் அவன் வென்றான் என்பதற்கான செய்திகளை வல்வையின் பட்டக்கலை வரலாற்றை பதிவதன் மூலமே நாம் இந்த உலகத்திற்கு எடுத்துரைக்க முடியும்.
வல்வையின் பட்டக்கலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனை நெடியகாட்டில் ஏற்றப்பட்ட மகாபாரதம் என்ற பாகாசுர பெரும் படலமாகும்.
அரைப் பனை உயரம் கொண்ட மகாபாரத பட்டம்
அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்றப்பட்ட மகாபாரதம் சாதாரண உயரம் கொண்டதல்ல ஏறத்தாழ அரைப்பனை உயரத்திற்கும் மேலாக தேக்கம் சலாகையில் கட்டப்பட்ட பிரமாண்டமான படலம்.
அதற்குக் கட்டப்பட்ட வாலா மட்டும் பல கி.மீ தொலைவிற்குச் செல்லும்.. வளையமாகச் சுற்றி, நடுவில் கம்பு போட்டு இருவர் இருவராக சுமந்து சென்றதை இன்றும் மறக்காமல் மனதில் வைத்திருக்கிறேன்.
படலத்தின் கயிறு கிணற்றுக் கயிறுபோல அறுக்க முடியாத செலிடார் கயிறாக இருந்தது, படலம் ஆகாயத்தில் கிளம்ப முன்னர் அதன் கயிற்றை பிடிப்பவர்கள் கடலில் இறங்கி வட்டிவரை கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும்.
மகளிர் பாடசாலைக்கு அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் அது ஆகாயத்தில் ஏறியது, சுமார் நூறு பேர்வரை தேருக்கு வடம் பிடிப்பது போல பிடிக்க வேண்டும், அவ்வளவு பொறுப்பு.
அந்தப் படலத்தில் டீயூப்லைற் மூலமாக மகாபாரதம் என்று எழுதப்பட்டிருக்கும், அதற்கான மின்சார வயர் பட்டம் ஏறும் கயிற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இரவு வானத்தில் மின் ஒளிர மகாபாரதம் வானில் ஆடியபடி நிற்கும் அதை லைற் படலம் என்று சுற்று வட்டாரமே திரும்பிப் பார்க்கும்.
காற்று குறைந்து படலம் அயர்ந்து விழுந்தால் அதன் வால் பல வீடுகளின் கூரைகள், பனை மரங்கள் என்று முடிவில்லாத அனுமார் வால் போல ஊரை ஊடறுத்து வல்வெட்டி தாண்டி படுத்துக்கிடக்கும்.
அவ்வளவு வாலாவையும் இழுத்து படலத்தை எடுத்து, மறுபடியும் தயாராவதென்றால் அது சாதாரண வேலையில்லை.
அகில இலங்கையிலும் மகாபாரதத்திற்கு இணையான ஒரு படலத்தை நாம் கண்டிருக்க முடியாது, பொருளாதாரத்தில் வல்வையின் பொற்காலம் நிலவியபோது அந்த பிரமாண்டம் சாதிக்கப்பட்டது.
ஆனால் அந்த அபார சாதனையை அன்றைய நிலையில் யாரும் கின்னஸ் சாதனை ஏட்டில் பதிய வேண்டும் என்று நினைக்காமல் போனதே இன்றும் மனதைக் குடையும் கவலையாக இருக்கிறது.
மகாபாரதம் என்ற அந்தப் படலத்தின் தகவல் பதியப்படாத வல்வை வரலாற்றுக்கு முழுமை கிடையாது, அன்னபூரணியை அமெரிக்கா கொண்டு சென்ற நிபுணர்கள் எல்லாம் அந்தப் படலத்தோடு நின்றதும் கவனிக்கப்பட வேண்டியது.
பழையகால பட்டக்கலை விற்பனர்கள்
அக்காலத்தே கொக்குக் கட்டும் சந்திரர் என்றொருவர் நெடியகாடு முதிரைக்கட்டையில் அறுபதுகளில் வாழ்ந்தவர், வட்டன்துரை என்று செல்லமாக அழைக்கப்படும் காலஞ்சென்ற நாராயணசாமியின் மாமனார்,இவருடைய மனைவி பெயர் தங்கரெத்தினம், மகன் ஆனந்தி, மகள் அம்மாக்கண்டு, குட்டித்தங்கா, சின்னக்குட்டி கடைசி மகன், இவர்களில் பலர் இப்போது இல்லை.
பட்டங்கட்டுவதை மட்டும் வாழ்வின் முக்கிய தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர், வாடைக்காற்று வந்தால் கொக்கு, செம்பிராந்து, பாறாத்தை போன்றவற்றை கட்டி விற்று அதன் மூலம் வருடம் முழுவதும் வாழுமளவுக்கு பெருந்தொழிலாக செய்தவர்.
பூவரசம் தடியை முள்ளந்தண்டுக்கு சூடு போட்டு, மானாங்கானையில் வடலி வெட்டிவந்து விண் வாட்டி, விசை சீவி வாடைக்காற்றுக்கு பட்ட விற்பனைக்காக அவர் தயாராவதே ஓர் அலாதி.
அவருக்கு அருகில் காட்டுவளவு அப்பாச்சாமி பச்சைச்செட்டை கொக்கினால் புகழ் பெற்றவர், இவருடைய கொக்கு பட்டமானது சீராகக் காற்றிருந்தால் ஒரு வாரமாகக்கூட குத்துக்கரணம் போடாமல் சாடிக்கொண்டே இருக்கும்.
குத்துக்கரணம் போட்டால் இரண்டு தடவைகள்தான் அதற்குப் பிறகு தரையில் வீழ்ந்துவிடும்..
இவர் கோபக்காரர் ஆனால் மிகப்பெரிய கலைஞன்.. உச்சி கட்டும்போது படலத்திற்கு வெளியே ஒரு சாண் அளவுக்கு உச்சி நூல் வெளியே போக வேண்டும் என்று சொல்வார், ஆகாயத்தில் பட்டத்தை சரியாக வைத்திருப்பதற்கு உச்சிகட்டும் அளவு ஓர் அற்புதமான மந்திரம், அதை இவரிடமே கற்க வேண்டும்.
அதற்குச் சற்றுத் தூரத்தில் பொன்னண்ணா.. வல்வையில் அ.மி.பாடசாலைக்கு முன்னால் பொன்னண்ணா றொட்டிச்சாலை என்பதுதான் வல்வையின் முதலாவது கொத்து றொட்டிக்கடை, அந்தக்கடை இவருடையதுதான், தனது கடையின் வீச்சு றொட்டியை விட மெல்லியதாக இருக்கும் இவர் வாட்டும் விண்.
ஆனால் பொன்னண்ணா போல கொக்குக்கு விண் வாட்டக்கூடாது என்பார் அப்பாச்சாமி, காரணம் விண் வெடித்துவிடும் என்பதால் கொக்குப்பட்டத்திற்கான விண் தடிப்பாகவே இருக்க வேண்டும், கொக்கு சாடும்போது காற்றின் வேகம் கூடுமல்லவா..?
அதற்கு சற்றுத்தள்ளி செம்பிராந்து கட்டும் காட்டுவளவு முருகுப்பிள்ளை, அப்பால் நாராயணசாமி நெடியகாட்டு வள்ளம் செய்யும் வாடியில் இருப்பார், கதிரை நாரை விண்ணாக அறிமுகம் செய்தார், இதற்கு விசை கடித்தமாக இருக்கக்கூடாது என்று கூறுவார், இரட்டைப்பட்டு கதிரை பின்னும் நார்களை ஒரே விசையில் கட்டுவார், காது செவிடாகிவிடும் சில் வண்டு போல இருக்கும்.
மிகப்பெரிய கலைஞன், விமானத்தை பட்டமாகக் கட்டியவர், பல்வேறு புது முயற்சிகளை செய்தவர், பகை மரத்தில் இருந்து குடை அவுட்டை மின்விளக்குகளால் செய்தவர்.. இயந்திர யானை செய்தது என்று கட்டுக்கொடி வரை நிகரில்லாத கலைஞன்.
அதற்கு அப்பால் சென்றால் அப்பு அண்ணாவின் சிவப்பு செட்டை கொண்ட இரணைக்கொக்கு வானத்தில் அசத்தல் புரியும், சிறிது தாண்டினால் அரசடியில் அவருடைய மைத்துனர் வள்ளக்கார சின்னத்துரையின் சிவப்பு வெள்ளை பூவிரித்த படலம் தெரியும், தூரத்தே குருவின் கட்டுக்கொடிஎன்று நீண்டு செல்லும் அந்த வானப்பெரு அலங்காரம்.
இதில் ஒரு வித்தியாசம் வேண்டுமென எனது படலத்தில் கம்யூனிச சின்னமான கத்தியும் சுத்தியலும் வரைந்து, திரைப்படத்தின் றீல்ஸ்சை விண்ணாக வெட்டி படலம் ஏற்றிய அனுபவம் எனக்குண்டு.
அந்தப்படலத்தைப் பார்த்துவிட்டு சிலர் என்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதினார்கள், ஆனால் அந்தச் சின்னம் கம்யூனிசமா முதலாளித்துவமா என்பது அப்போது எனக்குத் தெரியாது.
பட்டம் ஏற்றுவதென்றால் இளமைக்காலத்தில் எனக்கு உயிரிலும் மேலான மகிழ்வைத்தந்த காரணத்தால் ஐம்பது வருடங்களாக வல்வையின் வானம் என் இதயத்தில் வாழ்ந்து வருகிறது.
ஒரு நாள் பாடசாலை ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.. உன் முன் கடவுள் வந்தால் அவரிடம் என்ன கேட்பாய் என்பது அந்தக் கேள்வி.
நான் கடவுளிடம் கால் இறாத்தல் குறுலோன் நூல் கேட்பேன் என்றேன்..
ஏன்.. கூர்ந்து பார்த்தார்.
பட்டமேற்ற.. ஆசையுடன் சொன்னேன்... ஆசிரியர் சிரித்தார்.
ஆனால் ஒரு பாடசாலைச் சிறுவனான என் வாழ்வில் கடவுளிடம் கேட்குமளவுக்கு அதி உயர்ந்த பொருளாக கால் இறாத்தல் குறுலோன் கயிறு என் வந்தது..
பாடசாலைகளால் கவர முடியாத எனது மனதை கவர்ந்திழுத்தது வல்வையின் பட்டக்கலையாகும்.
இதுதான் வல்வையின் பட்டக்கலைஞர்களின் சாதனைக்கு ஓர் உதாரணம்.
பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் எழுதிய முற்றத்து ஒற்றைப்பனை என்ற குறு நாவலில் ஒரு பட்டக்கலைஞன் கோவீஸ் கட்டி பட்டம் ஏற்றும் பனை மரத்தை அவனைக் கொழும்புக்கு அனுப்பிவிட்டு தந்திரமாக அந்தப் பனை மரத்தைத் தறித்த காரணத்தால் அவன் துடிதுடித்து உயிர்விட்டான் என்று முடிவடையும்.
பட்டத்தையும், பட்டக்கலைஞனின் வாழ்வையும், அதன் பரிமாணங்களையும் சரியாகச் சொன்ன நாவல், சிரிப்பாக கதை சொன்னாலும் கடைசியில் அழ வைத்துவிடும் கதை.
ஆம்..
உயிரை விட உயர்ந்ததாக பட்டமேற்றும் கலையை போற்றிய நாம்.. அந்தக் கலையை மறந்துவிட்டோமே என்று கவலையுடன் இருந்தேன்.. தற்போது வல்வைக் கலைஞர்கள் கட்டியிருக்கும் பட்டங்களும் வெற்றிகளும் கண்டு என் கவலைகள் பறக்கின்றன..
படிக்கலாம் பட்டம் பெறலாம்...
ஆனால்..
பட்டம் விடுவது சாதாரண திறமையல்ல.. பட்டக்கலைஞனின் இதயம் ஆகாயம் போல அகன்றது.. அவனே வானத்தை வசப்படுத்திய வல்லாளன்.