எமது இணையத்தின் தீபாவளி சிறப்புப் பெட்டகம் – விடுதலை விடுதலை விடுதலை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/11/2013
About writer: Web Team, Valvettithurai.org
காலத்தின் தேவைக்கேற்ப, அதீத விஞ்ஞான வளர்ச்சியினாலும், அபரிமித தொழில்நுட்ப மாற்றத்தினாலும் மனித வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், மாறாத ஒன்றாக இன்றும் எம்மவரிடையே சத்தமின்றிக் காணப்படும் பழக்கம் ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கின்றது - அதுதான் ச-தி
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அரை தசாப்தத்திற்கு மேலாக பறை என்னும் வடிவில் அம்பாளையும் கரகம் மற்றும் பாற்செம்பு எடுக்கும் பக்தனையும் இணைக்கும் - அதுதான் அந்தப் பறையை அடிக்கும் கலைஞர்களை நாம் நேரடியாக சென்று அவர்களிடம் வினாவிய பொழுது.............
தற்பொழுது வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பறை அடித்துக்கொண்டருப்பவர் திரு. கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 5௦ ) இவர் தன் தந்தையாருடன் 17 வயதிலிருந்து தற்பொழுது வரை 32 வருடங்கள் அம்மன் கோவிலில் பறை அடித்துக்கொண்டிருக்கிறார். இவருடன் மருமகன் கந்தசாமி கிருஷ்ணகுமார் மற்றும் பொன்னுத்துறை மாயவன் ஆகிய மூவரும் (15 வருடங்கள்) அம்மனுக்கு தொண்டு செய்துவருகிறார்கள்.
சிவகுமாருடைய தந்தையாரான திரு. கந்தன் கிருஷ்ணபிள்ளை ஏறக்குறைய 5௦ வருடத்திற்கு மேலாக வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தொண்டு செய்துவந்துள்ளார். இவர் 2006 ஆண்டு காலமாகியுள்ளார். இவரை அறியாத வல்வையர்கள் எவருமே இருக்க முடியாது என்பது ஆச்சரியத்துடன் நோக்கத்தக்கது.
பிரதி வெள்ளிக்கிழமை, திருவிழா, கரகம் உட்பட்ட பல சமய நிகழ்வுகளில் இவர்கள் பறை அடிக்கின்றார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் 9௦௦ ரூபாவும், வருடாந்த மகோற்சவத்தின் திருவிழா ஒன்றுக்கு 14௦௦ ரூபாவும் கோவில் தர்மகர்த்தசபையினரால் வழங்கப்படுகின்றது.
பறை ஒன்று புதிதாக செய்வதற்கு 5௦௦௦ ரூபா வரை செலவிடப்படுவதாக தெரிவிக்கும் இந்தக் கலைஞர்கள், இந்த பறைகளை, பலாமரக் குத்தி, ஆட்டுத்தோல் போன்றவற்றினால் உருவாக்குவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
வல்வை அம்மனுக்கு ஆண்டாண்டு காலமாக பறை அடிக்கும் தொண்டைச் செய்து வரும் இவர்கள், பருத்தித்துறையில் அமைந்துள்ள தும்பளை பகுதியில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டு ஆண்டு காலமாக பல விதமான விழாக்கள், போட்டிகள், இவைகளில் சில பல சிறப்பு விருந்தினர்கள், பலருக்குப் பரிசில்கள், சிலருக்கு விருதுகள், முத்திரை வெளியீடுகள், புத்தக வெளியீடுகள் – இவைகளை இங்கும் எங்கும் நடாத்தியிருக்கின்றோம், நடாத்திவருகின்றோம்.
ஆனால் எங்களில் எவருக்கும் இந்தப் பறையடிக்கும் கலைஞர்களை கெளரவிக்க வேண்டும் என்று ஒரு போதும் தோன்றவில்லை, செய்வதற்கு திராணியும் இதுவரை இல்லை.
40 வருடமாக தொடர்ச்சியாக எம் முன்னால் நின்ற ஒரு கலைஞன் - - என்ற 2 எழுத்துக்களுக்காக மறக்கப்பட்டுவிட்டான்(ர்).
அம்மனின் நேர்த்திக்காக கரகம் மற்றும் பாற்சொம்பு எடுப்பவர்களும், கரகத் தீ மிதிப்பின் போது அதை கண் மூடாமல் பார்க்கும் நாங்களும் இந்தக் கலைஞர்கள் இல்லை என்றால் இது சாத்தியம் தானா என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தால் – இவர்கள் தவிர்க்கப்படமுடியாதவர்கள் – ஆனால் இன்றுவரை தொடர்ந்து எம்மால் ஒதுக்கப்படுபவர்கள்.
வல்வையைப் பொறுத்தவரை நாட்டின் ஜனாதிபதியைத் தவிர்ந்தோ, வட மாகாணசபை முதல்வரைத் தவிர்ந்தோ ஏன் வல்வை நகரசபைத் தலைவரைத் தவிர்ந்தோ சாதாரண சகஜ வாழ்க்கையை நகர்த்தலாம். ஆனால் வல்வை நகரின் சாதாரண சகஜ வாழ்க்கையின் முக்கிய முதல் முக்கிய நிகழ்வான அம்மன் கோவில் திருவிழா மற்றும் அதனுடன் கூடிய நேர்த்தியான கரகம் போன்றவற்றில் இப்பறையடிக்கும் கலைஞர்கள் இல்லை என்றால் – சப் என்றாகிவிடும் அம்மன் திருவிழாவும், கரகங்களும்.
பல விடையங்களில் முன் உதாரணமாக திகழ்வது எங்கள் வல்வெட்டித்துறை. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் எமது முக்கிய நிகழ்வுகளில் கலந்துள்ள இக்கலையையும், இதன் மிக நலிந்த கலைஞர்களையும் ஏன் இதுவரை கவனிக்கவில்லை, கெளரவிக்கவில்லை என்பது வியப்பில்லை என்றாலும் வேதனை அளிக்கின்றது.
1990களில், இக்கலைஞர்கள் சமூகத்துக்கு விடுதலைப்புலிகள் வல்வையின் ஊரணிப் பகுதியில் காணிகள் கொடுத்து வீடுகள் அமைத்துக் கொடுத்தது ஒன்றுதான் கடந்த 40 வருட காலத்தில் இவர்கள் சார்ந்த சமூகத்தில் வல்வையில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடக்கூடிய விடயம் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்டவொன்றல்ல.
ஆனாலும் தற்பொழுது ஒரு சிலர் இக்கலையை காணொளியாக்கி You Tube இல் பிரசுரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலை விடுதலை விடுதலை
இவர்களுக்கும் விடுதலை அவர்களுக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை – என்றவாறு புரட்சிக் கவி பாடி விட்டுச் சென்றுவிட்டார். ஆனால் மாற்றம் தான் நிகழவில்லை.
ஆனாலும் மனிதநேயம் மறையவில்லை. லண்டனில் உள்ள வல்வையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் இன்றையை தீபாவளியை முன்னிட்டு, வல்வை அம்மன் கோவிலில் பறை அடிக்கும் இக்கலைஞர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் பணம் என்று சுமார் 10000 ரூபா கொடுத்து உதவியுள்ளார்.
அவர் தந்திருந்த அன்பளிப்புக்கள் நேற்று எம்மால் அவர்களின் தும்பலை இல்லத்தில் வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கேட்டும் பணம் பெறுவதில் கஷ்டமான இந்தக் கலியுகத்தில் தானாகவே முன்வந்து பண உதவி செய்தது அல்ல முக்கிய விடயம். இதையும் மீறி இக்கலையையும், கலைஞர்களையும் மறக்காமல் இவர் போல் ஒருவர் இருவர் இருப்பதுதான் முக்கியமானது.
நாங்களே பேச வேண்டும், நாங்களே பேசப்படவேண்டும், நாங்களே எழுத வேண்டும், நாங்களே காண்பிக்கப்படவேண்டும், நாங்களே கெளரவிக்க வேண்டும், நாங்களே கெளரவிக்கப்படவேண்டும் என்றெல்லாம் சிந்திக்கும் நாங்கள் ‘’மாத்தியோசி’’ என்ற திரைப்படம் போல் ஒருமுறையாவது மாத்தியோசிப்போம். இவர்களைப் பற்றியும் எழுதுவோம், இவர்களையும் கெளரவிப்போம். பார்ப்போம் யார் பூனைக்கு மணி கட்டுகின்றார்கள் என்று.