வல்வை சனசமூக சேவா நிலையம் - மீண்டும் தனது சேவைக்காக
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2013
About writer: திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்
வல்வை சனசமூக சேவா நிலையம் -
மீண்டும் தனது சேவைக்காக.............!
10.03.1943 ஆம் ஆண்டு வல்வையின் அறிவுக் களஞ்சியமாய் அமைந்து விளங்கிய வல்வை சன சமூக சேவா நிலையத்தின் ஆரம்ப நன் நாள், நல்லோர் சிலரின் முயற்சியினால் - செயல் வல்லோர் பலரின் அயராத உழைப்பினால், கருவாகி - உருவாகி பெரு வடிவாகி பெருத்து விளங்கியது. இச்சேவா நிலையம் அதன் தொடக்க காலத்தில் "வல்வை இலவச வாசிக சாலை" என்ற மகுடம் தரித்து கொண்ட நிலையில் தனது சேவையைத் தொடர ஆரம்பித்தது.
ஆரம்பத்திலே தற்பொழுது அமைந்துள்ள நவீன சந்தை பகுதிக்கு வட பகுதியில் அமைந்திருந்த ஒரு கிட்டங்கியிலும், அதனைத் தொடர்ந்து ஒரு தனியார் கடைப் பகுதியிலும் செயற்பட்டு வந்த நிலையம், சில காலத்தின் பின் வல்வெட்டித்துறை சந்திப்பகுதியிலே, தற்பொழுது நிலையம் பெருவடிவிலே தோற்றம் கொடுக்கும் இடத்திலே நிரந்தரமான ஒரு கட்டடத்தில் தனது சேவையைத் தொடர்ந்தது காலத்திற்கு காலம் ஏற்பட்ட சில அனர்த்தங்களினால் பாதிப்புக்கள் ஏற்பட்ட நிலையிலும் எம்மவரின் பூரண பங்களிப்புடன் நிலையம் தனது சேவையைத் தொடர்ந்தே வந்திருந்தது.
(படம் – பழைய சனசமூக நிலையத்தின் ஒரு பக்கத் தோற்றம், பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதிப் பக்கம், 1992 ஆம் ஆண்டு)
எம்மவரின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற தன்மையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் யாவும் வாசகர்களின் வசதிக்கேற்ப அமையப் பெற்றிருந்தன. பல நூற்றுக்கணக்கான எம்மவரின் பங்களிப்புடன் நிலையத்தில் சேவைகள் நிறைந்தே இருந்தது. மேலும் "இரவல் வழங்கும் பகுதி" (Lending Section) பல உறுப்பினர்களைப் பெற்று, அவர்களை வாசகர்களாக கொண்டமைந்து, அவர்களின் அறிவுக்கு தீனியிடும் களஞ்சியமாக திகழ்ந்தது. சிறியோரும், பெரியோரும், ஆண்களும், பெண்களும் என்ற தன்மையில் நிலையத்தின் இரவல் வழங்கும் பகுதியினால் பலரும் பெரும் பயனடைந்திருந்தனர்.
ஆரம்ப காலம் தொட்டு எமது நிலையத்தில் நவராத்திரி விரத கால வழிபாடுகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. எல்லாம் வல்ல சக்தி தேவியை பூரண கும்பத்திலே ஆவாகனம் செய்து, விசேட பூசைகள் நவராத்திரி விரத கால ஒன்பது நாள்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 10 ஆம் நாள் சிவனும் அம்மனும் வேட்டையாடிய பின்பு, நெடியம்பதி பிள்ளையார் கோவிலிருந்து திரும்பி வரும் பொழுது நிறைகுடம் வைத்து வழிபாடுகள் செய்யப்படுவது வழமையான ஒன்றாக இருந்து வந்தது. இக்காலத்தில் சக்தி தேவியின் திருவுருவங்கள் கொலுவாக அமைக்கப் பெற்று, பொம்மைக் கொலுவும் வைப்பது பெருவழக்காய் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் என்ற ரீதியில் நவராத்திரி கால பூசை நிகழ்வுகள் நிலையத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன.
1990 ஆம் ஆண்டு வெளிப்பட்ட கையெழுத்து சஞ்சிகையான அலை ஒளியின் முகப்பு அட்டை
எம்மவரின் எழுத்தாற்றலை வளர்க்கும் தன்மையில் "அலை ஒளி" என்ற பெயர் கொண்ட கையெழுத்து சஞ்சிகையானது நிலையத்தினால் மாதந்தோறும் வெளியிடப்பட்டது. எம்மவர் மத்தியில் கிடைக்கப் பெற்ற ஆக்கங்கள் பலவும் எமது சஞ்சிகையினை சிறப்பாக அமைந்திட வகை செய்தன. அலைஒளியின் தோற்றத்தை தொடர்ந்து மேலும் பல கையெழுத்து சஞ்சிகைகள் எம்மூரிலே தோற்றம் கொடுக்கத் தொடங்கின. எழுத்தாளர்கள் பலரும் கூடவே உருவாகினர். நிலையத்தினால் காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்ட கட்டுரை, கவிதை, சிறுகதைப் போட்டிகால் எம்மவரின் அறிவு விருத்திக்கு வழி அமைத்து நின்றன.
இயற்றமிழ் போதகாசிரியர் புலவர் வல்வை ச.வைத்திலிங்கப்பிள்ளை
நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் இயற்றமிழ் போதகாசிரியர் புலவர் வல்வை ச.வைத்திலிங்கப்பிள்ளை அவர்களை மனதில் கொண்டு அன்னாருக்கு நிலையத்தினால் கொடுக்கப்பட்ட கெளரவம் குறிப்பிடத்தக்கவொன்றாகும். சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய மறைந்த பெருந்தகையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி அன்னாரின் உருவப்படத்தை நகரெங்கும் ஊர்வலமாக கொண்டு சென்று நிலைய மண்டபத்தில் அன்னாரின் படத்தை அமைத்து திரை நீக்கம் செய்யப்பட்டது மேலும் குறிப்பிடத்தக்கது. எமது நிலையத்தின் மாத்திரமன்றி மற்றும் படிப்பகங்களிலும் அன்னாரின் உருவப்படத்தை அமைப்பதற்கு நிலையம் ஒழுங்குகளை செய்திருந்தது. இத்துடன் அமையாது கற்றறிந்த பெரியோர்கள், தமிழக பேரறிஞ்ஞர்கள் என்ற தன்மையில் பலரையும் வரவேற்று கெளரவம் கொடுப்பது நிலையத்தின் பெரு வழக்காயிருந்தது.
விளையாட்டுத் துறையை பெறுத்தவரைக்கும் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தமை மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். 1971 மற்றும் 1972 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டு வருடங்கள், வல்வை நகரசபை எல்லைக்குட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையே தட கள விளையாட்டுப்போட்டிகள் எமது நிலையத்தினால் நடாத்தப்பட்டிருந்தன. வல்வை நகரசபை எல்லைக்குட்பட்ட விளையாட்டுகக் கழகங்கள் போட்டிகளிலே மிகவும் ஆர்வத்துடன் பங்கு பற்றிக்கொண்டமை மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாக அமைந்திருந்தது. கழக நிர்வாகிகளும், வீரர்களும் மிகவும் ஒற்றுமை உணர்வுடன் போட்டி நிகழ்வுகளில் பங்கேற்றிக் கொண்டார்கள். இத்தகைய முறையிலே கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டி முன் எப்போதும் நடைபெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விளையாட்டுப் போட்டிகள் பல தரப்பினர் மத்தியில் இருந்தும் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டன. இவை தவிர கிளித்தட்டு, வார் ஓடுதல் என்பவற்றுடன் நீச்சல் போட்டி, மருதன் ஓட்டப்போட்டி , உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆகியனவும் அவ்வக் காலங்களில் எமது நிலையத்தினால் நடாத்தப்பட்டன. உள்ளக விளையாட்டுக்களான கரம், சதுரங்கம் ஆகியனவும் நிலைய விளையாட்டுக்களின் வரிசையிலே இடம்பெற்று விளங்கின.
1970ஆம் ஆண்டு 4 வது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் வைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டிருந்த அன்னபூரணி கப்பலின் மாதிரிவடிவம்
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 வது உலக தமிழராய்ச்சி மாநாட்டிற்காக, வல்வையின் புகழ் பரப்பிய, இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்ற அன்னபூரணி அம்மாளின் மாதிரிக்கப்பல் வல்வெட்டிதுறையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு அலங்கார பவனியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டமை எமது சேவா நிலையத்தின் சேவைகளில் மற்றொரு தடம் பதிப்பாகும்.
சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன்
ஆழிக்குமரன் ஆனந்தன் மேற்கொண்ட சில சாதனை முயற்சிகளுக்கு எமது நிலையம் இட அமைத்து கொடுத்து அனுசரணையும் வழங்கியிருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
1958 இல் எமது பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு தேவைக்கேற்ற உதவிகள் செய்தமை எமது நிலையத்தின் சேவைகள் வரிசையில் இன்னொரு அங்கமாக இடம்பெற்றது.
1978 காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்தின் பொழுது, எமது நிலையத்தின் அனுசரணையில் எம்மால் சேகரிக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் மற்றும் உப உணவுப் பொருட்கள், உடுதுணிகள் போன்ற பெருமளவிலான பொருட்கள் லொறி மூலம் மட்டக்களப்பு பிரதேச மக்களுக்கு வழங்கப்பெற்றன. இச்சேவையில் கழக நிர்வாகிகளும் எம்மூர் இளைஞர்களும் பெரும் ஆர்வத்துடன் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எமது ஊரான வல்வெட்டித்துறை தவிர்ந்த வெளியிடங்களுக்கும் நிலையத்தின் சேவைகள் தேவைக்கேற்ப எடுத்துச்செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1994 ஆம் ஆண்டில் நிலையத்தின் பொன் விழா கொண்டாடப்பட்டிருந்தது. பல கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள் என்பன பொன் விழா நிகழ்ச்சிகளின் வரிசையில் இடம்பெற்றிருந்தன.
5ம் வருட புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற்றவர்கள், பல்கலைகழக புதுமுக பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் என்ற தன்மையில் கல்வித்துறையில் சுடர்விட்டு விளங்கிய எமது மாணவர்கள் உரிய கெளரவிக்கப்பெற்றனர்.
பல வகைத்தான சேவைகளையும் "வல்வை சனசமூக சேவா நிலையம்" என்ற தனது பெயருக்கேற்ப மேற்கொண்டு வந்த எமது சேவா நிலையம், தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருந்த பெரும் அனர்த்தங்களினால் மிகவும் பின்நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆயினும் தன் பெயர் தாங்கிய நிலையில் தனது சேவைகளை ஓரளவு மேற்கொண்டே வந்தது. ஆங்காங்கே அமைந்துள்ள தற்காலிக அமைவிடங்களில் நிலையத்தின் சேவைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.
எம்மூரிலே புகழ் பரப்பி தலை தூக்கி நின்ற எமது நிலையத்திற்கென ஒரு நிரந்தர கட்டிடம் அமைத்தே ஆக வேண்டும் என எம்மவர் பலரும் உறுதியுடன் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போதைய வட மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான திரு.ம.க.சிவாஜிலிங்கம், பல வருடங்களாக நிலையத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும், குறிப்பிட்ட காலப்பகுதியில் செயலாளராகவும் இருந்து செயற்பட்ட தன்மையில், புதிய சேவா நிலையத்தின் புதிய சேவை நிலையம் அமைந்திடவேண்டும் என்ற உணர்வினால் ஈர்க்கப்பட்டு, தான் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியினால் காலா காலமாக நிலையம் அமைந்திருந்த இடத்திலேயே புதுப்பொலிவுடன் அமையும் வண்ணம் புதிய நிலையம் அமைய வித்திட்டுள்ளார். இவருடன் பொ.சிவஞானசுந்தரம் மற்றும் கோ.கருணாணந்தராசா போன்ற நிலைய நிர்வாகிகளும், சில ஊர் ஆர்வலர்களும் புதிய நிலையத்தின் உருவாக்கத்துக்கு உழைத்து வருகின்றனர்.
28.11.2013 அன்று எடுக்கப்பட்ட வல்வை சன சமூக நிலையத்தின் படம்
தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டு வரும் இந்நிலையம் சில காலப்பகுதியினுள் தன்னிறைவு கண்டு வாசகர்களுக்கு சேவையாற்ற தொடங்கும் என உறுதியுடன் நம்புவோமாக.
வல்வை சனசமூக சேவா நிலையம் தனது பெயருக்கேற்ப தனது மண்ணிற்காக மக்காளுக்காக-