‘யாழ்ப்பாண மனிதனைப்போல் யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரும் சண்டைக்குரிய ஒன்றே’ என யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பற்றி ஒரு ஆய்வினைச் செய்திருந்த, பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் தனது ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் முதலாவது வரியிலே குறிப்பிட்டுள்ளார்.
மழை நீர், நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் அளவு குறைந்து செல்லுதல் அல்லது உவர் நீராதல், மழைவீழ்ச்சி குறைவு என சிலர் எழுதியுள்ளனர். ஒரு சில பத்திரிகைகள் அவ்வப்போது பிரசுரித்துள்ளன, பிரசுரித்து வருகின்றன. எமது பங்கிற்கு நாமும்....
Copy and Paste செய்யாமல், யாழ் மாவட்டத்திற்குரிய மழை வீழ்ச்சியைப் பற்றி அறிந்து கொண்டு, வல்வைப் பகுதியில் மேற்கொண்ட ஒரு சிறு ஆய்வின் அடிப்படையில் இப்பகுதி எழுதப்படுகின்றது.
யாழ் தீபகற்பத்தின் ஒரேயொரு நன்னீர் வளம் மழை வீழ்ச்சியேன்றி வேறொன்றுமில்லை. மலைகளோ, குன்றுகளோ, நன் நீர் ஆறுகளோ அல்லது வேறு ஏதும் நன்னீர் தேக்கங்களோ இங்கு இல்லை, நிலாவரைக் கிணறு மற்றும் சுன்னாகம் வழுக்கையாறு போன்ற ஒன்று இரண்டைத் தவிர.
யாழ் தீபகற்பம் வருடந்தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் மழை வீழ்ச்சியைப் பெற்றாலும், வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காலநிலையால் பெறும் மழை வீழ்ச்சியே மிகப் பிரதான பங்கினை வகிக்கின்றது. யாழ் தீபகற்பம் (தீவுப் பகுதிகள் தவிர) வருடத்துக்கு சுமார் 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. இது பொதுவாக ஐப்பசி நடுப்பகுதியிலிருந்து தை மாத ஆரம்பம் வரை நீடிக்கின்றது.
இம்மழைவீழ்ச்சியில் குறிப்பிட்ட பகுதி நிலத்தின் மேலாக வழிந்து வங்கக் கடலில் கலக்கின்றது. மேலும் பெருமளவான பகுதி தொண்டைமானாறு தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடல் நீரேரியில் கலக்கின்றது. இவற்றின் பெரும்
பகுதியும் மீண்டும் தொண்டைமானாறு மற்றும் ஆனையிறவு வழியாக வங்கக் கடலில் கலக்கின்றன. (இதற்காகவே அண்மையில் தொண்டைமானாறு கடல் நீரேரியில் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு முன்னால் பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நடைபாதைகள் இரண்டும் அகற்றப்பட்டிருந்தன). இன்னொமொரு பகுதி வெயிலில் ஆவியாகின்றது. ஏனையவற்றின் கணிசமான பகுதி பூமியால் உறிஞ்சப்படுவதுடன், மீதமானவையே மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுகின்றன.
உறுதியாகக் கூறமுடியாதுவிடினும், சுமார் 10 தொடக்கம் 15 வீதம் வரையான எமது மழைவீழ்ச்சியே எமக்கு வருடந்தோறும் நிலத்தடி நீராகப் பயன்படுவதாக கணிப்பிடப்படுகின்றது .
யாழ்ப்பாணத்தில் நன்னீர் பற்றிய அபாயமும் அதனுடன் கூடிய விழிப்புணர்வும் மிக மிகக் குறைவே. ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் விசேட பத்திரிகைகளில் இங்கு எதுவித தாக்கத்தையும் உண்டு பண்ணாத தமிழகத்தின் ஆட்சி மாற்றம், இந்தியாவின் ஆட்சி மாற்றம், ஜெயலலிதா, கருணாநிதி, மன்மோகன் சிங், (இனி நரேந்திர மோடி) பற்றி அதிகம் விளாசப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் அரசியல் தவிர்ந்த வேறு ஒரு பிரச்சனைகளுமே இல்ல என்ற தொனியிலேயே பத்திரிகைகள் பெரும்பாலானவை நிறைவு பெறுகின்றன. வாசகர்களும் இதற்கு ஏற்றால் போல் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
அடுத்தது பாடசாலைகள். நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்னும் விடயம் இங்கு யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாணத்தில் தோன்றவுள்ள நன்னீர் பிரச்சனை பற்றி அலசவில்லை. இது மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையவில்லை. இதைவிடுத்து வேறு ஏதும் வழிகளில் மாணவர்களுக்கு யாழ்ப்பாணத்தின் நன்னீர் பற்றிய விடயம் மற்றும் நீர் சேகரிப்பு போன்ற விடயங்கள் பொதுவாக தெளிவுபடுத்தப்படுவதில்லை. பழைய கட்டடங்கள் புணருத்தாரான வேலைகளின் பின் மீண்டும் திறக்கப்படுதல், புதிய கட்டங்கள் திறப்பு விழா என பல பாடசாலைகளில் அரங்கேறினாலும் இது வரை யாழில் எந்தவொரு பாடசாலையும், மழை நீர் சேகரிப்புக்கு முன்மாதிரியாக எதுவும் செய்திருக்கவில்லை.
அடுத்தது சமூகத்தில், அதாவது சமூகத்தைப் பிரதிபலிக்கும் வாசிகசாலைகள், தனியார் பாடசாலைகள், கோவில்கள், கிராம சேவை அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பொது அமைப்புக்கள் போன்றவையும் மேற்குறிப்பிட்ட விடயத்தில் கவனம் எடுத்தாகத்தெரியவில்லை.
இறுதியாக நகரையோ அல்லது கிராமத்தையோ நேரடியாக நிர்வகிக்கும் கிராமசபைகள், நகரசபைகள் கூட இதில் அக்கறை காட்டவில்லை. புதிதாகக் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிராம சபைகளிலோ அல்லது நகரசபைகளிலோ மழைநீர் சேகரிப்புக்குரிய வடிவங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை.
ஆக ஒட்டு மொத்தத்தில் நிலத்தடி நீர், மழை நீர் சேகரிப்பு பற்றிய விடயம் இங்கு பாரதூரமாக இன்னும் நோக்கப்படவில்லை என்பது தெளிவு.
காணி வாங்கும்பொழுது தண்ணீர் பிரச்சனை என்று நிராகரிக்கின்றோம், அல்லது உப்புத் தண்ணீர் என்று வேறு காணி பார்க்கின்றோம். கிணற்றில் முன்னைப்போல் அல்லாமல் நீர் மட்டம் பட்டைக் கிடங்கிற்கு வேகமாகவே செல்கின்றதாகச் சொல்கின்றோம். 10 வருடத்துக்கு முன்னர் நல்ல தண்ணீர் ஆனால் இப்பொழுது உப்புத் தண்ணீர் என்கின்றோம். இவ்வாறாக பலரும் தண்ணீர் பிரச்சனையை அனுபவிக்க ஆரம்பித்தாலும் இதற்கு அப்பால் செல்ல மறுப்பது தான் வேடிக்கையாகவுள்ளது.
மாறாக மழை நீராக வரும் சில சொட்டு நீரையும் எம்மில் பலர் சுவற்றில் ஓட்டை போட்டு வெளியில் அனுப்புகின்றோம். மற்றவரின் வீட்டில் இருந்து தப்பித்தவறி நீர் வந்தால் கொடி உயர்த்துகின்றோம்.
(மழை) நீர் சேகரிப்பு என்பது எம்மிடம் இருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ளது. வீடு கட்டும் பொழுது நிலப்பரப்பைக் குறைத்து, வீட்டின் தட்டுக்களை உயர்த்தாமல் முழு நிலத்தையும் மறைக்கின்றோம். தப்பித்தவறி மிஞ்சும் ஒரு துண்டு நிலத்தையும் மேடை இழுத்து மூடி விடுகின்றோம். கிணற்றுக்கு எங்கிருந்து நீர் வரும்?
அடுத்தது நீரைத் தேக்கக் கூடிய, நீர் ஆவியாதலைத் தடுக்கக் கூடிய பயனுள்ள பெரிய மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிக் கொண்டு, பயனற்ற குரோட்டான், கிரோட்டான் போன்றவற்றை வைத்து வருகின்றோம். அதிலும் வேதனை என்ன வென்றால் இக்குரோட்டான்களும் சாடிகளில் (யாழ்பாணத்தில்) வைக்கப்படுவது தான். சிங்கப்பூர் போன்ற சில அபிவிருத்தியடைந்த நகரங்களில் பல இடங்களில் நாம் காட்டுக்குள் நிற்கின்றோமோ அல்லது தோட்டத்துக்குள் நிற்கின்றோமோ அல்லது கட்டங்களுக்குள் நிற்கின்றோமோ என என்னும் வகையில் மரங்களை எங்கும் வளர்த்துள்ளார்கள்.
உங்கள் சுற்று வட்டாரத்தில் கடந்த 20 வருடங்களில் தறிக்கப்பட்ட மரங்களை எண்ணிப்பாருங்கள், ஒரு விடை தெரியும். தறிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாக புதிய மரங்கள் பெரிதாக நாட்டப்பட்டிருக்கவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர. மரநாட்டு விழா அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தாலும் மரங்கள் பெரிதாக வளர்ந்ததைக் காணமுடிவதில்லை. விழாவுடன் முடி(றி)ந்துவிடுகின்றன.
வல்வெட்டிதுறைப் பகுதியில் மழை நீர் மற்றும் மரங்கள் எனும்போது இரண்டு சாதகமான விடயங்களைக் குறிப்பிடவேண்டும். முதலாவது மரங்கள் வளர்த்து அதனைப் பேணிப் பாதுகாப்பத்தில் முன் மாதிரியாக இருக்கும் நெடியாகாட்டுப் பகுதி. இரண்டாவது, கடந்த வருடம் தீருவில் குளம் ஆழமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் தேங்கிய மேலதிக நீர் காரணமாக, தீருவில் பகுதியில் வழமையாக வற்றும் வேகத்தை விட சற்று மெதுவாகவே கிணறுகள் வற்றியிருந்தமை.
தமிழகத்தின் மதுரையில் உள்ள BP குளம் என்னும் பகுதியில் உள்ள ஒரு நண்பர் வீட்டின் குழாய்க்கிணற்றின் ஆழம் 300 அடி, 10 வருடம் முன்னால். சென்னையில் உள்ள சூளைமேட்டுப் பகுதியில் உள்ள வல்வையைச் சேர்ந்த ஒரு உறவினரின் வீட்டின் கிணறு வெறும் 15 அடி, தண்ணீர் தாராளமாக இருதது 96 ஆம் ஆண்டில். சில வருடங்கள் கழித்து கிணறு ஆழமாக்கப்பட்டது. இப்பொழுது கிணறு நிரந்தரமாகவே மூடப்பட்டு அதில் கட்டம் கட்டப்பட்டுள்ளது. காரணம் No Water.
நாம் உபயோக்கிக்கும் நிலத்தடி நீர் “நல்லதண்ணீயோ” “”உப்புத் தண்ணீயோ” என்று மட்டும் பார்க்கும் நாம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடல் நீர் மெது மெதுவாக உட்புகுவதை அறியாமிலிருக்கின்றோம் அல்லது அசட்டை செய்து வருகின்றோம். எம்மில் எவராவது நாம் பருகும் கிணற்று நீரின் தன்மை பற்றி ஒரு பொழுதும் ஆய்வு செய்திருக்கவுமில்லை, அறிந்திருக்கவுமில்லை.
ஒரு சாதரண குடி நீர் பின்வரும் கூற்றுக்களுக்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாதிரி பின்வருமாறு அமையவேண்டும்.
Test Unit Results Specification
Appearance - Clear -
Color Hazen < 5 15
pH @ 25dec - 7.6 -
Turbidity NTU 0.90 5
Conductivity micros/Cm 290 -
Iron (as Fe) mg/L 0.05 0.3
Free residual Chlorine mg/L < 0.1 5.0
Residual Chlorine mg/L < 0.1 5.0
Total Card ness mg/L < 66.8 -
Total Colony count cfu/ml 220 -
E Coli count cfu/100ml < 1 < 1
Faecal caliform count cfu/100ml < 1 -
இறுதியாக........, யாழ்ப்பாணத்துக்குள்ள நன்னீர்....... மழை வீழ்ச்சியேன்றி வேறு ஒன்றுமில்லை. இரணைமடுக்குளத்தை எதிர்பார்ப்பது தவறு. எதிர்காலத்தில் தென்னிலங்கயிலிருந்து நீர் வரும் என்று நாம் எவரும் எண்ணுமளவுக்கு முட்டாள்களும் அல்ல. மாவிலாறு ஒன்றே போதுமான உதாரணம் ஆகவே மழை நீரை........... ஏந்துவோம். இல்லை என்றோ ஒரு நாள் வருந்துவோம்.
பிற்குறிப்பு:-
மழைநீர் சேகரிப்புப் பற்றி தமிழகத்திலிருந்து ஏராளமான கட்டுரைகள் வருவதால் அது பற்றி இங்கு விபரமாக பிரஸ்தாபிக்கப்படவில்லை.