நடராஜர் ஆருத்திரா தரிசனம் நாளை வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் - ஒரு பார்வை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2013
About writer: உமா நகுலசிகாமணி
நடராஜர் ஆருத்திரா தரிசனம் நாளை சகல சிவன் ஆலயங்களிலிலும் நடைபெறவுள்ளது. இலங்கையில் வேறெங்கும் காணமுடியாத, நடைபெறாத வகையில் நடராஜர் ஆருத்திரா தரிசனம் வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெறுவது வழமை. இதன் பின்னணியை முழுமையாகத் தொகுத்துள்ளார்கள் வல்வை ஆவணக் காப்பகத்தைச் சேர்ந்த நகுலசிகாமணி தம்பதிகள்
பல வருடங்களுக்கு முன் சூத்திரப் பொன்னுச்சாமி என்பவரின் பிள்ளைகளான கந்தசாமி, தில்லையம்பலம் இருவரும் நடனமாடுவதற்குரிய கையால் இயக்கும் கருவியை மின்சக்தியின்றி மனிதவலுவுடன் இயங்கக் கூடிய தொழில் நுட்பத்துடன் உருவாக்கியிருந்தார்கள்.
மார்கழியில் திருவாதிரை உற்சவம், ஆனி உத்தரம் உற்சவம் ஆகிய இரு நாட்களிலும், செப்புத் தகட்டினாலான இரத்தினபிடத்தில் நடராஜர் அமர்ந்து மேல் கீழாக ஏழு அங்குல சம வீச்சிலும் மூன்று பக்கங்களும் திரும்பியும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் நடைபெறும் ஆனந்த நடனத்தைப் பார்ப்பதற்கு வடபகுதி மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைச் சிவன் கோயிலை நாடிவருவார்கள்.
பல வருடங்களிற்கு முன்பிருந்தே வல்வையில் மார்கழி மாதம் முழுவதும் வைகறைப்பொழுதில் ஒரு வருடம் நெடியகாடு இளைஞர்களும் மறு வருடம் அம்மன் கோயிலடி இளைஞர்களும் திருவண்ணாமலை சிவனை நினைத்து மாணிக்கவாசக சுவாமிகள் (வாதவூரர்) அருளிய திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி சங்கொலியும் மணியுமாக வல்வையில் ஒவ்வொரு வீதி வீதியாகச் சென்று ஊரை விளிக்கச் செய்வார்கள்.
அவர்களுக்கு குடிமக்கள் சுடச்சுட தேநீர் கோப்பி வைத்து கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவார்கள். அனேகர் அன்னேரமே நித்திரை விட்டு எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து அவரவர் மனதிற்குகந்த கோயில்களுக்குச் செல்வார்கள். ஞாயிறு உதயத்தின் முன் ஆலயங்களில் கடவுளைத் தரிசித்து விபூதி பொட்டு அணிந்து வீதிகளில் சென்று கொண்டிருப்பார்கள். இது வல்வையின் பண்பாடுகளில் ஒன்று.
நடராஜர் சாத்துப்படிகளை:-
சிவன் கோயில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக் குருக்கள்.
திருவாதிரை திருவிழா உபயகாரர்:-
காலஞ்சென்ற சிவன்பக்தர் நா.மகாலிங்கப்பா (தண்டயல்) நடத்திவந்தார். தற்போது அவரது பிள்ளைகள் செய்கின்றனர்.
வீதியுலா வரும் போது பாடல்கள் பாடுவோர்:-
காலம்சென்ற சங்கீதமாமணி ஏ.நடராஜா (ஊரிக்காடு).
காலஞ்சென்ற சோ.சிவயோகசுந்தரம் (அருச்சுனராசா),
தற்போது இ.குகன் தலைமையிலான பஜனைக் குழுவினர்.
செப்புத் தகட்டினாலான புதிய இரத்தினபீடம்:- பொன்னுத்துரை ரவீன்குமார் (கனடா)