புதிய ஆயிரம் ரூபா தாளில் இடம்பெறும் அளவுக்கு வல்லிபுர ஆழ்வார் கோயில் பிரசித்தம், சந்தேகம் இல்லை. யாழ்பாணத்தில் மக்கள் அதிகம் கூடும் நிகழ்வு சக்கரத்தாழ்வார் சமுத்திர தீர்த்தம் தான்.
அங்கு கற்கோவளம் கடற்கரையில் மக்கள் கூட்டம், இடையில் நான்கு கிலோமீட்டர் பரந்த வெளிப் பக்தியில் மக்கள் கூட்டம், இங்கு கோயில் பரந்த வளாகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் என உண்மையில் “லட்சக் கணக்கில்” என்று கூறக் கூடியளவுக்கு ஒவ்வொரு தீர்த்தத் திருவிழாவுக்கும் மக்கள் கூடுகின்றார்கள்.
தீர்த்த திருவிழாதான் எத்தனை இடங்களில் இடம்பெறுகின்றது. ஆனால் இங்கு மட்டும் ஏன் லட்சக்கணக்கில் மக்கள் வருகின்றார்கள்?
வல்லிபுரக்கோயில் மண்
காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் சமுத்திர தீர்த்தம் இடம்பெறும் மற்றும் அதற்குச் செல்வதற்கான பாதையில் இருந்த - எஞ்சியிருகின்ற மணல் குவியல்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்ந்துள்ளது என்பதற்கு தற்போது செல்பிகள் சாட்சி. யாழ்பாணத்தின் அழகு தேவதையாகவும் வடமராட்சி கிழக்கின் கரையோரப் பகுதியின் பாதுகாப்பு அரணாகவும் விளங்கியிருந்தன இந்த மணல் குவியல்கள்.
விடயம் தெரிந்தோ என்னவோ, தந்தையார் எங்களை சிறுவயதில் பல தடவைகள் சக்கரத்தாழ்வார் சமுத்திர தீர்த்த்தைக் காண்பித்துள்ளார். வல்லிபுரக் கோயிலுக்கு சென்றது என்றால் அது சமுத்திரதீர்த்தம் அன்று மட்டும் தான்.
அவ்வாறு தீர்த்தத் திருவிழாவுக்கு செல்லும் போதெல்லாம், எங்களின் ஒரே நினைப்பு மணல் குவியல்கள் தான். நடந்து போக தென்படத் தொடங்கும் மணல் குவியல்கள், பின்னர் சிறிது சிறிதாகப் பெரிதாகி பின்னர் எம்முன்னால் பிரமாண்டமாகும் மணல் குவியல்கள். ஒன்றில் ஏறி உச்சிக்கு சென்று உருண்டு, பின்னர் அடுத்த மண் குவியல், மீண்டும் அடுத்த மண் குவியல் – மிக மகிழ்வான தருணங்கள் அவை.
2002 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர், 2003 இல் பத்து வருடங்கள் கழித்து ஊர் சென்றபோது வல்லிபுரக் கோயில் சமுத்திர தீர்த்தம் பார்க்கச் சென்றேன். ஜீரணிக்கவே முடியவில்லை. மண் குவியல்களைக் காணவில்லை. கேட்டேன், இருந்தவர்கள் அள்ளி விற்றுவிட்டார்கள் என்றார்கள்.
வல்லிபுர கோவில் சமுத்திர தீர்த்தம்
கொழும்பில் எமது குடியிருப்பைக் கட்டியவர் லண்டனில் வசிப்பவர், தற்செயலாக தீர்த்தத் திருவிழாவன்று கடற்கரையில் கண்டார், கதைத்துக் கொண்டு வந்தவர், 'போய்ஸ் இருந்த காலத்தில் இவற்றை ஓரளவு நல்ல முறையில் ரிசேர்வ் பண்ணி வைத்திருந்தார்கள்' என்றார்.
வல்லிபுரக்கோயில் மண் மிகமிக தரம் கூடியது. நீரை மழை நீரிலிருந்து பெறலாம், கடல் நீரிலிருந்தும் பெறலாம். மரங்களை அழித்தால் மீண்டும் நாட்டலாம் என்று கதைக்காவது கூறலாம். ஆனால் இப்பகுதியிலிருந்து அழிக்கப்படும் மணல் எவற்றாலும் ஈடுசெய்ய முடியாதவை.
யாழ்பாணம் ஒப்பீட்டளவில் வளங்கள் குறைந்த ஒரு பகுதி. இருக்கிற ஒரு சில வளங்களையும் நாமாகவே அழித்து வருகின்றோம்.
ஊரில் வீடு கட்டுவதற்கு வேறு மணலைத்தான் வாங்கினேன். மேத்திரி 'பூச்சுக்கு வல்லிபுரக் கோயில் மணல் தான் சரி' என்று மெலிதாக அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.
சரி வடமராட்சி கிழக்கிலா வல்லிபுரக்கோயில் அமைந்துள்ளது. ஏனெனில் கதைக்க வந்தது வடமராட்சி கிழக்கைப் பற்றித்தானே.
வடமராட்சி கிழக்கில் அள்ளப்பட்ட மணல்தான் இதைவிட அதிகம் என்கின்றார்கள் விபரம் தெரிந்தவர்கள். நேரடியாக வடமராட்சி கிழக்கு என்று பந்தியை ஆரம்பித்திருந்தால் விடயத்தை விளங்கியிருக்கமாட்டீர்கள், ஏனெனில் பலர் வடமராட்சி கிழக்கிற்கு சென்றதில்லை, கூடியது நாகர்கோவில் மட்டும் தான்.
மணற்காடு
மணல் காடு (மணற்காடு) என்று பெயர் வரும் அளவுக்கு மணல் குவியல்களைக் கொண்டிருந்ததாம் வடமராட்சி கிழக்குப் பிரதேசம். மணற்குவியல்களைக் கரைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆங்காங்கே பல இடகளில் காணிகளில் மணல் தோண்டப்பட்டு, நிலம் பல இடங்களில் கடல் மட்டத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் கடல் நீர் இலகுவாக உட்புகுந்துவிடும் அல்லது நன்னீர் உவர்நீர் ஆகிவிடும்.
சவுக்கு மற்றும் மூங்கில்கள்
சில வருடங்கள் முன்பு கிழக்கு ஆப்பிக்க நாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். 600 ற்கு மேற்பட்ட கொள்கலன்கள் கப்பலில் ஏற்றப்பட்டது. எல்லாமே மரங்கள். கப்பல் துறைமுகத்தில் நின்ற சமயம் துறைமுகத்துக்கு வெளியே பார்த்துவிட்டு வருவோம் என்று போனேன். சுற்றிப் பார்த்துவிட்டு உணவுச் சாலை ஒன்றுக்குச் சென்றேன். அங்கு ஒரு சீனக் காரரை கண்டேன். கதைத்த பொழுது எங்கள் கப்பலில் ஏற்றப்பட்ட கொள்கலன்களின் அதிகமானவற்றுக்கு சொந்தக்காரர் இவர் என்று தெரியவந்தது.
‘ஏன் பரந்த தேசத்தை கொண்ட உமது நாட்டில் மரங்கள் இல்லையா?’ எனக் கேட்டேன். ‘இருக்கிறது, ஆனால் அங்குள்ளவை மிகவும் ஈரலிப்பனவை, குறைந்த வாழ்நாள் உடையவை, பொருட்கள் செய்ய தரமற்றவை. ஆனால் இங்குள்ள மரங்கள் மிகவும் உலர்ந்தவை, 50. 100 வருடங்கள் என பழமையானவை. இங்கு மலிவு விலையிலும் கிடைக்கின்றன. எங்கள் நாட்டில் இவற்றின் மதிப்பு அதிகம்’ என்றார்.
இதுபோல் தான் வடமாரட்சி கிழக்கில் உள்ள சவுக்குகளும் மூங்கில்களும். பொதுவாக மரங்கள் வளர அடம்பிடிக்கும் உலர்ந்த இடங்களில் வளர்பவை. மிகவும் உறுதியானவை. வறண்ட பிரதேசத்தை பாதுகாக்கும் அரணாகவும் விளங்குபவை.
வித்தியாசம் என்னவென்றால் கிழக்கு ஆபிரிக்காவில் காசுக்காக வெட்டப் படுகின்றது, இங்கு விழாக்கள் என்ற பெயரில் வெட்டப்படுகின்றன. மணல் தானும் வீடு கட்டத் தேவை என்ற குற்றச் சாட்டை வைக்கலாம். சவுக்கையும் மூங்கில்களையும் வெட்டுவதற்கு இப்படி என்ன காரணத்தை கூற முடியும்?.
யாழ்பாணத்தில் இதுபோன்ற அழிப்புக்களைத் தடுக்கக்கூடிய வகையில் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களோ அல்லது நிறுவனங்களோ இல்லை. பெயருக்கு சில இடங்களில் பெயர் பலகைகள் போடப்பட்டுள்ளது தான் மறுப்பதற்கில்லை.
ஆனாலும் இந்திர விழா போன்று பல விழாக்களில் வருடந்தோறும் நாட்டப்டும் சவுக்குகளுக்கும் மூங்கில்களுக்கும் குறைவேயில்லை.
அனுமதி கேட்டு வெட்டுகின்றோம் என்று கூறுகின்றார்கள். மிகவும் வெட்கக்கேடான விடயம்.
சவுக்கம் காடு
அண்மையில் தான் வடமராட்சி கிழக்கின் சவுக்கம் மற்றும் மூக்கில் தோப்புகளைப் போய் சுற்றிப் பார்த்தேன். பிரமித்துப் போனேன். இவ்வளவு அழகான தோப்புக்கள் இந்தப் பகுதிகளிலா என்று. வயதானவர்களுடன் கதைத்த பொழுது கூறினார்கள், இதற்கா பிரமிப்பு என்றார்கள். தங்கள் காலத்தில் இருந்த தோப்புக்கள் மற்றும் மணல் குவியல்களின் கணக்குக்கு அளவேயில்லை என்றார்கள்.
நன்னீர்
இங்கு தொண்டைமனாற்றில் பாரிய நீர்த்தொட்டி, ஊரில் வீதிகள் வழியே நன்னீர் குழாய்கள். பலர் இணைப்பை எடுத்து வருகின்றார்கள். குழாய்களில் நீர் வருகின்றது, ஒன்ற விட்ட ஒரு நாளாக. தொடர்ந்து நீர் இப்படி வருவதற்கு தேவையான நீர் எங்குள்ளது, நீர் எங்கிருந்து வரப்போகின்றது எனப்பலரிடம் கேடேன்.
எங்களுடைய ஆட்களுக்கு ஒரு பழக்கம் எழுந்தமானத்தில் கதைப்பது. 'வடமராட்சி கிழக்கில் இருந்து' என்று வாய் கூசாமல் கூறுகின்றார்கள்.
அங்கிருந்து மணலை எடுத்து விட்டோம், இருப்பவற்றையும் அள்ளி வருகின்றோம். பிரதான மரங்களான சவுக்கு, மூங்கில்களையும் வெட்டிவருகின்றோம். இறுதியாக அடிமடியில் உள்ள நீரில் கைவைத்துள்ளோம்.
சுருக்கமாகக் கூறுகின்றேன். நீண்ட காலத்துக்கு யாழின் ஏனையே பகுதிகளுக்கு கொடுக்கக் கூடியளவுக்கு மருதங்கேணியிலயோ வடமராட்சி கிழக்கின் ஏனைய பகுதிகளிலோயோ நீர்ப்படுக்கை என்பது இல்லை. இருப்பதாக எந்த வித ஆய்வு அறிக்கைகைகளும் விடப்பட்டதாக தெரியவில்லை.
ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் திட்டம்
யாழில் ஏற்படவுள்ள நன்னீர் தட்டுப்பாட்டை ஈடுசெய்ய பல யோசனைகள் முன் வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று கடல் நீரை நன்னீராக மாற்றும் ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் (Reverse Osmosis) திட்டம். இத்திட்டத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி தான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் அப்பகுதி மக்கள் போராட்ட்டாத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக அக்கறை கொண்ட இளைஞர் ஒருவருடன் கதைத்தபொழுது ஏன் தாம் இதைத் தடுக்கின்றோம் என விபரித்தார்.
வடமராட்சி கிழக்கு கரையோரத்தில் மீன்பிடி வள்ளங்கள், படகுகள் வைத்து ஆழ்கடல் மீன்பிடி தொழிற்செய்ய கரை அமைப்பு என்பது சாதகமானதாக இல்லை. ஆகவே இங்கு பிரதான மீன் பிடித் தொழிலாக ‘கரைவலை’ தான் இருந்து வருகின்றது.
கரைவலை கரையிலிருந்து சுமார் நூற் மீட்டருக்குள் இடம்பெறும் ஒரு தொழில். அதாவது கரையில் உள்ள மீன்களை நம்பி இடம்பெறும் தொழில்.
‘ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் திட்டத்தினால் கடல் நீர் நன்னீராக மாற்றப்படும்போது உண்டாகும் உப்புக் கரைசல்களின் செறிவு இக்கரையோரப் பிரதேசங்களில் அதிகரித்து மீன்களின் இருப்பை அடியோடு இல்லாமல் செய்துவிடும். யாழில் கடற்கரை மருதங்கேணியில் மட்டும்தான் உண்டா? நன்னீர் எங்கு தேவைப் படுகின்றதோ அங்கு நன்னீர் சுத்திகரிப்பு திட்டத்தை ஆரம்பிப்பது தானே நியாயம்’ என்றார் அவர் .
மருதங்கேணியில் அப்பகுதி மக்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கை பிழையானது அரசியல் நோக்கம் கொண்டது என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலே நண்பர் குறிப்பிட்டது போல் ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் திட்டத்தினால் மிகப் பெருமளவான உப்புக்கரைசல் கழிவாக உண்டாகும். இது அப்பகுதியிலேயே கொட்டப்பட்டால் அப்பகுதி கடலில் உப்புத் தன்மை அதிகரிக்கும் என்பது உண்மை. கடல் தானே கரைந்து விடும் என்ற வாதம் தவறானது.
காரணம் ஒரு சில நாட்கள் மட்டும் நன்னீர் சுத்திகரிப்பு நடைபெற்றால் கரைசல் கடலில் கரையும் எனலாம். ஆனால் தொடர்ந்து இடம்பெற்றால் குறைந்தது அப்பகுதியில் மீன்களை அகற்றக் கூடியளவுக்கு உப்புப் கரைசல் அதிகரிக்கும்.
இப்பகுதியில் நிலவும் பருவப் பெயர்சிக் காலநிலைகளும் செறியும் உப்பை இலகுவாக ஐதாக்க சாதமாக இருக்காது.
எனக்குத் தெரிந்தவரை, இப்பகுதியில் முன்வைக்கப்பட்ட ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் திட்டத்தில் (Proposal) உண்டாகும் உப்புக் கரைசல் கழிவுகளை பாதுகாப்பான முறையில் எவ்வாறு கையாள்வது எனத் தெரிவிக்கப்படவில்லை. அதாவது கடலில் தூர இடங்களில் கொண்டு போய் கொட்டுவது அல்லது கரையில் வேறு கைத்தொழிகளுக்கு மாற்றுவது போன்றவை.
சிறந்த உதாரணம். சுன்னாகம் மின் பிறப்பாக்கிகளும் நிலத்தடி நீர்ப் பிரச்சனையும். பிறப்பாக்கிகளை கொண்டு வந்து பொருத்தினார்கள். எரிபொருள் கொண்டு மின்னை பிறப்பித்தார்கள். எரிபொருள் கழிவுகளை எப்படி கையாள்வது என்ற திட்டம் இன்றி அவை நிலத்தில் கொட்டப்பட்டன. இன்று நீர் மாசடைந்து விட்டது. ஆர்ப்பரிக்கின்றார்கள்.
குறித்த இந்த இலகு பொறிமுறையில் கழிவுகளைக் கையாள தெரியாத எமது அதிகாரிகள் ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் திட்டத்தில் கழிவுகளை எப்படி சிறப்பாக கையாள்வார்கள்? முட்டாள்தனமாக அது கடலில் கரைந்து விடும் எனத்தான் கூறப் போகின்றார்கள்.
மருதங்கேணியில் நன்னீர் திட்டத்துக்கு அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது நியாயமான ஒன்றுதான்.
இவ்வாறாக மணல் . மரம் , நிலத்தடி நீர், நன்னீர் சுத்துகரிப்பு என வடமராட்சி கிழக்கிலிருந்து நாம் சுரண்டியவையும், உறுஞ்சியவையும் ஏராளாம்.
இவற்றுக்குப் பதிலாக நாம் அவர்களுக்கு ஏதாவது ஒன்றையாவது கொடுத்துள்ளோமா? என்றால் விடை...........
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.