2009 இன் பின்னர் ‘அப்பாடா சண்டை முடிந்தது, பாதை திறக்கப்பட்டுவிட்டது’ – ஏதோ சுதந்திரம் ஒன்று கிடைத்த மாதிரி சந்தோசம் எங்களில் பலருக்கு.
2009 ற்கு முன்னர் பல ஆண்டுகள் கடல்வழிப் போக்குவரத்தில் மட்டும் தங்கியிருந்த யாழ்ப்பாணத்திலும், பொருளாதாரத் தடைக்கு உட்பட்டிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பிலும், சண்டை முடித்தவுடன் பல்வேறு பொருட்கள் வந்து குவியத்தொடங்கின.
யுத்தம் முடிந்த பின்னர் வர்த்தகர்களின் பிரதான ‘Ready cash’ யாவாரமாக இருந்தது வடக்கு, குறிப்பாக யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி. இப்பொழுதும் இருந்துவருகின்றது.
அத்தியாவசியமான மற்றும் தரமான பொருட்கள் அவசியம் தேவைதான்.
ஆனால் பாதை திறக்கப்பட்டவுடன் பொருட்களோடு பொருட்களாக, பல தனியார் வியாபாரிகளால் இங்கு கொண்டுவரப்பட்டு ஏராளமான ‘இ-வேஸ்ற்றுக்கள்’ (e Waste) ‘செகண்ட் காண்ட்’ மலிவு விலை எனக்கூறி விற்கப்பட்டது, கொட்டப்பட்டது.
தெற்கில் உதவாது என்று கழிக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், கசற் பிளேயர்கள், குளிர் சாதனப் பெட்டிகள், பழைய கணனிகள் (முன்பு இதைக் கொட்டியதில் எமது புலம்பெயர் மக்களுக்கும் கணிசமான பங்குண்டு) என்று ஏராளமான மின்சார உபகரணக் கழிவுகள் இங்கு மலிவு விலையில் விற்கப்பட்டன.
‘சிங்கம் 3’ இல் அவுஸ்திரேலியாவில் இருந்து ‘e-Medical waste’ இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதைப் போல் தான் இதுவும்.
இங்கும் பிறநாடுகளில் உள்ளதைப்போல், ‘சுற்றுப்புற சூழல் அமைப்புக்கள்’ என்று ஏதும் இருந்திருந்தால் குரல் கொடுத்திருந்திருப்பார்கள். இங்குள்ள பத்திரிக்கைத்துறையினரும் இந்த விடயத்தில் அலட்டிக்கொள்ளவில்லை. விடயம் தெரிந்த ஒரு சிலரும் ‘ஏன் விசர்ப்பட்டம் கேட்பான்’ என்று பேசாமல் இருந்துவிட்டார்கள்.
சுமார் 15 வருடங்கள் முன்பு, நான் கப்பல் ஒன்றில் பணிக்காக சேர்ந்த பின்னர், சக மாலுமி ஒருவரிடம் ஏதாவது துறைமுகத்தில் ஒரு TV வாங்கித்தரும்படி கேட்டேன். அதற்கு அவர் ‘கப்பல் ஜப்பான் போகின்றது அங்கு சும்மா எடுக்கலாம்’ என்றார், அப்படி எடுத்தும் தந்தார். இது போன்று அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்து, பொருளாதாரவிருத்தி குறைந்த நாடுகளுக்கு, பாவித்த பொருட்கள் (Used items) என்னும் போர்வையில் ‘e-Waste’ க்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இன்றும் நடைபெற்றுவருகின்றது.
இங்கு படித்தவர்கள், பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், ஒன்றுக்கு இரண்டுதரம் யோசித்துச் செலவு செய்பவர்களே 50 லட்சம் 60 லட்சம் என்று கொடுத்து ஏமாறும் இந்தக்காலத்தில், அறியாமை வறுமை தேவை என உள்ள இங்குள்ள மக்கள் எப்படி ஏமாறாமல் அல்லது இது போன்ற பொருட்களை வாங்காமல் இருக்கமுடியும்?.
வாங்கித்தள்ளினார்கள். அவர்கள் அப்படி வாங்கிய இரண்டாம் தர மின்சார உபகரணங்களில் பல ஏற்கனவே பழுதடைந்துவிட்டன. மின்சாரக் குப்பைகளாக (e-waste) இங்கு மாறி வீட்டிலும் அடுத்தவர்கள் காணிகளிலும், வெளிகளிலும், கடற்கரைகளிலும் கொட்டப்பட்டுவருகின்றன.
இங்கு யாழ்பாணத்தில் மீள்சுழற்சி என்பது அறவே இல்லை. குப்பை எரிக்கும் இயந்திரங்களும் (Garbage Incinerator) இல்லை. ஆகவே இந்த அழியாத மின்சாரக் குப்பைகள் எல்லாம் எமது நிலங்களில் பரவி மெல்ல அமிழ்ந்து வருகின்றன.
இவை மண்ணின் வளத்தை பாதிக்கப் போகின்றன என்பது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே நிலத்தடி நீர்ப் பிரச்சனையை எதிர்நோக்க ஆரம்பித்துள்ள யாழ் நிலத்தில், இது போன்ற மின்சாரக் குப்பைகள் நிலத்தடி நீரை மேலும் மாசடையைச் செய்யவுள்ளன. அத்துடன் நிலத்திற்கு கீழே, இவை ஏற்கனவே பிளாஸ்டிக் படலம் போல் பரவியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் பரம்பலை அதிகரித்து, மழை காலங்களில் நீர் உள்வாங்குதலை தடுப்பதுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்வதுடன் மண்ணுக்கு போக வேண்டிய நீரை கடலுக்கு கொண்டு செல்ள்ளவுள்ளன.
‘வாங்காதீர்கள்’ என்றேன் சிலரிடம். ‘Flat TV வாங்கித் தருகின்றாயா என்றார்’ ஒருவர். பொல்லைக் குடுத்தா அடி வாங்க வேண்டும் என்று இதுபற்றி கதைப்பதை விட்டுவிட்டேன்.
‘e-Waste’ பற்றிய வாதங்களே உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வேளையில், இங்கு அதை அறியாது விற்பதும் வாங்குவதும் தொடர்கின்றது.
தடுக்க வேண்டியவர்கள், மக்களுக்குப் புரிதலை ஏற்படுத்த வேண்டியவர்கள் இங்கு ஆட்சியில் உள்ள வட மாகாணசபையினரே.
மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன் அவர்கள் அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். ‘அளவுக்கு அதிகமாக தற்பொழுது பொருட்களை வாங்கி வீட்டுக்கும் நாட்டுக்கும் அவற்றை சுமையாக்குகின்றோம். ஒரு பொருளை வாங்கும் முன்னர் அது அவசியம் நமக்குத் தேவைதானா என்று யோசித்து வாங்கவேண்டும், முடிந்தவரை இருப்பதை இன்னும் சில காலம் பாவிக்கப் பழகவேண்டும்’ என்றார்.
எனது எண்ணத்தை பிரதிபலித்த அருமையான கருத்து.
வட மாகாணசபையில் இது போன்ற சூழலுக்குத் தேவையான கருத்தைக் கூறிவரும் உறுப்பினர் என்றால் அது ஐங்கரநேசன் அவர்கள் மட்டும் தான்.
இது போன்ற கருத்துக்கள் அடிமட்டம் வரை செல்லவேண்டும். மின்சாரக் குப்பைகள் இங்கு வருவது தடுக்கப்படவேண்டும். மின்சாரக் குப்பைகளை நாம் தேவையில்லாமல் உற்பத்தி செய்வதையும் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Capt.Thurailingam (UK)
Posted Date: March 18, 2018 at 11:45
ஆதவன் இது உங்களது 10 ஆவது கட்டுரை. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விதத்தில் படிப்பினை புகட்டுகின்றது. கப்பலில் கப்டனாக இருக்கும் உங்களுக்கு இவ்வளவு பரந்த அறிவும் அவற்றைப்பற்றி மற்றவர்களுடன் பகிர்வதையும் கண்டு வியப்படைகிறேன்.
எம்மவர்களின் பிரச்சனைகள் அனைத்துக்கும் அறியாமை ஒரு முக்கிய காரணமாகின்றது. கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், வடக்கு கல்வி முறை அனைத்தும் இலங்கையில் (பெரும்பான்மையினர் கழித்த) தொழில் பார்ப்பதற்கு மாத்திரம் உதவும் அதே அறிவு ஆங்கிலத்தில் இருந்தால் வெளிநாட்டுக் கல்வியும தொழிலும் பெற வாய்ப்புக்கள் நிறைய உள்ளது என்பது பற்றியும் எழுதுங்கள்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 17, 2018 at 20:09
உண்மையான சிறப்பான பதிவு ;சமூக அக்கறைகொண்ட மனிதர்கள் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் .
நன்றி
ஆதவன் அண்ணா
குமுதினி (இலங்கை)
Posted Date: March 17, 2018 at 13:18
தம்பி! எம்மவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்காக வாழ்வதிலை. மற்றவர்களைப்பார்த்து அவர்களுக்காகவே வாழ்கின்றனர். ஆடம்பரம், கெளரவம் , தம்மையாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதில் மிக கவனமாயிருந்து வீண்செலவுசெய்து சுற்றாடலை மாசுபடுத்துகிறார்கள். உங்கள் இப் பக்கத்தை அனைவரும் வாசித்தால் நல்லது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.