விக்கிபீடியாவில் இலங்கையில் உள்ள நாற்பது நகரங்களின் பட்டியலில் வல்வெட்டிதுறையும் ஒன்றாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவு கீழ்க்காணும் அரச தகவல்களின்களின் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளது.
1) "Sri Lanka: largest cities and towns and statistics of their population"
2) Table 15.1: Area, Population, Registered voters and Employees of Municipalities, 2015" (PDF). Statistics Statistical Abstract 2016. Department of Census and Statistics, Sri Lanka.
3) "Table 2.4: Population of Municipal Councils and urban councils by sex, Census, 2012" (PDF). Statistics Statistical Abstract 2016. Department of Census and Statistics, Sri Lanka.
வல்வெட்டித்துறை
இந்த நகரைப்பற்றி கேள்விப்படாதவர்கள் இலங்கையில் இருக்கவே முடியாது, சிறுவர்கள் நீங்கலாக.
எனது தந்தையாருக்கு ஒருமுறை கடிதம் ஒன்று வந்தது. ‘அதிரூபசிங்கம், வல்வெட்டித்துறை’ என்று மட்டும் தான் அதில் எழுதப்பட்டிருந்தது.
பெரும்பான்மை இனத்தவர் என்றாலும் சரி, ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழர்கள் யாராவது என்றாலும் சரி, ‘நீர் எந்த இடம்’ எனக் கேட்டால் நான் கூறுவது ‘வல்வெட்டித்துறை’ என்று மட்டும் தான்.
அவ்வாறு பதில் அளிக்கும் போது ‘எந்த வல்வெட்டித்துறை, அது எங்குள்ளது’ போன்றெல்லாம் இதுவரை யாரும் கேட்டதில்லை.
வல்வெட்டித்துறையின் புகழை இவ்வாறாக உச்சத்துக்கு கொண்டு சென்றவர்கள் என்றென்றும் மெச்சப்பட வேண்டியவர்கள்.
ஒரு நகர் என்றால் முதலில் வருவது அதன் சந்தியே ஆகும்.
புகழ் அளவில் உச்சத்தில் நிற்கும் வல்வெட்டித்துறை, அதன் சந்தியின் அமைப்பிலும் தோற்றத்திலும் கடை நிலையிலேயே உள்ளது. (அதனாலேதான் என்னவோ விக்கிபீடியாவில் ஏனைய நகர்களுக்கு அவற்றின் சந்திகளின் படம் போடப்பட்டு, வல்வெட்டித்துறைக்கு மட்டும் கடற்கரையின் ஒரு பகுதி போடப்பட்டுள்ளது போலும்).
அண்மையில் சில மாதங்கள் கழித்து வல்வை சென்றபோது உடுப்பிட்டி வழியாக சந்தி சென்றேன். சிவபுரவீதியில் உள்ள பெட்ரோல் செற்றை அடைந்தது அங்கிருந்து நேரே வல்வெட்டித்துறை சந்தியைப் பார்த்தபோது (கீழேயுள்ள படம்) உடைந்த கட்டம் ஒன்றும் அதைத்தாண்டி சில மரங்களும் தென்பட்டன.
இதை விட சந்தியின் மத்திக்கு செல்லும் 11 அடி ஓடுங்கல் வீதி கண் முன்னால் மீண்டும் வந்து போனது. (படத்தில் காணலாம்)
விக்கிபீடியாவில் கூறப்படுள்ள நாற்பது நகரங்களில் பெரும்பாலான நகரங்களுக்கு சென்றுள்ளேன். இப்படியான காட்சி அமைப்பைக் கொண்ட நகர் ஒன்றின் சந்தியை வேறு எங்கும் காணவில்லை.
வெளி இடங்களில் இருந்து வல்வெட்டித்துறையைப் பார்க்க வருபவர்கள் சந்தியில் வந்து இறங்கினால், சந்தியின் அளவையும், அமைப்பையும் பார்த்து ‘இதுவா வல்வெட்டித்துறை சந்தி’ என நிச்சயம் எண்ணுவார்கள்.
சந்தியின் அபிவிருத்தியில் உள்ள மந்த வேகத்துக்கு முன்னர் இராணுவ முகாம் இப்பகுதியில் இருந்ததையும், தற்பொழுது சந்தியில் காவல் நிலையம் உள்ளதையும் பலர் கூறக்கூடும்.
இது ஒரு புறம் இருக்கட்டும். 40 வருடங்களுக்கு முன்னர் ‘சந்தியை ஏன் இவ்வாறு வெறும் ‘நாலு பரப்பு’ நிலம் மட்டும் கொண்டதாக அமைத்துள்ளார்கள், அப்பொழுது இருந்த அரச நிர்வாகம் எவ்வாறு இதை அனுமதித்து என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. .
வல்வெட்டித்துறை சந்தியின் நிலப்பரப்பு வெறும் நான்கு பரப்புக்கள் மட்டும் தான். இதைவிட சந்திக்கான மூன்று பிரதான வீதிகளும் மிகவும் ஒடுக்கமானவை.
வடமராட்சியின் இதர நகரங்களான பருத்தித்துறை மற்றும் நெல்லியடியுடன் கூட இதை ஒப்பிட்டுக்கூட பார்க்க முடியாது.
வல்வைச் சந்தியை சுற்றியுள்ள கட்டங்களை எடுத்துக் கொண்டால்,
பழைய நவீன சந்தை – இரு மாடிகளைக் கொண்டமைந்துள்ளது. மேல் மாடியில் ஒரு பக்கத்தில் வாசிகசாலை இயங்குகின்றது. பலருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியாது. அடுத்த பாதியில் தற்போது NVQ கற்கை நெறிகள் இடம்பெறுவதால், பகுதியாக தற்காலிகமாக இது பாவனையில் உள்ளது.
கோயில் தூண்கள் போல் மிகவும் நெருக்கமாக இங்கு தூண்கள் - கட்டடத்தின் மேற்பாதியில் உச்சப்பயன்பாடு இல்லை என்பது எனக்கூறலாம்.
கீழ்ப்பகுதியை எடுத்துக்கொண்டால், இது உட்பக்கம் - வெளிப்பக்கம் என அமைந்துள்ளது. முன்னர் காய்கறிச் சந்தை அமைந்திருந்த உட்பக்கம் தற்போது பாவனையில் இல்லை. ஆதலால் உட்பக்கக் கடைகளும் பாவனையில் இல்லை. சிலர் ஸ்டோர் ரூமாக சில கடைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.
வெளிப்பக்கத்தை எடுத்துக் கொண்டால், நான்கு பக்கமும் கடைகள். அளவு 8 x 8 சதுர அடிகளே. பழைய நவீன சந்தையில் இவைதான் பயன்பாட்டில் உள்ளன. இவை மொத்த கட்டடத் தொகுதியில் சுமார் 30% தான்.
வல்வை நவீன சந்தைப் பகுதி
பழைய நவீன சந்தைக் கட்டடத்துக்கு தெற்காக பயன்பாட்டில் இல்லாத மாடிக் கட்டடம், அதனைத் தொடர்ந்தும் மாடியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் வீடுகள் - அநேகமானவை வீதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
பழைய நவீன சந்தைக்கு வடக்காக பயன்பாட்டில் இல்லாத தனியார் சில காணிகள்.
சந்தியின் மையத்தைச் சுற்றி
சந்தியின் மையத்தின் வடக்குப் பக்கமாக வீதியிலிருந்து வெறும் 2 அடி தூரத்தில் மாடி வாணிபக் கட்டடம். பழமையானது, கீழ்ப்பகுதி மட்டும் பாவனையில் உள்ளது.
சந்தியின் வடக்கு மற்றும் மேற்கு பக்கங்கள்
இதற்குப் பக்கமாக கடற்கரைக்குச் செல்லும் மிகவும் ஒடுங்கலான ஒழுங்கை - இரவில் தற்பொழுது இதனூடாகச் சென்றால் மயான காண்டங்களில் வருவது போலிருக்கும்.
மேற்குப் பக்கமாக வல்வை சனசமூக சேவா நிலையக் கட்டடம். இதன் மேற்குப் பகுதியில் வாசிகசாலை
இன்றைய Facebook, Whatsup யுகத்தில் பத்திரிகைகள் என்பது ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்றாகிவிட்ட நிலையில், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இங்கு வந்து பத்திரிகை படிக்கின்றார்கள். இரவுக்கல்வி இங்கு நடாத்தப்படுவதால், இரவில் மாணவர் பயன்பாட்டுக்காக இது ஓரளவு பயன்படுகின்றது.
சனசமூக சேவா நிலையத்தின் கீழ்ப்பகுதி பயணிகள் தரிப்பிடத்துக்கு என அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது பயணிகளின் உச்சப்பயன்பாட்டில் இல்லை.
சந்தியின் தெற்குப் பக்கத்தில் சிறிய ஒரு வாசிகசாலை ஒன்றுள்ளது. அதனையொட்டி வீடுகள். வயதானவர்களால் மாடி ஏறுவதில் பிரச்சனை என்பதைக் கருதி, ஆட்டோ ஓட்டுனர் சங்கம் குறித்த வாசிகசாலையை அமைத்துள்ளது.
சந்தியிலிருந்து செல்லும் மூன்று வீதிகளிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பயன்தரு பொதுக் கட்டடங்கள் என்று எதுவுமில்லை, புதிய நகரசபைக் கட்டடத் தொகுதி நீங்கலாக. இங்கும் உச்சப்பயன்பாட்டில் உள்ளது தனியார் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்று தான். இதனையொட்டி அமைந்துள்ள கட்டடத் தொகுதியில், கீழ்ப்பகுதியில் காய்கறிச் சந்தை. முதலாம் மாடியும், இரண்டாம் மாடியும் கிட்டத்தட்ட பயன்பாட்டில் இல்லை.
சந்தியின் கிழக்கு பக்கம்
வருமானம் குறைந்த சபைகளில் ஒன்று வல்வை நகரசபை. இவற்றைப் பயன்படுத்தி இன்றுவரை வருவாயைப் பெறத்தவறியது - தவறி வருவது வருத்தத்துக்குரியது.
மொத்தத்தில் வல்வெட்டித்துறை சந்தி என்பது இலங்கையின் ஏனைய பிரதான நகர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பல வருடங்கள் பின்னோக்கி உள்ளது என்பது தெளிவு.
நகரின் மத்தியில் இருக்க வேண்டிய இலங்கை வங்கி, சில நூறு மீட்டர்கள் தாண்டி அமைந்துள்ளது.
மக்கள் வங்கி வாடகை வீட்டில்,
தபால் அலுவலகமும் வாடகை வீட்டில்,
காவல் நிலையமும் தனியார் வீடுகளில்,
கிராம சேவையாளர் அலுவலகங்களும் தனியார் வீடுகளில்,
இலங்கையின் எந்தவொரு பிரதான நகரிலும் இவ்வாறனதொரு நிலையை பார்க்க முடியாது.
சில வருடங்கள் முன்பு இங்கு கிளை திறக்க முயன்ற வங்கி ஒன்று, இடம் இல்லாமல் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டது.
சந்தியையொட்டி அமைக்க பிரயத்தனப்பட்ட சமுர்த்தி அலுவலகம், இங்கு இடம் இல்லாததால், இறுதியில் பொலிகண்டி ஆலடியில் அமைக்கப்பட்டதாகக் கூறினார்கள்
தேவையானவற்றுக்கே இடம் இல்லாத போது புதிதாக யார்தான் இங்கு வரப்போகின்றார்கள்.
நீண்டதூரங்களில் இருந்து வருவபவர்கள் அவசரத்துக்கு போவதற்கு என ஒரு Wash room இல்லை.
பிரதான நேர உணவுகளை உரிய முறையில் உண்ணக்கூடிய உணவுச் சாலைகள் (மலசல கூட வசதிகளுடன்) இல்லை.
ஊரை அடையாளப்படுத்தும் எந்தவொரு நினைவுச் சின்னங்களும் இல்லை. ஒருவேளை விரும்பினால், அவற்றை நிறுவுவதற்கு இடமும் இல்லை
மொத்தத்தில் வல்வெட்டித்துறை சந்தி என்பது தற்காலத் தேவைகளுக்கோ அல்லது எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டோ அமையப்பெறவில்லை.
வல்வை சந்தி தானும் ஓரளவு பரவாயில்லை என்று கூறலாம். வல்வை நகரசபையின் கீழ் உள்ள தொண்டைமானாறு சந்தி மற்றும் பகுதியாகவுள்ள பொலிகண்டிச் சந்திகளின் நிலை மேலும் மோசம். குறிப்பிடக்கூடிய என்று ஒன்றுமே இங்கு இல்லை.
நிலங்களைக் கையகப்படுத்தி, பழைய கட்டங்களை அகற்றி, தேவையில்லாத விடயங்களை இதர பகுதிகளுக்கு நகர்த்தி, உச்சப் பயன்பாட்டைத் தரக்கூடிய வகையில் சிறந்ததொரு கட்டட அமைப்பைக் கொண்டதான நகரை உருவாக்கக் கூடிய திட்டம் (மாஸ்டர் ப்ளான்) இதுவரை ஏற்படுத்தப்படவில்லை – ஏற்படுத்தப்படவேண்டும்.
அத்தகைய பிளானில் புதிய அலுவலகங்களை ஈர்க்க கூடிய வகையில் தொடர் மாடிக் கட்டடம் ஒன்றும் கட்டாயம் உள்ளடக்கப்படவேண்டும்
சனத்தையும் சங்கங்களையும் விடுத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த (காணிகள் வாங்குவது நீங்கலாக) பெருமளவில் நிதிகளைப் பெறுவதற்கு வழிகள் உண்டு. ஆனால் திட்டங்கள் இல்லை, முயற்சிகள் இல்லை, முன்வைப்புக்கள் இல்லை.
எதிர்காலத்தில் வல்வெட்டித்துறைச் சந்தியை வெற்றிகரமாக மீள் நிர்மாணித்தால், குந்துவதற்கு ‘ஒட்டுகள்’ இல்லாதவாறாக அது அமைக்கப்படவேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thurailingam (UK)
Posted Date: September 30, 2018 at 14:32
கப்படன் ஆதவன்
இது வல்வெட்டித்துறை பற்றி எழுதப்பட்ட சிறந்த கட்டுரைகளில் ஒன்றாகும்.
நன்கு ஆராந்து உண்மை நிலையை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது உத்தமம்.
முன்னொரு காலத்தில் சில காரணங்களுக்காக வெளியார் ஊருக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் தற்பொழுது நிலமை மாறிவிட்டது. ஊர் மக்கள் இதை நன்கு உணர்ந்து முக்கியமாக இளைய தலைமுறைகள் ஊரின் முன்னேற்றத்திற்கு வித்திட வேண்டும்.
வயது வந்தோர் கல்வி பெறவேண்டும். அறியாமை நீங்க வேண்டும். சுயவேலைவாய்ப்பு பற்றி அறியவேண்டும். வெளிநாடுகளில் ஏன் வெளியூர்களில் தொழில் நுட்பம் எப்படி உதவுகின்றது என அறிய வேண்டும். ஊரில் உள்ள கல்விமான்களின் உதவிகள் முழுமனே நன்கு பயன்படுத்தப் படவேண்டும். குட்டிமணி அண்ணா போன்ற பலர் இலைமறை காய் போல ஊரில் உள்ளனர். அவரக்களின் ஆலோசனைகளை முழுமையாக பெறவேண்டும்.
வெளிநாட்டில் பணம் நன்கொடை தருபவர்களும், தராதவர்களும் கல்வி நுண்கலை வேலைத்திறமை வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் உதவ முன்வருவார்கள் என்பதை வல்வை இளைஞர்கள் உணரவேண்டும். பண உதவியை விட பணம் உழைக்க வைக்கும் உதவியே சாலச்சிறந்தது.
வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் தொழில் நுட்ப உதவிகளை கேட்கும் நிலை வரவேண்டும். இவைகள் வெளிநாட்டவர்களை ஊருக்கு கொண்டுவரும்.
யாழ்ப்பாணத்தில் குட்டி இங்கிலாந்தாக வல்வை மிளிருமா?
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.