ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் நான் கண்ட 17 குறைபாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் கவனிக்கப்படவேண்டிய குறைபாடுகள்
இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பாயில் காலை மற்றும் மாலை வேளைகளில் புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்களிலும் மோதும் மக்கள் கூட்டத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாகும் அனுபவத்தை போன்ற அனுபவத்தை நான் வேறு எந்தவொரு பெருநகர்களிலும் கண்டதில்லை. புகையிரதப் பயணத்தின் போது, புகையிரதம் நின்றவுடன் 15 செகண்ட்களுக்குள் புகையிரத்தத்திலிருந்து இறங்காவிட்டால் அவ்வளவுதான், அடுத்த ஸ்டேஷனில் தான் இறங்கவேண்டும்.
தாதர், தானே, பந்திரா போன்ற பெரிய ஸ்டேஷன்களில் சப்பாத்து கழன்று, பெல்ட் பிய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பரிச்சயம் இல்லாத ஒருவர் மும்பாயில் புகையிரதத்தில் செகண்ட் கிளாசில் பயணிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியம் அற்ற ஒன்று, குறிப்பாக வெஸ்டேர்ன் மற்றும் சென்ட்ரல் புகையிரத லைன்களில். காரணம் அந்தளவுக்கு கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். கிட்டத்தட்ட 2 வருடங்கள் இந்த ரயில் பயணத்தை அனுபவித்து இருக்கின்றேன்.
இவ்வாறனதொரு மக்கள் கூட்டம் தான் கடந்த வாரம் இடம்பெற்ற எமது வல்வை இந்திரவிழாவிலும் அலை மோதியது. கடந்த 50 வருடங்களில் அதிகமானோர் வருகை தந்திருந்த விழாவாக இது பேசப் படுகின்றது.
இந்திரவிழாவை பார்க்க வந்த மக்கள் எண்ணிக்கையைக் கணக்கிட எந்தவொரு பொறிமுறையையும் எவரும் எடுத்திருக்காததால் மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் என்பது சரிவர கணக்கிட்டுக் கூற முடியாவிட்டாலும், மிகையான இதுவரை வந்திராத மக்கள் கூட்டம் என்பது மட்டும் தெளிவு.
இந்திரவிழா மென்மேலும் சிறப்புற்று வருகின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது என்பதில் சந்தேகமில்லை.
கடந்த இந்திரவிழா பொதுவாக சிறப்பாக அமைந்திருந்தாலும் கவனிக்கப்படவேண்டிய பல விடயங்கள் தொடர்ந்து கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.
இந்திரவிழா முழுமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைவதற்கு இவை இன்றியமையாதவையாகும்
1) ஊரணி முதல் ஊரிக்காடுவரையான முழு நிகழ்வுகளும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டும். கழகங்கள், சில பொது அமைப்புக்கள், தனிப்பட்டவர்கள்..... என்ற ரீதியில் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டாலும் சில முறிவுகள் தென்படுகின்றன.
உதாரணம் எல்லைப் பிரதேசங்களில் இரண்டு பக்கங்களிலிருந்து ஸ்பீக்கர் சத்தங்கள். ‘நோ மம்மா நோ பாப்பா’ என்ற பல்வேறாக தனித்து இயங்குவதால் ஏற்படும் விளைவு இது.
2) முழுநிகழ்வையும் முன்னரே சரிபார்த்து, மேற்பார்வை செய்யும் பொது அமைப்பாக ‘நெடியகாடு மோர் மட வரவேற்புக் குழு’ இடம்பெறுவதே மிகவும் பொருத்தம். சிக்கல் என்றால் ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தாசபையே இந்த விடயத்தைப் பொறுப்பேற்க வேண்டும்.
3) விழாவைப் பார்க்கவரும் மக்கள் கூட்டத்தைக் கொள்ளக்கூடிய வகையில் வீதிகள் அகலமாக இல்லை. வீதி அகலப்படுத்தும் வரை (அதன் பின்னரும் கூட) மாற்று வழிகள் அடையாளப்படுத்தப்படவேண்டும்.
உதாரணமாக சந்தியிலிருந்து மதவடி வரை 'அளக்கடவை வீதி', வாடி ஒழுங்கையிலிருந்து ஊரிக்காடுவரை 'ஆதிகோவில் கடற்கரை வீதி'.
4) குறித்த மாற்று வழிகளுக்கு திசைகள், விபரங்கள் போன்றன காட்டப்பட்டு மின் விளக்குகளுகளும் இடப்படவேண்டும். விரும்பினால் இந்த இடம்களிலும் பல சிறிய விடயங்களை காட்சிப் படுத்தலாம்.
5) விபத்துக்குள்ளான ஒருவரை அல்லது திடீர் நோய்வாய்ப்படும் ஒருவரை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் விழா ஏற்பாடுகள் இடம்பெறவேண்டும்.
இந்த முறை விழா இடம்பெற்றவேளை கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செய்து கொண்டிருந்த திரு.விமலதாஸ் அவர்கள் திடீர் சுகவீனம் அடைந்ததும், இவரை வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதில் இருந்த தடங்கல்களும் இதற்கு சிறந்த உதாரணம்.
6) ஏராளமான போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்த போதும், சந்நிதி கோவில் திருவிழாக் காலங்களில் இடம்பெறுவது போல் சாரணர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
7) முதலுதவியாளர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
8) விழாவில் எண்ணிலடங்காத மின்சாரக் கம்பிகள். அனைத்தும் மின்சாரத்தைக் கொண்டுசெல்பவை, தற்காலிகமாக அமைக்கப்டுபவை, இவை மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்படவதுடன் இவைகுறித்த பாதுகாப்பு அடையாளங்கள் இடப்படவேண்டும்.
9) விழா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே ஏராளமான ஐஸ்கிறீம், உணவுப்பொருட்கள் சார்ந்த குப்பைகள் ஆங்காங்கே வீதிகளில் சேர்ந்து கொண்டிருந்தன. தேவையானளவு குப்பை பெட்டிகள் வைத்தல் அவசியம்.
10) அவசரத் தொலைபேசி இலக்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு அவசர உதவிகள் செய்யக்கூடிய வகையில் ஒழுங்குகள் செய்யப்படவேண்டும்.
11) மாலை தொடக்கம் அதிகாலை வரை நிகழ்வு இடம்பெறுகின்றது. தூர இடங்களில் இருந்து வருபவர்கள் சில மணி நேரம் முன்பே வீட்டை விட்டு புறப்படுகிறார்கள். நிகழ்வின் நீளம் 10 மணி. கழிப்பிட வசதி மிக அவசியம். (எப்படித்தான் மக்கள் சமாளித்தார்கள் என்று புரியவில்லை!)
இது போன்ற நிகழ்வுகளுக்கு தற்பொழுது 'Potable toilets உண்டு.
12) வயோதிபர்களுக்கு இளைப்பாறுவதற்கு ஒரு இடம் ஒதுக்கப்டவேண்டும். குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு சில இடங்கள் ஒதுக்கப்டவேண்டும். இவற்றுக்கு என தனியான கூடங்கள் அமைக்கபடவேண்டும் என்பது அவசியமல்ல. வீதி ஓரத்தில் உள்ள சில வீடுகளே ஒதுக்கப்படலாம்.
ஆரம்பத்தில் இவை சிலருக்கு பரிகாசத்தை ஏற்படுத்தினாலும், இவ்வாறு செய்யப்பட்டால், காலப்போக்கில் இந்திரவிழாவினதும் வல்வை மக்கள் பற்றிய நல் அபிப்பிராயமும் சில மடங்கு உயரும் என்பது திண்ணம்.
13) முக்கிய இடங்களில் 'Information centre' கள் அமைக்கப்படவேண்டும். வந்தவர்களில் பலருக்கு எந்தப்பக்கம் போவது – வருவது என்பது தெளிவாகத் தெரிந்ததிருக்கவில்லை.
14) கடந்த சிலநாட்கள் முன்பு காரில் பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன். கார் வியாபாரிமூலைச் சந்தியை அண்மித்தபோது, ஒருவரின் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தேன். திடீர் என இறுதி ஊர்வலத்தில் நின்றவர்களில் பலர் பிரேதத்தை விட்டுவிட்டு யாவாரிமூலைவீதி நோக்கி ஓடினார்கள்.
மெதுவாக காரைச் செலுத்தி வியாபாரி மூலைச்சந்தியில் பார்த்தபொழுது, கடை ஒன்றின் முற்பக்கத்தில் வேலியினால் போடப்பட்டிருந்த பட்டி ஒன்று எரிந்துகொண்டிருந்தது. காரணம் இறுதி ஊர்வலத்தில் எறியப்பட்ட வெடி, அதுவும் சாதாரண வெடிதான்.
இந்திரவிழாவின் போது வாணவேடிக்கைகளில் சில கட்டுப்பாடுகள் அவசியம் வேண்டும் – அதாவது வெடிக்கப்படும் இடம் மற்றும் கால நேரம். கெற்பக் கலக்கியை முதற் தடவையாக திடீரென கேட்பவர்கள் உண்மையிலேயே அதிர்ந்து போய் விடுவார்கள். இருதயப் பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
15) விழா பற்றிய முழுவிபரங்கள் ஊர் வரைபடத்துடன் அச்சடிக்கப்பட்டு வெளியிலிருந்துவரும் பொதுமக்களுக்கு, முக்கிய நுழைவாயில்களான மருதடி, பொலிகண்டி மற்றும் ஊரிக்காட்டுப் பகுதியில் வைத்து வழங்கப்படவேண்டும்.
16) அத்துடன் முக்கிய இடங்களில் – பாதைகள் பற்றிய தகவல்கள் மிகத்தெளிவாகத் தெரியும்வண்ணம் அமைக்கப்படவேண்டும். இவற்றுடன் குறித்த பகுதிக்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் மற்றும் தாகசாந்தி நிலையங்கள், கழிப்பிட வசதி பற்றிய விபரங்கள் போன்றனவும் உள்ளடக்கப்படவேண்டும்.
17) இதுவரை நடைபெற்ற எந்தவொரு இந்திரவிழாவிலும், விழாவைப்பார்க்க வந்த மக்கள் எண்ணிக்கை என்பது கணக்கிடப்படவில்லை. கணக்கெடுப்பு என்பது முக்கியமானதொன்று. விமானப் பணிப்பெண்கள் உபயோகிக்கும் கவுன்ட்டர்களைப் போன்றதொன்றைப் பாவித்து, முக்கிய ஐந்து இடங்களான ஊரிக்காடு, ஆலடி ஒழுங்கை, மருதடி, சி.கு ஒழுங்கை மற்றும் ஊரணி ஆகிய பகுதிகளில் வைத்து கணக்கு எடுப்பு செய்யப்படவேண்டும்
வந்தவர்கள் இந்திரவிழாவை பார்த்த திருப்தியில் சென்றிருந்தாலும் கூட, வந்தவர்களில் பலர் நிகழ்வை சரியாகப் பார்க்க வில்லை என்பதே உண்மை.
உதாரணமாக நெடியகாட்டில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தைப் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக வீதியின் கடற்கரைப் பக்கமாகச் சென்றவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். காரணம் குறித்த இடத்தில் நின்றவர்கள் அந்த இடத்தில் இருந்து எப்படி சனக் கூட்டத்தின் ஊடாக விலகுவதிலேயே தமது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். பகலில் சிவலிங்கத்தைப் பார்த்த நான் இரவில் மின் அலங்காரங்களுடன் பார்க்க விரும்பியிருந்தேன். ஆனால் இரவில் வீதியால் சென்றிருந்தும் பார்க்கத் தவறி விட்டேன்.
விழாவை நடாத்தும் நமக்கு வீதிகள், நிகழ்வுகள், காட்சிப் படுத்தப்பட்ட விபரங்கள் போன்றவை மிகவும் நன்றாகத் தெரிந்த விடயங்கள். ஆனால் வெளியிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இல்லை.
முதன் முதலாக நீங்கள் ஒருவர் கொழும்பு விமான நிலையம் சென்ற நாளை நினைத்துப் பாருங்கள். தகவல் தருபவர்களும், சமிக்கைகளும் இல்லாது இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.
இந்திரவிழா பற்றிய நிகழ்வுகளுடன் மட்டும் நின்று விடாது செய்யப்பட்டுள்ள ஒழுங்குகள் பற்றிய விபரமும் முன்னதாகவே பத்திரிகைகள், சமூக வலைத் தளங்கள் ஊடாக வருபவர்களுக்கு அளிக்கப்படவேண்டும்.
நான் மேலே முன்வைத்த கருத்துக்கள் போல், பலரிடம் இருந்து பல கருத்துக்கள் வர வாய்ப்புக்கள் அதிகம். அனைத்தும் அறியப்பட்டு அடுத்தமுறை முடிந்தவரை நிவர்த்தி செய்யப்படுமானால் இந்திரவிழா மேலும் சிறப்புறும் என்பதில் ஐயமில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: May 12, 2018 at 05:52
மிகசரியான பதிவு ;விழா நடத்துவது மட்டுமல்ல வெளியில் இருந்து வரும் மக்களின் பாதுக்கப்பு மிக முக்கியம் கலாச்சார விழுமியங்கள் பாதுக்கக்கபடவேண்டும் கழகங்களை முன்னிறுத்தாமல் ஊரின் பெருமையை முன்னிருத்தபடவேண்டும் .மிக பாதுகாப்பானதும் ஒழுங்கமைக்கப்பட்ட நெறிப்படுத்தலில் விழா சிறப்புடன் நடைபெறவேண்டும் அதுவே ஊருக்கும் விழாவுக்கும் பெருமை .
sithi (Germany)
Posted Date: May 12, 2018 at 03:26
மிகச் சரியான கருத்து
Nandan (U.A.E)
Posted Date: May 12, 2018 at 00:15
Well written comments. Need to be considered on next time.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.