தமிழர் பிரதேசங்களைப் பொறுத்தவரை வல்வெட்டித்துறையில் மட்டும் இன்றும் இணைபிரியாத ஒரு அங்கமாக விளங்கிவரும் விடயம் ‘கப்பல் மாப்பிள்ளை’. வேறு ஓரிரு ஊர்களில் அங்கொன்று இங்கொன்றாக இது பேசப்பட்டாலும், வல்வெட்டித்துறையில் பேசப்படுவதுபோல் ‘கப்பல் மாப்பிள்ளை’ மற்ற இடங்களில் பேசப்படுபவதற்கான சாத்தியங்கள் குறைவு.
வல்வெட்டித்துறையின் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து கப்பல் மாப்பிள்ளை என்பது பிரபல்யம். இன்ன.... தண்டையலின் மகள், இன்ன தண்டையலின் பேரன், அந்த தண்டயலின் மருமகன்..... என இன்றும் கூறுமளவுக்கு அந்தக் காலத்திலேயே தண்டையல்களை மாப்பிள்ளையாகப் பெற கிராக்கி இருந்துள்ளது.
‘கப்பலால் வந்துள்ளான்’. இதுவும் ஊரில் அன்றிலிருந்து இன்றுவரை அடிபடும் விடயம்.
செய்தி காதுக்கு எட்டவில்லை என்றால் (கடந்த காலத்தில்) – யாரவாது கிப்பி வளர்த்து, சற்றுப் பெருத்து நிறத்து, புதுச்சாரம் சேட்டுடன் வந்துநின்றால் – அவர் கப்பலில் இருந்து வந்துள்ளார் என்று அர்த்தம். மேலும் உறுதிப்படுத்தவேண்டும் என்றால், அவர் கோயிலுக்கு வரும்பொழுது கழுத்தில் ஒரு பெரிய மொத்தச் சங்கிலி தொங்கும், துணைக்குப் பெரிய ஒரு மோதிரம். அங்கு அன்று அவர்தான் தாளில் அச்சடிக்கப்படாத சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் எல்லாம். கப்பலால் இறங்கியவுடன் கப்பல்காரர் கோயில்களுக்கு குறிப்பாக அம்மன் கோயிலுக்கு கப்பலால் வந்தவுடன் வருகை தருவது சிறப்பான விடயம்.
அடுத்தது என்ன - பெண் பார்க்கும் படலம், இலகுவாக வரண் அமைந்துவிடும். ‘ஹை கம்பிற்றிசனும்’ இருக்கும்.
படிக்கிறகாலத்தில் விரும்பிய அக்காமார்களுக்குப் பக்கத்தில்போகப் பயந்த பலர், ஒருமுறை கப்பலுக்கு போய்விட்டுவந்து, அதே (ஒரு தலையாக) விரும்பிய அக்காமார்களை கரம்பிடித்த கதைகளும் நிறைய உண்டு. அதைவிட 16, 17 வயதில் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை படிக்க விடாமல், பார்த்துப் பார்த்து பிடித்தவையளும் நிறையப் பேர் உண்டு. (பல கப்பல்களில் நான் வேலை பார்த்திருந்தாலும், என்னுடைய போதாத காலம், நாட்டுப் பிரச்சனை எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அப்பொழுது கொடுத்திருக்கவில்லை)
அட பணம், (திரு)மணம் இலகுவாக அமைகின்றதே என்று, ஊரில் பலரும் படிப்பைவிட்டுவிட்டு கப்பலுக்கு போவதும் தொடர்ந்தது.
70 களில் வெளி வந்த படம் அரங்கேற்றம். கதாநாயகி ஒரு சில வருடங்கள் வேறு ஒரு ஊரில் பணிபுரிந்து திரும்புகின்றாள். ஓரிரு வருடங்கள் குடும்பத்தாரின் கண்களில் படாமல் வேறு இடங்களுக்குச்சென்று திரும்பிவரும் ஆண்மகனை எதுவித சந்தேகங்களுமின்றி வரவேற்கும் குடும்பமும் சமூகமும், இதே நிலையில் ஒரு பெண்மகள் திரும்பி வந்தாள் ஏற்பதில்லை என்ற ஒரு சமூகக் கருத்தை ஒரு கட்டத்தில் படம் குறிப்பிடுகின்றது.
கப்பலில் பணிபுரிகின்றவர்களுக்கு மதுவும் மாதுவும் தாராளம் என்ற ஒரு கதை உண்டு. உண்மை இல்லாமல் இல்லை. முக்கியமாக அந்தக் காலத்தில். அதற்காக சகல மாலுமிகளும் இதற்குள் அடக்கம் என்றும் கூறவரவில்லை, நான் உட்பட. கால ஓட்டம் பல விடயங்களை மாற்றிப்போட்டுவிட்டது போல், இவையும் (மதுவும் மாதுவும்) இன்றைய வேகமான நவீன கப்பல் வாழ்வில் முன்னர்போல் இல்லை. இன்று கப்பல்கள் எவ்வளவோ மேல் என்றளவுக்கு நிலைமை தலைகீழ் என்று பல கப்பல் காரர்கள் அடிக்கடி முணுமுணுகின்றார்கள்.
கூறவர விரும்பும் விடயம் இதுதான். மேலே குறிப்பிட்ட மது, மாது விடயத்தை சற்றுக்கூட ஆராயமுற்படாமல் ‘கப்பல் மாப்பிள்ளை’ க்கு போட்டிபோடும் அளவிற்கு ‘கப்பல் மாப்பிள்ளை’ சமூகத்தில் ஒரு மேல்நிலையில் அந்தக் காலத்தில் இருந்தது ஆச்சரியம்தரும் ஒரு விடயம்தான்.
90 களில் ஆரம்பித்த ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’, கப்பல் மாப்பிள்ளை என்று இருந்த டிரெண்டை அடியோடு மாற்றிவிட்டது. இப்பொழுது வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதும் அருகி ‘வெளிநாட்டு பெண்பிள்ளை’ என்ற புதிய டிரெண்ட். காலத்திற்கேற்ப பல டிரெண்ட்கள் மாறுவதுபோல் இதுவும் மாறுவதும் இயல்பானதொன்றே.
கப்பல் மாப்பிள்ளை என்று கூறுமளவுக்கு ஏன் இந்த விடயம் சமூகத்தில் முக்கிய ஒரு இடத்தில் இருந்துள்ளது?
பணம்தான் பிரதான காரணம் என எண்ணுகின்றேன். மற்றையது மாப்பிள்ளையானவர் தொழில் ஒன்றை கொண்டவராகவுள்ளார். நாட்டைவிட்டு வெளியேபோய் வந்தவர் என்ற அந்தஸ்த்து போன்றவை ஏனைய சில காரணங்கள்.
நான் ஊரில் படித்துக்கொண்டிருந்தபோது உறவினர் ஒருவர் ‘செகண்ட் ஒபிசர்’ ஆக இருந்தார். அப்பொழுது அவர் பெற்ற சம்பளம் 65,000/- ரூபா என்றார்கள். இரண்டு, மூன்று தடவைகள் நானே வாயைப்பிளந்தேன். பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் சும்மாவா இருப்பார்கள். போட்டி. கடும் போட்டி. இவை சீதனத்தையும் உச்சத்தில் கொண்டுபோய்விட்டது.
90 கள் வரை வல்வையில், யாழின் சாபக்கேடுகளில் ஒன்றாக விளங்கும் சீதனத்தை உயர்த்திய பெருமையில் கப்பல் மாப்பிள்ளைகளின் பங்கு மிக அதிகம் என்பதில் தவறில்லை.
படித்தவர்களுக்கு மட்டுமே கப்பலில் வேலை, அதுவும் ஆங்கிலம் அவசியம், நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்த கப்பல்கள், பாரிய கப்பல்கள், சிறந்தபயிற்சிகள்....... என தற்பொழுது கப்பலில் வேலைசெய்யும் இளைஞர்களின் தரம் உயர்ந்துள்ள இக்காலத்தில், டிரெண்ட் மாறி ‘கப்பல் மாப்பிள்ளை’ என்பது ஓட்டத்தில் சற்றுப்பின்னுக்கு ஓடி வந்து கொண்டிருந்தாலும், வல்வையைப் பொறுத்தவரை ‘கப்பல் மாப்பிள்ளை’ என்பவர் ஓட்டத்தில் தொடர்ந்து களைக்காமல் ஓடிக்கொண்டேதான் இருப்பார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.