ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
வருடத்தில் அரைவாசி காலத்துக்கு மேல் கடலில் தான் வாழ்க்கை. தகவல் தொழில் நுட்பம், சோசியல் மீடியா போன்றவை வர்க்கத்திலும் கனத்திலும் முன்னேறிவிட்டது. பெறாமகள் ஒருத்தி ஒன்றரை வயதில் சாம்சங் போனை ஒரு விரலால் தட்டி, தனக்கு விருப்பமான காணொளி ஒன்றை எடுத்தது எங்களுக்கு காண்பித்தது ஆச்சரியமான விடயம் ஒன்றல்ல என்று இன்று கூறுமளவுக்கு காலமும் தற்கால சந்ததியும் புதுயுகத்திற்குச் சென்றுவிட்டன.
கால ஓட்டத்துடன் நாங்களும் ஓடவேண்டும். அல்லது அது எங்களை பின்தள்ளிவிடும்.
கடலில் எமது நிறுவன கப்பல்களில் இணையதள வசதிகள் தற்பொழுது இல்லை. ஆனாலும் விரைவில் ஏற்படுத்தப்படலாம் போல் தெரிகின்றது. ஆகவே கடலில் பொழுதைக் கழிப்பதற்காகவும், தற்போதைய சோசியல் மீடியாவுடன் ஓரளவு ஒத்துக்போகக்கூடிய வகையிலும், பல மென்பொருட்களை விடுமுறையில் நிற்கும் காலங்களில் தரவிறக்கம் செய்வது வழக்கம். குறிப்பாக குறித்த மென்பொருட்கள் கண்டிப்பாக ‘Off line’ ஆக இருக்க வேண்டும் என்பதில் நான் மிகக்கவனம்.
கடந்த விடுமுறையில் நின்றபொழுது, அவ்வாறு Tablet க்கான சில மென்பொருட்களை தரவிறக்கம் செய்தேன். அதில் இரண்டு, இலங்கை வரைபடங்கள் (Srilanka Offline Map). தரவிறக்கம் செய்தவுடன் முதல் தேடிய இடம் ஊர்தான்.
‘சூம்’ செய்தபோது ‘வல்வெட்டித்துறை’ – அதனை மேலும் ‘சூம்’ செய்ய வல்வெட்டித்துறையில் முதலில் காட்டப்பட்டுள்ளது ‘ரேவடி பார்க்’ (Revady Park) தான். மேலும் ‘சூம்’ செய்யும் பொழுதுதான் ஏனைய முக்கிய இடங்கள் படிப்படியாக தென்படுகின்றன. இது ஒன்றும் ரகசியமான விடயம் அல்ல. நீங்களும் இதனை அறிந்து கொள்ளலாம்.
விசேடம் என்னவென்றால் அந்த வரைபடங்களில் காட்டப்பட்டுள்ளவற்றில் ‘ரேவடிப் பூங்கா’ தோற்றம்பெற்று வெறும் நான்கு வருடங்கள் தான். கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதிதான் நான்கு வருட பூர்த்தியையும் கொண்டாடினார்கள். இன்று ஊரில் பலர் ஒன்றுகூடும் இடமாக மாறிவிட்டது இந்த ரேவடிக்கடற்கரை.
எவ்வாறு இதற்கு இந்தளவு முக்கியத்துவம் கிடைத்துள்ளது?
2002 சமதான உடன்படிக்கையின் பின்னர், 2003 ஆம் ஆண்டு இதே கடற்கரைப் பகுதியில் ஒரு விளையாட்டுப்போட்டியை நடாத்த எண்ணினோம். அப்பொழுது முழு ரேவடிப்பகுதியையும் தன்வசப்படுத்தி இராணுவம் குடிகொண்டிருந்து. முற்றுமுழுதாக கடற்கரை உட்பட அனைத்துப் பகுதிகளும் அடைக்கப்பட்டிருந்த நேரம்.
அப்பொழுது இங்கு விளையாட்டுப் போட்டியை நடாத்த எண்ணி, எனது தந்தையாரும் இதர சில ரேவடி கழக நண்பர்களும் மீனாட்சி கடற்கரைப் பக்கமாக அனுமதிகேட்க இராணுவத்தை அணுகினார்கள். ஒரு குறித்த பகுதிக்கு மேல் கிட்டச்செல்லமுடியாது. தலைமை இராணுவ அதிகாரியின் இடம் இருந்ததுதான் காரணம்.
ஆனாலும் பொதுவிடயம் – விளையாட்டுப் போட்டி என்று கதைக்கச் சென்ற காரணத்தால் சற்றுக்கிட்டே, தற்பொழுது சிறுவர் பூங்கா இருக்கும் பகுதிவரை செல்ல அனுமதித்தார்கள். தந்தையார் என்னைக் கதைப்பதற்கு அனுமதிக்கவில்லை. ஆகவே நான் பின்னால் நின்றேன்.
அப்பொழுது பல வருடங்கள் கழித்து கடற்கரையைப் பார்த்தேன். கடற்கரை என்ற ஒன்றே தெரியவில்லை. முட்கம்பிகள், காப்பரண்கள், பதர்கள், செடி, கொடிகள் என ஒரு சதுர அடி கடற்கரை கூட கண்களுக்குத் தெரியவில்லை. கடற்கரை அளவும் மிகவும் சுருங்கியிருந்தது.
பரவாயில்லை. மேலே சுங்கத் துறையின் நிலப்பகுதியில் நடாத்தலாம்தானே என்று நாங்களும் முயற்சியைக் கைவிடவில்லை. இராணுவ அதிகாரி வந்தார், என்னவென்று கேட்டார். தந்தையார் ‘எங்கள் கடற்கரையில் எங்கள் கழக விளையாட்டுப் போட்டியை நடாத்த விரும்புகின்றோம்’ என்றார்.
‘எது உங்கள் கடற்கரை. இது அரச காணி’ என்றார் இராணுவ அதிகாரி. அன்றுதான் ‘State land’ பற்றி எனக்கு உறைத்தது. முதலில் விடமாட்டோம்’ என்று கூறி, பின்னர் ‘சரி நடாத்துங்கள், நாங்கள் சுற்றிவரநிற்போம்’ என்றார். முயற்சியைக் கைவிட்டுவிட்டு, 2004 இல் தீருவில் மைதானத்தில் போட்டியை நடாத்தினோம். ரேவடி விளையாட்டுக் கழக நிகழ்வு ஒன்று அவ்வாறு ரேவடிக்கு வெளியே இடம்பெற்றது என்பது அதுவே முதலும் கடைசி முறையாகவும் இருக்கக்கூடும்.
மீண்டும் 2009 இல் யுத்தம் முடிந்த பின்னர், கழகப் போட்டியை நடாத்த மீண்டும் எங்களில் சிலர் பிரயத்தனம் செய்தோம். ரேவடிக் கடற்கையில் தான் செய்வது அல்லது இல்லை என்ற முடிவில் உறுதியாக நின்றோம்.
மீண்டும் இராணுவத்தை அணுகினோம். கதைக்க அழைத்தார்கள். இன்று எல்லோரும் சர்வசாதரணமாக சென்றுவரும் இந்தக் ரேவடிக் கடற்கரையின் பிரதான வாயில்களில் ஒன்றான கஸ்டம் ஒழுங்கையில் பாரிய கதவு போடப்பட்டு ஒழுங்கை மூடப்பட்டிருந்தது. பல கதைகளை அந்த நேரம் இந்தப்பகுதி கொண்டிருந்தது.
கஷ்டம் லேன் வாசலை யொட்டி அமைந்துள்ள கிட்டங்கி வரை எங்கள் நால்வரை அனுமதித்தார்கள் (நான், ஞானக்குட்டி அண்ணா, கலைநேசன், கர்ணன்). பின்னர் உள்ளே – இராணுவ தலைமை அதிகாரி தங்கியிருந்த வீட்டுக்கு என்னை மாத்திரம் வரச்சொன்னார்கள். பொது விடயம் நால்வரும் செல்லலவேண்டும் என்று கூற, ஒருவாறு நால்வரையும் அனுமதித்தார்கள்.
ஒவ்வொரு வீடாகப் பார்த்துக்கொண்டு கொமாண்டர் இருந்த பிரதான இடம் சென்றோம். (திரு.செல்வேந்திரா அவர்கள் வீடு).
விடயத்தைக்கூறினோம். ஒருவாறு போட்டியை நடாத்த அனுமதித்தார்கள். முதலில் ‘கடற்கரையில் மட்டும்’ என்றார்கள்.
கடற்கரையை திருத்த வெளிக்கிட்டோம் என்று கூறுவதை விட ‘திருத்தினார்கள் கழக நண்பர்கள்’ என்று கூறுவதே சரி. அன்று ஊரில் மிகக் குறைவான ரேவடி கழக உறுப்பினர்களே இருந்தார்கள். பியர் போத்தல்கள், முட்கம்பிகள், தகரங்கள், சுனாமிக் கழிவுகள், கற்கள் என......தோண்ட தோண்ட குப்பைகள் தான்.
துப்பரவுபடுத்தி கழிவுகளை அகற்றி கடற்கரையை மீண்டும் வெளிக்கொணர்ந்தார்கள். நான் பார்த்த சிரமதானப் பணிகளில் மிகவும் கடுமையானதொன்று இது. வெறும் எழுத்தினால் கூறக்கூடிய விடயம் அல்ல. அன்று கழக நண்பர்கள் சிந்திய வியர்வைதான் இன்று பிரபல்யமடைந்துள்ள ரேவடிப் பூங்காவிற்கான முதற்படி.
கழக நண்பர்களின் கடும் உழைப்பைப் பார்த்துவிட்டு, கொமாண்டர் சுங்க நிலத்தையும் போட்டிக்கு பாவிப்பதற்கு அனுமதித்தார். அப்பொழுது சுங்கநிலத்தின் நடுப்பகுதியில் பெரிய காப்பரண் ஒன்று கடலை நோக்கி அமைக்கப்பட்டிருந்தது. நந்திபோல் இருந்ததால் அதை அகற்றவேண்டும் என்று நண்பர்கள் நின்றார்கள். மீண்டும் சென்று கேட்டேன். ‘புலிகள் வந்து சுட்டால் நாம் என்ன செய்வது’ என்று கூறி, ‘ஒ கே அகற்றலாம், ஆனால் போட்டி முடிந்த பின்னர் மீண்டும் நீங்கள்தான் கட்டித்தரவேண்டும்’ என்றார்.
உடைத்து அகற்றினோம், சுற்றியிருந்த சில முட்கம்பிகளையும் அகற்றினோம். காப்பரண் பற்றி மீண்டும் அவர்கள் கதைக்கவில்லை, நாங்களும் கட்டிக் கொடுக்க முயற்சிக்கவில்லை.
யுத்தத்தின் பின்னர் மிகக்குறைந்த பணச்செலவில், மிகப் பெரிய உழைப்பில் சிறந்ததொரு விளையாட்டுப் போட்டியை நடாத்தி, பலருக்கு ரேவடியின் இருப்பை பல ஆண்டுகள் பின்னர் காட்டினோம்.
போட்டி முடிந்த பின்னர் கொமாண்டர் ஒருமுறை கதைக்கும்பொழுது, ‘உங்களுக்கு இவ்வளவு ஆதரவு உண்டு என்று தான் எதிர்பார்க்கவில்லை’ என்றார். மேலும் ‘தாங்கள் ஒரு திணைக்களத்தையும் சாராதவர்கள், ஆனாலும் அரசினூடாக ஏதும் உதவி தேவை என்றால் தன்னால் முடிந்த உதவி செய்வதாக’ கூறினார். ஆனாலும் நாங்கள் மீண்டும் அவரிடம் செல்லவில்லை, தேவையிருக்கவில்லை.
அடுத்த வருடம் இராணுவமும் வெளியேறியது. கடற்கரையை மேலும் சிறந்ததாக்க வேண்டும் எல்லோரும் ஒருமிக்க, நண்பன் ஒருவன் ‘அணையைக் கட்டுவோம்’ என்று கூற – அணையை முழு வீச்சில் கட்டி முடித்தார்கள்.
இன்று நகரசபை கிராமசபைகளின் பல வேலைத்திட்டங்களுக்கு செலவிடப்படும் பணத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றேன். நகரசபையினூடாக இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தால் மில்லியன் கணக்கில் தான் சென்றிருக்கும். சில இலட்சங்கள் தான் செலவு. ஆனால் உழைப்பு பெரிது, மிகப் பெரிது. குறுகிய காலத்தில், இது போன்று முன்னர் வல்வையில் இல்லாத ஒரு கட்டுமானத்தை தமது கடின உழைப்பிலும், சிறந்த சிந்தைனையாலும் கட்டிமுடித்தார்கள்.
வரைபடம் இல்லை, டெண்டர்கள் இல்லை, பொறியிலாளர்கள் இல்லை, கட்டுமான விற்பனர்கள் இல்லை, கடல் சார் அதிகாரிகள் இல்லை, நில அளவையாளர்கள் இல்லை... இல்லை இல்லை என எதுவுமின்றி யாழில் இதுபோன்று அதுவரை இல்லாத ஒரு கட்டுமானத்தை கடற்கரையில் கட்டி, இன்றைய பெயரின் புகழுக்கு உருக்கொடுத்தார்கள்.
தொடர்ந்து சிறுவர் பூங்கா மற்றும் சுற்றிவர உள்ள பகுதிகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கடற்கரை, திறப்புவிழாவைத் தொடர்ந்து அனைவரின் கண்களையும் ஈர்த்து இன்று நான் குறிப்பிட்டுக்கூறும் வரைபடத்தில் முதலாவது இடம் என்று கூறுமளவிற்கு உயர்ந்து விட்டது.
ரேவடி அணைக்கட்டு திறப்பு விழாவில்
இந்த விடயத்தில் குறிப்பாக அணைக் கட்டுமானத்தில் சிலரின் பெயரைக் குறிப்பிட விரும்பியபோதும், ஒரு பொது விடயம் என்பதால் அதைத் தவிர்ப்பதே சிறந்துது எனத் தவிர்க்கின்றேன். ஆனாலும் ஒருவரின் பெயரைக் கண்டிப்பாக குறிப்பிட்டேயாக வேண்டும்.
அவர் திரு.ஞானேந்திரராசா (ஞானக்குட்டி) அவர்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல பலரின் கடும் உழைப்பு இங்கு இருந்தபோதும், இவர் ஒரு கட்டட விற்பனர் ஒரு பொறியிலாளர் தரத்தில் நின்று மற்றவர்களைவிட ஒரு படி உயர்ந்துநின்றே செயற்பட்டார்.
இவ்வாறு கழக நண்பர்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான், இன்று வல்வை வரைபடத்தில் முதலாவதாக தோன்றும் ரேவடிப்பூங்கா.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.