2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், ஊரில் நின்றபொழுது, ஒரு நாள் மாலை நாங்கள் பள்ளிப் படிப்பு படித்த காலங்களில் வழமையாக அமரும் நெடியகாட்டுக் குளத்து ஒட்டில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தோம். நண்பர்கள் ஏழு, எட்டுப் பேர். ஒருவர் தற்பொழுது இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர், எங்களுக்கு அடுத்த வகுப்பைச் சேர்ந்த - 91 ஆம் ஆண்டு Batch.
பல கதைகளை அளந்து கொண்டிருந்த நேரம். குறித்த நண்பர் என்னிடம் ‘மச்சான் ஒரு கப்பலின் விலை எவ்வளவு” என்றான். ‘நீ என்ன கப்பலா வாங்கப் போகின்றாய்’ என்று கதையை அந்தளவில் முடிக்க விரும்பினேன். மேலும் அந்த நண்பன் 'என்ன கப்பலா வாங்கப் போகின்றான்' என்ற எண்ணத்தில் ‘சும்மா இரடாப்பா, வேறு கதையைக் கதை’ என்றேன்.
ஏற்கனவே கடலில் நீண்ட காலங்களை கழித்துக் கொண்டிருப்பதால், கப்பல் கதைகளை நான் தரையில் நிற்கும் பொழுது பொதுவாக அதிகம் கதைக்க விரும்புவதில்லை.
முன்னர் தமிழ் படங்களிலே மிகப் பணக்காரன் என்ற பதம் வரும்போது ‘நீ என்ன பெரிய கப்பல் கம்பனியா வைத்திருகின்றாய்’ என்பார்கள். அந்தளவுக்கு கப்பல் விலையான ஒரு பொருள். அதைவிட விலை கப்பலை பராமரிப்பது என்பது.
நண்பனும் விடுவதாக இல்லை, ‘கப்பலின் விலையைச் சொல்’ என அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.
நான் பணி புரிந்த கப்பல்களில் மிகச் சிறிய கப்பலின் தோராயமான விலையைக் கூறினேன். (சில மில்லியன் அமெரிக்க டொலர்கள்)
‘தூ இது ஒரு பெரிய காசா? எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இந்தக் காசு ஒரு பிரச்சனையே இல்லை’ என்றான். அத்துடன் ‘என் நண்பர்கள் கப்பல் வாங்கப் போகின்றார்கள் என்றும் சர்வதேச ரீதியில் வர்த்தகம் செய்யப் போகின்றார்கள்’ என்றும் மேலும் தொடர்ந்தான்.
நம்பவில்லை நான்.
ஆனாலும் அப்படி ஒரு கப்பல் வாங்கும் முடிவு இருந்தால் ‘அதைச் செய்யாதீர்கள், ஏனெனில் கப்பல் வாங்கக் கூடிய வல்லமை உலகில் இன்று பலரிடம் உண்டு, ஆனால் கப்பல்களைப் பராமரிப்பது என்பது எல்லாராலும் முடியாத காரியம். இதை அதிகம் விளக்கிக் கூறினாலும் உனக்கு இலகுவாக இது விளங்கப்போவதில்லை’ என்றேன்.
மேலும் ‘கப்பல் வாங்கும் பணத்தை இங்கு ஏதும் தொழிற்பேட்டைகளுக்குச் செலவு செய்யுங்கள், கஷ்டப்பட்ட சில சனங்களாவது பயன்பெறும்’ என்றேன். கதை மிகச்சுருக்கமாக முடிந்துவிட்டது.
வல்வையைச் சேர்ந்த சின்னத்தங்கம் என்னும் பெண்மணி பல கப்பல்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். இலங்கையைப் பொறுத்தவரை வரலாற்றில் பதியத் தவறிய தமிழர்களின் விடயங்களில் இதுவும் ஒன்று. இவரை விட பல வல்வையர்களை பல கப்பல்களுக்குச் சொந்தக்காரர்களாகவும் இருந்துள்ளனர். அதாவது வல்வையர்கள் கப்பல் வாங்குவது வைத்திருப்பது என்பது ஒன்றும் புதுமையில்லைத்தான்.
வல்வையர் கப்பல் பர்வதாபத்தினி
சில மாதங்கள் கழித்து ‘புலம்பெயர் நாடு வல்வை வட்டம் ஒன்று கப்பல் ஒன்றை வாங்கியுள்ளதாகவும், ஊரில் இருந்து சில மாலுமிகளை பணிக்கு எடுக்கின்றார்கள்’ என்றும் அறிந்தேன். உங்களில் பலருக்கு தெரியாமல் போன விடயங்களில் இதுவும் ஒன்றாக இது இருக்கக் கூடும்.
வெறும் சில நாட்களே கழிந்து, குறித்த கப்பல் கிழக்காசிய நாடு ஒன்றில் மாலுமிகள் சான்றிதழ்கள் தொடர்பான பிரச்சனை உட்பட சில பிரச்சனைகளை சந்தித்தது நகரமுடியாமல் சிக்கலுக்கு உள்ளாகி, உரிமை கைமாறியது என அறிந்தேன்.
வாங்கிய கப்பலின் நிலை மற்றும் விலை தொடர்பான விபரங்களை அறிவதில் எனக்கு ஆர்வம் அப்பொழுது இருக்கவில்லை.
ஆனாலும் மிகவும் பழைய சிறிய கப்பல் ஒன்றைத்தான் இவர்கள் வாங்கியிருக்கக் கூடும், இதன் விலை சுமார் ஒன்று தொடக்கம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கலாம். கப்பல் வர்த்தகத்தில் நண்பன் கூறியது போல் இந்தக் காசு ஒரு தூசுதான்.
கப்பலை வாங்கியதிலும் மீண்டும் விற்றதிலும் கணிசமான தொகை சிதைந்திருக்கும் என்பது திண்ணம்.
கவனமாக ஆராய்ந்து கப்பலை வாங்காமால், காசின் ஒருபகுதி இங்கு எமது பகுதிக்கு வார்க்கப்பட்டிருந்தால் அதன் பெறுமதி இங்கு மிகப்மிகப் பெரிதாக இருந்திருக்கும். ஊர் நண்பர்கள் வட்டாரம் வீணாக்கிவிட்டார்கள் - என் ஆதங்கம் இதுதான்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 24, 2018 at 20:55
ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன் அதில்வரும் நன்மைகளையும் தீமைகளையும் சரியாக அறிந்து அத்தொழிலை தொடங்கவேண்டும் .அவர்களின் முயற்ச்சி பாராட்டபடவேண்டியது ஆனால் அதன் ஆழம் தெரியாமல் காலைவிடுவதேன்பது மனஉளைச்சலையும் பணவிரையத்தையுமே ஏற்படுத்தும் .
Capt.I.Thurailingam (UK)
Posted Date: June 23, 2018 at 14:14
கப்டன் ஆதவன்,
கப்பல் வாங்கி ஓட முன்னர் அதற்காய நிலமை, அறிவு, நம்பிக்கை என்பன வரவேண்டும் என்பதை மிகவும் சாமர்த்தியமாகவும் சிந்திக்கக் கூடியதாகவும் எழுதியுள்ளீர்கள்.
வல்வையில் கப்பல் வாங்கி ஓட முடியாதது என்பது அறியாமை. வாங்கி ஓடலாம் என்று வெறுமனே கதைத்துக்கொண்டு அதுபற்றி ஒன்றும் செய்யாமல் இருப்பதும் ஒரு வித அறியாமைதான்.
சாதாரண சிறிய தொழில் மையம் தொடங்குவதற்கே யாழ்ப்பாணத்திற்கு வரத் தயங்கும் தமிழ் செல்வந்தர்கள் கொழும்பில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் ஏன் வரவில்லை என்று காரணங்களை கூறமாட்டார்கள். நாங்கள் காரணங்களைக் கண்டறிந்து செயற்பட்டால் முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவார்கள்.
களுத்துறைக்கும் காலிக்கும் இடையே பல இடங்களில் வீட்டு வளவில் சிறிய இருவர் செல்லக் கூடிய பிளாஸ்ரிக் படகுகள் (குடிசைக் கைத்தொழில் போன்று) கட்டுகிறார்கள். அவற்றில ஒன்று பெரிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் படகு கட்டும் தெழில் மையமாக உருவெடுக்கக் கூடியதாக வளர்ந்துள்ளது.
எங்கள் மூதாதையர் கப்பல் வைத்திருந்ததற்குக் காரணம், அவர்களின் மூதாதையர்தான். 1930 களில் கப்பல் வியாபாரம் திளைத்து ஓங்கியதற்குக் காரணம் அதற்கு 50, 60, வருடங்களுக்கு முன்னர் (அதாவது பிந்திய 1800 கள்) சிறிது சிறிதாக கப்பல் வியாபாரம் பெருக்கியதுதான் என்பது எவருக்கும் புரியும் விடயம்.
எங்கள் ஊரில் கப்பல் ஓடவேண்டும் என்றால் ஊர் பெரிய மனிதர்கள் மனதார எண்ண வேண்டும். கவனிக்கவும் பெரிய மனிதர்கள் மனதார எண்ண வேண்டும். அவர்கள் நினைத்தால் முடியும். கப்பல் வாங்குவது என்பது சாதாரண மனிதன் முயற்சியினால் செய்யும் காரியங்களில் ஒன்றுதான் என்று எண்ணவேண்ம். மனதில திடநம்பிக்கை வரவேண்டும்.
யாரும் வந்து யாழ்ப்பாணத்தில் கப்பல் கட்டி ஓடவேண்டும் என்று எண்ணாது நாங்கள், எங்களுடைய சின்னஞ்சிறிசுகள் பிற்காலத்தில் கப்பல் ஓட வேண்டும் என்றெண்ணி வல்வைப் பெரிய மனிதர்கள் எண்ண வேண்டும், சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.