ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)
50 வருடங்கள் பூர்த்தி செய்துள்ள சில கப்பல் நிறுவனங்கள் இன்று மிகப்பெரிய கப்பல் நிறுவனங்கள் ஆக விளங்கிவருகின்றன..
இன்றிலிருந்து 50 வருடத்திலிருந்து 80 வருடங்களை எடுத்துக்கொண்டால், வல்வையில் அல்லது வல்வை வாசிகளிடம் இருந்த கப்பல்களின் எண்ணிக்கை - நான் மேலே குறிப்பிட்டுள்ள கப்பல் நிறுவனங்களிடம் இருந்ததை விடவும் அதிகமானவை. அவை வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்ட விகிதமும் அதிகம்.
பல கப்பல்களை வைத்திருந்த ‘கப்பல் பெண் அதிபர் சின்னத்தங்கம்’ என்று கூறுமளவுக்கு கப்பல் யாவாரம் இங்கு ஓகோ என்றிருந்துள்ளது.
எமது கப்பல் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து, அதன் வளர்ச்சியின் உச்சிக்காலத்துக்கு ஒரு கணித வரைபை வரைந்து, அதற்குப் பின்னால், முன்னர் இருந்த கப்பல்களின் வளர்ச்சித் தரவுகளைக் கொண்டு, கோட்டை மேலும் நீட்டிவரைந்தால் (Extrapolation) - இன்று எங்களிடம் இருக்க வேண்டிய கப்பல்களின் எண்ணிக்கை – இன்று பெரிய கப்பல் நிறுவனங்களாக விளங்கும் சில கப்பல் நிறுவனங்களிடம் உள்ளதை விட அதிகமாக இருந்திருக்க வேண்டும், அதுவும் பாரிய கப்பல்களாக.
கடல் வாணிபத்தில் கொடிகட்டிப் பறந்த பெண்மணியான சின்னத்தங்கம் அவர்களின் சமாதி
ஆனாலும் கப்பற்துறையின் வளர்ச்சி இங்கு அவ்வாறு இடம்பெறாமல் ஒரு கட்டத்தின் பின்னர் தளர்வடைந்து இறுதியில் முற்றாக மறைந்து விட்டது. பல காரணங்கள் உண்டு. இவை பற்றி பின்னர் இன்னொரு பக்கத்தில் எழுதுகின்றேன்.
பருத்தித்துறையில் துறைமுகம், மயிலிட்டியில் துறைமுகம் (பாரிய மீன்பிடித் துறை முகங்கள்) என்று பல செய்திகள் இப்பொழுது அடிபட்டு, மிகக் குறுகிய காலத்தில் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி ஆரம்பித்தும் விட்டது. பருத்தித்துறையிலும் சனங்கள் குழப்பாமல் இருந்தால் அமைவது முற்றிலும் சாத்தியம் .
அப்படி என்றால் வல்வெட்டித்துறையிலும் ஏன் துறைமுகம் அமைக்கப்படக்கூடாது என்ற கேள்வி எழலாம். அதிகம் ஊர்ப்பற்றுக் கொண்ட சிலர் ‘வல்வெட்டித்துறை ஹார்பர்’ வரைபடம் கூட வரைந்து பதிவேற்றியும் உள்ளதுடன், ஓரிருவர் முன்னர்போல் இங்கும் துறைமுகம் அமையும் என்று தமது சொந்தக் கருத்துக்களையும் தெரிவித்தும் வருகின்றனர்.
ஆனால் வல்வெட்டித்துறையில் ஒரு துறைமுகம் என்பது சாத்தியமா? என்றால் விடை நிச்சமாக ‘இல்லை’ என்பதே உண்மை.
காரணங்கள் சில
•கடலின் ஆழம். வல்வையை ஒட்டி அமைந்துள்ள கடலின் ஆழம் பல இடங்களில் மிகவும் குறைவானது (Shallow waters). இவற்றை ஆழப்படுத்த பெரியளவில் நிதி வேண்டும்.
•தற்காலங்களில் அமைக்கப்படும் சிறிய துறைமுகங்கள் கூட குறைந்தது 5, 6 சதுர கிலோமீட்டர்கள் பரப்பைக் கொண்டமைகின்றன. இது வல்வையின் மொத்தப் பரப்பளவை விட அதிகம்.
•சரி துறைமுகத்தை கட்டிவிட்டோம். எந்தப் பொருட்களை இங்கிருந்து ஏற்றப்போகின்றோம். காய்கறிகள், பழங்கள் விளையவல்ல யாழ் மண்ணிலிருந்து இங்கு தேவையானவற்றை கூட விளைக்கமுடியாமல் தம்புள்ளையில் இருந்து இறக்குவிக்கிறோம்.
•அல்லது பெரியளவில் பொருட்களை இறக்குவதை எடுத்துக்கொண்டால் பெரிய அளவில் பொருட்களை இறக்க யாரிடம் அவ்வளவு பணம் உண்டு.
•வல்வைக்கு மேற்காகும் கிழக்காகவும் ஏற்கனவே பருத்தித்துறை, மயிலிட்டி மற்றும் கான்கேசன்துறை துறைமுகங்களின் இருப்பு. தற்பொழுது இவை புணரமைக்கப்படாமால் செயலற்று இருந்தாலும் இவற்றை விரைவில் இயக்கவைக்கக் கூடிய சாதகநிலைகள் உண்டு.
•வல்வையில் துறைமுகம் அமைய அரசியல் பின்னணிகள் இடம்கொடுக்காது.
மேற்குறித்தவற்றை விட இதர பல விடயங்களும் உண்டு.
சாத்தியமானவை
வல்வையில் இரண்டு மீன்பிடி நங்கூரத்தளங்கள் (Fishing anchorages) அமைக்கப்படுவதற்கு முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஒன்று ஆதிகோவில் பகுதியில், இன்னொன்று கொத்தியால் பகுதியில். ஆய்வுகளின் அடிப்படியில் இடம்பெற்ற இந்தத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி அளிக்கவுள்ளது. இவற்றில் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவ்வாறு அமையாமல், ஒன்று தற்பொழுது பொலிகண்டியில் அமைத்து முடிக்கப்பட்டுவரும் தருவாயில் உள்ளது.
அவ்வாறு திட்டமிட்டபடி இங்கு மீன்பிடி நங்கூரத்தளங்கள் அமையப் பெறாது போனதற்கு - புதிதான ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாத மனோபாவம், தேவையற்ற சிங்களக் குழப்பங்கள், ஆர்வமின்மை போன்ற பல காரணங்கள் உண்டு.
பொலிகண்டியில் மீன்பிடி நங்கூரத்தளம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 வீதமான வேலைகள் முடிந்த போது, இங்கு ஊரில் சிலரிடம் இதுபற்றி கேட்ட பொழுது, ஒருவருக்கும் இப்படி ஒரு வேலைத் திட்டம் இடம்பெறுவது தெரிந்திருக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரை கடலியலில் மிகவும் நலிந்துள்ள யாழின் கரையோரத்தில் எங்கு இவ்வாறன வேலைத் திட்டங்கள் இடம்பெற்றாலும் சந்தோசமே. ஆனாலும் ஊரவர்கள் இழந்து விட்டார்கள் அல்லது தொடர்ந்து இழக்கப்போகின்றார்கள் என்பதுதான் வருத்தம்.
ஏனெனில் பொலிகண்டியில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி நங்கூரத்தளம் பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுவரும் ஒரு வேலைத்திட்டம்.
மீன்பிடி நங்கூர தளங்களில் (Fishing anchorages) மீன்பிடி படகுகளையும் வள்ளங்களையும் பாதுகாப்பாக நிறுத்திவைக்க முடியும். ஆனாலும் பருத்தித்துறை அல்லது மயிலிட்டி போன்ற இடங்களில் உள்ளதைப்போல் வள்ளங்களை கொண்டுவந்து பொருட்களை கரைக்கு இலகுவாக ஏற்றிஇறக்க வசதி இருக்காது.
பொலிகண்டியில் அமைக்கப்பட்டுவரும் மீன்பிடி நங்கூர தளம்
ஆகவே இங்கு துறைமுகம் என்ற பதத்தில் அமைக்கப்டக்கூடிய விடயம் என்றால் வள்ளங்கள் வந்து ஒட்டி தரித்து நிற்கக்கூடிய சுமார் 50 அடி நீளம் கொண்ட மிகவும் சிறிய இறங்குதுறை (ஜெற்றி) ஒன்றுதான்.
ஆதிகோவில், ரேவடி மற்றும் கொத்தியால் பகுதிகளில் – இவற்றுள் ஓரிடத்தில் தான் இறங்குதுறை அமைவது சாத்தியம். நாங்கள் குறித்த இந்தப் பகுதிகளில் நான்கு கிளப்புக்கள் வைத்திருக்கின்றோம் என்பதற்காக நான்கு ஜெற்றிகளைக் கட்டமுடியாது?
ஒருவேளை ஜெற்றி அமைவதற்கான சாத்தியங்கள் வந்தால் இதை எதிர்க்கவும் சிலர் கிளம்புவார்கள். எதிர்ப்பதற்கு சரியான காரணங்களைக் கூட அவர்கள் முன் வைக்கக்கூடும். பருத்தித்துறையில் இடம்பெறுவது இதற்கு சிறந்த ஒரு உதாரணம். நான் சிலரிடம் இதுபற்றி பேசியபோது பலர் வந்தால் நல்லது என்றார்கள் சிலர் கூடாது என்கின்றார்கள்.
சில வருடங்கள் முன்பு நாடளாவிய ரீதியில் இவ்வாறு மீன்பிடிப் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு இது போன்ற சில இறங்குதுறைகள் ஆராயப்பட்டு அமைக்கப்பட்டன.
இந்தத் திட்டத்துக்குள் கையைவிட்டு, இவற்றுள் ஒன்றை எங்களுக்கு பெறக்கூடிய எதுவும் எங்களிடம் இருந்திருக்கவில்லை. இப்பொழுது தானாக வந்த திட்டங்களையும் தக்கவைத்துக் கொள்ளக் கூடிய எதுவும் எம்மிடம் இருக்கவில்லை.
அதிகம் எம்மிடம் இருப்பவை அறியாமை, பழமை மட்டும் பேசுவது, முக்கியமாக தேவையற்ற இடங்களில் தமிழ்த் தேசியத்தை திணிப்பது போன்றவை மட்டும் தான்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S.Ahilan (Sri Lanka)
Posted Date: August 11, 2018 at 10:39
Meaning full comments Athavan anna.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.