எனது இருபது வயது வரை கதலி, கப்பல், இரதை, யானை, செவ்வாழை என பலவகையான வாழைப் பழங்களைச் சாப்பிட்டுள்ளேன். ஆனால் கடந்த 25 வருடங்களாக கப்பலில் ஒரே ரக வாழைப்பழத்தைத்தான் சாப்பிட்டு வருகின்றேன். அதற்கு பெயர் ‘மணிலா வாழைப்பழம்’. பிலிப்பைன்சில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால் அப்படிப் பெயர்.
Provisions (சாப்பாட்டுச் சாமான்கள்) சிங்கபூர், சீனா, துபாய், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என பல இடங்களில் வாங்கியுள்ளோம், வாங்கிவருகின்றோம். உலகின் எல்லாக் கண்டங்களிலும் எமக்குக் கிடைக்கும் வாழைப்பழம் ஒன்றுதான் – மணிலா வாழைப்பழம்.
அதுபோல் இதர பழங்களான ஒரேஞ்ச், அப்பிள், பியேர்ஸ், திராட்சை போன்ற பழங்களும் உலகின் எல்லா பாகத்திலும் நிறம், மணம், வடிவம், சுவை எல்லாம் ஒரே மாதிரியானவைதான். ஏனெனில் இவை கூடுதலாக சீனா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகளில் இருந்து உலகம் பூராவும் ஏற்றுமதியாக பரவியுள்ளன.
இவற்றைத் தான் நான் ‘யூனிவேர்சல் பழங்கள்’ என்று நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
இரண்டு சம்பவங்கள்
என்னுடன் பணி புரிந்த போலந்தைச் சேர்ந்த தலைமைப் பொறியிலாளர் ஒருவர் ஒரு முறை என்னிடம் ‘தான் ஒருமுறை கப்பல் ஏற முன்னர், தனது வீட்டு குளிர்சாதனப் பெட்டியின் மேல்தட்டில் ஒரு தேசிப்பழத்தை வைத்ததாகவும், நான்கு மாதங்களின் பின்னர் கப்பலால் இறங்கியின் ஒரு நாள் சமைக்கும்பொழுது பார்த்தபொழுது அதேபழம் அப்படியே இருந்ததாகவும் கூறினார். (மனைவி அரச ஊழியராக இருந்ததால் நம்மவர் லீவில் சமைப்பது வழக்கமாம்)
இன்னொரு கப்பலில் சிங்கப்பூரைச் சேர்ந்த கடேற் ஒருவன், சின்ன பையன் விளக்கம் குறைவு. நான் கூறும் யூனிவேர்சல் பழங்கள் நல்லவை என்றான். ஒரு ‘ஒரேஞ்ச் பழத்தை எடுத்து Cabin இல் வெளியேவை, தேவையானால் பந்துபோல் பாவித்து விளையாடு’ என்றேன்.
நான் கப்பலால் இறங்கும்வரை - சுமார் 1 ½ மாதங்கள் அந்தப்பழம் நல்ல நிலையிலேயே இருந்தது என்று சில தடவைகள் கூறி ஆச்சரியப்பட்டான்.
இவற்றை ‘Geniticcally Modified Fruits (GM Fruits) என்றழைக்கின்றார்கள். அதாவது பழங்களின் உண்மையான தன்மை மாற்றப்பட்டு நீண்ட நாட்கள் பழுதாகாமல், இனிப்புக் கூடியதாக இருக்கும் வண்ணம் செயற்கையாக விஞ்ஞான ரீதியில் மாற்றப்பட்டவை.
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளபடியால் உலகளாவிய ரீதியில் விற்பவர்களும் விரும்புகின்றார்கள், வாங்குகின்றவர்களும் விரும்புகின்றார்கள்.
கொழும்பிலும் கூடுதலாகத் தொங்குபவை இவைதான். ‘ஏன் உள்ளூர் பழங்களை விற்பதில்லை’ என்று வழமையாக வாங்குபவரிடம் ஒரு முறை கேட்டேன். ‘கொழும்பு வெயிலுக்கும், தூசிக்கும் அவற்றை சில நாட்கள் வெளியில் வைத்திருப்பதே கஷ்டம் என்றும், ‘இம்போர்ட்டற்’ பழங்களை என்றால் நீண்ட நாட்கள் வைத்து யாவாரம் செய்யமுடியும் என்றும், சனமும் இவற்றைத்தான் விரும்பி வாங்குகின்றார்கள்’ என்றார் அந்த யாவாரி.
யாழ்பாணத்திலும் யூனிவேர்சல் பழங்கள்
கடந்த 3 வருடங்கள் முன்பு யாழ் நகர் (Town) சென்றிருந்தேன். அங்கு பிரதான பஸ் நிலையத்திலும் ‘யூனிவேர்சல் பழங்கள்’ தான் தொங்கிக்கொண்டிருந்தன. இவைதான் இங்கும் அதிகமாக விற்பனையாகின்றது என்கின்றார்கள் யாவாரிகள்.
சீனாவின் உட்பகுதி மாகாணம் ஒன்றில் ஒரேஞ்ச் (பழம்) ஒன்று உற்பத்தியாகின்றது என வைத்துக் கொள்வோம். குறித்த ஒரேஞ்ச் அந்த இடத்திலிருந்து யாழ்பாணம் வர எத்தனை நாட்கள் எடுக்கின்றது எனப் பார்த்தால்,
பழத்தைப் பறித்த பின்னர் குடோனில் சில நாட்கள்
கொள்கலனில் ஏற்ற மற்றும் சுங்கவேலைகளுக்கு சில நாட்கள்
துறைமுகத்தை வந்தடைய சில நாட்கள்
துறைமுகங்களில் சில நாட்கள் அல்லது வாரங்கள்
கப்பலில் குறைந்து 10 நாட்கள்
இங்கு இறக்கப்பட்ட பின்னர் வெளியில் வர ஒரு சில நாட்கள்
கொழும்பில் சில நாட்கள்
யாழ்பாணம் கொண்டுவந்து சில்லறை யாவாரிகளுக்கு செல்ல ஓரிரு நாட்கள்
கடைகளில் தொங்குவது சில பல நாட்கள்
வீட்டுக்கு வாங்கி வந்துவீட்டு மேசையில் சில நாட்கள் (பலர் இதைச் செய்கின்றார்கள், ஏன் என்று புரியவில்லை. எங்கள் ஊர் பழங்களை மேசையில் வைப்பது இல்லை, யூனிவேர்சல் அப்பிள், ஒரேஞ்ச் தான்)
இவ்வாறாக யூனிவேர்சல் பழம் ஒன்று எமது வயிற்றுக்குள் செல்ல, அதைப்பறித்த பின்னர் 2 மாதங்கள் வரை செல்லலாம். இங்கு எமது பகுதிகளில் விளையும் ஏதாவது ஒரு பழைத்தையாவது 1 வரத்துக்கு மேல் வைத்திருக்க முடியுமா? முடியாது. காரணம் அவை ‘ஓர்கானிக்’ பழங்கள்.
யாழ்நகரில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுவரும் எமது வகுப்புத்தோழன் ஒருவன் வீட்டுக்கு பாதை திறந்தகாலத்தில் போயிருந்தேன். கப்பல், வெளிநாடுகள், கொழும்பு என சாப்பிட்ட களைப்பில், நண்பனிடம் ‘நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், யாழ்பாணத்தின் ஓர்கானிக் காய்கறிகளைச் சாப்பிடுகிறீர்கள், அவற்றைச் சாப்பிடத்தான் வந்துள்ளோம்’ என்றேன்.
அதற்கு அவர் ‘நாங்களே இங்கு அதிகம் மருந்து அடிக்கின்றார்கள் என்று தம்புள்ள காய்கறிகளை வாங்குகின்றோம், நீங்கள் இதைச் சாப்பிடப் போகின்றீர்களா’ என்றார். ‘சுரீர் என்றது’ என்று கதைகளில் வரும், அப்படி எனக்கு வந்த ஒரு சுரீர், இன்றும் உறைத்துக் கொண்டிருக்கின்றது.
நண்பனின் கருத்தை இன்னொரு நண்பரும் உறுதிப்படுத்தினார். கொம்மந்தறையில் மிளகாய், வெங்காயம், புகையிலை போன்ற பயிர்ச்செய்கை செய்பவர். ‘கமம் எப்படிப் போகின்றது’ என்று ஒருநாள் கேட்டபொழுது, ‘எங்கே வேலைக்கு ஆட்களைப் பிடிப்பதே கஷ்டம், கூலியும் விளைச்சளோடு ஒப்பிடுகையில் கூட, ஏதோ நல்ல மருந்துகள், உரங்கள் உள்ள படியால் அவற்றை அதிகமாகப் பயன்படுத்தி சமாளிக்கின்றோம்’ என்றார்.
யூனிவேர்சல் பழங்களில் உள்ள சத்துக்களின் விபரம் பற்றிய ஆய்வுகளை நான் படித்ததில்லை. கப்பலில் குறைந்தது இரண்டு தடவைகள் இந்தப் பழங்களைச் சாப்பிட்டு வருகின்றேன். கொழும்பிலும் வாங்கி சாப்பிட்டு வருகின்றேன். அந்தளவுக்கு யூனிவேர்சல் பழங்களால் இருப்பது மாதிரி என்னால் உணர முடியவில்லை.
முதலிப்பழம், வத்தோக்கம்பழம், அன்னாவுண்ணாபழம், ஈச்சம்பழம், பாலைப்பழம், காட்டு நெல்லி, விலிம்பி, சீத்தாப்பழம், இலந்தை, மாதுழை, வில்வம்பழம், விழாத்திப்பழம், நாவற்பழம், என காட்டு நிலங்களில் விளையும் அதிக விற்றமின்கள் கூடிய பல பழங்கள் தற்போது அதிகளவில் விற்கப்படுவதுமில்லை, அப்படி விற்றால் வாங்குவதிலும் நாங்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
இதுபுறம் இருக்க புதிய இனங்களில் (Genetically modified) மோகம் இங்கும் அதிகரித்து வருகின்றது. கிலோ கொய்யா, கிலோ மாங்காய், கட்டை வாழை, மட்ராஸ் முருங்கை என்பவற்றின் வரவு எமது மண்ணுக்கே உரிய பழைய இனங்களின் சமநிலையில் மெல்ல மெல்ல மாற்றத்தைக் கொண்டுவருகின்றது.
நேற்றைய யாழ் தினக்குரல் பத்த்ரிக்கையில் ஒரு செய்தி - யாழில் முந்திரிகைப் பழத்தை நஞ்சூட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை என்று. பருவம் அடையும் காலத்துக்கு முன்னர் முந்திரிகைப் பழத்தை சந்தைக்கு கொண்டுவருவதற்காக அதிகமாக இரசாயனம் பாவிக்கப்படுவதே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.இவ்வாறாக யூனிவேர்சல் பழங்களின் வரவு, புதிய இனங்கள் வரவு போன்றன, மேற்குறித்த இயற்கைப் பழங்களின் இருப்பை எமது சந்தைகளிலிருந்தும் சமூகத்திலிருந்தும் மெல்லமெல்ல அழித்துவருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.