ஆதவன் பக்கம் (21) – சுமந்திரனுக்கு வல்வையில் மாலை, 'Shame' மா?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2018 (சனிக்கிழமை)
கடந்த மாதம் வல்வை ஆவணக்காப்பகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டிய விழாவொன்று ஊரிக்காட்டில் அமைந்துள்ள வல்வை ஆவணக்காப்பக வளாகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சரவணபவன், வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ் மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் மற்றும் வல்வை நகர சபைத் தலைவர் கருணானந்தராசா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்.
இதைவிட மேற்குறித்தவர்களுடன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
விழாவை ஏற்பாடுசெய்து நடாத்தியவர்கள் வல்வையைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் நகுலசிகாமணி & உமா தம்பதியினர் – வல்வை ஆவணக்காப்பகத்தை நிறுவி அதனைத் தொடர்ந்து தாங்களாகவே பராமரித்து வருபவர்கள்.
அழைக்கப்பட்டிருந்ததால் நானும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன்.
நிகழ்வில் விருந்தினர்கள் அனைவரும் உரை நிகழ்த்தியிருந்தார்கள், சுமந்திரன் உட்பட.
தற்பொழுது எங்கள் பிரதேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் ‘மாலை’ என்பது கட்டாயம் என்றாகிவிட்டது. மாலை அணிவிக்கும் சம்பிரதாயம் என்பது காலாகாலாமாக நிலவி வருகின்றபோதும் தற்பொழுது இதன் முக்கியத்துவம் அதிகரித்துவருகின்றது.
நிகழ்வுகளில் மாலையை ஒருவருக்கு மட்டும் போட்டால் சிக்கல் என்ற நிலையில் பலருக்கும் போடவேண்டிய நிலைமை வேறு.
ரேவடியில் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாக அடிக்கல் நாட்டு வைபவத்துக்கு வந்திருந்த அமைச்சர் மங்கள சமரவீர, ஆனந்தன் குடும்பத்தினர் மற்றும் அன்று வந்திருந்த விருந்தினர் பட்டாளத்துக்கு நம்மவர்கள் சிலர் ஓடி ஓடி மாலை போட்டார்கள், திருமதிகளும் அடக்கம். மாலைவாதி ஒருவர் முன்னுக்கும், பின்னுக்கும் நின்று கொண்டு மாலை போட நின்றவர்களை லைற்றாக ஓட விட்டுக் கொண்டிருந்தார். இன்று காணொளியில் பார்த்தாலும் சங்கடப்பட வைக்கக் கூடிய நிகழ்வு இது..
முன்னைய காலங்களில் கெளரவ விருந்தினர் ஒருவர் என்றிருந்து, தற்பொழுது 2, 4, 8, 10... என்ற லெவலுக்கு கெளரவ விருந்தினர்கள் எண்ணிக்கையும் சென்று கொண்டிருக்கின்றது.
தற்பொழுது பெரும்பாலும் "மாலைகள்" வீதியால் அணிவகுப்புச் செய்த பின்னரே தான் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
ஒரு சில நாட்கள் முன்பு facebook இல் ஒரு பதிவைப் பார்த்தேன். யாழ்ப்பாணத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அதிகாரிகள் தர விருந்தினர்கள் அணிவிக்கப்பட்ட மாலையையும் கழற்றாமல், மாலைக்கு மேலால் உயிர் காக்கும் மிதவை அங்கியை (Life vest) அணிந்தபடி நீரில் பயணம் ஒன்றுக்கு ஆயுத்தமாகின்றார்கள்!!!!!
சிலருக்கு மாலை தானாகவே கிடைத்துவிடுகின்றது, சிலர் கிடைக்கவைத்து விடுகின்றார்கள். பலருக்கு வாழ்நாளில் மாலையைப் பெறும் சந்தர்ப்பம் கிடைப்பதே இல்லை. அதனால் தான் கட்டையில் போகும் கடைசி நாளின் போது, ‘இந்தா பிடி உனக்கும் மாலை’ என்று கடைசி நாளில் போட்டுவிடுகின்றார்கள்.
‘மரண வீட்டிலும் மாலைக்கு முண்டியடிக்கக் கூடாது’ என முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று வட மாகாண சபை அமர்வில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக சில உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளின் போது பதில் அளித்திருந்தார்.
"மாலை வண்ண மாலை" என்ற மாலை பற்றி அழகான பாடல் திருவருள் படத்தில் குன்னக்குடி ஆர் வைத்தியநாதனின் இசையில் சுசீலாவும் பாடியுள்ளார்.
இவ்வாறு செல்லும் மாலைக் கதையை இத்துடன் நிறுத்தி விடயத்துக்கு வருகின்றேன்.
குறித்த ஆவணக்காப்பக நிகழ்வில் விருந்தினர்கள் அனைவரும் உரை நிகழ்ந்தினார்கள். விருந்தினர்கள் உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது மாலை அணிவிக்கப்பட்டார்கள், சுமந்திரனும் உட்பட.
சலசலப்பு சுமந்திரனுக்கு மாலை அணிவித்தில்தான். இங்கு ஊரில் இந்த விடயம் சற்றேனும் அலட்டிக் கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் புலம்பெயர் தேசங்களில் உள்ள நம்மவர்கள் சிலரிடையேயும் பகுதியாக சமூக வலைத் தளங்களிலும் நிகழ்வின் பின்னர் ஓரிரு நாட்கள் இது பேசப்பட்டது.
நானும் நிகழ்வில் கலந்து கொண்டதையறிந்த சிலர், என்னிடம் ‘ஏன்’ என்று கேட்டார்கள். அதாவது ‘விழா ஏற்பாட்டாளர்கள் ஏன் சுமந்திரனை விழாவுக்கு அழைத்தார்கள் என்றும் ஏன் மாலையை அணிவித்தார்கள்’ என்றும் கேட்டார்கள்.
சில வாட்ஸ் அப் குறூப்புகளிலும் இது பற்றிப் பேசப்பட்டது. அதாவது ‘ஏன் சுமந்திரனை நிகழ்வுக்கு அழைத்தார்கள், வல்வெட்டித்துறையில் சுமந்திரனுக்கு மாலை அணிவிப்பு தேவை தானா?’.....போன்று.
‘It is shame’ என்றும் பதிவாகியிருந்தது. (‘Shame’ என்றால் வெட்கக்கேடு)
நிகழ்வு இடம்பெற்றது வல்வை ஆவணக்காப்பகத்தில். வல்வையில் ஆவணக் காப்பகம் என்பது நகுலசிகாமணி தம்பதியர்களின் முயற்சியின் வடிவம். நிகழ்வை நடாத்தியவர்களும் அவர்களே.
திரு.நகுலசிகாமணி அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தமிழரசுக் கட்சி விசுவாசி. அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் அவரின் நண்பர்கள். உரை நிகழ்த்தும் போது விருந்தினர்கள் மரியாதை நிமிர்த்தம் நகுலசிகாமணி அவர்களாலேயே மாலை அணிவிக்கப்பட்டார்கள்.
தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் இதுவரை மக்கள் பாராளுமன்றத்துக்கும் அனுப்பிவருகின்றார்கள்.
ஆவணக் காப்பகத்தை தனியாக நிர்வகித்து வரும் நகுலசிகாமணி தம்பதியினர் ஆவணக்காப்பகத்தை மேலும் விஸ்தரிக்க விரும்புகின்றார்கள். தமது வயதினைக்கருதி ஆவணக்காப்பகத்தை நிரந்தரமாக எதிர்காலத்தில் எவ்வாறு தொடர்ந்து நிலை நிறுத்தலாம் என முயற்சித்து வருகின்றார்கள். இதற்கு அவர்களுக்கு பணபலம், அரசியல் பலம் தேவைப்படுகின்றது. இதன் நிமிர்த்தம் தமக்குத் தெரிந்த தமிழ் பிரமுகர்களை விழாவுக்கு அழைத்திருந்தார்கள்.
இலங்கையில் இது போன்றதொரு ஆவணக் காப்பகம் அமைந்திருப்பது வல்வையில் மட்டும் தான். மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயம் இது.
ஆவணக் காப்பகத்தையும் அதனை உருவாக்கி வெற்றிகரமாக நடாத்திவருபவர்களையும், ஆறு ஆண்டுகள் தொடச்சியாக செயற்பட்டுக் கொண்டு நிறைவு விழா கொண்டாடுவதையும் பாராட்டாமல் – நிகழ்வின் மறுபக்கத்தை மட்டும் ஒரு கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பதும் விமர்சிப்பதும் தவறு.
இது ஒரு உதாரணம் தான்.
இது போன்ற பல விடயங்களில் எங்களில் பலரும் ‘கிங்மேக்கர்கள்’ போன்று விமர்சிக்க முனைந்து வருகின்றோம்.
விமர்சிப்பதற்கு அனைவருக்கு உரிமையுண்டு. ஆனால் அது முழுமையானதாக இருக்கவேண்டும்.
போகின்ற போக்கில் சுமந்திரன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொண்டதையும் Shame என்று விமர்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சுமந்திரன் மீது விமர்சனத்தை தெரிவித்தவர்கள் இதே நிகழ்வில் கலந்து கொண்ட மாவையையும் சரவணபவனையும் ஏற்றுக் கொள்கின்றார்களா?
கடந்த வாரம் உடுப்பிட்டியில் புதிதாகத் திறக்கப்பட்ட கரவெட்டி பிரதேச சபையின் கல்லாச்சார மண்டப திறப்பு விழாவிலும் சுமந்திரனும், மத்திய அமைச்சர் ஒருவரும் தான் விருந்தினர்கள்.
சுமந்திரன் மீது எனக்கும் அதிருப்தி உண்டு. பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தடவையாவது இவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கடந்த தேர்தலின் போதும் எனக்குத் தெரிந்தவர்களிடம் கூறினேன். இன்றும் கூறி வருகின்றேன்.
ஆனாலும் இந்த அதிருப்தி என்பது என் போன்றவர்களுடனும் சமூக வலைத்தளங்களுடனும் மட்டும் தான் நின்று வருகின்றது போல் தெரிகின்றது, சற்று விதி விலக்காக கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பலரின் எதிர்பார்ப்புக்கு மாறாக சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியில் மேன்மேலும் பலமடைந்து வருகின்றார். இதுவரை தமிழரசுக் கட்சிதான் தமிழரின் பிரதான கட்சியாகவும் விளங்கி வருகின்றது.
ஆவண காப்பக நிகழ்வு போன்றதொரு இன்னொமொரு நிகழ்வு
இந்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற பட்டப்போட்டிக்கு பிரதம விருந்தினராக அப்போதைய கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் மகிந்த அமரவீர அழைக்கப்பட்டிருந்தார்.
பெரும்பான்மையின அமைச்சர் ஒருவர் வல்வையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தமையும் பலரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக புலம்பெயர் தேசத்து நம்மவர்களிடம்.
அம்மன் கோவில் திருவிழாவுக்கு லண்டனில் இருந்து வந்திருந்த நண்பன் ஒருவனும் மேற்குறித்த கருத்துப்பற்றி ‘ஒ யெஸ்’ என்றான். ‘பட்டப் போட்டிக்கு சிங்கள அமைச்சர் ஒருவர் அழைக்கப்பட்ட விடயத்தைக் கேள்விப்பட்டு எங்களில் பலர் குழம்பிப்போய்விட்டதாக’ கூறியிருந்தான்.
குறித்த நிகழ்வில் பெரும்பான்மையின அமைச்சரை அழைத்ததில் தவறு இருந்ததாக எனக்குப் புலப்படவில்லை. ஏனெனில் அவர் அமைச்சர் என்ற ரீதியிலேயே நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் வட மாகாணசபை மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களோடு கதைத்துக் கொண்டிருந்த பொழுது, ‘எப்படி உங்கள் அமைச்சு வேலைகள்’ எனக் கேட்டேன். அதற்கு அவர் ‘நிதிகள் மிகவும் குன்றிய அமைச்சு எங்களுடையது, நிதி ஒதுக்கீடுகளுக்கு மத்திய அமைச்சிடம் தான் நாடி நிற்க வேண்டியுள்ளது’ என்றார்.
ஆகவே நேரடியாக மத்திய அமைச்சர் ஒருவரை பட்டப்போட்டி விழாவுக்கு அழைத்தது சாதூரியமான ஒரு விடயம் என விழா ஏற்பாட்டாளர்கள் கருதினால் அவர்கள் நகர்வு சரியானது என்றே நானும் கூறுவேன்.
ஆனாலும் அமைச்சரிடம் இருந்து எதுவித வேலைத்திட்டத்தையோ அல்லது உறுதிமொழிகள் ஏதாவது ஒன்றையோ வாங்காமல் விட்டது சறுக்கலான ஒரு விடயம் தான்.
‘எதுவித பயனும் இல்லாமல் ஏன் கடற்றொழில் நீர் வள அமைச்சரை நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள்’ என்ற குழப்பம் எனக்கு இன்றும் உண்டு.
எமது பிரதேசங்களுக்கு தற்போதய உடனடித் தேவை திருப்திகரமான அபிவிருத்தி. இது கல்வியாக இருக்கட்டும், வேலை வாய்ப்பாக இருக்கட்டும் அல்லது அரிக்கும் கடற்கரையை செப்பனிடுவதாக இருக்கட்டும் ..... மாகாண அமைச்சின் பங்கு இதில் இருந்தாலும், இவற்றை மத்திய அமைச்சினாலாயே பெருமெடுப்பில் செய்யமுடியும். நலன்புரிச்சங்கங்களாலும், தனிப்பட்ட புலம்பெயர் மக்களாலும் இவற்றைச் செய்ய முடியாது. கொச்சைப்படுத்தும் நோக்கில் இந்த கருத்தை நான் முன் வைக்கவில்லை.
ஆகவே தற்போது சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது பெரும்பான்மையின அமைச்சர்களையோ இங்கு விழாக்களில் விருந்தினர்களாக அழைப்பது விரும்பியோ அல்லது விரும்பாமலோ நிகழ்பவை. சந்தர்ப்பவாதம் அல்ல. (எழுத்துக்கு அழகு இல்லை என்றாலும்) சுருங்கக்கூறின் சிலர் ‘வேண்டாப் பெண்டாட்டி அல்லது வேண்டாப் புருஷன்’ ஐ தத்தம் பிள்ளைகளுக்காக வைத்துக் கொள்வதுபோல் தான் இவையும் நிகழ்கின்றன, அவ்வளவுதான்.
இவை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், விமர்சனங்கள் வெளியிடுவதும் பொருத்தமற்றவையாகவும் – எடுபடாதவையாகவுமே அமைந்து வருகின்றன, அமையும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 02, 2018 at 05:01
நிதர்சனமான பதிவு வாழ்த்துக்கள் ஆதவண்ணா ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.