ஆதவன் பக்கம் (22 ) – 'பழனியப்பா' எனும் மகத்தான மனிதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2020 (சனிக்கிழமை)
‘பழனியப்பா இல்லை என்றால் நான் எவரிடம் போய் மருந்து கட்டுவேன்’ என்று பிரமை பிடிக்கும் அளவுக்கு, எனக்குள் ‘மருந்து கட்டுகின்ற பழனியப்பா’ இருந்தார்.
தந்தையாரை ஒத்த வயதினர் இவரை ‘பழனியண்ணா’ என்றும், அனேகமாக மற்றவர்கள் எல்லோரும் ‘பழனியப்பா’ என்றுதான் அழைத்தோம்.
எனது பெற்றோர்கள் நாங்கள் சிறுவயதில் ஓடிவிளையாட ஒருபோதும் தடை போட்டதில்லை. அனேகமாக பலருக்கு விளையாடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு வளவுகள் தான். எங்களுக்கு வீடு, ஒழுங்கை, பின்னால் வாடி ஒழுங்கை மற்றும் கடற்கரை, முன்னால் அம்மன் கோவில் பின்வீதி முன்வீதி, அதற்கப்பால் சிவன் கோயில் வீதிகள், அங்காலே தோட்டக் காணிகள், இங்காலே மணியண்ணா வீட்டு ஒழுங்கை, ஆசாரி வளவு, தீருவில், மதவடி என நான் சிறுவயதில் விளையாடிய இடங்கள் மிக அதிகம்.
இதனால் அடிக்கடி காயங்கள். அடிக்கடி பழனியப்பா வீடு.
ஊரணி வைத்தியசாலை இலவசமாக மருத்துவ சிகிச்சையளித்து வந்தபோதும், பொருளாதராத்தில் நடுத்தரத்தில் இருந்த எங்கள் பெற்றோர் காயங்களுக்கு எங்களை பழனியப்பாவிடம் மட்டும்தான் கொண்டுசென்றார்கள். சிறுவயதில் புரியவில்லை, பின்னர்தான் ஏன் என்று புரிந்தது.
பழனியப்பாவினதும் அவரது குடும்பத்தினரதும் பெருந்தன்மை - வைத்தியத்தை வீட்டின் பின்னாலோ அல்லது ஒரு ஓரமாகவோ செய்யாமல் வீட்டின் முன் மண்டபத்தில் வைத்து செய்ததுதான்.
சிறுபிராயத்தில் என்னை அம்மா அல்லது ஐயா கூட்டிக்கொண்டு செல்வார்கள். பின்னர் அக்கா, தொடர்ந்து நான் தனியாகவே சென்றேன் மருந்து கட்டுவதற்கு.
பழனியப்பா மருந்து கட்டுவதே ஒரு கலை. மருந்துகளில் சிக்கனம், அவற்றை சேகரித்து வைத்திருக்கும் பக்குவம், பொறுமை, கலவைகளை கலக்கும் முறை, காயப்பட்டவர்களை கையாளும் முறை, காயங்களை கையாளும் முறைகள், நேர்ந்தவறாமை, சகலரையும் ஒரே வித்தத்தில் நடாத்துவது, சேவை மனப்பான்மை என இவரின் மருத்துவத் தொழிலில் எவரும் ஒரு குறையையும் கண்டிருக்கமாட்டார்கள்.
பார்க்கச் சகிக்காத காயங்களைக் கூட கையுறைகள் இன்றி, முழு அழுக்குகளையும் நீக்கி, மருந்து போடுவது அல்லது பிறை போன்ற ஊசியால் காயத்தை வளைத்துக் குத்தி, அதை கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது, கலவை மருந்துகள் மற்றும் பவுடர் மருந்துகள் போடுவது, குடுக்கும் துணியில் அரைவாசியை மட்டும் பாவித்து சுற்றிக் கட்டுவது - என்றும் மறக்க முடியாதவை.
ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள் (பழனியப்பா)
அனேகமாக பெரும் நாட்பட்ட காயங்களுடன் வருபவர்கள் அயற்கிராமங்கள் மற்றும் சற்றுத்தூர இடங்களைச் சேர்ந்தவர்கள் தான். பல இடங்களுக்குச் சென்று, பின்னர் முடியாமல் வருவது தான் காரணம். ஒருமுறை அப்படி வந்த ஒருவர் ‘தான் உடுப்பிட்டியில் சிவசம்பு வைத்தியரிடம் சென்றதாகவும் அவர், இந்தக் காயத்திற்கு வல்வெட்டித்துறையில் பழனியப்பாவிடம் போங்கள்’ என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
மருந்து கட்டி முடித்த பின்னர் இறுதியில் காசு வாங்குவதிலும் கொடுப்பதிலும் தான் சங்கடம். ‘எவ்வளவு என்பார்கள்’, இங்கு மாத்திரம் சற்று சங்கடப்படுவார். ‘பாத்துத் தாங்கோ’ என்றும் கூறமாட்டார். கூடக் கொடுத்தால் ‘இரடாப்பா’ என்று மீதத்தைக் கொடுப்பார்.
எங்களைப் பொறுத்தவரை அம்மா ஐயாவோடு சென்ற நாட்களில் அம்மா, ஐயா ‘எவ்வளவு பழனி அண்ணா’ என்றால் ‘இருக்கட்டும் பரவாயில்லை’ என்பார். ஆனால் ஐயா அம்மா வற்புறித்து காசைக் கொடுத்தால், அவரும் வற்புறுத்தி சில மீதிகளைத் திருப்பிக்கொடுப்பார்.
நான் தனியாக போன காலங்களில் ‘எவ்வளவு பழனியப்பா’ என்றால் ‘அம்மா எவ்வளவு எடா தந்தவ’ என்பார். ‘2 ரூபா’ என்றால் ‘சரி 1 ரூபா தாடா’ என்பார் மெல்லிய குரலில்.
ஒரு முறை வல்வைக் கல்வி மன்றத்தில் இருந்து சீனியர் ஒருவரை, பெரிய காயத்துடன் அழைத்து வந்தார்கள். மருந்து கட்டிமுடிய ஆளுக்கு ஆள் சில்லைறைகள் சேர்க்க ‘அட சும்மா போங்கோடா’ என்று கூறி காசைக் கடைசிவரை வாங்கவேயில்லை. இப்படி பலரிடம் காசு வாங்கியதில்லை. இந்த தொழிலால் ஏதும் பெரிதாக உழைத்திருப்பார் என்று எனக்கு எண்ணத் தோன்றவில்லை.
பழனியப்பாவிடம் சென்று காயம் ஆறவில்லை என யாரும் கூறியதை எவரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
பழனியப்பா வருபவர்களிடம் காசுக்கு பதிலாக கேட்பது ஒன்று மட்டும் தான் – ‘துணி கொண்டு வந்தீர்களா’ என்றுதான். அவருக்கு பஞ்சமாக இருத்தது மருந்து கட்டுகின்ற துணி மட்டும்தான்.
2004 இல், மதவாச்சியில் வான் ஒன்றில் விபத்து ஒன்றைச் சந்தித்து சில காயங்களுக்கு உள்ளானேன். மதவாச்சியில் மருந்து கட்டிய பின்னர், ஊரில் மீண்டும் மருந்து கட்ட வேண்டிய நிலை. நான் முன்னர் நினைத்தது போலவே பழனியப்பா ஊரில் இல்லாதது பெருங்குறையாக அப்போது தெரிந்தது.
விசாரித்து தனியார் வைத்தியர் ஒருவரிடம் சென்றேன். போகும் பொது சிலர் கூறினார்கள் ‘காயத்தை துப்பரவுசெய்து கொண்டுபோ’ என்று. ‘அப்படி செய்தால் பிறகு ஏன் வைத்தியரிடம் செல்லவேண்டும்’ என நினைத்து, நான் மதவாச்சிக் கட்டுடனேயே சென்றேன். குறித்த வைத்தியருக்கு முகம் சுளித்துவிட்டது.
‘உமக்கு காயத்தைக் துப்பரவுசெய்து கொண்டுவர வேண்டும் என்று தெரியாதா’ என்றார். ‘இல்லை’ என்றேன். ‘ஏன்’ என்றார். ‘தெரியாது’ என்றேன். கட்டிவிட்டார் ஒருவாறு. ‘அடுத்தமுறை வரும்போது துப்பரவுசெய்து வாரும்’ என்றார். அப்பொழுதும் நினைவில் வந்தவர் பழனியப்பா தான்.
தந்தையார் பழனியப்பாவை ‘பழனியண்ணா’ என்றழைத்தார், ஐயா இளையவர் என்றாலும் ஐயாவை ‘மாஸ்டர்’ என்றுதான் அழைப்பர்.
85, 86 ஆம் ஆண்டுகளில் நாய்க்கடியுடன் பழனியப்பா வீட்டுக்கு யாரவாது ஊரவர்கள் சென்றால் ‘மாஸ்டர் வீட்டு நாயா’ என்று கேட்கும் அளவுக்கு எங்களின் செல்ல நாய் சுமார் ௦20 பேரைப் பதம் பார்த்திருந்தது. பக்கத்தில் பிரேம்குமார் மாமா மகன் இளங்கோ உட்பட. பழனியப்பா ஒரு போதும் சலித்து ‘நாயை இன்னும் ஏன் வளர்க்கின்றீர்கள்’ என்று கூறாதது செல்ல நாய் தானாக இறக்கும் வரை அதை நாங்கள் வளர்க்க ஒரு காரணமாகவிருந்தது.
87 இல், புலிகளின் மூத்த தளபதியும் பிரபாகரன் அவர்களின் சகாக்களில் ஒருவருமான குமரப்பா அவர்களின் திருமணத்துக்கு பிரபாகரன் அவர்கள் வந்திருந்தார். திருமண நிகழ்வு குமரப்பாவின் ரேவடியில் அமைந்துள்ள வீட்டில் இடம்பெற்றது. குமரப்பா குடுப்பத்தினரும் பழனியப்பா குடும்பத்தினரும் அயலவர்கள்.
“பிரபாகரன்” அவர்கள் கூறவா வேண்டும். பலரும் சென்று கதைக்க, பிரபாகரன் அவர்கள் ஒரு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த பழனியப்பாவிடம் சென்று என்ன ‘பழனியண்ணா’ என்று சிறிது நேரம் கதைத்தார். பழனியப்பா வழமையாக சகலரிடமும் கதைப்பது போல் அதே புன்முறுவலுடன் அமைதியாகக் கதைத்தார். இதற்குப் பின்னரும் இது பற்றி அலட்டிக் கொண்டிருக்க மாட்டார் என நினைக்கின்றேன்.
பழனியப்பாவின் இன்னொரு பக்கம்
காலி முகத்திடலில் துறைமுகநகர் கட்டுவதற்கு கடலை நிரப்புகின்றார்கள். பழனியப்பா கடலை நிரப்பி நிலத்தைப் பெருப்பிக்கும் வேலையை தான் ஒரு தனி ஆளாக நின்று நெடியகாட்டு சிறுவர் பூங்கா பகுதியில் 90 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டார். அப்பொழுது குறித்த பகுதியை ‘பழனியப்பா குப்பை மேடு’ என்று தான் அழைத்தார்கள்.
பழனியப்பாவின் இதே முறையைக் கையாண்டு, கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு ரேவடி கடற்கரை மைதானத்தையொட்டி வைரவர் கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில், ஒரு துண்டு நிலத்தை உருவாக்க முயற்சித்தோம். இடைநடுவில் திணைக்களம் வந்து தடுத்துவிட்டது.
பழனியப்பா குப்பைவாரி கொண்டு சாரத்துடன் காலை வேளைகளில் நெடியகாடு சில்றன் பார்க்கை ஒட்டியிருந்த கடற்கரை நிலத்தை, கழிக்கப்படும் பொருட்கள் கொண்டு நீட்டி சமப்படுத்துவதை ஏராளமான தடவைகள் 80 – 90 நடுப்பகுதிகளில் பாடசாலைக்கு பஸ்ஸில் போகும் போது பார்த்திருகின்றேன்.
என்ன ஒரு மகத்தான வேலை. யாழ்பாணத்தில் தனி நபரோ அல்லது திணைக்களமோ கடலில் இருந்து ஒரு துண்டு நிலைத்தையாவது இப்படி மீட்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஊரவர்களால் உள்வாங்கப்பட மறந்த உன்னத சேவை இது.
சுனாமி பேரலையிலிருந்து மகளிர் பாடசாலை, மயானம் போன்றன பேரழிவிலிருந்து தப்பித்தது பழனியப்பா உண்டாக்கிய குறித்த இந்த குப்பை மேட்டினால் தான் என்பதயும் மீட்டிப் பார்க்கத் தவறிவிட்டோம்.
பழனியப்பாவின் மருத்துவ சேவையும் பழனியப்பாவின் குப்பைமேடும் சில வரிகளில் சொல்லி முடிக்கக் கூடியவிடயமல்ல.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 09, 2018 at 04:42
மிகமிக சிறப்பு உண்மை ;பொதுவைத்தியசாலையில் கால் அகற்றப்படவேண்டும் என்று சொன்னவர்கள் .பழனியப்பாவின் சிறந்த வைத்தியத்தால் இன்று காலோடு இருக்கின்றார்கள். பெரும்பாலான நாட்க்களில் வைத்தியம் பார்ப்பதற்கு எங்களிடம் பணம் வாங்கியதே கிடையாது அவரொரு சிறந்த மக்கள் செயவையாளர் அவரைபற்றிய இந்த பதிவும் மிக சிறப்பானதும் மகிழ்வானதும் மனதில் ஒருவிதமான இனம் புரியாத கவலையையும் ஏற்படுத்துகின்றது .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.