ஆதவன் பக்கம் (34) – அன்னதானத்துக்குப் பட்டபாடும், அன்னதானம் படும்பாடும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2018 (திங்கட்கிழமை)
அம்மன் கோயில் தேர்த்திருவிழா முடிந்த ஓரிரு மணித்தியாலங்களில் காத்தவராயன் மடை (கழுவேறிப் பூசை) சுமார் 4 மணியளவில் இடம்பெறும். அந்த நாட்களில் என்னைப் பொறுத்தவரை இதற்குப் பின்னர் இடம்பெறும் நிகழ்வுதான் தேர்த்திருவிழாவன்று இடம்பெறும் சிறப்பு.
அம்மன் கோயில் மோர்மடம் (கோயில் வாசலின் இடப்பக்கம் உள்ளது, அப்பொழுது ஒரு மோர்மடம் தான்) - பிரதான வாசல் தவிர, அதன் இரண்டு பக்கங்களிலும் தாகசாந்தி மற்றும் அன்னதானச் சோறு வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுதும் அப்படியேதான் உள்ளது, வேறு சில சிக்கல்கள் தவிர.
கழுவேறிப் பூசை முடிந்தவுடன், மோர்மடத்தின் இடப்பக்கமாக ஆண்கள் வரிசையும், வலப்பக்கமாக பெண்கள் வரிசையும் அலுமினியச் சட்டிகள் மற்றும் சில்வர் வாளிகளுடன் மெல்ல நீளத்தொடங்கும். ஆண்கள் வரிசை சில சமயங்களில் கவுன்சிலைக் கடந்து எங்கள் வீட்டு வாசல்வரை வந்த சம்பவங்களும் உண்டு.
அம்மா சட்டிகள் தந்து என்னையும் தம்பியாரையும் அனுப்புவார். நேரத்துடனேயே சென்று முன்னுக்கு நிற்போம். வரிசையில் ஆடவர்கள் சிறிது சிறிதாகக் கூடி, வரிசை நீளத் தொடங்கும். பலம் வாய்ந்த சில குழப்படிகார்கள் திடீரென்று வரிசையை முன்தள்ளி இடி ஒன்று இடிப்பார்கள்.
இடியால் விழுந்து வரிசையில் இருந்து விலகினால், குழப்படிகார்கள் எங்களைப் போன்றோரை மீண்டும் வரிசையில் நிற்க விடமாட்டார்கள். படம் ஒன்றில் கெளண்டமணியும் சத்தியராஜ்ஜும் வரிசை ஒன்றில் முன்னுக்கு இடம்பிடிக்க வெளிக்கிட்டு பின்னுக்கு வந்த கதைபோல் ஆகிவிடும் எங்கள் கதை. எங்களைப் போன்றோரை பின்னுக்கு அனுப்பத்தான் இந்த இடிகள். அம்மா வுடன் வேறு சிலரும் இதற்காக சண்டை கூடப் போட்டுள்ளார்கள்.
மடை (அன்னதானம்) ஒருவாறு மோர்மடம் வந்து சேரும். ‘எப்படா கொடுப்பார்கள்’ என்று பார்த்துக் கொண்டிருக்குமளவிற்கு கொடுப்பவர்களும் இழுத்துக் கொண்டிருப்பார்கள்.
ஒருவாறு அன்னதானச் சோற்றைக் கொடுக்கத்தொடங்கினால், இடிகள் பலமாகும், வரிசை நகராது. வல்லவர்கள் பலர் இடையில் வந்து முன்னுக்கு வரிசையில் சொருகிவிடுவார்கள் - அடாவடித்தனம்.
சில தடவைகளில் ஒருவாறு சமாளித்து வாங்கியுள்ளோம். அப்படி வாங்கியபோது, ஏதோ போட்டிகளில் வெற்றிபெற்றதைப் போன்ற ஒரு சந்தோசம்.
அன்னதான சோற்றை வாங்கியவர்கள், வாங்கியவுடன் சட்டியையும் வாளியையும்தான் பார்ப்பார்கள் - ‘எவ்வளவு வந்திருக்கின்றது’ என்று பார்க்க. பெரிதாக விழுவதில்லை. ஒரு காரணம் அளவுக்கு மிஞ்சி செய்வதில்லை. அடுத்த காரணம் சிறப்புச் சலுகைகள் - ஆட்கள் பார்த்து.
இந்தளவிற்கு எனது சிறுபராய காலத்தில், அன்னதானத்துக்கு பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தது.
அன்னதானத்தை விட, அம்மன் கோயில் திருவிழாக் காலங்களில் பகல் வேளைகளில் வழங்கப்படும் நீர்ச்சோறு, சக்கரைச் சாதம், புளிச்சாதம் ஆகியவற்றுக்கும் நல்ல மதிப்பு. இரண்டாம் தரம் வாங்க வருபவர்களை கலைக்க என்றே இருவர் நிற்பார்கள்.
அம்மன் கோவிலை விட, இதர கோவில்களில் திருவிழாக் காலங்களில் அன்னதானம் அப்பொழுது கொடுக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. சிவன் கோயிலில் இரண்டு மடங்கள் இருந்தது, ஆனாலும் அங்கு அன்னதானம் அந்த நாட்களில் கொடுக்கப்பட்டதாக ஞாபகம் இல்லை.
ஆனாலும் நவராத்திரி காலங்களில் குச்சத்தில் வாணி கோயிலிலும், அழுக்கடவையில் காளி கோயிலிலும் அன்னதானம் கொடுக்கப்படுவது வழமை. பெயர் சொல்லுமளவுக்கு இவை இருந்தன.
இதைவிட நவராத்திரி காலங்களில், வாசிகசாலைகள் சிலவற்றில் கொடுக்கப்படும் அவல் கடலைகளும் மறக்க முடியாதவை. ‘இங்கே முடிந்ததாம், அங்கே கொடுக்கபடுதாம்’ என்று கூறுமளவுக்கு பலர் ஓடி வாங்குவது வழமை.
இவற்றை விட, வெள்ளிக் கிழமைகளில் சன்னதி கோயிலில் ஆனாந்தாச்சிரமத்துக்கும், அடியார் மடத்துக்கும் அன்னதானத்துக்கு என்றே போகின்றவர்கள் பலர். வரிசை எப்படி இருந்தது என்பதை வாங்கியவர்கள் நன்கு அறிவார்கள்.
அன்னதானச் சோறோ அல்லது கடலை அவலோ, அப்போது கோயில்களிலோ சரி, வாசிகசாலைகளிலோ சரி ஒரு போதும் கூவிக்கூவி கூப்பிட்டுக் கொடுக்கப்படவில்லை, ஒருபோதும் மிஞ்சவுமில்லை.
இப்படி அந்தக்காலத்தில் இருந்த அன்னதானம் இன்று படும்பாடு வித்தியாசமானது.
அம்மன் கோயிலில் நீர்ச்சோறு, சக்கரைச்சாதம், புளிச்சாதம் ஒரு புறமிருக்க, திருவிழாக் காலங்களில் பகலில் ஒவ்வொரு நாளும் அன்னதானம் தற்பொழுது வழங்கப்படுகின்றது.. சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக் பைகளிலும் வாங்கிக்கொண்டு வரலாம்.
கடந்த சில வருடங்களாக இரவுச் சாப்பாடும் கொடுக்கப்படுகின்றது. இட்லி, இடியப்பம், தோசை, ரவை போன்றவை பரிமாறப்படுகின்றது. விரைவில் பராட்டா பின்னர் படிப்படியாக (கிழமை) கொத்துப் பராட்டாவும் பரிமாறப் படலாம். திருவிழா முடிந்து ஆன்மிகம் கமிழ விபூதி, சந்தனத்துடன் வீடு வரவேண்டிய நாங்கள் – நன்றாக உண்டுவிட்டு ஏப்பத்துடன் அல்லவா வீடு வருகின்றோம்.
கோயில்களுக்கு அடிக்கடி போகாவிட்டாலும், இந்துத்துவத்தில் அதிக நாட்டமுள்ள எனக்கு, இந்த நிகழ்வு இன்றும் ஒரு ஆச்சரியம்போல்தான் தெரிகின்றது. இதைவிட ஆன்மிகம், ஆகமம் போன்றவற்றைத் தாண்டிச் செல்லும் இவை போன்ற நிகழ்வுகள், மேலும் பல கிளைகள் பரப்பலாம் என்ற ஆதங்கம் இன்னொரு புறம்.
அம்மன் கோவிலை விட, கிட்டத்தட்ட ஊரில் உள்ள சகல கோயில்களிலும் இப்பொழுது அன்னதானம் தாராளம். பல கோயில்களில் வருடாந்த மகோற்சவ காலங்களில் தினமும். இதைவிட அவ்வப்போது வெள்ளிக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும்.
அன்னதானம் வழங்கப்படுவதை தெரியப்படுத்த தற்பொழுது அறிவித்தல் பலகைகளிலும் அறிவுப்புக்கள்.
முன்னரைப்போல் தற்பொழுது அன்னதானம் வாங்க எங்கும் கூட்டம் முன்டியடிப்பதில்லை. பல இடங்களில் கிட்டத்தட்ட கூவிக் கொடுக்காத குறை. பல நேரங்களில் அன்னதானம் கொடுக்கும் இடங்களில் மிஞ்சுகின்றது. இல்லை என்றால் வாங்கிக்கொண்டு வந்து வீடுகளில் மிஞ்சுகின்றது. இது ஊரில் என்றில்லை பல இதர இடங்களிலும் தான் .
அண்மையில் மனைவியும் பிள்ளைகளும் ஊரில் கோயில் ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள். நான்கு பைகள் நிறைந்த அன்னத்தாச் சோற்றுடன் திரும்பிவந்தார்கள். அனைவரும் சாப்பிட்டபின்னரும் இரண்டு பைகள் மீதமாகிவிட்டன. தேவைக்கு அதிகமாக வாங்கி வந்ததற்காக கடிந்து கொண்டேன். அப்போது மனைவி கூறினார் ‘நாங்கள் வாங்காது விட்டிருந்தால் கோயிலில் மிஞ்சியிருக்கும்’ என்று.
எனது இந்தப் பக்கத்தை எழுத வைத்த சம்பவம் இது.
ஏன் அன்னதானத்துக்கு இப்படி ஒரு நிலை இன்று.
பல காரணங்கள்
பிரதானமானது காசுப் புழக்கம், அதிலும் பிரதானமாக வெளிநாட்டுக் காசு – பல வடிவங்களில்.
வெளிநாட்டில் இருந்து கொண்டோ அல்லது இங்கு வந்து நிற்கும் பொழுதோ அன்னதானத்துக்கு பணத்தைக் கொடுக்கின்றார்கள். ஊரில் உள்ளவர்களுக்கு கடவுள் பெயரால் ஏதோ உதவுகின்றோம் என்கின்ற ஒரு திருப்தி பலரிடம், விசிறும் குணம் சிலரிடம்.
மிஞ்சி வருகின்றது அன்னதானம், அருகி வருகின்றது அதன் மகிமை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Lukxini (Srilanka)
Posted Date: September 13, 2018 at 19:18
நெடியகாட்டுப்பிள்ளையாரில் தெற்கு மடத்தில் ஆண்களுக்கும் தற்பொழுது இடிக்கப்பட்ட சோமு ஐயர் வீட்டருகு மடத்தில் பெண்களுக்கும் அன்னதானம் நடைபெற்றதாம் .அந்த நாட்களில்அது அரிதான விடயமாக இருந்ததாம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.