கரம் கொடுப்போம் கல்யாண மண்டபத்திற்கு - எமது தலையங்கம் - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2013
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும் விழா 23.11.2012 அன்று நடைபெற்றது யாவரும் அறிந்ததே. தற்பொழுது இக்கல்யாண மண்டபத்தின் ஆரம்பக்கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக் கல்யாண மண்டபத்தின் கட்டிட வேலைக்காக நிதி உதவியை வல்வைப் பொது மக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம்பெயர்ந்து வாழும் வல்வை மக்களிடமிருந்தும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்த்து, அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். பணியைப் பூரணமாக சுமார் 3 கோடி இலங்கை ரூபாக்களுக்கு மேல் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒரு அவசியத்தேவை.
யாழ்ப்பாணத்தின் மற்றைய இடங்களுடன் நோக்குமிடத்து, வல்வெட்டித்துறைப் பிரதேசமானது குறிப்பிடக்கூடிய நெருக்கலான வீடுகளை சிறிய நிலப் பரப்புகளுக்குள் கொண்டுள்ளது. குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள இன்றைய நிலையில், ஒரு கல்யாண வைபவத்தையும் மற்றும் அதனுடன் கூடிய சபையையும், சில 100 குடும்பங்களை அழைத்து மேற்கொள்வது என்பது மிகவும் அசெளகரியமாக மாறியுள்ளது.
அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினரின் முயற்சி இவற்றைக் கருதி, அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினரின் மேற்கொண்டுள்ள முயற்சி மிகவும் ஏற்புடையதொன்று. ஏனெனில் அம்மன் கோவிலானது எம் எல்லோருக்கும் பொதுவானதொன்று, ஆகவே இக்கல்யாண மண்டபமும் எம் எல்லோருக்கும் பொதுவானதாகவே அமையும்.
ஊரின் பொருளாதரத்தில் வளர்க்க இது ஒரு படி உதவும். ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் திருச்சி மற்றும் சென்னை நகர்களிலும் மற்றும் கொழும்புகளிலும், எம்மவர்களின் எத்தனையோ குறிப்பிடக்கூடிய திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சிலவற்றையாவது, எம்மூரில் நாம் நடாத்த முடியுமானால், பல லட்சம் பெறுமதியான பணப் புழக்கத்தினை நாம் எம்பிரதேசத்திற்குக் கொண்டு வரமுடியும். இதனால் பல குடும்பங்கள் வசதி பெற வாய்ப்பூண்டு. ஆனால் இதற்கு ஒரு கல்யாண மண்டபம் இல்லாதது ஒரு தடைக் கல்லாகவுள்ளது.
கரம் கொடுப்போம்
தர்மகர்த்தசபையினர் எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். சபையின் கணக்கு அறிக்கைகள் வெளிப்படையானவை, அத்துடன் எல்லோராலும் அணுகத்தக்கவை. ஆகவே மேல் உள்ள எல்லாவற்றைவும் கருத்திற்கொண்டு, ஒரு கல்யாண மண்டபம் விரைவில் அமைய நாம் எல்லோரும் வழிசமைப்போம். இரண்டொரு நாட்களுக்கு லட்சம் தேவை என்றுள்ள நிலையிலுள்ள கல்யாண மண்டபத்திற்கு, வேகமாக உதவியை நாடிவருவதற்காக மற்றவர்களுக்கும் இவ்விடையத்தைத் தெரிவிப்போமாக.