பிரபாகரன் பிறந்த ஊரில் இன்னொமொரு ‘ஹீரோ’ என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான ‘Times of India’ ஒருமுறை எழுதிய ஆழிக்குமரன் ஆனந்தன் என பொதுவாக அழைக்கப்படும் திரு வி.எஸ் குமார் ஆனந்தனின் 71 ஆவது பிறந்ததினம் கடந்த 25 ஆம் திகதி ஆகும். ஆனாலும் வல்வெட்டிதுறையில் பிறந்த இவர் பல கின்னஸ் சாதனைகளின் சொந்தக்காரர் ஆவார் என்பது இலங்கையில் பலருக்கும், குறிப்பாக தமிழர்களிற்கு தெரிந்திருக்காதவொன்று ஒரு வேதனையான விடயமாகும்.
பாக்கு நீரிணையில் தொடங்கி, மேடைகள், வீதிகள் என பயணித்து ஆவணி மாதம் 6 ஆம் திகதி 1984 ஆம் ஆண்டு வரை ஆங்கிலக் கால்வாயில் சாதனை முயற்சியில் இறக்கும் வரை தொடர்ந்திருந்தது இவரது சாதனை முயற்சிகள். ஒரு காலத்தில் ‘தனிமனிதனின் ஆகக் கூடிய கின்னஸ் சாதனைகளை’ என்னும் நிலையை இவர் கொண்டிருந்தார். இவை அனைத்தும் அரச உதவிகளோ அல்லது ஏதாவது தனிப்பட்ட அமைப்புக்களின் உதவிகள் இன்றி, இவரது தனிப்பட்ட முயற்சிக்களால் எட்டப்பட்டவை என்பதை இலகுவாக புரியவைப்பது கடினம்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் (University of London) படித்துப் பட்டம் பெற்றிருந்த இவர், இலங்கையிலும் சட்டத் துறையில் பட்டம் பெற்று மிகவும் சிறந்த கல்விப் பின்புலத்தை பெற்றிருந்தார்.
மேலும் இவர் வல்வையில் 60 களின் பிற்பகுதியில் குறிப்பிடக்கூடிய அரசியல் போராட்டத்திலும் கலந்து கொண்டதாக இவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறாக தமிழர்களிற்கு பெருமை சேர்த்த இவரை இதுவரை எவரும் பெரிதாக பெருமைபடுத்தியதாக காணமுடியவில்லை. சரி பிழை என
இனங்கானாது சகலதையும் பிரசுரிக்கும் விக்கிபீடியா போன்ற ஓரிரு உலக தளங்களில் இவரைப்பற்றி ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்திருந்த பலரின் ஆவணப் புத்தகங்கள் என்று சொல்லப்படுவற்றில் தவறவிடப்பட்டுள்ளார். இவற்றைப்பற்றி பெரிதாக நோக்குவது அவசியமல்ல.
ஆனால் ஆழிக்குமரன் ஆனந்தனின் பிறந்த ஊரான வல்வெட்டிதுறையில், இதுவரை இவரை அடையாளப்படுத்தும், மற்றவர்களிற்கு இவரைப்பற்றி இவரின் சாதனைகள் பற்றித் தெரியப்படுத்தும் வகையில் எந்தவொரு நிரந்தர அடையாளங்களும் இடம்பெறவில்லை என்பதும், இவரின் சாதனைகள் மற்றும் சாதனை முயற்சிகள் பற்றி தற்போதைய வல்வையின் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பதும் கவலை தரக் கூடியவையாகும்.
இவைகளே ஆழிக்குமரன் ஆனந்தன் புகழ் மங்குவதற்கு காரணம் என்று சொல்ல முனைவது தவறு. எத்தனைதரம் கீழே விழுந்தாலும் உடையாமல் பாவித்த ‘Nokia’ கைத்தொலைபேசிகள் எவ்வாறு ‘Samsung’ களின் வரவால் அடிபட்டுப்போனதோ, அதேபோல் 70 களில் வல்வையில் உருவாகி 80 களில் சுழல்பெறத் தொடங்கியிருந்த தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இவைகளின் ஸ்தாபகர்களான திரு.தங்கத்துரை, திரு.குட்டிமணி மணி, திரு.பிராபகரன் ஆகியோர்களின் பெயர்கள் தொடர்ந்து நீடித்திருந்த அரசியல் மற்றும் உள்நாட்டுப் போரினால் உலகம் பூராவும் வியாபிக்க, ஆழிக்குமரன் ஆனந்தனின் பெயர் இயல்பாகவே அடிபட்டுப் போனதுதான் உண்மை. மேலும் திரு.ஆனந்தன் அவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தில் மணம் முடித்திருந்ததும் இன்னுமொரு காரணமாக அமையக்கூடும்.
இப்பத்தியை எழுதும் எம்மால், 1992 ஆம் ஆண்டு வல்வையில் திரு.ஆனந்தனை ‘அலைஓளி’ என்னும் கையெழுத்து சிறப்பித்து நினவுகூர்ந்தது போன்ற சிறு சம்பவங்கள் கூட இதுவரை நிகழ்ந்திருக்கவில்லை (ஏதாவது நிகழ்ந்திருந்தால் மன்னிக்கவும்) என்பதே மேற்கூறியவற்றிகு சான்று பகிர்கின்றன.
எது எப்படியோ ஆழிக்குமரன் ஆனந்தனின் புகழ் மீண்டும் நாட்டப்படவேண்டும். இதற்கு முதற்படியாக இவருக்கு வல்வையில் ஒரு சிலை எடுக்கப்படவேண்டும். ஒரு சிலையைப் போல் ஒரு செய்தியை நிரந்தரமாக சொல்லக் கூடிய வேறு ஒன்றும் மாற்றாக இல்லை என்பது உண்மை. அவ்வப்போது இங்கு வல்வையில் சிலை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது உண்மையாயினும் இதுவரை இது சாத்தியப்படவில்லை.
இதற்கு 2 காரணங்கள்தான் இருக்கக்கூடும். ஒன்று தடங்கல்கள் அல்லது இந்த முயற்சியை ஆரம்பித்து முடிக்கக்கூடிய தனிநபரோ அல்லது அமைப்போ இல்லை என்பதுதான். பொதுவாக சிக்கலாக இருக்கக் கூடிய பணம், இந்த விடயத்தில் சிக்கலாக இருக்கும் என்று சொல்லுமளவிற்கு இல்லை. ஏனெனில் இதற்குரிய பணம் திரு.ஆனந்தனின் குடும்பத்தினருக்கு ஒரு பொருட்டாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
காரணத்தைக் களைந்து வல்வையின் நலனில் அக்கறை கொண்டுள்ள நலன்விரும்பிகள், வல்வையின் மைந்தனுக்கு விரைவில் ஒரு சிலை எழுப்ப வேண்டும். இந்தக்காலத்தில் இது தவறினால், இனிவரும் காலங்களில் இதற்குரிய சாதியங்கள் குறைந்தே இருக்கும்.