அன்னபூரணி இலங்கையைச் சுற்றி ஒரு Queen Mary ஆக வேண்டும் - எமது தலையங்கம் 6
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2013
அன்னபூரணி இலங்கையைச் சுற்றி ஒரு Queen Mary ஆக வேண்டும்.
வல்வையிலிருந்து அன்னபூரணி பாய்மரக்கப்பல் அமெரிக்காவின் Glouester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 வருடம் வரும் 01.08.2013 ஆகும். இதை நினைவு வரும் வகையில் வேறுபட்ட நிகழ்வுகள் சில பல இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக புலம் பெயர் நாடுகளில்.
வல்வெட்டித்துறையில் இதுவரை அன்னபூரணிக்கு உத்தியோகபூர்வமாக எதுவித நினைவுச் சின்னங்களும் வைக்கப்படவில்லை, இதற்கு வல்வையின் அடையாளங்களான ஆழிக்குமரன் ஆனந்தன், வயித்திலிங்கப்பிள்ளை புலவர் போன்றவர்களும் விதிவிலக்கல்ல.
அன்னபூரணியின் மாதிரி வடிவம்
நாம் கடந்த மாதம் அன்னபூரணியின் மாதிரி வடிவை வடிவமைப்பதற்குரிய ஆரம்ப நிகழ்வினை எடுத்திருந்தோம். மாதிரி வடிவாக்கத்தின் வரைபடம் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளது. அன்னபூரணியின் மாதிரி வடிவை வல்வைச் சந்தியில் உள்ள சனசமூக நிலையத்தில் வைக்கவும் முயற்சி எடுத்துள்ளோம். இதன் மூலம் அன்னபூரணியின் உருவாக்கத்திற்கு உரியவர்களின் அடுத்த சந்ததியினர் சிலரை அடையாளப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
இதன் பிரதான நோக்கம் எமது பெயரால் அன்னபூரணியின் ஒரு மாதிரி வடிவை வல்வை சந்தியில் வைப்பது அல்ல. மாறாக இத்தலையங்கத்தைத் வரைவதன் மூலம் ஒரு செய்தியைச் சொல்வதற்காகத்தான். ஒரு வகையில் எமக்கு அதிக பொருட்செலவிலான தலையங்கம் இது எனலாம்.
தற்பொழுது எடுக்கப்பட்டுவரும் விழாக்கள்
தற்பொழுது குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் 75 ஆவது வருட நினைவையொட்டி சில பல விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றில் எத்தனை நிகழ்வுகள் வரும் 02.08.13 ற்குப் பின் அன்னபூரணியை நினைவில் வைத்திருக்கப் போதுமானவை என்று தெரியவில்லை. எத்தனை விடயங்கள் அன்னபூரணி பற்றி தமிழ் மொழி தெரியாதவர்களுக்கு தெரிவிக்கும் என்றும் தெரியவில்லை.
அன்னபூரணி மீண்டும் புதிதாக வடிவமைக்கப்படவேண்டும்
அன்னபூரணியை உலகறியச் செய்யவேண்டும் என்றால் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் - அன்னபூரணியை மீண்டும் வடிவமைக்கவேண்டும். நாம் ஆராய்ந்தவரை இது சாத்தியமான ஒன்று. வல்வையில் இதைச் செய்யவல்ல மேஸ்திரிமார்கள் இன்னும் சிலர் உள்ளார்கள். பணம் திரட்டக்கூடியது போலத்தான் தெரிகின்றது. இதை யாராவது முன்னின்று செய்யவேண்டும்
அப்படி புதிதாக வடிவமைக்கப்படும் அன்னபூரணி திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, காலி, கொழும்பு, காங்கேசன்துறை, ஊர்காவற்துறை என இலங்கைத் தீவைச் சுற்றி வரவேண்டும் அத்துடன் விடயம் பரபரப்பாக்கப்படவேண்டும். VAISWA வின் உதவி இதற்கு நாடப்படவேண்டும்.
அப்படி கப்பல் இலங்கையைச் சுற்றினால், இன்றைய மீடியாவின் வளர்ச்சியில், விடயம் கண்டிப்பாக உலகின் எல்லாப்பாகங்களையும் சென்றடையும் என்பதில் ஒன்றும் ஐயமில்லை. பரபரப்புச் செய்திகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பது யாவரும் அறிந்த விடயம். குறைந்தது இலங்கையில் உள்ள அனைவருக்கும் எமது ஆற்றலின் இந்த இன்னொரு வெளிப்பாட்டை தெரியப்படுத்தப்படமுடியும்.
அன்னபூரணி Los Angeles இலுள்ள Queen Mary ஆகவேண்டும்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள Long Beach இல் (Los Angels) இன் புற நகர் பகுதியில் queen mary எனப்படும் பழைய நீராவிக்கப்பல் எப்படி நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றதோ அதே போல் புதிய அன்னபூரணியும் காட்சிப்படுத்தப்படவேண்டும்.
அப்படி புதிதாக வடிவமைக்கப்படும் அன்னபூரணி, நல்லூரின் சங்கிலியன் சிலை, எகிப்திய மம்மி, ஆக்ரா தாஜ் மஹால் போல் , அன்னபூரணி பிறந்த இடத்தில்தான் அது காட்சிப்படுத்தப்படவேண்டும். வேறு எங்கும் அல்ல, இது யதார்த்தத்துக்கு ஏற்புடையதன்று. வல்வெட்டித்துறையில் இதற்கு பெருத்தமான இடம் உதயசூரியன் அல்லது ரேவடிக் கடற்கரையின் ஒரு பகுதி .
எள்ளுப்பாகு மற்றும் பொரிவிளாங்காய் இவைகளுடன்
Quuen mary நீராவிக்கப்பலை உல்லாசப் பயணிகள் உட்சென்று பார்க்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளமையால் வருமானமும் வருகின்றது. பார்த்துவிட்டு வரும் பொழுது வெளியில் உள்ள கடைத்தொகுதிகளில் Queen Marry சம்பந்தப்பட்ட நினைவுப்பொருட்கள் விற்கப்படுகின்றன. இது போல் நாமும் செய்யவேண்டும். வெளியிலிருந்து வருபவர்கள் எள்ளுப்பாகு மற்றும் பொரிவிளாங்காயுடன் எமது ஆற்றலை வெளிப்படுத்துவதான நினைவுப்பொருட்களையும் எடுத்துச்செல்லவேண்டும் .
அன்னபூரணி பழையது என்று ஒதுக்கக்கூடிய விடயமல்ல. அன்னபூரணிக்கு பின்னால் உள்ள விடயங்களை ஆத்மார்த்தமாக அறிந்தவர்கள் இதற்கு நிச்சயம் முன்வருவார்கள். வல்வெட்டித்துறையில் மீண்டும் ஒரு அன்னபூரணி வல்வெட்டித்துறையை என்றோ ஒருநாள் அடையாளப்படுத்தும்.
Long beach (Los Angeles) இலுள்ள Queen Mary (Photo by Valvettithurai.org)