கடந்த 75 வருடத்தில் வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழ்ந்த, வாழ்ந்திருந்த, வாழ்ந்துவருகின்ற – விளையாட்டுக்களுடன் தொடர்புடைய யாவரும் கால் பதித்துள்ள ஒரு அழகான பரந்தவெளி மைதானப்பரப்பாக (15 ஏக்கர்கள் அல்லது 240 பரப்புக்கள்) இன்றும் விளங்குவது – வல்வையின் ஊரிக்காட்டின் நெற்கொழு பகுதியில் அமைந்துள்ள மைதானம் ஆகும்.
நெற்கொழு மைதானம், வல்வை பொது விளையாட்டு மைதானம் மற்றும் கழுகுகள் விளையாட்டு மைதானம் என சில பெயர்களால் அழைக்கப்பட்டுவருகின்றது. குறித்த இந்த பரந்த வெளியின் பெரும்பான்மையான பிரதேசம் வல்வெட்டித்துறை சிவன் கோயிலிற்கு சொந்தம் என்பது பலர் அறிந்த உண்மை.
90 களின் நடுப்பகுதிவரை சுமார் 50 வருடங்களாக எந்தவொரு நபரின் தொந்தரவுகளுமின்றி விளையாட்டு வீரர்களால் இந்த மைதானம் பயன்படுத்தப்பட்டுவந்ததற்கு இந்த மைதானத்தை பாவித்திருந்த வீரர்களே சான்றுபகிர்வர்.
1950 களில் வல்வையின் பழம்பெரும் விளையாட்டு வீரர்களான திரு.சிவகுரு (தாத்தா), திரு.முருக்குப்பிள்ளை மற்றும் சிலரின் முயற்சியால் - வல்வை விளையாட்டுக் கழகம் டைனமோஸ் என்னும் பெயரில் இயங்கிய காலங்களில் – வல்வெட்டித்துறை சிவன் கோயில் உரிமையாளர்களுடன் ஒரு எழுதப்படாத புரிந்துணர்வினை ஏற்படுத்தி – ஒரு மைதானமாகப் பயன்படுத்தி வந்தனர்.
அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் இந்த மைதானத்தில் இடம்பெற்றுள்ளன. இன்றும் இடம்பெற்றுவருகின்றன. மிகவும் குறிப்பாக 1971 மற்றும் 1972 ஆண்டுகளில் வல்வை விளையாட்டுக் கழகத்தினால் (Blues) 3 நாட்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டிருந்த தடகள விளையாட்டுப் போட்டிகள் இம் மைதானத்தில் நடைபெற்ற பிரதான போட்டிகளாக பார்க்கப்படுகின்றன.
மேற்குறித்த 2 வருட போட்டியிலும் வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் முன்னிலை வகித்திருந்தது.
தொடர்ந்து ஒரு மைதானமாக பல வீரர்களாலும் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த மைதானம் தற்பொழுது கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் பரமரிக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறாக 1999 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதிவரை வல்வை நகரசபைப் பிரேதேச மக்களின் பாவனையில் இருந்து வந்த இந்த நெற்கொழு மைதானம் ஆனது 1999 இல் வல்வெட்டித்துறை நகரசபையின் அபிவிருத்திப் பணிகளில் ஒன்றாக, நெற்கொழு மைதானத்தின் விரிவாக்கப் பணிகள், அப்போதைய நகரசபைத் தவிசாளர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் இத் திட்டத்திற்கு எதிராக தனி நபர் ஒருவரினால், 2000 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து, நிலுவையிலுருந்து வந்த மைதான விவகாரம் தற்போது பருத்தித்துறை நீதிமன்றில் வழக்காக நிலுவையில் இருப்பதுடன், இதன் தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி கூறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கு வருத்தம் அளிக்கும் விடயம் என்னவெனில் வல்வை நகரசபைக்கு உட்பட்ட பிரதேச மக்களை பிரதிநிதிப்படுத்தும் வல்வை நகரசபை தானாகவே இந்த வழக்கின் எதிர்மனுதாரர் என்னும் நிலையிலிருந்து விலகமுனைவதாகும். இது மனுதாரருக்கு மிகவும் அனுகூலமானவொன்று என்பது யாவற்கும் எளிதில் புலப்படும் விடயம் ஆகும்.
இதனைக் கருத்திற்கொண்டு கை நழுவிப்போகவுள்ள இந்த பாரிய மைதானப் பிரதேசத்தை தொடர்ந்தும் ஒரு பொது மைதானமாக தக்கவைக்க வல்வை நகரசபைக்குட்பட்ட அனைத்து நலன் விரும்பிகளும் முன் வரவேண்டும்.
அரசியலுக்கு அப்பால் நின்று இந்த மைதானத்தை தக்க வைக்க முனையும் எமது பிரதிநிதிகளிற்கு எமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
75 வருட மைதானம் - 15 ஏக்கர் – 240 பரப்பு – 1 பரப்பின் விலை 4 – 5 லட்சம் என்பதையும் நினைவில் வைப்போம்.