“ரேகு” என்றால் சிங்களத்தில் சுங்கம் (Customs) என்று பொருள். வல்வைச் சந்திக்கு அருகில், பல ஆண்டுகளிற்கு முன்னர் இலங்கைச் சுங்கத்தின் அலுவலகம் அமைந்திருந்தது. இதனால் இப்பிரதேசம் “ரேகு அடி” என்று கூறப்பட்டு பின்னர் தற்பொழுது புழக்கத்தில் உள்ள “ரேவடி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது எனப்பெரிதும் நம்பப்படுகின்றது.
மேலும் இப்பிரதேசத்தில் ஒரு முழுமையான சுங்க அலுவலகமும், சுங்க அதிகாரிகள் இருந்தமையும் முன்னர் வல்வெட்டித்துறையை ஒரு துறைமுக நகராக அடையாளபடுத்தியுள்ளது.
பல ஆண்டுகள் முன்னர் ரேவடிக் கடற்கரைப் பகுதியில் பெரிய அரசியல் கூட்டங்கள் உட்பட்ட பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. வல்வையின் மிக முக்கிய மையப்புள்ளிகளில் ஒன்றாக இது விளங்கியிருந்தது.
1996 ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருட இறுதிவரை இப்பகுதியிலிருந்த இராணுவத்தினர் முற்றாக வெளியேறிய பின்னர், தற்பொழுது ரேவடி கடற்கரைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு வந்துள்ளது. இதையடுத்து இக்கடற்கரைப் பிரதேசத்தை திருத்தி அழகுபடுத்தும் முயற்சியில் இப்பிரதேசமக்கள் ஈடுபட்டுள்ளமை தற்பொழுது வல்வை சார்ந்த சகலரையும், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பேசவைத்துள்ளது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.
ஏனெனில் கடற்கரை மண்ணே தெரியாத வண்ணம் அடம்பன் கொடிகளாலும், மற்றும் பல பொருட்களாலும் மூடப்பட்டிருந்த கடற்கரையை இரவு பகலாக எதுவித வெளி ஒத்துழைப்பும் இன்றி, அடையாளம் கண்டு, கடற்கரையை பாதுகாக்கும் வண்ணம் சுமார் 230 அடி நீளமான ஒரு அணை அமைத்து, கடற்கரை மண் மட்டத்தை உயர்த்தி, அணைகளில் சிறார்களைக் கவரும் வண்ணம் வண்ணச் சித்திரங்கள் வரைந்து ஒரு புதுமை படைத்துள்ளார்கள் இப்பகுதி மக்கள்.
இத்துடன் நிற்காமல், வல்வையில் சிறார்களின் குறையைப்போக்கும் வண்ணம் ஒரு சிறுவர் பூங்காவையும் தற்பொழுது அமைத்து வருகின்றனர். கடற்கரைக்கு அழகு சேற்பதை மட்டும் குறிக்கோளாகவன்றி, ஒரே நேரத்தில் பல சிறார்கள் களிப்புறும் வண்ணம், ஒரு நகரத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவிற்கு ஈடாக இப்பூங்கா அமைக்கப்ட்டுவருவது சுட்டிக் காட்டத்தக்கவொன்றாகும்.
இக்கட்டுமானங்களிற்குரிய நிதி உதவிகளை இப்பகுதிமக்களும், இப்பகுதி சார்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. பண நடமாட்டம் குறைந்த இக்காலப் பகுதியில் இது ஒரு முக்கிய விடயம்தான்.
இதைவிட குறிப்பிடக்கூடிய விடயம் என்னவென்றால், கடற்கரை மைதானம் பொதுமக்கள் பாவனைக்கு வந்தபின், அன்றிலிருந்து இன்றுவரை கடற்கரையை அடையாளப்படுத்தும் முயற்சியில் வேதனம் அற்ற சரீர உதவியில் ஈடுபட்டுள்ள இப்பகுதி மக்களான ரேவடி விளையாட்டுக் கழகத்தினரின் அளப்பெரிய பங்குதான்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான சேவையை குறித்த கடற்கரைக்குக் கொடையாகக் கொடுத்துள்ளனர். காலை 7 மணி முதல் இரவு 9, 10 மணிவரை இவர்கள் பணிகள் தொடர்வது கண்கூடு.
இவர்களின் இந்த கடும் உழைப்பு இன்று ரேவடிக்கடற்கரை நோக்கி வல்வையர்களை திரும்பிப் பார்க்கவைத்துள்ளது, பேசவைத்துள்ளது.
இவர்களின் இந்த முயற்சி வல்வையில் மேலும் பல இது போன்ற வேலைத்திட்டங்களிற்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. இவற்றிற்கு நாம் எல்லோரும் எம்மாலான சிறு உதவிகளையாவது செய்வோமானால் வல்வை மேலும் வளம்பெறும் விரைவாக.