பிரபாகரன் பிறந்த ஊரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு (The TNA budget defeated in Prabhakaran’s birth place) - இப்படித்தான் செய்தி வெளியிட்டுள்ளன சில செய்தி ஊடகங்கள், கடந்த 17 ஆம் திகதி வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர்.
நேற்று இதே வரவு செலவு திட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. வாக்களிக்கச் சென்றிருந்த 5 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை வல்வை நகரசபை வளாகத்திற்குள் செல்லவிடாமல் பொது மக்கள் சிலர் தடுத்துள்ளனர். இது ஒன்றும் ஒளிவு மறைவான விடயமல்ல. சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் பொது மக்கள் என பலர் நின்றிருந்தனர்.
தொடர்ச்சியாக 2 முறை வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படாது விடுமானால், அது எமது நகரசபை பிரதேசத்தின் வளர்ச்சியில் பெரிய குந்தகத்தை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. ஆகவே நேற்று எதிர்ப்புத் தெரிவித்திருந்த குறித்த பொதுமக்களின் ஆதங்கம் பிழையான ஒன்றல்ல. ஆனால் 5 உறுப்பினர்கள் நகரசபை வளாகத்திற்குள் செல்ல முடியாமல் இருக்கும் போது வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
ஐவரும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ வாக்களித்திருந்திருப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க, எப்படியாயினும் அவர்கள் வாக்களிப்பது அவர்களின் சுதந்திரம். ஆனால் வாக்களித்த மக்களின் விருப்பு வெறுப்புக்களை கவனத்தில் கொள்வது உறுப்பினர்களின் தலையாய கடமை.
2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினார்கள் எதிர்த்தே வாக்களித்திருந்தனர் – இது ஜனநாயக உரிமை.
இவர்கள் அன்று பாராளுமன்றத்துக்குச் செல்வது தடுக்கப்பட்டிருக்கவுமில்லை.
ஏற்கனவே வல்வைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கம் தொடர்பாக, பல வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த கல்வி அமைச்சின் சுற்று நிரூபம் ஒன்று தூசு தட்டப்பட்டு, எமது பிரதேசத்தில் 2 சிறிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று (27/12/13) இடம்பெற்ற சம்பவம் மேலும் சில இடைவெளிகளுக்கு வித்திடலாம் என்பதுதான் வேதனையான விடயம்.
வெறும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கே “பிரபாகரன் பிறந்த ஊரில்.......“ என்னும் தலையங்கம் இடும் செய்தி ஊடகங்கள் நேற்றைய சம்பவத்துக்குப் பின்னர் எப்படி செய்திகளை - எமது வல்வெட்டிதுறையைப் பற்றி
வெளியிடுகின்றன அல்லது வெளியிடப்போகின்றன என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
எது சரி, எது பிழை , யார் சரி, யார் பிழை என்பது பற்றி அலாவுவது எமது நோக்கமல்ல. மாறாக எமது ஊரில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதே எமது அவா.
ஒன்று மட்டும் நிச்சயம், அடுத்த வல்வை நகரசபைத் தேர்தல் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, போட்டியாளர்கள் (த.தே.கூ) தெரிவிலிருந்து பலத்த எதிர்பார்ப்பையும், போட்டியையும் கொடுக்கும் என்பது மிகவும் தெளிவாகின்றது. வேறும் சில அரசியல் நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.