தட்டி பஸ், சிவபுர வீதியின் தோற்றம், வாகையடி, கம்பர்மலையூடான பஸ் போக்குவரத்து சேவை, தொண்டமனாற்று முதலாவது பாலம் என வல்வையூர் அப்பாண்ணா (திரு.அப்பாத்துரை மாஸ்டர்) அவர்கள் எழுதும் வாராந்த தொடரில் வரும் விடயங்கள் நடுத்தர வயதிற்கு கீழ்பட்ட, குறித்த இப்பிரதேசத்தைச் சேர்ந்த அனைவருக்கும் புதிய விடயம் என்பதை அடித்துச் சொல்ல முடியும்.
ஏன் சில விடயங்கள் மூத்தோர்களுக்கும் ஒரு புதிய விடயமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வல்வையின் கீதையாகக் கருதப்படும் பெரியவர் முத்துக்குமாரசாமியின் வல்வை பற்றிய “ஊர் இன்னிசை” என்னும் புத்தகம், பழைய கையெழுத்துச் சஞ்சிகைகள், சில ஆண்டுவிழா மலர்கள், பத்திரிகைகளில் வந்த சிலரின் ஆக்கங்கள், வரலாற்றில் வல்வெட்டித்துறை, வல்வை கடலோடிகள் போன்ற அண்மைய புத்தகப் படைப்புக்கள் என வல்வை பற்றிய பதிப்புக்கள் நீளமானவைதான்.
மேற்குறித்த ஆக்கங்கள் தற்பொழுது சிதறுபட்டதாகவோ அல்லது ஒரு சில அழிவடைந்த நிலையிலேயே உள்ளன.
இதைவிட அரசியல், கடந்தகால இனப்போராட்டத்தின் ஆரம்பப் புள்ளிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்றவற்றிடன் தொடர்புடைய வல்வையுடன் கூடிய வராலாறுகள் இங்கு பேணப்படுவதில் சிக்கல்கள் இருந்ததால் அவையும் பெரிதாக இங்கு எழுதப்படவோ ஆவணப்படுத்தப்படவுமிவில்லை.
மற்ற ஊர் இணையதளங்களைப் போலன்றி எமது ஊர் தளங்களில், எமது ஊரின் வரலாறு – கலை, இலக்கியம், பண்பாடு, முன்னோர்கள், அரசியல், சமயம், சாதனையாளர்கள் கடலியல், கப்பல் கட்டும் கலை, கடலோடிகள், சின்னத் தங்கம் போன்ற அரிதான பெண்கள், பாரம்பரிய விளையாட்டு, கேந்திர முக்கியத்துவம், கல்விமான்கள், தூர தேச நாடுகளுடனான தொடர்பு என மிக நீளும் பட்டியல் – பெரிதாக ஆரம்பிக்கப்படவுமில்லை அன்றி பூரணப்படுத்தவுமில்லை.
வல்வையின் வரலாற்றை முடிந்தவரை பூரணமாகப் பதிவாக்கும் எமது நெடிய பயணத்தின் பல படிகளில் ஒன்றே திரு.அப்பாத்துரை அவர்களின் “வாரம் ஒரு பழங்கதை”.
மிகவும் இரத்தினச் சுருக்கமாக, வாசிப்போரை பழைய காலத்திற்கு கொண்டு செல்லும் வண்ணம் இவரின் பத்திகள் அமைந்துள்ளன. இவரின் ஆக்கங்கள் பரந்துவாழும் பலரையும் கவர்துள்ளன என்பது கண்கூடு.
வாசகர் ஒருவர், இவரின் ஆக்கங்களில் பழைய படங்களையும் ஒப்பீட்டு நோக்கோடு சேர்த்தால் நன்றாக அமையும் என தனது எண்ணத்தை பதிவாக்கியுள்ளார். உன்மைதான.
எம்மில் பலர் 30, 40 வருடங்களுக்கு முன்னர் எல்லோரும் சேர்ந்து நிற்கும் ஒரு “Family Photo” வே எடுத்திராத நிலையில் – அல்லது எடுத்திருந்தால் பல்வகைக் குண்டு வீச்சுக்கள், எரியூட்டுக்கள், இடம்பெயர்வுகள், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் அழிந்திருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கு முன்னரான புகைப் படங்கள் என்பது - அவ்வளவு எளிதான விடயம் அல்ல.
ஆனாலும் நாம் முடிந்தவரை முயற்சித்து அவ்வப்போது பழைய அரிய படங்களையும் பதிவாக்கவுள்ளோம். எமது இந்த முயற்சிக்கு பலர் உதவி புரிந்துவருகின்றனர். இத்தருணத்தில் இவர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
வாசகர்கள் ஆகிய நீங்களும் ‘வாரம் ஒரு பழங்கதை’ அல்லது ‘வல்வை சிவன் கோயில் வரலாறு’ போன்றவற்றை படிப்பதுடன் நின்று விடாது, நீங்களும் வல்வை பற்றிய சிறு ஆக்கங்களையும் ஆவணங்கள் மற்றும் படங்களுன் பதிவாக்க முன்வரவேண்டும்.
இந்த இணையதளம் ஒரு போட்டிக்காகவோ அல்லது ஒரு சிலரை முதன்மைபடுத்தவோ உருவாக்கப்படவில்லை. மாறாக ‘இன்றைய செய்திகள் நாளைய ஆவணங்கள்’ மற்றும் ‘வல்வையுடன் தொடர்புபட்ட பழைய விடயங்களை ஆவணப்படுத்தல்’ போன்ற சீரிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
எழுத்தள்ளர்கள் “ஒரு சிலர்” தான் என்ற தடையத்தாண்டி, வல்வையின் வரலாற்றை மேலும் எமது இணையதளத்தில் பதிவாக்கும் எமது இந்தப் பயணத்தில் நீங்களும் ஒரு சிறு அங்கமாகவேனும் இருக்க முன்வருவீர்கள் என்று பெரிதும் நம்பு கின்றோம்.