எமது பிரதேசத்தைப் பற்றிய விடயங்களை எமது இணையதளத்தில் சிங்கள மொழியிலும் வெளியிட முடிவுசெய்துள்ளோம். தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ள மிக முக்கிய விடயங்களை எதுவித கருத்து மாற்றமுமின்றி அவ்வாறே பிரசுரிக்கவுள்ளோம். இது எமது பிரதேசத்தை பற்றி அறியவிரும்பும் தென்னிலங்கை மக்களுக்கு ஒரு சிறுவாயிலாக இருக்கக்கூடும்.
வல்வையின் தொன்மையான சிறப்பியல்களான வரலாறு, கடலியல், வாணிபம், விழாக்கள், மரபுகள், கலை மற்றும் கலாச்சாரம், புலவர் வையித்திலிங்கப்பிள்ளை, சாகசவீரர் ஆனந்தன், கல்விமான்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் போன்ற எந்தவொரு விடையங்களும் சிங்களமொழியில் இல்லாததால் (ஆங்கில மொழியிலும் பெரிதாக இல்லை என்பது வேறு விடையம்) வல்வையின் உணமையான வரலாறு பற்றி தென்னிலங்கை மக்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை.
இதுவரை எமது கருத்துக்களையோ அல்லது விடயங்களையோ பிறமொழிகளில் நாம் வெளிப்படுத்தத் தவறியிருக்கின்றோம்.
மாற்றத்தை விரும்பும் நாம், பூனைக்கு மணி கட்டுவதுபோல் இம்முயற்சியை எடுத்துள்ளோம். மிகவும் கடினமான பணி. ஒரு சில லட்சங்களுடனோ அல்லது பிற இணையதளங்களிலிருந்தோ அல்லது புத்தகங்களிலிருந்தோ களவாடிச்செய்யக்கூடிய விடயம் அல்ல இது. சில வருடங்கள் என்னும் இலக்கை நிர்ணயித்து இப்பணியில் இறங்கியுள்ளோம்.
இதன் முதற்படியாக எமது இணையதளத்தைப் பற்றிய About us என்னும் பகுதி சிங்கள மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ் எமது முயற்சிக்கு வேறு எந்த நோக்கங்களும் இல்லை.
இதன்மூலம் இலங்கையில் இவ்வாறு தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் என மூன்று மொழிகளிலும் அமையைப்பெற்ற, அரசு மற்றும் பாரிய நிறுவங்கள் தவிர்ந்த, முதலாவது ஊர் சார்ந்த இணையதளமாகவும் எமது இணையதளம் விளங்கவுள்ளது.