வாரம் ஒரு பழங்கதை – இராசிந்தான் கலட்டியும் இராசிந்தான் மணலும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2015 (திங்கட்கிழமை)
எம்பெருமான் வந்தமர்ந்த இடம் “இராசிந்தான் கலட்டி”. காணிகளின் உறுதிப் பத்திரங்களில் “குறித்த இடம் இது” என்பதை தெளிவாகக் காட்டுவதற்காக “காணிப் பெயர்கள்” இருப்பதை அவதானித்திருப்பீர்கள். இந்த முறையில் சிவன், அம்மன் கோவில்கள் அமைந்திருக்கும் இடம் “இராசிந்தான்” என உறுதிப் பத்திரங்களில் காட்டப்பட்டுள்ளது. இருந்தும் நாம் “தாசிந்தான்” என்றே பொதுவாக அழைத்துவருகின்றோம்.
இராசிந்தான் கலட்டி
1840 ல் திருமேனியர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் அம்மன் கோவில் மணியமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1867 ல் அம்மன் கோவிலுக்குத் தெற்காக வாங்கிய 60 பரப்புக் காணியான “இராசிந்தான் கலட்டி” எனும் நிலப்பரப்பிலேதான் சிவன் கோவில் ஸ்தாபிதமாயிற்று. சிவன் கோவில் ஸ்தாபித வேலைகளில் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருந்ததால் இரண்டொரு வருடங்களில் – அம்பாள் கோயில் மணியம் பொறுப்பிலிருந்து “பெரியவர்” என்று அழைக்கப்பட்டுவந்த திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை விலகிக்கொண்டார் என்பது வரலாறு.
“அப்பன்” குடியிருக்கும் இடம் “இராசிந்தான் கலட்டி” என்று சொன்னேன். “கலட்டி” என்பது “கற்கண்டம்” என பொருள்படும். இதை நிரூபுவிக்கும் வகையில் சிவன் கோவில் வளாகம் முழுமையும், அதன் சுற்றாடற்பகுதியும் கற்கண்டமாக இருப்பதை இன்றும் பார்க்கின்றோம்.
சிவன் கோவில் தென்மேற்கு மூலையில் (குருக்கள் குடியிருப்புக்கு அருகாமையில்) கற்பாறைத் தொடர்கள் நிலத்தை அண்டியபடி மேற்புறமாக இருப்பதையும், வடகிழக்கு மூலையில் – வடக்குப் பார்த்த சிறிய திண்ணைப் பகுதி உள்ள இடம் – கற்கண்டம் மேற்புறமாகப் பரவி இருப்பதையும், 2 ஆம் பிரகார வசந்த மண்டபத்திற்குப் பின்புறமுள்ள ஒடுங்கிய பாதைப் பகுதியிலும் கற்தொடர்கள் தெரிவதையும் நாம் கண்ணாரக் காண்கின்றோம்.
திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை
“கலட்டியுச் சிவனே! “கலட்டியுச் சிவனே! எனப் பலரும் கூவியழைத்துச் சிவனாரை வேண்டிக்கொள்வதை சிறுவயது முதல் இன்றுவரை பார்த்துவருகிறோம்.
“இராசிந்தான் மணல்”
அம்பாள் கோடிக்கரையிலிருந்து இங்கு வந்து வேப்பமரத்தடியில் கொட்டகையில் அமர்ந்து கொண்ட காலம் மிகப்பழையது. பின்னர், 1400 ஆம் ஆண்டளவில் கர்ப்பக் கிரகத்தில் அம்பாள் திருவிக்கிரகமும் நந்தி - பலிபீடமும் அமைக்கப்பட்டு பூசைக்காகவும் ஒருவர் நியமிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அம்பாள் அபிஷேகத்திற்கு வேண்டிய நீர் அருகில் இருத்த மணற் கிணற்றிலிருந்தே பெறப்பட்டதாகவும் பழைய வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. தற்போது கோவிலின் உட்புற பாவனையிலுள்ள தீர்த்தக் கிணறு, பூங்கொல்லைக் கிணறு, மடைப் பள்ளிக் கிணறு ஆகியவை பின்னர் வந்தவையே.
1796, 1864, 1884 ஆகிய ஆண்டுகளில் அரசினால் வெளியிடப்படும் கோவில்கள் பற்றிய பதிவேடு பின்வருமாறு கூறியுள்ளது. 1795 இல் வேலாயுதர் புண்ணியர் என்பவரினால் “இராசிந்தான மணல்” காணியில் வெண்கற்களால் கோயில் கட்டப்பட்டதாகவும், இவரே அக்காலப்பகுதியில் மணியமாக இருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 நாள் மகோற்சவ முறைமையும் இவர் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டதாகும்.
1846 ல் எழுதப்பட்ட “மகமை” உறுதியில், நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவிலுக்கும், “இராசிந்தான் மணல்” முத்துமாரி அம்மன் கோவிலுக்கும் கொடுபடவேண்டிய மகமை வீதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.
இராசிந்தான் கலட்டி
“மகமை” என்பது அந்த நாளில் கப்பற் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைவரது ஊதியத்திலிருந்து – அவரவர் வருமானத்திற்கேற்றபடி – திரட்டப்படும் நிதியாகும்.
இந்த மகமை முறையே பின்நாளில் “அமஞ்சி” எனும் பெயரில் நிதி திரட்டப்படும் முறையாகத் தொடர்கிறது.
வேலாயுதர் புண்ணியர் வழி வந்தவரே திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை ஆவார். இவர் அம்பாள் கோவிலின் மணியமாகப் பொறுப்பேற்ற ஒரு சில வருடங்களில் சிவன் கோவில் வேலைகள் ஆரம்பிக்கப்படமையால் தமது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, பலரும் “மணியமாக” நியமனமாகி அம்பாள் கோவிலை நிர்வகித்து வந்தனர்.
1933 ல் வ.வ.இராமசாமிப்பிள்ளை மணியமாகப் பொறுப்பேற்ற பின்னர் அம்பாள் கோவிலில் பலவிதமான திருத்த வேலைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு புதிய தோற்றமும் பெற்றது.
மணலுக் கிணறு
(2010 வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழாவன்று வெளியான “ஆனந்த அருளாட்சி நூலிலிருந்து)
கோவிலின் வட கிழக்கு மூலையில் வீதியின் மறுபக்கமாகக் காணப்படும் கிணறு “மணல்க் கிணறு - மணலுக் கிணறு” என அழைக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் துலாக் கிணறாக இருந்த மணலுக்கிணறு அண்மைக் காலத்தில் கப்பிக் கிணறாகிவிட்டது.
அம்பாள் கோவில் வளாகத்தினுள் கிணறுகள் தோண்டப்படுவதற்கு முன்பு இந்த மணலுக் கிணற்றிலிருந்தே அம்பிகையின் திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன.
அம்பாளின் அந்நாளைய திருவிழாக் கால விளம்பரங்களில் “தாசிந்தான் மணல் தாயே மகமாரி” என குறிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். இதில் வருகின்ற “மணல்” என்கின்ற வார்த்தைக்கும் “மணல்க் கிணறு” என இன்றும் கிணறு அழைக்கப்படுவதற்கும் உள்ள ஒற்றுமையை அன்பர்கள் ஊன்றிக் கவனிக்கவேண்டும்.
இராசிந்தான் மணல்
பகலிலே “ஜில்” லெனக் குளிர்ந்த படியும், இரவில் கத கதவென வெண் சூட்டுடனும் இருப்பது இந்தக் கிணற்று நீரின் தனி விசேடம். மழை விழுகின்ற இரவு வேளைகளில் குளித்தால் கன்னியா வெந்நீரூற்றில் குளித்து வந்த உணர்வு ஏற்படும்.
இந்நாளைய உத்தேச வீதி அகலிப்பு வேலைகளின் போது, அம்பாள் திருக்கோவிலின் ஆரம்ப கால வரலாற்றோடு தொடர்புபட்ட மணலுக் கிணற்றுக்கு ஆபத்து வந்து விடுமோ என்னும் அச்சம் பலருக்கும் உள்ளது.
கோடிக்கரையாள் (ஒரு நேரடி அனுபவம்)
(2008 தேர்த் திருவிழாவின் போது “அம்மன் மகிமைகள்” என்னும் நூலில் உள்ள அப்பாண்ணாவின் கோடிக்கரை அனுபவம் இன்றைய தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது)
நம்மவளின் சொந்த இடம் கோடிக்கரை. விரும்பி வந்தமர்ந்த இடம் தாசிந்தான் மணல் பகுதி. 1846 பிப்ரவரி 1 இல் பதியப்பட்டுள்ள மகமை உறுதியில் “இராசிந்தான மணல்” என்றே உள்ளது.
நம் மகமாயித் தாயின் சொந்த இடம் (கோடிக் கரை) தேடிப் போனோம். பூட்டிய சிறிய கோபுர வாசல். பூசகர் விரும்பிய வேளையில் ஒரு வேளையுடன் நிறைவுறும் பூசைகள். மிகுந்த சிரமப்பட்டு பூசகரைத் தேடிபிடித்து, கோபுர வாசல் திறந்து, உள்ளே போனோம்.
புட்டணிப் பிள்ளையார் கோவிலின் பழைய மண்டப அமைப்பை ஒத்த ஒரு மண்டபம். தொடர்ந்து சிறியதொரு மகா மண்டபம். நேராக கருவறை. “கிரீச்” என்ற சத்ததுடன் திறந்து கொண்ட கருவறைக் கதவுகள் பழையன. உள்ளே இருள்மயம். ஒன்றும் தெரியவில்லை. அர்ச்சகர் ஏற்றிய ஒற்றை விளக்கு ஒளியில் மூத்தவளின் முகங்கண்டு மெய் சிலிர்த்தது. அச்சொட்டாக அவள் நம்மவளேதான்.
மணலுக் கிணறு
மகா மண்டபத்தின் இடது புறம் ஒரு சிறிய திண்ணை. அங்கே மூத்தவளின் உற்சவ மூர்த்தம் பஞ்சலோகத்தில். அப்படியே ஆடிப் போனோம். எட்டித் தொடும் தூரத்தில் மூத்த முத்துமாரியின் திருவுருவை தரிசித்த போது உடம்பு நடுங்கியது. கண், காது, மூக்கு மார்மகங்கள், நான்கு திருக்கரங்கள், வலது பக்கம் உடுக்கும் வாளும், இடது பக்கம் அன்ன பாத்திரமும் சூலமும், தலையின் பின்புறம் ஜொலிக்கும் சுடர்க்கற்றை, வலது காலை நீட்டி – இடது காலை மடித்து உட்கார்ந்திருந்த பக்குவம், அனைத்துமாக அவள் நம்மவளேதான்! நம் தாயே தான்.! நம் தேவியேதான். (இதற்கு மேலாக வார்த்தைகளில் வர்ணிக்க தெரியவில்லை)
ஒரேயொரு வித்தியாசம், மூலமூர்த்தியும் சரி – உற்சவ மூர்த்தியும் சரி, இளையவள் எம் தாயை விட, மூத்தவள் பருத்த உருவ அமைப்பு.
ஒரு பூக்கூட இல்லாமல் அர்ச்சாகர் அர்ச்சனையை நிறைவு செய்ய, அவரோடு பேச்சுக்கொடுத்தோம். “மறைந்த எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அறநிலையத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இந்தச் சிறிய கோபுரமும் சுற்றுச் சுவரும் பூத்துப்பித்து வர்ணம் தீட்டப்பட்டதாக விபரம் சொன்னார்.
நாம் எதிர்பார்த்த வரலாற்று விபரம் எதுவும் அவருக்குத் தெரியவில்லை. கோபுர வாசலைப் பூட்டிக் கொண்டு பூசகர் புறப்பட்டுவிட்டார். நாம் விரும்பிய எதுவும் தெரிந்துகொள்ளமுடியாத மன நெருக்கத்துடன் வெளியே நடக்கின்றோம்.
கோடிக் கரை
வாசலுக்கு அண்மையில் காணப்பட்ட குடிசை வாசலில் இருந்த முதியவருடன் பேசினேன். தெளிவாகப் பேசினார். அவரது வார்த்தைகள் – அவரது தமிழிலேயே. “எங்க பாட்டன் – எங்க அப்பன் சொல்லியிருக்கான். உள்ளே இருந்தவள் எங்கேயோ எப்பவோ போயிட்டாள். ரொம்ப காலமாக பூசை புனக்காரம் எதுவுமே இல்லாம பூட்டியே கிடந்தது கோயில். இப்ப கிட்டைக்கைதான் கதவு திறந்து ஒரு வேளை பூசை பண்றாங்க. உந்தப் பள்ளியும் வீதியும் இப்ப வந்தது. இப்ப கொஞ்சம் திருத்தம்””.
எனக்கு உடம்பு நடுங்கியது. அவள் எங்கும் போகவில்லை நம்மிடம் தேடி வள்ளத்தில் வந்து விட்டாள். (வள்ளக்காரனுக்கு அவள் சொன்ன பெயர் – கயிலைமலை மாதரசி).
வல்வையூர் அப்பாண்ணா
விரும்பிய செய்தி கிடைத்து உச்சி குளிர்ந்து மனம் நிறைந்ததும் மீண்டும் கோபுர வாசலைப் பார்க்கிறேன். ‘அம்மா மூத்தவளே முத்துமாரி! உன் தங்கை அங்கே எப்படி இருக்கின்றாள் தெரியுமா? மாட மாளிகை (ஊரில் இரண்டாவது பெரிய வீடு), நகை நட்டு (சொந்தமாகவே வித விதமான தங்க நகைகள்), வண்டி வாகனம் (திருவுலாப் போக இரண்டு சகடைகள்,) ஆடை அலங்கராம் (வேளைக்கு ஒரு புத்தம் புதுசேலை - ஒரு முறை அணிந்த சேலையை மறுமுறை தொடுவதில்லை), சொந்த பந்தம் (இன்றைய உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் உள்ள நம்மவர்கள் அனைவருமே அவளுக்கு உறவுகளே), பணமும் -வசதியும் (அடி ஆத்தா.... ஊரிலேயே பெரிய பணக்காரி அவளே, ஆனால் நீ மட்டும்... அம்மா... இப்படி.... என கனத்த மனதோடு திரும்பிய எனக்கு மூத்தவளின் வார்த்தைகள் மானசீகமாகக் காற்றோடு கலந்து வருகிறது.
“அவள் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்” இளையவளை மூத்தவள் வாழ்த்துகிறாள். நிறைந்த மனதோடு பிரிய மனமின்றிப் பிரிந்து வருகிறோம்.
- அப்பாண்ணா -
குறிப்பு
இதுவரை இவரின் 9 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.