வாரம் ஒரு பழங்கதை - இரட்டைநீலங்கள் - (கருநீலமும் வெளிர்நீலமும்) - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2015 (சனிக்கிழமை)
கருநீலமும் வெளிர்நீலமும் சிதம்பராவின் இரட்டை நீலநிறங்கள். இரு நீலங்களையும் பார்த்து வளர்ந்து மனதில் நிறுத்தி எல்லாத்துறைகளிலும் வெற்றிகள் பல பெற்று முன்னேறிய தலைமுறைகள் பல.
இரு நீலங்களின் கல்வித்துறை சார்ந்த முன்னேற்றம் கணக்கிட முடியாதவை. வைத்தியகலாநிதிகள், விசேட வைத்தியநிபுணா்கள், பொறியியலாளர்கள், நீதிபதிகள், கணக்காளா்கள், அரசாங்க நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பல்துறை சாதனையாளர்கள், கலைஞர்கள், கப்பற்துறையில் தலைவர்கள் உட்பட பல்வேறு தரத்தினர், அரசஊழியர்கள் எனப்பல துறையினரும் சிதம்பராவின் செல்லப்பிள்ளைகள். இரட்டை நீலங்கள் பிரசவித்த குழந்தைகள்.
இதற்குக் காரணர்கள் பல பேர். சிதம்பராவின் ஸ்தாபகர் உயர் திரு.சிதம்பரப்பிள்ளை, முகாமையாளர் நா.தையல்பாகா், மிக நீண்டகாலம் அதிபராவிருந்து பல திறமைசாலிகளை உருவாக்கிய எஸ்.வண்ணமாமலை ஐயங்கார் உட்பட அவர்கள் பின் வந்த அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலபேரதும் உழைப்பில் பெறப்பட்ட வெற்றிகளே இரட்டை நீலங்களின் கல்விசார் வெற்றிகள். கல்வி தவிர்ந்த விளையாட்டு சாரணீயம் போன்ற பல்வேறு துறைகளிலும் இரட்டை நீலங்களின் வெற்றிகள் தொடர்கின்றன.
அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்டப்போட்டியில் 1948ல் இரண்டாம் இடத்தையும், 1951ல் முதலிடத்தையும் இரட்டை நீலங்கள் பெற்றுக்கொண்டன. அந்நாளைய ஆசிரியர்களான பொ.பாலசுப்பிரமணியம், S.R. அரியரெத்தினம் ஆகியோர் பயிற்சியாளா்களாக இருந்து இரட்டை நீலங்களின் வெற்றிக்குக் காரணமாயினா்.
1955, 1959, 1961, 1966, 1967 ஆகிய ஆண்டுகளில் வடமராட்சி ஆசிரிய சங்கத்தாரால் (V.T.A) நடாத்தப்பட்ட கைப்பந்தாட்டப் போட்டிகளிலும், 1968ல் கல்வியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியிலும் முதலிடம் பெற்று வெற்றி வாகைசூடினர். அந்நாளைய மாணவர்களான க.தேசிகாமணி (கட்டி), B.ஹரிச்சந்திரா, R.தனபாலசிங்கம், A.அமிர்தலிங்கம், K.அருமைச்செல்வம் ஆகியோரது கைப்பந்தாட்டத் திறமையைப் பலரும் பாராட்டினா்.
இதே போன்று வடமராட்சி ஆசிரியா் சங்கத்தாரால் (V.T.A) நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 1957ல் நீலங்களின் 3ம் பிரிவினரின் வெற்றியும், 1959, 1961 இல் நீலங்களின் 1ம் பிரிவினரின் வெற்றிகளும் குறிப்பிடத்தக்கன. கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவின் முதன்மை வீரரான க.தேவசிகாமணி (கட்டி) யுடன் இராஐசிங்கம் அல்லது இராஐதுரை (பாபு), A.அமிர்தலிங்கம், சத்திவேல்முதலான திறமையான வீரா்களின் விளையாட்டு நினைவில் நிற்கிறது.
எமது கல்லுரியின் கோல்காப்பு வீரராக இருந்த A.இரத்தினசிங்கம் 1965ம் வருட காலப்பகுதியில் யாழ்மாவட்ட உதைபந்தாட்ட குழுவிற்கு தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் கோல்காப்பாளராக இருந்தமை கல்லூரியின் இரட்டை நீலங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாகும்.
கரப்பாந்தாட்டம் உதைபந்தாட்டம் போன்று மெய்வல்லுனர் போட்டிகளிலும் அந்நாளிலிருந்தே நீலங்கள் பெருவெற்றியைப் பெற்றன. 1949ல் S.A.துரைலிங்கம், 1955ல் இ.துரைசிங்கம், A.V.அருணாசலம், 1963ல் K.பாலசிங்கம், 1963, 1964, 1965 ல் S.சிவனருள்சுந்தரம், N.T.நாகேஸ்வரன், 1970ல் A.அருள்பகவான், 1971ல் V.விஐயராசாகி.நிரஞ்சன், 1992ல் இ.சாந்தரூபன், 1995ல் த.சதீஸ்குமார் என இரட்டை நீலங்களின் வெற்றிகள் தொடர்கின்றன. இந்தக் காலகட்டத்தில் சிதம்பராவின் உடற்பயிற்சி ஆசிரியராகவும் பயிற்சியாளராகவும் இருந்த மறைந்த தியாகராஐா ஆசிரியரின் சேவை மறக்க முடியாதது..
சிதம்பரா சாரணீய வரலாற்றில் இரட்டை நீலங்களின் வெற்றி மகத்தானது. யாழ் பழைய பூங்காப் போட்டிகளில் கிடைத்த தொடர் வெற்றிகளும், 1964-1969-1970 ஆகிய ஆண்டுகளில் ஆகக்கூடிய இராணிச்சாரணர் கொடியினைப் பெற்றுக் கொண்டமையும், 1968-1969-1970ல் தொடா்ச்சியாக மூன்று வருடங்கள் அகில இலங்கையிலும் முதல் தர சாரணர் குழுவாத் தெரிவு செய்யப்பட்டமையும் இரட்டை நீலங்களின் வரலாற்றுப்பதிவுகளாகும். “ சிதம்பராசாரணீயம் ” எனும் தலைப்பில் எழுதப்பட்ட பழங்கதையில் முழுவிபரமும் தரப்பட்டிருப்பதால் இப்பந்தி மிகச்சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
1961ல் “ வல்வை புளூஸ்” தோற்றம் பெற்றது. இ.சுந்தரலிங்கம் (சுந்தரிஅண்ணா), சபா.இராஜேந்திரன் (குட்டிமணி), வ.அரசரெத்தினம், சு.பூரணச்சந்திரன், மு.மயிலேறும்பெருமாள், A.V அருணாசலம் ஆகியோரால் 54 ஆண்டுகளுக்கு முன்னா் ஒரு அஞ்சலோட்டப் போட்டிக்காக “ வல்வைபுளூஸ் ” எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டு வெற்றி பெற்றதுடன் “ வல்வை புளூஸ் ” பயணம் ஆரம்பமானது.
சிதம்பராவின் இரட்டை நீலக்கொடிகள்“ “வல்வை புளூஸ் ”கொடியானது. (பெரும்பாலும்) சிதம்பரா மைதானமே புளூஸின் பயிற்சி மைதானமாகியது. சிதம்பராவிலிருந்து ஆண்டு தோறும் வெளியே வரும் பல்துறை விளையாட்டு வீரா்களும்“ வல்வை புளூஸ் ”வீரா்களாகி இரட்டை நீலங்களின் வெற்றிக்குக் காரணமாயினா். உதாரணமாக சிதம்பராவின் புகழ்பூத்த கோல்காப்பு வீரர்களாக இருந்த V.கார்த்திகேயன், A.இரத்தினசிங்கம், K.சிவசண்முகநாதன், S.செல்வச்சந்திரன் என வரிசையாக புளூஸின் கோல்காப்பு வீரா்களானமையைக் குறிப்பிடலாம்.
அஞ்சலோட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், தடகளப்போட்டிகள், கயிறிழுத்தல், அரசஅதிபர் பிரிவுப்போட்டிகள், யாழ் மாவட்டப்போட்டிகள், லாலாசோப்போட்டி ஈழநாடு தினகரன் போட்டிகள் என அனைத்துப் போட்டிகளிலும் இரட்டை நீலங்கள் பங்கு பெறுவதும் வெற்றி பெறுவதும் நாளாந்த சரித்திரங்களாக ஆகின.
போட்டிகளுக்கான சுற்றுலாக்கள் எனும் வரிசையில் வவுனியா, குருநாகல், கண்டி, பேராதனை, திருமலை போன்ற இடங்களில் நடந்த கைப்பந்தாட்ட உதைபந்தாட்டப் போட்டி வேளைகளில் இரட்டை நீலக்கொடி உயர்ந்து பறந்தது. வெற்றிகளும் தொடர்ந்தன.
“ வல்வைபுளூஸ் ” ஸ்தாபகர்களில்ஒருவரும் பல்துறை விளையாட்டு வீரருமாகிய சபா. இராஜேந்திரன் (குட்டிமணி), உதைபந்தாட்டத்தில் தனி முத்திரை பதித்த S.தருமரெத்தினம், வல்வை புளூஸ் கைப்பந்தாட்டக்குழுவில் அங்கம் வகித்த காலத்தில் கல்ஓயா குழுவிற்காகவும் விளையாடி அகில இலங்கைக் கைப்பந்தாட்டக்குழுவிற்குத் தலைமை தாங்கிப் பெரும் புகழ்பெற்ற S.கதிர்காமலிங்கம், கைப்பந்தாட்டம்- உதைபந்தாட்டம் இரண்டிலுமே அபாரமாக விளையாடிச் சரித்திரம் படைத்த க.தேவசிகாமணி (கட்டியண்ணா), A.Vஅருணாசலம் என அந்நாளைய வீரா்களின் பட்டியல் மிகநீண்டது.
இரட்டை நீலங்களின் புகழ் விரிந்த அந்நாளில் நம்மோடு இணைந்திருந்த வ.அரசரெத்தினம், A.V.அருணாசலம், S.கதிர்காமலிங்கம், S.தர்மரெத்தினம், A.இந்திரலிங்கம் (பழமண்ணா), A.ஜெயச்சந்திரன், S.யோகச்சந்திரன், S.அழகரெத்தினம், S.அருட்பிரகாசம், S.செல்வச்சந்திரன், சி.ஈஸ்வரலிங்கம் (குட்டிமான்), சி.இராஜதுரை (பாபு) போன்றோர் இன்று நம்மோடு இல்லை. ஆயினும் நீலங்களின் தோற்றத்திற்கும் வெற்றிக்குமான அவர்களது மகத்தான பங்களிப்பிற்காக நாம் இன்றும் தலைவணங்குகிறோம்.
வல்வை புளூஸ் உதைபந்தாட்டக்குழுவில் ஒரேநேரத்தில், ஒரேபோட்டியில் சி.தர்மரெத்தினம், சி.அழகரெத்தினம், சி.சந்திரலிங்கம், சி.இந்திரலிங்கம் ஆகிய நான்கு சகோதரா்கள் விளையாடி நீலங்களின் வெற்றி விருதுகளைச் சுவீகரித்தனா். அதேபோல, A.இந்திரலிங்கம் (பழமண்ணா) ,A.அமிர்தலிங்கம், A.இரத்தினசிங்கம் எனும் மூன்று சகோதரர்களும் ஒரேநேரத்தில் இரட்டைநீல உதைபந்தாட்டக்குழுவில் விளையாடிப் பெருமை சேர்த்தனர்.
நம்மவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில்“ வல்வை புளூஸ்” பெயரில் கழகம் அமைத்து இரட்டை நீலங்களின் பெயரை நிலைநாட்டி வருகின்றனர். கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இராமேஸ்வரம் மண்டபம்முகாம் - திருச்சி எனப் பல்வேறு நாடுகளிலும் இன்று இரட்டை நீலக்கொடிகள் பறந்துகொண்டிருக்கிறது.
லண்டனில் வல்வை நலன் புரிச்சங்கமும் வல்வை புளூசும் இணைந்து பாட்மின்ரன், கிரிக்கெட், உதைபந்தாட்டம் எனப் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் நடாத்திவருகின்றனர். இரண்டு அமைப்புக்களுக்கும் இரட்டை நீலங்களே கொடிகளாக இருந்தபோதும், கொடிகளின் நடுவே பொறிக்கப்பட்டுள்ள இலச்சினைகளில் வேறுபாடுள்ளது. அருகருகே இரண்டு நீலக்கொடிகளும் பறக்கும் காட்சி கண் நிறைந்த காட்சியாகிப் பரவசப்படுத்துகிறது.
1961ல் வல்வை புளூஸ் ஆரம்பித்த காலம் முதல் 2011 வரையிலான 50 வருடப் பூர்த்தியினை முன்னிட்டு லண்டன் வல்வை புளூஸ் கழகத்தினர் “ பொன்விழாமலா் ” ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். பொன்நிறத்தில் 50 வருட நிறைவுச் சின்னம் இரு நீலங்களின் அலைவரிசை பந்தை உதைத்துத்தள்ளும் ஒரு வீரனின் உணர்வுபூர்வமான அசைவு அதன் கீழே “ ஒரு கழகத்தின் அரை நூற்றாண்டுப் பயணம் இங்கே பிரமிப்புடனும் நன்றியுடனும் பதியப்பட்டுள்ளது.” எனும் வாசகம் கொண்ட கண்கவர் முற்பக்க அட்டை வழுவழுப்பான கடுதாசியில் 216 பக்கங்கள், 190 தனிப்படங்கள் 75 குழுப்படங்கள் ,படம் இல்லாத தகவல்கள் 30, பழையன புதியன அனைத்தையும் கண் முன்னே கொண்டு வரும் அரிய தகவல்கள் கட்டுரைகள் என வேண்டியன வேண்டியாங்கு விருப்புடனே செய்து முடித்துள்ளார்கள் பேணப்பட வேண்டிய தகவற் பொக்கிசம் இது.
இப்பொன் விழா மலர் இரட்டை நீலங்களின் மணிமகுடம், இதனைச் சிறப்புற ஆக்கித் தந்த மலர்க்குழுவினருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கருநீலம் வெளிர்நீலங்களின் வெற்றிகள் இனி மேலும் தொடரும்.
வல்வை புளூஸ் ஆரம்பமான போது ஒரு அணி.
இன்று சுமார் 20 அணிகள்“ வல்வை புளூஸ் ” பெயரில் உலகம் முழுவதும் விளையாடிக் கொண்டிருக்கின்றன.
பொன் விழா மலா் பக்கம் 87 இல் உள்ள கட்டமிடப்பட்ட தகவல் இது.