வாரம் ஒரு பழங்கதை - நெற்கொழு மைதானம் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2015 (வியாழக்கிழமை)
சிதம்பராவின் விளையாட்டு மைதானம் இப்போதிருக்கும் அமைப்பு அனைவரும் அறிந்தது. அந்நாளில் அளவில் சிறியதாக மணல் நிறைந்த தரைப்பகுதியாக இருந்தது அது. அதனால், தரமான முழுமையான விளையாட்டு மைதானத்தின் தேவையை அனைவரும் உணரத் தலைப்பட்டனர்.
இந்த சிந்தனைக்குப் பல வருடங்களுக்கு முன்னரே நெற்கொழு மைதானம் பல உதைபந்தாட்டப் போட்டிகளைக் கண்டிருக்கிறது. நெற்கொழு வைரவா் கோவிலுக்கு வடமேற்கு மூலையில் நாற்புறமும் பனைமரங்கள் வளர்ந்திருந்த
இயற்கையாக அமைந்த புற்றரைப்பகுதி கொண்ட மைதானமே நெற்கொழு மைதானமாகும்.
இந்த தைமானத்தில் வல்வெட்டித்துறை உதைபந்தாட்டச் சங்கம் (V.F.A) சார்பான உதைபந்தாட்டப் போட்டிகளில் காலஞ் சென்றவர்களான சிவகுரு (சிவகுரு தாத்தா) கோல்காப்பு வீரராகவும் அனந்தராசா (அனந்தண்ணா) பின்னணி வீரராகவும் விளையாடியதை சிறுவயதில் நாம் பார்த்து வியந்திருக்கிறோம்.
V.F.A காலத்தின் பின்னர் V.Y.S.C எனும் பெயரில் (வல்வை இளைஞர் விளையாட்டுக் கழகம்) பிரபலமான ஒரு விளையாட்டுக் கழகம் இயங்கி வந்திருக்கிறது. இதனை ஸ்தாபித்த முக்கிய நபர் காலஞ் சென்ற முருகுப் பிள்ளை அவர்களாவார். ( “ சித்தப்பா ” என அனைவராலும் அழைக்கப்பட்ட அவா் திரு பிரேம்குமார் அவர்களின் தந்தையாராவா்) இவருக்கு முழுமையான
ஒத்துழைப்பு நல்கியவர் நெற்கொழு கோவிலுக்கு மிக அண்மையில் கொம்மந்தறை நாவலடியில் குடியிருக்கும் திரு இராமச்சந்திரன் (இராமண்ணா) ஆகும். இவரும் ஒரு பிரபலமான உதைபந்தாட்ட வீரரே.
இருவரும் இணைந்து பல்வேறு உதைபந்தாட்டப் போட்டிகளையும் ஒழுங்கு செய்த போது குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரபலமான பல்வேறு உதைபந்தாட்டக் குழுக்கள் போட்டிகளில் கலந்து கொண்டன. இந்தப் போட்டிகளில்
V.Y.S.C சார்பாக விளையாடிய பலபேரை நினைவுபடுத்த முடிகிறது.
சுங்க வீதியில் காலஞ் சென்ற T.S நாகரத்தினம் அவர்களின் மாடிவீட்டின் தென்புறம் உள்ள சிறிய ஒழுங்கையில் குடியிருந்த காலஞ்சென்ற விநாயகசுந்தரத்தின் பிள்ளைகள் நால்வர் ஒரே குழுவில் (V.Y.S.C) விளையாடியமை குறிப்பிட வேண்டியதொன்று. காலஞ் சென்றவர்களான V.அமிர்தேஸ்வரராசா (பின்னணி வீரா்), V.நடராசா (கோல்காப்பு வீரா்), V. அருணாசலம் (பின்கள வீரர்) மற்றும் V.குமாரசாமி (முன்கள வீரர்) ஆகிய நால்வருமே இவர்களாவர்.
றெபிரி சுப்பண்ணா
இவர்களை விட இரண்டொருவர் பெயர்கள் நினைவில் கொள்ள முடிகிறது. திரு.S.குமாரசாமி (எக்கவுண்டென்ற் தற்போது அவுஸ்திரேலியாவில். ஊறணி வைத்தியசாலைக்கு அண்மையில் குடியிருந்த காலஞ்சென்ற தாயுமானவர் (Dr.கோணேஸ்வரனுக்கு உறவினர்). ஏனையவர்களை நினைவில் கொண்டு வர முடியவில்லை.
V.F.A, V.Y.S.C காலத்திற்குப் பின்னர் சிலகாலம் முறைப்படியான பாவனை பற்றித் தெரிந்து கொள்ள முடியவில்லையாயினும், கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் பலதும் அங்கு நடந்திருக்கிறது. 1961 ல் வல்வை விளையாட்டுக் கழகம் சார்பாக (V.S.A) “ வல்வை புளுஸ் ” உதயமாகி வளர்ச்சியடைய உதைபந்தாட்டப் போட்டிகளும் உச்சம் பெற்றன. 1962 ல் வல்வை புளுஸ் கோஸ்டிக்கும், வதிரி பொம்மர்ஸ் கோஸ்டிக்கும் இடையே மின்னொளியில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டி விறுவிறுப்பாக நடந்தது.
குடாநாட்டிலேயே முதற் தடவையாக நடந்த உதைபந்தாட்டம் “ வல்வை புளுஸ் ” கோஸ்டியின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சுந்தரப் பெருமான் கோவிலுக்கு கிழக்கே குடியிருந்த காலஞ் சென்ற இளையபெருமாள் அப்பாவின் “ ஜெயா வைற் ” மின்பிறப்பாக்கி மூலம் நெற்கொழு மைதானத்தை இரவைப் பகலாக்கி பல்லாயிரம் உதைபந்தாட்ட ரசிகா்கள் மத்தியில் இப்போட்டி நடந்தேறியது.
இதனைத் தொடா்ந்து உள்ளுா் கழகங்களுக்கிடையேயிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் தொடா்ந்தன. நுழைவுக் கட்டணமாக சதம் 25 வசூலிக்கப்பட்டது. நெற்கொழு மைதானத்தின் வடமேற்கு மூலையில் மைதான எல்லைக் கோட்டை மிக அண்மித்தபடி இருந்த பழைய கிணறு ஒன்று மூடப்பட்டு, 15 அடி வரை அகலமாக மைதானம் வடபுறம் நீட்சியடைந்து முழுமை பெற்ற ஒரு உதைபந்தாட்ட மைதானமாக மாறியது.
நெற்கொழு மைதானத்தில் நடைபெற்ற சகல உதைபந்தாட்டப் போட்டிகளிலும் சம்மந்தப்பட்ட ஒரு கதாபாத்திரம் பற்றிக் குறிப்பிடாது போனால் பழங்கதை முற்றுப் பெறாது. கட்டையான கரிய உருவம், கறுப்பு நிற மேற்சட்டை அரைக் காற்சட்டை, மேற்சட்டையில் இலங்கை உதைபந்தாட்ட மத்தியஸ்தா் சங்க அங்கீகாரத்திற்கான அடையாளப் பதக்கம், கழுத்தில் தொங்கும் ஒரு விசில்.
இதுவே அன்றைய அவரது தோற்றப் பொலிவு. போட்டிகளில் தவறு நடந்துவிட்டால் விசிலடித்தபடி ஒரு காலை சற்றே மடக்கிக் குனிந்த படி ஒரு கையை மேலே உயா்த்தி மறு கையை தவறு நடந்த இடத்தைச் சுட்டி நிற்கும் அவரது மத்தியஸ்த பாணி அனைவா் மனதிலும் இன்றும் நிற்கிறது. நீண்ட காலம் திருச்சியில் வாழ்ந்த பின்னா், தற்போது ஊரோடும் உறவோடும் வாழ்ந்து வரும்“ றெபிரி சுப்பண்ணா ” என அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் தீருவிலைச் சோ்ந்த “ அருளம்பலம் சுப்பிரமணியம் ” என்பவரே அவராகும். அந்தக் காலத்திலேயே இலங்கை உதைபந்தாட்ட மத்தியஸ்தா் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மத்தியஸ்தராக நம் மத்தியில் வலம் வந்தவர் அவா். சாரம் சேட்டுடன் மூக்குக் கண்ணாடி அணிந்தபடி எநநேரமும் கையில் குடையுடன் நம் வீதிகளில் இன்று நாம் காணும் “ றெபிரி சுப்பண்ணா” இன்னும் பல்லாண்டு காலம் வாழ வாழ்துகின்றோம்.
வல்வை ஹெலியன்ஸ் விளையாட்டுக் கழகம் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியினை 1964, 1965 இல் நெற்கொழு மைதானத்தில் நடாத்தியது. 1964 இல் கதிர்காமலிங்கம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காகவும், 1965 இல் (மதவடி) அரசரத்தினம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காகவும் இப்போட்டிகள் நடாத்தப்பட்டன.
1966 இல் ஹெலியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆனது ஹெலியன்ஸ் நாடகக் குழுவாக உருவகம் பெற்று, பல பிரபல நாடகங்களை மேடையேற்றினார்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
1964-1965-1967 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஊா் எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான தட-கள விளையாட்டுப் போட்டிகள் “ வல்வை புளுஸ் ” ஏற்பாட்டில் நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் நெற்கொழுவின் புற்றரை மைதானத்தில் சரியான அளவு கொண்ட (200 மீற்றா்) TRACK அடிக்கப்பட்டு, முறைப்படியான தூர நேர கணிப்புகளுடனும் தட-கள விதிகளுக்கமைய நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நெற்கொழு மைதானம்
ஒவ்வொரு ஆண்டிலும் முதல் ஆண்டின் சாதனை முறையடிக்கப்பட்டமை இந்தக் தட-களப் போட்டியின் தரத்தையும் வளா்ச்சியையும் காட்டியது. பல்வேறு காரணங்களினாலும் இந்தப் போட்டிகளைத் தொடர முடியாமற் போக, வல்வை சனசமூக சேவா நிலையத்தால் ஓரிரண்டு ஆண்டுகள் மேற்குறித்த தடகளப் போட்டிகள் நெற்கொழு மைதானத்தில் நடாத்தப்பட்டது. அந்த வேளையில் திரு ஜெயபாலசிங்கம் வல்வை ச.ச.சே நிலையத்தின் செயலாளராக இருந்தார் என்பது
நினைவில் உள்ளது. பின்னா் ஏதோதோ காரணத்தால் இதுவும் இடை நிறுத்தப்பட்டது.
எம் ஊரில் இலைமறை காயாகவிருக்கும் வீர-வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொணர இத்தகைய தடகளப் போட்டிகள் தொடர வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலவர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
நெற்கொழு மைதானத்தினைச் சுற்றியுள்ள காணிகள் சிலவற்றைச் சுவீகரித்து ஒரு பொது விளையாட்டரங்கு அமைக்கும் உத்தேசமான திட்டம் வரையப்பட்டது. அப்போது ஒரு சில காணிகள் பிரச்சினைக்குரியதாக மாறியதால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதி மன்றம் வரை சென்றுள்ளது. நல்ல முடிவு ஏற்பட்டு, ஒரு பொது விளையாட்டரங்கு அமைய வேண்டுமென்பதே அனைவரதும் விருப்பமாகும்.