வாரம் ஒரு பழங்கதை – எங்கள் வோட்டு – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2015 (சனிக்கிழமை)
இது ஒரு தேர்தல் காலப் பழங்கதை. ஆனாலும் சுவாரிஸ்யமான பழங்கதை. அந்த நாளைய பாராளுமன்றத் தேர்தல்களை விட பட்டினசபைத் தேர்தல்களில் ரம்மியமான காட்சிகள் பலவுமுண்டு.
பட்டினசபையின் காலத்தில் வட்டார ரீதியாக அங்கத்தவர்களின் தெரிவு நடைபெறும். வேட்புமனுக் கொடுப்பவர்களுக்கு (இந்தநாள் போன்று இலக்கங்கள் ஒதுக்கப்படுவதில்லை) நிறங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒரே நிறத்தினைச் தெரிவு செய்ய இருவர் போட்டியிட்டால் லொத்தர் மூலம் ஒருவர் தெரிவு செய்யப்படுவார். பச்சை நிறத்தை தெரிவு செய்வதில் எப்பொழுதும் போட்டி கடினமாகவே இருக்கும்.
“போடு......போடு.......பச்சைப் பெட்டி..... போடு...போடு.....சிவத்தப் பெட்டி.....போடு...போடு....மஞ்சள் பெட்டி.....போன தடவை வெண்ட பெட்டி.....” என கிழக்கிலிருந்து மேற்காக ஒரு ஊர்வலம் போகும். மேற்கிலிருந்து கிழக்காக ஒரு ஊர்வலம் போகும்.
அனேகமாக எல்லோரிடமும் கைகளில் நிறக் கொடிகள் இருக்கும். இரண்டு ஊர்வலங்களும் அநேகமாக சந்தியில் சந்தித்துக் கொள்ளும் போது உரசல்களும் ஏற்படும். வாய்த் தர்க்கம் முற்றி அடி – தடி ஏற்படும் வேளைகளில் கையில் பிடித்திருக்கும் நிறம் தாங்கிய கொடிகள் சண்டைக்கான கத்தி – வாள் கேடயங்களாகப் பயன்படும். பொதுவாக இத்தகைய ஊர்வலங்களில் பெண்கள் கலந்து கொள்வது மிக அரிதாகவே இருக்கும்.
எல்லா நிறத்தினருக்கும் நாலாறு பெருங்குடி மக்கள் வலமும் இடமுமாக இருப்பர். அவர்களே பிரச்சனைகளை உண்டாக்குபவர்களாகவும் – ஊதிவிடுபவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கான சூடான பானங்கள் ஆங்காங்கே மறைவிடங்களில் இருக்கும்.
நிறக் கொடிகள் கட்டிய கார்கள் இங்கும் – அங்கும் பறந்து திரியும். அந்தநாளில் ஊரில் இரண்டொருவரிடம் மட்டுமே நின்றிருந்த பியூக் (Buke) கார் – மேற்கூடாரத்தை மடித்து விட்டபடி – மட்காட்டில் மட்டும் பக்கத்திற்கு இருவர் தொங்கிக்கொள்ள – மொத்தம் பத்துப் பதினைந்து பேர்களைச் சுமந்தபடி சர்...... சர்ரெனப் பாய்ந்தோடி சந்தியைக் கலக்கியடிக்கும்.
(பியூக் கார்களே பிற்காலத்தில் கோயிற் சகடைகளாகப் பரிணாமம் பெற்றன)
பியூக் கார்களுக்குப் பச்சை நிறம் வாய்த்து விட்டால் – வாழை - தோரணங்கள், இலை குழை கொப்புகள் எனக் காரை சுற்றிய சோடனைகளுடன் – பத்துப் பதினைந்து இளவட்டங்களையும் காரில் ஏற்றி “பச்சைப் பெட்டிக்கு “ஜே”’ எனக் கோஷமிட்டபடி ஓடித் திரிவார்கள்.
வாக்களிப்பு தினத்திற்கு முதல் நாளே, வாக்களிப்பு நிலையத்திற்கு மிக அருகாமையில் அல்லது முன்பாக கொட்டில்கள் போடப்பட்டு அந்தந்த நிறங்களால் அலங்கரிக்கப்பட்டுவிடும். இல்ல விளையாட்டுப் போட்டி வேளையின் போது இல்லங்களை அலங்கரிக்கும் தோற்றம் தென்படும். இதில் கூட பச்சைப்பெட்டிக் காரருக்கு இயற்கைப் பொருள்களினால் அலங்காரம் செய்யும் கூடுதல் வாய்ப்பு வந்து சேரும். ஏனையவர்கள் அந்தந்த நிற சேலைகளைக் கொண்டு அலங்கரிப்பர்.
விடிந்தால் வாக்குப் பதிவு நாள். இந்த நாள் போன்று சொந்த வாகனங்கள் – மோட்டார் சைக்கிள் என்பன அன்றில்லை. அதனால் அநேகர் நடந்தே வாக்களிப்பு நிலையம் வந்து சேருவர். வேட்பாளருக்கான வாகனங்கள் தூர இடங்களிலிருந்து ஆட்களை ஏற்றி வந்து அவரவர் கொட்டில்களில் விடுவார்கள். வேட்பாளர் அல்லது எடுபிடி ஆட்கள் வருபவர்களுக்குக் குளிர்பானம் வழங்கி – அன்பொழுகப்பேசி – பாடம் புகட்டி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைப்பார்.
ஒவ்வொரு கொட்டில் மூலையிலும் தனியாக ஒரு அடைப்பு இருக்கும். ஆட்களை அவதானித்து – ஆட்களைச் சைகையால் கொட்டில் முலைக்கு அழைத்துப் போய் சூடான பானங்கள் வழங்கி அனுப்பி வைப்பார்.
கொட்டில்களிலிருந்து வாக்களிப்பு நடைபெறும் இடம்வரை “அக்கா பச்சைப் பெட்டிக்கு போடுங்கோ..... , அண்ணா சிவப்புக்குப் போடுங்கோ ...., தங்கச்சி மஞ்சளுக்குப் போடுங்கோ....., என வாய் மூடாமல் சொல்லிக் கொள்வர்.
வீட்டில் நடக்க முடியாமல் இருப்பவர்கள் அல்லது ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருக்கும் நோயாளர்கள் ஆகியோரைத் அலாக்காகத் தூக்கிக் காரிலேற்றி நிலையங்களுக்கு கொண்டு வருவர்.
“கழுத்துக்கு கையுக்கு ஒண்டுமில்லை....நான் வரேல்லை” என முரண்டு பிடிக்கும் கிழவிகளுக்கு, “இந்தா பிடி சங்கிலியைப் போடு..... காப்பைப் போடு..... வெளிக்கிடு” என சங்கிலி காப்பு கொடுத்து வாகனங்களில் ஏற்றி வந்து, வாக்களிப்பு முடிந்ததும் மீண்டும் வீட்டில் இறக்கி விட்டு, எங்கையாணை ... காப்பு சங்கிலியை குடு” என வாங்கி, அடுத்த கிழவி இருக்குமிடம் தேடி புறப்பட்டு விடுவார் அவர்.
இந்த நாள் போன்று கை விரலுக்கு மை பூசுவதோ, - அடையாள அட்டை காண்பிப்பது போன்ற இன்றைய தேர்தல் விதிமுறைகள் அன்றில்லை. உள்ளே பச்சை – சிவப்பு – மஞ்சள் – நீலம் என வாக்குப் பெட்டிகள் வரிசையாக வைக்கப் பட்டிருக்கும்.
வாக்குச் சீட்டினை வாங்கி – நமக்கு விரும்பிய நிறப் பெட்டியில் போட்டு விடவேண்டும். பெட்டிகளில் விழுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் அங்கத்தவர் தெரிவாவர்.
வாக்காளர் குறைவாக உள்ள நிலையங்களில் முடிவு விரைவாக வெளிவரும். வாக்காளர் கூடிய இடங்களில் முடிவு வெளிவர சற்றுத் தாமதமாகும். முடிவுகள் வெளியானதும் வெற்றிக் கொண்ட்டாட்டங்கள் வெடிச் சத்தங்களுடன் ஆரம்பமாகும். தெரிவான அங்கத்தவர்களை அழைத்துக் கொண்டு ஒழுங்கை ஒழுங்கையாக ஊர்வலம் போவார்கள்.
யார் யாருக்கு பட்டின சபையின் தலைவர் தெரிவுக்கான ஆதரவு என்பதெல்லாம் எப்பவோ முடிந்த காரியாமாக விருக்கும். அதனால் சார்பானவர்களின் ஊர்வலங்கள் ஒன்றையொன்று சந்தித்து சங்கமமானால் கொண்டாட்டங்களும் கூக்குரலும் உச்ச ஸ்தாதியில் இருக்கும்.
எதிர் எதிரானவர்களின் ஊர்வலங்கள் ஒன்றையொன்று சந்தித்தால் முறுகல் அதிகமாகி – அடிதடியில் முடிவடையும்.
பட்டினசபையின் முதற் கூட்டத்தில் தலைவர் தெரிவு நடைபெறும்வரை இந்த வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் பல ரூபங்களில் தொடரும்.
எங்கள் வோட்டு..... என ஆரம்பித்த பழங்கதைக்கு முடிவுரை வேண்டாமா? ரகசியமாக வைத்திருங்கள்......யாருக்கும் சொல்லி விடாதீர்கள்....எங்கள் வோட்டு எப்பொழுதும் நீலப் பெட்டிக்கே. நம்மையெல்லாம் வாழ வைத்த ‘சிதம்பரா"வின் நிறம் வெளிர் நீலம் – கருநீலம் அல்லவா! அதனால்.....