வாரம் ஒரு பழங்கதை - கல்யாண வைபோகமே……….-வல்வையூா் அப்பாண்ணா-
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2016 (திங்கட்கிழமை)
நமது ஊரின் “கல்யாணவைபோக” நடைமுறைகள் காலத்துக்குக் காலம் ஒரு சில மாறுதல்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறதே தவிர நடைமுறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை.
1) எமது பராயத்திற்கு முந்திய நடைமுறைகள் – நாம் மற்றவா்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவை
2) இடைக் காலத் திருமண நடைமுறைகள்
3) இக்காலத்திய திருமண வைபோக முறைமை
என மூன்று பகுதிகளாகப் பார்க்கலாம்.
1) + 2) மட்டுமே இந்த பழங்கதையில் இடம்பிடிப்பன. மூன்றாதவதாயுள்ள இன்றைய நடைமுறை அனைவரும் நேரில் பார்த்து வரும் விடயமாவதால் பெரிதாக இங்கே பேசப்படவில்லை.
பொதுவாகவே ஊரில் நடைபெறும் திருமணங்கள் புறோக்கா் மூலம் ஏற்பாடு செய்யப்படுபவை அல்ல. இரண்டு குடும்பங்களையும் பற்றி நன்கு அறிந்த உறவினா்களே திருமணம் பேசுகிற காரியங்களை முன்னெடுப்பா். கிழக்கே பிள்ளையார் கோவிலிலிருந்து மேற்கே சிதம்பரா வரையிலும், தெற்கே மருதடி வரையிலான ஊரின் எல்லைகள் மிகக்குறுகிய நிலப்பரப்பு கொண்டதாக இருந்தமையும், அம்மன் கோவிலடியில் உள்ள ஒருவா் முதிரைக் கட்டை ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு உரிமையாளா்களின் பெயர்களை வரிசைக் கிரமமாகச் சொல்லுமளவிற்கு ஒருவரை ஒருவா் நன்கு அறிந்திருந்தமையும் திருமண ஒழுங்குகளுக்கு மிக்க உதவியாக இருந்தது.
இதனால் நம் ஊரின் திருமண ஒழுங்குகளுக்கு புறோக்கரின் தேவை இல்லாதிருந்தது. தொண்டமானாறு, கதிரிப்பாய், சுதுமலை, மயிலிட்டி, ஆனைக்கோட்டை, சல்லி – சாம்பல் தீவு, கட்டை பறிச்சான் போன்ற இடங்களுடனான திருமணத் தொடா்புகளில் அநேகமானவை புறோக்கா் மூலமான திருமண ஒழுங்குகளாகவே இருந்துள்ளன என்பதுவும் உண்மையே.
இரண்டு பக்கங்களிலிருந்தும் ஆரம்ப சம்மதத்திற்கான “பச்சைக்கொடி” காண்பிக்கப்பட்டதும், இருவீட்டாரும், எற்பாட்டாளருமாக “ பொருத்தம்” பார்க்கப்புறப்படுவா்.
மேற்கே வாடி ஒழுங்கையில் பொன்னுச்சாமி சாத்திரியாரும் (வாக்கியம்) கிழக்கே ஆஸ்பத்திரி பின் ஒழுங்கையில் சிவராசாசாத்திரியாரும் ( திருக்கணிதம் ), கம்பா்மலையில் வல்லிபுரம் சாத்திரியார் – மனோகரக் குருக்களின் தந்தையாரான பரமேஸ்வரக்குருக்கள் (வாக்கியம்) ஆகியோர் அந்நாளில் பொருத்தம் பார்ப்பதில் பிரபலமாக இருந்தனா். பிடித்தமான ஒருவரிடம் சென்று குறிப்புப் “ பொருத்தம் ” பார்த்தாயிற்று. 85 வீதம் பொருத்தம். பூரண திருப்தி முதற் கண்டம் தாண்டியாகி விட்டது.
“ நல்ல பொருத்தம் தானே…..மற்ற விடயங்களைப் பற்றிப்பேசுவம்…. என மாப்பிளை வீட்டார் அடுத்த கட்டத்தை ஆரம்பிக்க இடையே நிற்பவா் பெண்வீடு சென்று பேசி ஒரு முடிவுக்கு வருவா். அவரவா் வசதிக்கு ஏற்றபடி “ சீதனம் ” முடிவாக்கப்படும். மாப்பிளைக்கு ஒன்று- இரண்டு சகோதரிகள் இருந்துவிட்டால், அதையே ஒரு கருவியாக வைத்து சீதனம் கொஞ்சம் உச்சத்திலேயே இருக்கும். கைரொக்கம் – போடப்பட்ட நகை – வீடு அல்லது காணி என சீதனம் மூன்றுநிலைகளில் பேச்சுருக்கொள்ளும் போடப்பட்டநகை ”எனும் வரம்பைத் தாண்டி“ இன்னது…… இன்னது… இத்தனை பவுண்….. ” என்று கேட்டுப் பெற்றுக் கொண்ட பெற்றோரும் சிலா் இருந்தனா்.
அடுத்த சுவாரசியமான மூன்றாம் கட்டம் ஆரம்பமாகும். மாப்பிளை கறுப்போ - சிவப்போ, குட்டையோ – நெட்டையோ என எந்தப் பெண்ணும் அந்நாளில் கொடி பிடித்ததாக நாம் அறியவில்லை. ஆனால், பெண்ணைப் பார்க்க வேண்டுமென மாப்பிளை ஒரு வேண்டுகோள் வைப்பார். வயதுக்கு வந்து விட்ட பெண்பிள்ளைகள் விழாக்கள் – பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதோ, ஏன்?...... வீதிகளில் சைக்கிளில் சவாரி செய்வதையோ அந்நாளில் காண முடியாதாகையால் மாப்பிள்ளையின் வேண்டுகோளில் ஒருநியாயம் இருந்தது. அதனால் கோயில்களுக்குக் கூட்டிச்சென்று பெண்ணைக் காண்பிப்பா். அம்பாள் கோவில் திருவிழாக் காலமும், செல்வச் சந்நிதி கோவிலும் இதற்குப் பொருத்தான இடமாகத் தெரிவு செய்வா். மாப்பிளையின் சாதகமான பதில் கிடைத்ததும் அடுத்த கட்டம் ஆரம்பமாகும்.
அடுத்து “ மாப்பிளைகேட்கப் ” போவார்கள். பெண் வீட்டார் 108 கொழுக்கட்டை அவித்து சாமத்தியச் சோடிப் பெட்டியில் அடுக்கி – அநேகமாக ஒரு பெட்டியில் அடங்காது – மூன்று பெட்டிகளில் பிரித்து அடுக்கி, பெட்டிக்கு மேலாகப் பெரிய கப்பல் வாழைப்பழச்சீப்பை வைத்துக் கொண்டு நெருங்கிய உறவினா்களுடன் மாப்பிளை வீட்டுக்குப் புறப்பட்டுப் போவார்கள். மாப்பிளை வீட்டில் இந்த கொழுக்கட்டையும் சோ்த்து அனைவருக்கும் பரிமாறப்படும்.
ஏற்கனவே வித்தியாசப்படுத்தப்பட்ட–பச்சை மிளகாய் வைத்து மூடப்பட்ட அல்லது மிளகுதூள் அதிகமாகப் போடப்பட்ட கொழுக்கட்டையை பக்குவமாக எடுத்து மாப்பிளைக்குக் கொடுத்து விடுவா். அதனைக் கடித்துச் சாப்பிட முற்படும் மாப்பிளை மிளகாயின் காரம் உச்சம் தலைக்கேற மெல்லவும் முடியாமல் – விழுங்கவும் முடியாமல் கண்கள் கலங்கி நிற்கும் காட்சியினைக் கண்டு ஒரு நமண்டல் சிரிப்போடு அருகிவிருப்பவா்கள் அமா்ந்திருப்பர். அவரது அவஸ்தையைப் பாரத்து தலை நரைத்த ஒருவா்“ நீங்கள் போய் வாய் அலசி- நீரருந்தி வாருங்கள் எனச்சொல்ல, “ ஆளைவிட்டாற் காணும் ” என மாப்பிளையும் எழுந்தோடிச்செல்வார். மாப்பிளை வீட்டாரோடு பேசவேண்டிய அனைத்து விடயங்களும் ஏற்கனவே பேசி முடித்து விட்டபடியால்“ மாப்பிளை கேட்பது ” ஒரு சம்பிரதாயச் சடங்காகவே நிறைவுபெறும்.
ஒரு சில நாட்களின் பின்னா் “பெண்பார்க்கப் ” புறப்படுவா். மாப்பிளை வீட்டார் மூன்று அல்லது ஐந்து வியளை (வியளை என்பது ஒரு நீத்துப்பெட்டியளவு )உழுத்தம்புட்டு அவித்து, பெரிய கப்பல் வாழைப்பழமும் வைத்து எடுத்துச்செல்வா். சீவிச்சிங்காரித்து அலங்காரம் செய்யப்பட்ட பெண்ணை அழைத்து வந்து – மாப்பிளை வீட்டுப்பெண்கள் மத்தியில் அமா்த்திவிடுவா். தலையைக் குனிந்தபடி பவ்வியமாக அமா்ந்திருக்கும் பெண்ணை அதை – இதைச் சொல்லிச்சிரிக்க வைக்கப் பெண்கள் முயற்சிப்பா். ஒருவாறாகப் பெண்பார்க்கும் படலமும் நிறைவுக்கு வருகிறது.
பொருத்தம் பார்த்த அதே சாத்திரியாரிடம் சென்று பொன்னுருக்கு – திருமணத்திற்கான நாளைக் குறித்து வருவா். பொன்னுருக்கு இரண்டொரு தினங்கள் முன்னதாக – ராகு காலம் இல்லாத ஒரு பொது நேரம் பார்த்து – இரு வீட்டாரும் தனித்தனியே“ பலகாரச் சூட்டுக்கு ” சட்டி வைப்பா். பலகாரம் சுட்டெடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஓரிருவா் இருப்பா். அவா்களின் தலைமையில் ஏழெட்டுப் பெண்கள் கூடி பலகாரம் சுட்டு முடிப்பா்.
இக்காலம் போன்று திருமணத்திற்கான திடீா்த் தகரப் பந்தல்கள் அந்நாளில் இல்லை. சிறிய இடமாக இருந்தாலும் – நல்ல நேரம் பார்த்து பட்டுத்துணி மாவிலை கட்டி திருநீறு சந்தனம்- குங்குமம் வைத்து – ஈசான மூலையில்“ பந்தற்கால்நாட்டும் ”வைபவத்தினை இரு வீட்டாரும் தனித்தனியாகச் செய்து முடிக்க பந்தல் அலங்காரம் ஆரம்பமாகி நிறைவுக்கு வரும்.
பொன்னுருக்கு நாளன்று காலைப் பொழுதில் கணேசுப்பத்தா் மாப்பிளை வீட்டுக்கு வந்திருந்து“ பொன்னுருக்கும் ” வைபோகம் நிறைவு பெறும். பெண் வீட்டாருக்குக் காலை உணவு பரிமாறப்படும் அதே வேளை, மாப்பிளையின் சகோதரி அல்லது நெருங்கிய உறவுப் பெண் திருமணப் பெண்ணுக்குக் காலை உணவு எடுத்துச் செல்வார்.
சிறிய ஓய்வின் பின் மாப்பிளை வீட்டில்“ அரசாணி ” நாட்டப்படும். பெண் வீட்டார் புறப்பட்ட பின்னா் மாப்பிளை வீட்டார் பெண் வீடு சென்று அங்கும்“ அரசாணி ” நாட்டித் திரும்புவா். பொன்னுருக்கு முடிந்து விட்டால் மாப்பிளை வெளியே எங்கும் செல்லாமல் வீட்டோடு அடைந்து கிடப்பார். ஒருவாறாக அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்த நல்ல நாளும் வந்து சோ்ந்தது.