வாரம் ஒரு பழங்கதை - ஒரு தண்டையலின் டயறி - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2015 (திங்கட்கிழமை)
“தில்லையம்பலதேவா்” என்று சிலராலும் “ அட்சரக்கூட்டுஅப்பா ” அல்லது “தாவடங்கட்டி அப்பா ” எனப் பலராலும், “ தண்டையல் தில்லையம்பலம் ” அல்லது “ கப்பித்தான் தில்லையம்பலம் ” என அந்நாளில் அழைக்கப்பட்டு வந்த தில்லையம்பலம் அவா்கள் அருணாசலம் ஆத்தாள் தம்பதியரின் மூத்த புதல்வனாக 17.07.1903 ல்பிறந்தவா். தமது 103 ஆவது வயதில் 14.11.2005 ல் இறைபாதம் எய்தினார்.
நாலு முள வேட்டி, எந்நேரமும் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் துண்டு, நெற்றி நிறைந்த திருநீறும் சந்தனப் பொட்டும், சிவப்பு நிற நூலில் தொங்கிக்கொண்டிருக்கும் அட்சரக்கூடு, பிற்காலத்தில் அவருடன் கூடவே ஒட்டிக்கொண்ட வளைந்த கைத்தடி இதுவே அட்சரக்கூட்டு அப்பாவின் பின்நாளைய அடையாளம்.
பிறந்தது அம்மன் கோவிலடி (மதவடி) வீட்டிலும், வாழ்வின் நடுப்பகுதி சடையாண்டி கோவிலுக்கு வடக்குப் பக்க வீட்டிலும், வாழ்நாளின் பிற்பகுதி ஊரிக்காட்டில் தனது இரு புதல்வியருடன் சொந்த வீட்டிலுமாக தமது வாழ்வினை நிறைவுசெய்தார்.
தனது ஆரம்பகல்வியை ஆலடிப் பள்ளிக்கூடத்தில் பெற்றுக்கொண்டார். (மடத்தடிப் பள்ளி எனவும் அழைக்கப்பட்ட ஆலடிப் பள்ளியானது அம்பாள் கோவிலின் வடமேற்கு மூலையில் சிலகாலம் விறகுகாலை இருந்தஇடம்) இளமைக் காலத்தில் பல்தொழிலும் பயின்றுவந்தாலும், அவரின் 22 வதுவயதில் ஊருக்கே உரித்தான கப்பற்தொழில் இவரையும் அணைத்துக்கொண்டது.
சாதாரண“ பொடியனாக ” கப்பலேறிய தில்லையம்பலம் படிப்படியாக “ தண்டையல்தில்லையம்பலம் ” எனும் அந்தஸ்துடன் “ தெண்டாயுதபாணிபுரவி ” யில்அவரது கடற்பயணம் தொடர்ந்தது. 23.02.1925 ல் எழுத ஆரம்பித்திருக்கும் தண்டையல் அப்பாவின் தினக்குறிப்பானது 18.01.1956 வரை ஒரே டயறியில் அவரது சொந்தக் கையெழுத்தில் (வேறு எவரதும் ஒரு எழுத்துக்கூட அந்த டயறியில் இல்லை) பக்கம் பக்கமாக நீண்டுசெல்கிறது.
அந்நாளைய பாய்க்கப்பற் பயணங்களில் கடலையும் கடவுளையும் மட்டுமே நம்பி நம்மவா்கள் பயணித்திருக்கிறார்கள். தில்லையம்பலம் அப்பாவும் கூட தினமும் தனது குறிப்பின் ஆரம்பத்தில் தில்லையம்பலப் பிள்ளையார் துணை, மாயவன் துணை, மகமாயி துணை, வைத்தியேசா் துணை, சடையப்பு துணை, வன்னிமரத்தான் துணை என ஊரில் உள்ள அனைத்துத் தெய்வங்களையும் வரவழைத்து வேண்டுதல் செய்ததுடன் நாகூா்ஆண்டவரையும் வேளாங்கண்ணிமாதாவையும் துணைக்குஅழைத்திருக்கிறார்.
என்ன திசையில் என்ன பாகையில் என்ன ஆழத்தில் கப்பல் ஓடிக் கொண்டிருக்கிறது என்பவற்றைக் கணிக்கும் Sin-cose, LONGITUDE- LATITUDE மாற்றங்கள் மூலமாகப் பெறப்படும் துல்லியமான கணிப்புகள், தேவையான இடங்களில் பாவிக்கப்பட்டிருக்கும் ஆங்கில வார்த்தைகள் ஆகியன ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
ஒரு நாட் பயண ஆரம்ப குறிப்பின் வாசகங்கள் இவ்வாறு உள்ளது.
“பங்குனி 16- 29.03.1927 செவ்வாய்க் கிழமை காலை உதயத்திற்கு வெள்ளமும் கரைக்காத்தும் நிற்க, பிள்ளையாருக்குத் தேங்காய் உண்டாக்கி காணிக்கை கட்டி நங்கூரம் தூக்கி பாய் போட்டு வர பயிலட்டு வந்து……………. அப்ப ஏலக்கட்டு தனலெட்சுமியும் எங்களோடு வெளிக்கிட்டது.
எழுத்தாணிக் குருவி ஒன்று வட்டமிட்டுப் போனது, வால் வெள்ளையான கறுத்தக் குருவி பாய்மரங்களை வட்டமிட்டது, ஒரு கயிற்றில் சுறாப்பிடித்தது, கப்பலருகே ஓங்கில் முறுகி விழுந்து போனது, வாடைக் கொண்டலுக்கை NE கொடி மின்னல் மின்னி வெள்ளிப்பந்தமாக எரிந்து விழுந்தது ” என்பன போன்ற பல தரப்பட்ட விபரங்களும் தினக்குறிப்பில் உள்ளன.
“ கடலில் உள்ள மடைகள் ” பற்றிய அவரது குறிப்பு இவ்வாறுள்ளது.
S- மணல்
S.CRL- மணலும்சறடும்
R- கல்லு
M- தனியசேறு
FS- பார்உள்ளசறடு
ST- மணலும்பாரும்
F- தனியபார்
தூத்துக்குடி, காக்கைநாடு ,கொச்சின், வேதாரணியம், இராமேஸ்வரம், பாம்பன் சென்று வந்த அனுபவ அறிவு காரணமாக 1944, 1945 ஆண்டுகளில் கொழும்புத்துறை முகத்திலும், 1955ல் மீண்டும் “ சிவகங்காபுரவி ” பாய்க்கப்பலில் தண்டையலாகவும் தனது தொழிலைத் தொடா்ந்திருக்கிறார்.
1960-1970 வரையிலான காலப்பகுதியில் திருமலை மூதூருக்கிடையிலான படகுச்சேவையிலும், ஊர்காவற்துறை போக்குவரத்து வாஞ்சிகளிலும் கடமைபுரிந்து முதுமைகாரணமாக ஓய்வுபெற்றார்.
வல்வையின் கப்பற்தொழிலில் அந்நாளில் பிரகாசித்த தண்டையல்கள் பலரும் இவரது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு முன்னேறினர்.
சிறுவயது முதலே இறைபக்தியுடன் திகழ்ந்த“ கூடுகட்டிஅப்பா ” வுக்கு கிருபானந்தவாரியார் சுவாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டு, அவா் இலங்கை வருகைதந்த நேரமெல்லாம் அவரோடு கூடவே இருந்து, அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தொண்டரானார். வாரியார் சுவாமிகளின் இறுதிக்காலம் வரைஅவருடனான தொடர்புநீடித்தது. (“வல்வையும்வாரியாரும் ” எனும் பழங்கதையில் இருவருக்குமான தொடர்புகள் விபரமாகத் தரப்பட்டுள்ளது)
யாருக்குமே கிடைக்காத ஒருஅருட்கொடை இவருக்குக் கிடைத்தது. வல்வை முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தில் நான்கு தடவைகள் அம்பாளுக்கு எண்ணைக்காப்பு சாத்தி ஸ்பரிசித்து, கும்பாபிஷேகளை கண்குளிரப்பார்த்து மகிழ்ந்த அந்த தருணங்களை தமது வாழ்நாளில் மிகப்பெரிய பேறாகக்கூறி மகிழ்வார் அப்பா.
ஸ்ரீவாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமானது இறைபணியில் உள்ள ஒரே குருக்கள் பரம்பரையில் ஐந்துதலை முறையைத் தாம் சந்தித்ததாகப் பெருமைபடக் கூறிக் கொள்வார்.
01.10.1999ல் கெருடாவில் இ.த.க பாடசாலையில் நடந்த முதியோர் தினத்தில் இவர் கௌரவிக்கப்பட்டார். 17.04.2003 ல் வல்வை சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினா் தமது ஒன்று கூடல் நிகழ்வின்போது இவரது 100 வயது பூர்த்தியினைக் கௌரவித்து பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கிப் பெருமைப்படுத்தினர்.
தமது இறுதி மூச்சுவரை நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்து, இறைவன் திருநாமத்தை ஓதியபடி வாழ்ந்திருந்த“கூடுகட்டிஅப்பா ” 14.11.2005 ல் தமது 103 ஆவது வயதில்இறைவடிசேர்ந்தார்.
வல்வையின் அந்நாளைய பாய்க்கப்பல் வரலாற்றில் தண்டையல் திருச்சிற்றம்பலம் அப்பாவின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.