வாரம் ஒரு பழங்கதை - வல்வையும் வாரியாரும் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2015 (வியாழக்கிழமை)
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் தெளிந்த நீரோட்டம் போன்ற சொற்பொழிவுக்கு ஆட்படாத நெஞ்சங்களே இல்லை. சொற்பொழிவுக்கு இடையிடையே நகைச்சுவை கலந்து பேசி – மக்களைச் சிரிக்க வைத்துச் சிந்திக்கச் செய்வது வாரியாரின் தனிப்பாணி. முன்வரிசைகளில் அமர்ந்திருக்கும் சிறுவர்களை இலகுவான கேள்விகள் கேட்டு சிறிய சிறிய புத்தகங்களைப் பரிசளிப்பார் வாரியார்.
“கைத்தவ நிறைகனி ---“ என ஆரம்பமாகும் சுவாமிகளது கதாப்பிரசங்கம், இறுதியில் “ஆறிரு தடந்தோள் வாழ்க....” எனும் பதிகத்துடனோ அல்லது “உருவாய் அருவாய் ...” எனும் கந்தரனுபூதியுடனோ நிறைவு செய்வது வழமையானது. இந்நாளில் வாரியார் சொற்பொழிவுகளை C.D மூலமாக கோவில்களிலும் வீடுகளிலும் கேட்டு பேறடைந்து வருகின்றனர்.
வாரியார் சுவாமிகள் ஒரு முறை காஞ்சிப் பெரியவரைச் சந்திக்கச் சென்றார். “கிள்ளிக் கொடுக்கவே கீழ்க் கணக்குப் பார்க்கும் இவ்வுலகில் அள்ளிக் கொடுப்பதையே அன்றாடக் கடமையாகக் கொண்டிருக்கிறாயே “ என வாயாரப் புகழ்ந்திருக்கிறார் காஞ்சிப் பெரியவர்.
வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவைக் கேட்டதனால் படு நாத்திகராகவிருந்த கண்ணதாசன் பழுத்த ஆன்மிகவாதியாக மாறி “அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதினாரேனின் நம்பமுடிகிறதா? கண்ணதாசனே தனது சுயசரிதையில் குறிப்பிட்ட விடயம் இது.
வாரியார் சுவாமிகள் தமது 18 – 19 வயதில் (1925) எழுதிய “ஸ்ரீ அருணகிரி நாதசுவாமிகள் புராணம்” (7 படலங்களாக) 715 பாடல்கள் கொண்டது. இவரது மறைவுக்குப் பின்னர் இந்த பாடல்களின் தொகுப்புகளைத் தேடி எடுத்து 2004 ல் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். மூலப் பாடலை எழுதி, அதனை பதப்பிரிவு செய்து மூண்டும் எழுதிப் பொழிப்புரை தந்திருக்கும் விதம் அற்புதமானது.
தமது இளமைக் காலத்தில் அவரும் குடும்ப சாகரத்தில் மூழ்கினார். “அமிர்தலட்சுமி அம்மாள்” எனும் தர்மபத்தினியார் – புகைப்படத்தில் வாரியாரின் வலது புறத்தில் அமர்ந்துள்ளார். ஒரு குறித்த காலத்தில் வாரியார் துறவு நிலை எய்திய பின்னர் குடும்பத் தொடர்புகள் இல்லாது போயிற்று.
24 – 08 – 1906 ல் பிறந்தவர் வாரியார் சுவாமிகள். 07 – 11- 1993ல் லண்டனில் கதாப்பிரசங்க நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், பம்பாயிலிருந்து சென்னை வந்த விமான பயணத்தின் போது வானத்திலேயே அவர் இன்னுயிர் முருகன் காலடியினைச் சென்றடைந்து.
வல்வைக்கும் வாரியாருக்குமான தொடர்பு 1945 அல்லது 1946 காலப்பகுதியிலேயே ஆரம்பமானபோதிலும், 1952 க்கு முன்பு ஊருக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திய காலம் சரியாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. 1952, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அவர் ஊருக்கு வந்துபோன நினைவுகள் அனைவருக்கும் பசுமையாக மனதில் உள்ளது.
1983 தவிர – அதற்கு முந்திய சகல வருகையின் போதும், சிவன் கோவில் எசமான் கிணற்றடி மனையிலேயே தங்கியிருந்திருக்கிறார். எசமான் கிணற்றுக்கும் வெளிக்கதவுக்கும் இடையில் இரு புறமும் உள்ள உயர்ந்த திண்ணைப்பகுதியின் மேற்புறம் அக்காலத்தைய பீலி ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. நம் ஊர் கோவில்கள் தவிர, குடா நாட்டின் வேறு எங்கே சொற்பொழிவுகள் இருந்தாலும், சொற்பொழிவு முடிந்ததும் நம்மிடம் திரும்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பொதுவாக, சொற்பொழிவுகளுக்காக வருகை தரும் வேளைகளில் வேறு எந்தப் பொது நிகழ்விலும் கலந்து கொள்வது வாரியாருக்கு வழமையில்லை.இருப்பினும் வல்வை மக்களின் அன்புக்கும், அரவணைப்புக்கும், விருந்தோம்பலுக்கும் மதிப்பளித்து, 1952ல் ஒரு திறப்பு விழா நிகழ்வினில் பங்கேற்றார்.
வல்வை மதவடி ஒழுங்கையில் (உதயசூரியன் வீதி) உள்ள விக்னேஸ்வரா வாசிகசாலை கிடுகுக் கொட்டிலாக இருந்து, கற்கட்டிடமாகக் கட்டி முடுக்கப்பட்டிருந்தது. எசமான் கிணற்றடி வீட்டிலிருந்து குடை – கொடி –ஆலவட்டத்துடன் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்திச் செல்லப்பட்ட வாரியார் சுவாமிகள் – சுபதினத்தில் – வல்வை விக்னோஸ்வரா வாசிகசாலை கற்கட்டிடத்தைத் திறந்து வைத்தார். ஊர்வலத்தில் ஒருவனாக யானும் கொடி பிடித்துச் சென்றது மனதில் பசுமையாக உள்ளது.
வாரியார் சுவாமிகள் சென்னையிலிருந்து வெளியிட்டு வந்த ஆன்மிக மாத சஞ்சிகையான “திருப்புகழமிர்தம்” மாதம் தவறாமல் விக்னேஸ்வரா வாசிகசாலைக்கு தொடர்ந்து வந்த கொண்டிருந்தது. திறப்பு விழா நிகழ்வினில் எடுக்கப்பட்ட புகைப்படம் நீண்டகாலமாக வாசிகசாலை உட்புறச் சுவரை அலங்கரித்திருந்தது. டிச 26 – 2004 சுனாமி அனர்த்தத்தில் வாசிகசாலை பாதிக்கப்பட்டபோது அந்தப் புகைப்படமும் காணாமற் போய்விட்டது. இப்போது நீங்கள் பார்க்கும் விக்னேஸ்வரா சனசமூக நிலைய புதிய எழிலான கட்டிடம் 2012 ல் திறந்து வைக்கப்பட்டதாகும்.
1977ல் வாரியார் சுவாமிகள் வல்வைக்கு வருகை தந்தபோது நெடியகாடு பிள்ளையார் கோவிலில் கதாப்பிரசங்கம் ஏற்பாடாகியிருந்தது. கோவிலின் முற்பக்க (கிழக்கு) வீதி இப்போதிருப்பதைப் போன்று அகன்ற பெருமிடமாக இருக்கவில்லை. வன்னிமர ஓரமாக மிக நெருக்கமாக இருந்த வேலியை அண்டியபடி உயர்ந்த மேடையமைத்து சொற்பொழிவு ஆரம்பமானது. சொற்ப நேரத்தில், மிக மொதுவாக ஆரம்பமான மழை முழுவீச்சில் கொட்டித் தீர்ந்தது. பலகாலம் நம்மவர்கள் கண்டிராத பெருமழை அது.
கோவிலின் உள்ளே மையப்பகுதியில் சுவாமிகளின் கதாப்பிரசங்கம் தொடர்ந்த போதும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே வேளையில் கோவிலின் உள்ளே வந்து சேர்ந்தாதலும், மழையினதும் – மக்கள் கூட்டத்தினதும் பேரிரைச்சலாலும் அன்றைய கதாப்பிரசங்கத்தினைச் சுவாமிகள் சுருக்கிக் கொள்ள நேர்ந்தது .
இந்த நிகழ்வின் சற்றுப் பிந்திய காலப் பகுதியில் வாரியார் சுவாமிகளின் சொந்த சகோதரரான “திருமாமணாள சிவம் “ அவர்கள் வல்வைக்கு வந்து, எசமான் கிணற்றடி மனையிலேயே தங்கியிருந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். ஆனாலும் வாரியார் சுவாமிகளின் கதாப்பிரசங்கள் போன்று மக்களைக் கவரவில்லை என்பதுவும் உண்மையே.
ஊரில் நடைபெற்ற ஒவ்வொரு கதாப்பிரசங்க நாளிலும் – நம் ஊரவர்கள் மட்டுமல்லாது – அயல் ஊர்களிலிருந்தும் பெருந் தொகையான மக்கள் வருகை தருவதால் கோவில் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். கந்தபுராணம் – கந்தரநுபூதி – கந்தரலங்காரம் –மகாபாரதம் – இராமாயணம் – திருப்புகழ் – திருவருட்பா – திருமுறைகள் என வாரியாரது கதாப்பிரசங்கங்கள் களைகட்டி நிற்கும். அந்நாளில் நம் ஊரவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து கூடும் நிகழ்வாக வாரியார் சுமாமிகளின் சொற்பொழிவுகள் அமைந்திருந்தது.
அம்பாள் மகோற்சவ காலங்களில் அதிகாலையிலேயே பெண்கள் கோவில் உள்வீதியினைக் கூட்டிப் பெருக்கிப் பாதநீர் ஊற்றும் பணிகளை நிறைவு செய்தபின் – தெற்கு வாசல் ஊடாக வெளிவீதிக்கு வந்து பிள்ளையார் மூலையில் (தென் மேற்கு மூலை) ஒன்று கூடுவர். காலை நேர நிழலில் தரையில் அமர்ந்தபடி கதைகள் பல பேசி – தாம் கொண்டு வரும் பித்தளைக் குடங்களை புளியிட்டு விளக்கிப் பொற்குடமாக்கி எசமான் கிணற்றடித் தொட்டியில் கழிவிச் சுத்தமாக்கி மீண்டும் கோவிலின் உள்ளே போய் – கொல்லைக் கிணற்றில் நீர் மொண்டு – தெற்கு வாசலூடாக வெளியே வந்து வீடு செல்வர். இத்தகைய காட்சிகளை இன்று நாம் காண முடியாது.வாரியார் சுவாமிகள் எசமான் கிணற்றடித் திண்ணையில் அமர்ந்தபடி – அம்பாள் வீதியில் – காலை வேளையில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளை அவதானித்தபடியே இருப்பார்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கந்தசஷ்டி காலத்தில் திருச்சி வயலூர் முருகன் திருக் கோவிலில் தொடர் கதாப்பிரசங்கத்திற்காக வந்துவிடுவார் வாரியார் சுவாமிகள். அங்கு நடைபெறும் சொற்பொழிவின் இடையே –வல்வையின் சிறப்புப் பற்றி – வலமும் இடமுமாக அமர்ந்திருந்து அருள் புரியும் சிவன் அம்மன் கோவில்கள் பற்றி – பூசை ஒழுங்குகள், கோவில் பராபரிப்பு பற்றி, பெண்கள் வேறாக, ஆண்கள் வேறாக வீதி சுற்றிவரும் ஒழுங்கு பற்றி, விழாக்காலங்களில் கூட்டிப் பெருக்கிக் குடம் கழுவி நீர் மொண்டு செல்லும் காட்சி பற்றியெல்லாம் கிலாசித்துப் பேசுவார் வாரியார்.
வருடம் தவறாமல் வயலூரில் வாரியார் சொற்பொழிவினைக் கேட்டு வந்த “அனந்தண்ணா” கூறிய மேற்குறித்த தகவல் எம்மை மெய்சிலிக்க வைத்தது. திருச்சி வயலூரிலிருந்து 8 மைல் தூரத்தில் சீநிவாசநகரில் நீண்ட காலமாகக் குடியிருந்து அங்கேயே மரணமடைந்தவர் “அனந்தண்ணா” என அழைக்கப்படும் “அனந்தராசா”. இவர் சிவகுரு தாத்தாவின் மைத்துனராவார்.
வாரியார் சுவாமிகள் வல்வைக்கு வருகை தர ஆரம்பித்த காலம் முதலே சுவாமியுடன் மிக நெருக்கமாக இருந்தவர் காலஞ்சென்ற வே.அரு.தில்லையம்பலம் அவர்கள் . நெடிய தோற்றம் – கருத்த மேனி – அறையில் நாலு முழ வேட்டி – தோளில் ஒரு சால்வைத் துண்டு – கழுத்தில் சிவப்பு நிற நூலில் ஒரு அட்சரக் கூடு – இதுவே தில்லையம்பலம் அப்பாவின் தோற்றப் பொலிவு. கழுத்தில் எப்பொழுதும் “அட்சரக் கூடு” இருந்ததால், அவரை, “தாவடங்கட்டி அப்பா” அல்லது “கூடு கட்டி அப்பா” என்றே அனைவரும் அழைத்து வந்தனர்.
வாரியார் சுவாமிகளுடன் அப்பாவுக்கு அந்நாளிலிருந்தே கடிதத் தொடர்பு இருந்து வந்ததுள்ளது. 1983ல் கொழும்பு விமான நிலையத்திலிருந்து தம்மை அழைத்துவர கார் அல்லது வான் கொண்டு வரும்படி நட்புரிமையுடன் தம் கைப்பட எழுதிய கடிதத்தையே இங்கே காண்கிறீர்கள்.
உயர் திரு:தில்லையம்பலம் அவர்கள், திருமுருக கிருபானந்த
வாரியார் சுவாமிகள்,
107, சிங்கண செட்டி தெரு,
சித்தாரிப் பேட்டை
தேதி :02 . 03 . 83 சென்னை - 6000002
சென்னை
பேரன்புடையீர்,
வணக்கம். நலம்.
தங்கள் நலத்துக்காக முருகனை வேண்டி அருட்பிரசாதம் அனுப்பியுள்ளேன்.
விசா தந்தி மூலம் வந்தது.
14.03.83 திருச்சியில் காலை 11 மணிக்கு விமானம் ஏறி பகல் 12 மணிக்கு கொழும்பு சேருவேன்.
பகல் V.T.V. தெய்வநாயகம்பிள்ளை திருமாளிகையில் உணவு உண்டு ஒய்வு பெற்று அங்கு வந்துள்ள புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு 15.3.83 விடியற்காலை பூசை செய்து காலை காரில் புறப்பட்டு வல்வை போகலாம். அதுதான் நல்லது. நீங்கள் ஒருவர் மட்டும் கார் அல்லது வான் - 14.03.83 கொழும்பு வருக.
அன்புள்ள
கிருபானந்தவாரி
1983 – வருகையின் போது எசமான் கிணற்றடி மனை சேதமாகியிருந்த காரணத்தால் ஊரிக்காட்டில் தில்லையம்பலம் அப்பா வீட்டுக்கு அருகே – பிரதான வீதியருகே திரு. இரத்தினசபாபதி ஆசிரியரின் வீட்டில் வாரியார் சுவாமிகள் தங்குவதற்கான ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சிவன் கோவில் பிரசங்கத்திற்கு சரியாக 7 மணிக்கு திரு.நாகமுத்து – நாகேந்திரன் (நாகி –அவுஸ்திரேலியா) அவர்களுக்குச் சொந்தமான வாகனத்தில் வந்திறங்குவார் வாரியார்.
சிவன் கோவில் கதாப்பிரசங்கம் நிறைவு பெற்றதும், கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தில் இரவு 09.30 மணிக்கு நடைபெறும் கதாப்பிரசங்கம் கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பர். நாகியின் வாகனத்தில் தில்லையம்பலம் அப்பா, சோமசுந்தரம் சிவயோகசுந்தரம் (அருச்சுனர் – பயில்வான் சோமு அப்பாவின் மகன்) ஆகியோர் கூடவே சென்று வருவர்.
அருச்சுனர் சிறுவனாக இருந்த காலம் முதலே, வாரியாரின் சொற்பொழிவில் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டராகவே மாறியவர். திருமணம் செய்யாமல் பிரமச்சாரியாகவே வாழ்ந்து வந்த அருச்சுனர் 1984ல் ஊரிலிருந்து புறப்பட்டு சென்னை சென்று வாரியார் சுவாமிகளுடனேயே தமிழகம் முழுவதும் சுற்றிவந்து, ஈற்றில் சென்னையிலேயே மரணித்தவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தி.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி – நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள பெருநிலப்பரப்பில் உள்ள நடராஜர் கோவிலில் – உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் விக்கிரகம் உள்ளது. அந்தக் கோவில் வளாகத்தில் 63நாயன்மார்களும் அமர்ந்துள்ள தனி மண்டபம் ஒன்றுண்டு. அந்த வரிசையில் 64வது நாயனாராக – வெண்கலச் சிலை வடிவில் – வாரியார் சுவாமிகளையும் அமர்த்தி சைவப் பெரு மக்களின் மனதை நிறைவு செய்திருக்கிறார்கள் கோவில் நிர்வாகத்தினர். அமர்ந்த நிலையில் – தலையைச் சுற்றே சாய்ந்து – வாய் நிறைந்த புன்சிரிப்புடன் – வலது கையை சற்றே மேலுயர்த்தி அனைவரையும் ஆசீர்வதித்தபடி அமர்ந்திருக்கிறார் வாரியார் சுவாமிகள். 64 நாயன்மார்களுக்கும் தவறாது தினப்பூசைகள் நடைபெறுகின்றன. நடராஜர் கோவிலையும் – வாரியார் சுவாமிகளையும் (64வது நாயனாராகத்) தரிசிக்கக் கிடைத்தமை எமக்குக் கிட்டிய பெரும் பேறாகும்.
நமது ஊரின் பெருமைக்குரிய விடயங்களுடன் வாரியாரின் வருகையும் நம் மக்கள் மனதில் பதவு செய்யப்பட்டுள்ளது. நம் ஊரோடு ஒன்றிவிட்ட வாரியார் சுவாமிகளை நெஞ்சில் நிறுத்தி வணங்கித் துதிப்போம்.