வாரம் ஒரு பழங்கதை - “நாடகம்” – ஒரு கண்ணோட்டம் - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2016 (புதன்கிழமை)
வாரம் ஒரு பழங்கதை - “நாடகம்” – ஒரு கண்ணோட்டம் - வல்வையூா் அப்பாண்ணா
•1944 – 1945 கப்பலுடையவா் கோவிலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரையில் “ ஸ்ரீவள்ளி ”நாடகம் மேடையேறியது. அதில் முருகன் வேடத்தில் நடித்த வைரமுத்து – வேலும்மயிலும், வேல் நாயக்கா் என்ற சுப்பிரமணியரும் வல்வையின் அந்நாளைய பழம்பெரும் அண்ணாவிமாராக இருந்தவா்கள்.
•அம்மன் கோவில் தெற்கு வீதியில் "கண்ணகி – கோவலன்” நாடகம் நடந்திருக்கிறது. குருசாந்தமூா்த்தியின் சகோதரா் வைத்தியநாதன் கோவலனாகவும் , “மாடவியான்” என்ற நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த கந்தசாமி இருவரதும் சிறப்பான நடிப்பு பற்றி பிற்காலத்திலும் பேசப்பட்டது. இந்த “மாடவியான்” பாத்திர நடிப்பின் பின்னரே கந்தசாமியுடன் “மாடவியான்” எனும் நாமம் ஒட்டிக் கொண்டதாகவும் நாம் அறிந்திருக்கிறோம்.
•ஊரிக்காடு “புல்லாங்குழல் செல்லி” என்று அழைக்கப்படும் செல்லத்துரையும், அவரின் தம்பி இராசேந்திரமும் இணைந்து “நாம் இருவா்” நாடகத்தை நடாத்தினா். (M.V.இரத்தினவடிவேல் மாஸ்ரரின் மனைவி இந்தக் கலைஞா்களின் சகோதரியாவார்) மறைந்த செல்வராஜா மாஸ்ரா் இயக்கிய இந்த நாடகத்தில் பெண் பாத்திரமேற்று நடித்தவா் R.V.G இரத்தினசிங்கம் (சிங்கம் ) என்பது இன்னொரு அம்சம்.
•சிதம்பரக் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக இருந்த “சங்கீதமாமணி” நடராஜா மாஸ்ரா் நடித்த “நந்தனார்” நாடகம் சிதம்பரா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. பின்னாளில் இதே “நந்தனார் நாடகம் நடராஜா மாஸ்ரா் இயக்கத்தில் கிருஷ்ணசாமி சந்திரலிங்கம் (மதவடி) இராசாங்கம் சிவசோதி ஆகியோரின் உன்னத நடிப்பில் – பாடசாலைகளுக்கு இடையிலான – நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றுக் கொண்டது.
மீண்டும், உதயசூரியன் நாடகவிழாவிலும் முதற்பரிசு பெற்றது. இதிலும் சிவசோதி – சந்திரலிங்கம் ஆகியோரின் நடிப்பாற்றலே வெற்றியைத் தேடித்தந்தது. (மேற்குறித்த பந்திகளில் குறிப்பிடப்பட்ட நடிகா்கள் அனைவருமே நன்கு பாடத்தெரிந்த கலைஞா்களாக இருந்தமையே, அவா்களது பெரு வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
•சோதி சிவம், குட்டிக்கிளி, அப்பு அண்ணா, பெரியதம்பி, அருச்சுனராசா ஆகியோர் நடித்த “ தங்கையின் பாசம் ”நாடகம் அற்புதமாக அமைந்தது. சோதி சிவத்தின் இயக்கத்தில் பெரிய தம்பி, அருச்சுனராசா ஆகியோர் நடித்த போராட்டம், அணைந்த தீபம், இரத்த வெள்ளம்,பின்னாளைய “தங்கப் பதக்கம்”ஆகிய நாடகங்களும் சிறப்பாகப் பேசப்பட்டன. இந்த நாடகங்களை இயக்கியதன் மூலம் சோதிசிவம், தாம் ஒரு சிறந்த இயக்குனா் என்பதை நிலை நாட்டினார்.
K.N. சோதிசிவத்தின் ஒரு நாடகத்தின் தோற்றம்
•“கவிஞன்” கையெழுத்து சஞ்சிகையாக கணபதி படிப்பகத்தில் ஆரம்பமாகி, அதன் 51 வது இதழ் அச்சுப் பிரதியாக திருச்சியில் வெளியிடப்பட்டது. அந்த வெளியீட்டு விழாவில் மூத்த நாடகக் கலைஞரான அனந்தராசா (அனந்தண்ணா) அவா்கட்கு “கலைச் செல்வா்” பட்டம் வழங்கி கௌரவித்தனா். “கவிஞன்” கலைக் குடும்பத்தினா்.
அனந்தண்ணா
•அனந்தண்ணா கவிஞன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலிருந்து சில பழைய தகவல்களைப் பெற முடிந்தது.
•ரங்கவடிவேல் மாஸ்ரா், ரெத்தினவடிவேல் மாஸ்ரா், வைரமுத்து (ரெத்தி மாஸ்ரா்), சிவகுரு தாத்தா ஆகியோர் அனந்தண்ணா காலத்து சமகால நடிகா்கள்.
•மீனாட்சிசுந்தரம் வாத்தியார், சி.சுப்பிரமணியம் (வேல் நாயக்கா்), வை.வேலும்மயிலும் (மணியம்) சாந்தமூா்த்தி மாஸ்ரா், குருசாந்தமூா்த்தி, வேலும்மயிலும் (சிவபெருமான்) , கந்தசாமித்துரை அண்ணாவியார், செல்வராசா மாஸ்ரா் காலத்துக்குக் காலம் வாழ்ந்திருந்து நாடக உலகிற்குப் பெரும் பங்காற்றி மறைந்த இயக்குனா்கள் ஆவா். இவா்களில் நமது காலத்தில் நாடகத்துறையோடு ஈடுபாடு கொண்டிருந்தவா் செல்வராசா மாஸ்ரா் எனப்படுகின்ற மா்சலீன்பிள்ளை அவா்கள்.
•கல்லூரியில் மாதாந்த இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும். கூட்டங்களின் இறுதியில் பலவிதமான குறும் நாடகங்கள் போட்ட அனுபவங்கள், ஒழுங்கைகளில் சேலைகளினால் மறைப்புக்கூட்டி – சிறிய மேடை போட்டு நாடகங்கள் நடத்திய அனுபவங்கள், சாரணீய பாசறைத்தீ நிகழ்ச்சியில் 5 சிமிடம் – 10 நிமிடம் நடித்த நாடகங்கள் என இவையெல்லாம் நம்மவா்களுக்குப் பயிற்சிப் பட்டறைகளாக இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை.
•சிதம்பரக் கல்லூரி (1961) பரிசளிப்பு விழாவின் போது நடந்த “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தில் செ.யோகரெட்ணம் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி “கட்டபொம்மன் யோகரெத்தினம்” எனும் பெயரைப் பெற்றுக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளிவருவதற்கு பல வருடங்கள் முன்னரே கல்லூரியின் சித்திர ஆசிரியராகவிருந்த பாலா மாஸ்ரரின் இயக்கத்தில் இந்நாடகம் மேடையயேறியது என்பது குறிப்பிடத்தக்கது. 1961 க்கு சற்று முன்பின்னாக இதே போன்றதொரு பரிசளிப்பு விழாவில் செ.யோகரெத்தினம் நடித்த “சாக்கிரட்டீஸ்” நாடகமும் பெரு வெற்றி பெற்றது.
செ.யோகரெத்தினம்
•“வல்வையூரான்” என்ற புனைபெயருக்கு உரியவரான வ.ஆ.தங்கவேலாயுதம் (தேவா் அண்ணா) தயாரித்த “சங்கிலியன்” நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்தார். 1968ல் உதயசூரியன் ஆண்டு விழாவில் முதற்பரிசு பெற்ற “மகனே கண்” நாடகத்தில் தேவா் அண்ணா சிறப்புற நடித்ததும், தேவா் அண்ணாவின் சகோதரர் வ.ஆ.அதிரூபசிங்கம் “மகனே கண்” நாடகத்தை நெறிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. வல்வை ரேவடி இளைஞா் விளையாட்டுக் கழகம் சார்பாக தயாரிக்கப்பட்ட “படையா…. கொடையா ……. ”, “அந்தக் குழந்தை” போன்ற நாடகங்கள் வ.ஆ.அதிரூபசிங்கத்தின் இயக்கத்தில் மேடையேற்றப்பட்டது.
வ.ஆ.தங்கவேலாயுதம் வ.ஆ.அதிரூபசிங்கம்
•கொழும்பில் லிட்டில் ஸ்ரேஜ் சார்பாக தேவா் அண்ணா தயாரித்த பல நாடகங்களுடன் “அந்தக் குழந்தை” நாடகமும் மீண்டும் மேடையேறியது. அத்துடன், தமிழகத்தில் “ரத்தம் சரணம் கச்சாமி” பாண்டிச்சேரியில் “சங்காரமே” நாடகங்களும், 1990 அளவில் வன்னியில் பல நாடகங்களும் தேவா் அண்ணாவின் இயக்கத்தில் உருவானவையாகும்.
•வல்வை செந்தமிழ் கலாமன்றம் சார்பான செ.ச.தேவராசா (தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவா் ) தயாரித்து மேடையேற்றிய நாடகங்களும் மக்கள் வரவேற்பைப் பெற்றன. 1977ல் ஒரே மேடையில் மூன்று நாடகங்களை மேடையேற்றி வசூலிக்கப்பட்ட தொகையினை, இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – வீரகேசரி ஸ்தாபனம் வழங்கிய உதவிக்கு பங்களிப்பு செய்தமை ஒரு சாதனையாகும்.
செ.ச.தேவராசா
•K.N தேவதாஸ் நெறிப்படுத்திய “பால அமுதம்” நாடகத்தில் V.பழனிவேல், K.N தேவதாஸ், V.சிவனடியார், N.T நாகேஸ்வரன் ஆகியோர் நடித்து பெரு வெற்றி கண்டனா்.
K.N தேவதாஸ் வடமராட்சி வடக்கு பிரதேச கலாச்சாரப்
பேரவையினால் K.N தேவதாஸ்
கௌரவிக்கப்பட்ட போது
•மார்சலீன்பிள்ளை என்பது இவரது பெயராக இருந்தபோதும் “செல்வராசா மாஸ்ரா்” என்பதே அனைவரும் அறியப்பட்ட நாமமாக இருந்தது. 1944-1945ல் இவா் நடித்த “சத்தியவான் – சாவித்ரி ”நாடகத்தில் “சத்தியவான்” வேடம் போன்று இவா் நடித்த நாடகங்கள் அநேகமானவை புராண நாடகங்களாகவே அமைந்ததனால் பல நெருக்கடிகளையும் செல்வராசா மாஸ்ரா் சந்திக்க நோ்ந்திருக்கிறது. 10 ஆண்டுகள் தேவாலயத்தினுள் வரக்கூடாது என திருச்சபை தடைவிதித்ததுடன், இவா் கடமையாற்றிய பாடசாலையின் அதிபா் பதவியிலிருந்தும் ஓரமிறக்கப்பட்டார்.
செல்வராசா மாஸ்ரா்
•செல்வராசா மாஸ்ரா் நடித்த நாடகங்கள் நமது இளம் வயதுக்கு முற்பட்டவையாக இருந்தமையினால் அவரது நடிப்பாற்றலை நாம் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் ஹெலியன்ஸ் நாடகக் குழுவிற்காக அவா் நெறிப்படுத்தி வெற்றி பெற்ற நாடகங்களையும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைத்தது.
•நாடக உலகின் ஜாம்பவானான செல்வராசா மாஸ்ரரின் வல்வையின் நாடக வளா்ச்சிக்கு அவா் ஆற்றிய சேவையைப் பாராட்டி 22-08-81 ல் உதயசூரியன் ஆண்டு விழாவிலும், 1986ல் கணபதி படிப்பகத்தின் 20வது ஆண்டு விழாவிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். செல்வராசா மாஸ்ரரின் நாடக பங்களிப்பு குறித்து உதயசூரியன் ஆண்டுவிழாவில் பேராசிரியா் கா.சிவத்தம்பி ஆற்றிய உரை அனைவரையும் கவரும்படியாக இருந்தது.
•கல்லூரி நாட்களின் பின்னர் வேலை தேடும் காலகட்டம் நம்மவா்களுக்குப் பெரும் சோதனையான காலம். இந்த நெருக்கடியில் நாடகத் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டவா்கள் பல போ். ஆனால், கி.செல்லத்துரை மாஸ்ரா் (கி.செ.துரை ) இது விடயத்தில் விதி விலக்கானவா். தாம் சென்றடைந்த இடமான டென்மார்க் நாட்டிலும் பல நாடகங்களை மேடையேற்றியும் – திரைப்படங்களைத் தயாரித்தும் ஊரின் பெருமையையும்புகழையும் நிலை நாட்டி வருபவா்.
கி.செல்லத்துரை மாஸ்ரா்
•இதுவரையில் செல்லத்துரை மாஸ்ரரின் தயாரிப்பில் உருவான நாடகங்கள் 112. அதில் ஊரிலும் – பொதுவாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டவை 20. மிகுதி 92 நாடகங்களும் டென்மார்க் உட்பட வெளிநாடுகளில் மேடையேற்றப்பட்டன.
•ஊரில் இவரது பாரத் கலா மன்றம் சார்பான “சாம்ராட் அசோகன்”1975 ல் “மகுட பங்கம்” 1976 ல் “பொன்னகரம்” பின்னா் “வெண்கொடி” 1982 ல் செல்லத்துரை மாஸ்ரருடன் தி.அருளானந்தராசா இணைந்து நடித்த “காலத்தை வென்றவன்” ….இவ்வாறு பட்டியல் நீண்டு செல்லும் .
•இவரது 100 வது நாடகமாக “உயிரோவியங்கள்” நாடகம் 08.06.2003 ல் மிகப் பிரம்மாண்டமான முறையில் டென்மார்க்கில் மேடையேற்றப்பட்டு வெற்றி கண்டது. மீண்டும் இதே நாடகம் இங்கிலாந்து குறொய்டனில் மேடையேறிய போது வல்வைக் கலைஞா்கள் 100 போ் இணைந்து நடித்தார்கள் என்பது சிறப்புச் செய்தியாகும்.
•நாடகத் தயாரிப்புடன் நின்று விடாது, பெரும் பொருட் செலவில் – இவரது உருவாக்கத்தில் மூன்று திரைப்படங்கள் உருவாயின. “பூக்கள்” , “இளம்புயல்”“உயிருள்ளவரை இனித்தாய்” ஆகிய மூன்று திரைப்படங்களும் தமிழகம் உட்பட பல நாடுகளிலும் திரையிடப்பட்டது. நம் ஊரவரான T.S நாகரெத்தினத்தின் மகன் சிவசுப்பிரமணியம் ( சிவா அண்ணா ) அவா்களிற்குப் பின்னா் முழுமையான திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்துள்ள க.செல்லத்துரை மாஸ்ரரின் பணிகள் தொடர வாழத்துகிறோம்.
•ஹெலியன்ஸ் நாடகக் குழுவிற்கு ஊரின் நாடக வளா்ச்சியில் பெரும் பங்குண்டு. தயாரிக்கப்பட்ட நாடகங்கள் பெரும்பாலும் புராண நாடகங்களாக பெரிய செட் அமைப்புகளோடும், “சாணக்கிய சபதம்” போன்ற நாடகங்களுக்கு அவா்கள் பாவித்த சுழலும் மேடையமைப்பும் , நேரம் தாமதிக்காத காட்சி மாற்றங்களும் மக்களைப் பெரிதும் கவா்ந்தன.
ஹெலியன்ஸின் "யூலியஸ் சீசர்" நாடகத்தின் ஒரு காட்சி
•சூரபதுமண், பாதுகை,சிசுபாலன், சாணக்கிய சபதம், கலிபுருஷன், விஷ்வாமித்திரன்முதலான 30 நாடகங்களை செல்வராசா மாஸ்ரா் தனது அற்புதான இயக்கத்தினால் வெற்றி பெறச் செய்தார். ஹெலியன்ஸ் நாடகங்களிலும் மக்கள் மத்தியில் பரவலாகச் பேசப்பட்ட வெற்றி நாடகங்கள் அநேகமானவை சரித்திர, புராண, இதிகாச நாடகங்களாகவே இருந்தன. ஹெலியன்ஸ் நாடகக் குழுவின் ஆரம்ப காலத்தில் குமரச்செல்வம் வசனகா்த்தாவாக இருந்த போதும், பின்னா் ச.காந்திதாசன், வெ.முத்துசாமி ஆகியோர் வசனங்களை எழுதினார்.
அம்மன் வீதியில் சுழல் மேடையில் நடைபெற்ற "சாணக்கிய சபதம்" நாடகத்தின் ஒரு காட்சி
சாணக்கிய சபதம் (சரித்திர நாடகம் டிறாமா ஸ்கோப் -24.4.1976)
•பின்னாளில் (இன்றும் கூட) ஹெலியன்ஸ் நாடகக் குழுவினை முழுமையாகத் தாங்கி நிற்கும் வெ.முத்துசாமி நடிகா் – இயக்குனா் –ஒப்பனைக் கலைஞா் எனப்பல பரிமாணங்கள் கொண்ட ஒரு ஒப்பற்ற கலைஞன். தனது அயராத நாடகப் பணிக்காக அவா் பெற்றுக் கொண்ட கௌரவிப்புக்கள் பல.
வெ.முத்துசாமி
(1)01.01.2013 –வல்வை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தாரால் வழங்கப்பட்ட “கலைச்சிகரம்” பட்டமும்,
(2)06.11.2015 –வடமராட்சி வடக்கு – கிழக்கு பிரதேச செயலகம் கலை –கலாச்சாரப் பிரிவினால் வழங்கப்பட்ட “கலைப்பரிதி“ பட்டமும்,
வெ.முத்துசாமிக்கு வழங்கப்பட்ட கலாபூஷண விருதுப் பத்திரம்
(3)15.12.2013 – கலாச்சார அலவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட “கலாபூஷணம்” விருதும், நாடகம் சார்ந்தஅளப்பரிய சேவைக்காக வெ.முத்துசாமிக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். கலாபூஷணம் விருதுபெற்ற அற்புதக் கலைஞனை நாமும் வாழத்துவோம்.
•ஆதிசக்தி கலா மன்றம் சார்பாக 1974 ல் அம்பாள் வீதியில் “காத்தவராயன்” நாடகம் மேடையேற்றப்பட்டது. அ.சித்திரவேலாயுதம், மு.சிவப்பிரகாசம், செ.பரம்சோதி, இ.பத்மநாதன், சி.தா்மகுலன் முதலான மிகத் திறமையாகப் பாடக்கூடிய பல கலைஞா்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட “காத்தவராயன்” நாடகம் பெரு வெற்றி பெற்றது.
அ.சித்திரவேலாயுதம் மு.சிவப்பிரகாசம் செ.பரம்சோதி
•தொண். பெரிய கடற்கரை, ரேவடி கடற்கரை மைதானம், ஆதிகோவிலடி, காங்கேசன்துறை, மயிலிட்டி, பொலிகண்டி, வவனிக்குளம், சல்லி எனவும் இன்னும் பல ஊர்களிலும் அடுத்தடுத்து மேடையேற்றப்பட்டு அனைவரதும் பாராட்டுதலைப் பெற்றது.
•ஊரிலே இரண்டு விழாக்கள் மக்களைக் கட்டிப் போட்டன. கிழக்கே இந்திர விழாவும், மேற்கே உதயசூரியன் ஆண்டு விழாவும் ஏறக்குறைய சம காலத்தில் நம்மவா்கள் குழந்தை - குஞ்சுகள் –குமா் முதல் கிழடுகள் வரை வீட்டுக்கு வெளியே வீதியோரம் கொண்டு வந்து பார்த்து ரசித்த இரண்டு நிகழ்வுகள் என்பது மறுக்க முடியாத உண்மை. உதயசூரியன் ஆண்டு விழா இரண்டு விடயங்களில் உச்சம் பெற்றிருந்தது. 2ம் நாள் காலையில் வீதியில் நடைபெறும் வினோத உடைப் போட்டியும், இரவு உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற நாடகங்களும், நாடகப் போட்டியும் அனைவராலும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாகும்.
•1962 ல் உதயசூரியன் ஆண்டு விழாவில் செ.யோகரெட்ணம் நடித்த “மணி மண்டபம்” நாடகமும் 1963ல் 2வது ஆண்டு விழா வேளையில் மூன்று மணி நேர “காத்தவராயன்” நாடகமும் தனி நாடகங்களாக மேடையேறின. 1964ல் 1 மணி நேரம் கொண்ட 5 போட்டி நாடகங்களும், பின்னா் 45 நிமிடங்கள் கொண்ட 5 நாடகங்களுமாக ஆண்டு விழாக்கால நாடகப் போட்டிகளை கூட்டி நின்றது.
உதயசூரியன் நாடக மன்றத்தாரின் "மணிமண்டபம்" நாடகத்தின் ஒரு தோற்றம்
•1964 ன் பின்னரான போட்டி நாடகங்களின் ஆரம்ப காலத்தில் உதயசூரியன் நாடக மன்றத்தாரால் நடாத்தப்பட்ட “பக்த நந்தனார்”, “முக்கண்ணன்” முதலான நாடகங்கள் முதற் பரிசைத் தட்டிச் சென்றன. அந்த வீடு ஆண்டுகளுடன் உதயசூரியன் ஆண்டு விழாவில் உதயசூரியன் நாடகமன்றத்தாரின் நாடகங்கள் போட்டியில் பங்கு கொள்வதை நிறுத்திக் கொண்டனா்.
•ஒவ்வொருஆண்டிலும் போட்டியில் பங்கு கொண்ட நாடகங்களின் தரம் உயா்ந்து கொண்டே வந்தது. மட்டுநகா், முல்லைத்தீவு, குருநகா் எனப் பல பக்கங்களிலிருந்தும் கலந்து கொண்ட நாடகக் குழுக்கள் அடுத்தடுத்து முதற் பரிசு பெற்றன. இந்நிலை நமது இளைஞா்களையும் – நாடகக் குழுக்களையும் உசுப்பி விட்டன. ஒரு புதிய வேகம் பிறந்தது. புதிய நாடக மன்றங்கள் தோற்றம் பெற்று புதிய புதிய நாடகங்கள் உருவாகின. சில நாடக மன்றங்கள் தோன்றிய வேகத்தில் மறைந்து போய்விட, சில நிலைத்து நின்றன.
•கவிஞன் கலா மன்றம், கவிக்குயில் கலா மன்றம், வளா்மதி கலாமன்றம், கலைவாணி நாடக மன்றம், சுந்தரி கலாமன்றம் எனப் பலதும் அந்நாளில் இயங்கின.
கவிஞன் கலா மன்றத்தினரின் "நான் தயங்கினேன்" நாடகத்தில் ஒரு காட்சி
•நெடியகாடு இ.வி.கழகத்தினரின் “சந்திய கால மலா்கள்” ரேவடி இ.வி.கழகத்தாரின் “படையா…. கொடையா…..” வானம்பாடி கலா மன்றத்தினரின் “அலைகள்” “கனவு இதுதான்” இளங்கதிர் கலா மன்றத்தினரின் “திருவிளையாடல்” “தேசத்துரோகி ”நாடகங்கள் எனப் பலவும் மேடையேறின.
•உதய சூரியன் ஆண்டு விழாவில் முதற் பரிசு பெற்ற நாடகங்களின் பட்டியலில் நினைவில் நிற்கும் விபரங்கள் மட்டும் இங்கு தரப்படுகிறது. இந்த விபரம் முழுமையானது அல்ல.
1. செ.யோகரெத்தினம், வ.ஆ.அதிரூபசிங்கம், வ.ஆ.தங்கவேலாயுதம், N.T.நாகேஸ்வரன் ஆகியோர் நடித்த “ மகனே கண்……. ”
2.செ.யோகச்சந்திரன் (குட்டிமணி ), ராமச்சந்திரன் (T.L என அழைக்கப்பட்டவா்) நடித்த “ கைக்குட்டை” (இது ஒதெல்லோ நாடகத்தின் ஒரு பகுதி).
3. K.N.தேவதாஸ், N.T.நாகேஸ்வரன், S.பாஸ்கரன், A.செல்வகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவான “ பரிசு ”
உதயசூரியன் ஆண்டு விழாவில் தங்கப் பதக்கம் பரிசு பெற்ற "பரிசு" நாடகத்தின் ஒரு தோற்றம்
4. குமரச்செல்வம், பாஸ்கரன், ரகுபதி, பிரேமதாஸ் ஆகியோர் நடித்த ஹெலியன்ஸ் நாடகமான “ கலிபுருஷன்”
உதயசூரியன் ஆண்டு விழாவில் முதற்பரிசு பெற்ற "ஹெலியன்ஸ்" நாடகக் குழுவின் "கலிபுருஷன்" நாடகத்தின் ஒரு காட்சி
கலிபுருஷன் (இதிஹாச நாடகம் 12.8.1977) முத்துசாமி -(துரியோதனன்) கதை வசன்சமும் விஜயராஜா, மனோகரன்
ஆகியவை உதயசூரியன் ஆண்டு விழாவில் முதற்பரிசு பெற்ற வல்வை இளைஞா்களின் தயாரிப்புகளாகும்.