வாரம் ஒரு பழங்கதை - இந்திய பக்தி - வல்வையூா் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015 (திங்கட்கிழமை)
நமது அன்றைய பாய்மரக்கப்பல் காலத்திலிருந்தே நமக்கு இந்தியா மீது அளவுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் இருந்து வந்துள்ளது. இந்த அன்பு – பக்தி – பற்று – பாசம் – மரியாதை ஆகிய அனைத்தையும் பல்வேறு வழிகளிலும் பலவித முறைகளிலும் காலத்துக்குக்காலம் நாம் காண்பிக்கத் தவறியதில்லை.
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் எழுச்சி மிகுந்த பேச்சுகள் – எழுத்துகள், குறிப்பாக காந்திஜியின் போதனைகள் – அவரது எளிமையான வாழ்க்கை முறை – அவரது அகிம்சை வழிப்பாதை ஆகியவற்றில் நம்மவர்கள் ஈா்க்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
இந்த ஈா்ப்பானது படிப்படியாக பக்தியாக மாறி இங்கும் பலரையும் பற்றிக் கொண்டதுவும் உண்மை.சந்தியில் மெத்தைக்கடைக்கு ( A.K.பிரதர்ஸ் – அப்பு அண்ணா கடை ) வடக்குப் பார்த்தபடியான ஒரு பழைய கடை அது. இது மகாலிங்கம் அப்பா அந்நாளில் வீரசேகரி + ஈழநாடு பத்திரிகைகள் விற்பனை செய்த இடம். ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கத்தின் பேரனாரே மேற்குறித்த மகாலிங்கம் அப்பா ஆவார்).
அப்பா காலையில் கடையைத் திறந்ததும் அவரது முதல் வேலை – உள்ளே பக்குவமாகச் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்திய தேசியக்கொடியினை – எடுத்து வந்து வீதியில் நன்கு தெரியும் படிகட்டி விட்ட பின்னரே அவர் தனது நாளாந்த மற்றக் கருமங்களை ஆரம்பிப்பார். அவ்வளவு மனம் நிறைந்த பக்தி இருந்தது அப்பாவிடம்.
காந்தி ஜெயந்தி தினமெனின் ஊரேகளை கட்டி நிற்கும். நெடியகாடு பழைய மோர் மடத்தடியில் வைத்து, அம்பாள் கோவில் எட்டுக்கால் கேடகத்தினை சகடையில் வைத்து அலங்கரித்து (இந்திர விமானம் அல்ல), குடை – கொடி – ஆலவட்டம் முன்னே அணி வகுத்துச்செல்ல, சிறுவா்களாகிய நாம் சிறிய மூவர்ணக் கொடிகளை அசைத்தபடி, “ காந்திஜிக்குஜே ” “ அகிம்சா மூர்த்திக்குஜே” என முழங்கொண்டு ஊர்வலம் அம்பாள் கோவில் மோர் மடம் நோக்கிநகரும்.
ஊர்வலத்தின் முன்னே – கதர் ஆடையணிந்து – தலையில் குல்லாய் அணிந்து – கடையில் வழக்கமாகக் கட்டிக்கொள்ளும் நீண்ட மூவர்ணக்கொடியியைக் கையில் ஏந்திய படி மகாலிங்கம் அப்பா கம்பீரமாக நடந்து செல்லும் காட்சி கண்முன்னே நிற்கிறது.
கருக்கல் பொழுதில் ஆரம்பமாகும் ஊர்வலம் அம்பாள் மோர் மடம் வந்துசேர இருட்டிவிடும். இருளை விலக்க தலையில் சுமந்து செல்லும் காஸ் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. நமது பாவனையிலிருந்த பெற்றோமாக்ஸ் விளக்குகள் இடைக்காலத்தில் நம்மோடு வந்து சேர்ந்து கொண்டவை.
சந்திக்கு மேற்காக, A.S.குமரகுரு -முருகுப்பிள்ளை சித்தப்பா ஆகியோரின் வீடுகள் உள்ள ஒழுங்கை “ அப்பக்காத்தா் ஒழுங்கை ” எனப்படுகிறது. இந்த ஒழுங்கையில் வலதுகைப் புறமாக வரும் முதல் குறுக்கு ஒழுங்கையில் நேராக இருந்த தலை வாசல் வீடு“ நெடுவல் மாமா ” அல்லது “ நெடுவல் அப்பா ” என அழைக்கப்பட்டு வந்த சி.பரம்சோதி என்பவரது வீடாகும். (பாலச்சந்திரன் – நெடுவல் பாலி, புவனேந்திரன் ஆகியோரது தந்தையாரே“ நெடுவல் மாமா ”)
அந்த நாளில் ஒரு சில முதலாளிமாரின் வீடுகளே பெரிய கல் வீடுகளாக இருந்தன. நெடுவல் மாமாவின் வீடும் பெரியதாக – அழகான வீடாகவே இருந்தது. இந்த வீட்டின் முன் வரவேற்பறையில் கண்ணைக் கவரும் வண்ணம் பிரேம் செய்யப்பட்ட – ஒரே அளவினதான – அழகான புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
காந்தி, நேரு, சுபாஸ், லால்பகதூா்சாஸ்திரி, ராஜாஜி, கஸ்தூரிபாய், வல்லபாய்பட்டேல், கோகவே என வரவேற்பறையை அலங்கரித்த அத்தனை படங்களும் (ஏறக்குறைய 36 படங்கள்) இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களின் படங்களாகவே இருந்தன.
சோ்.பொன்இராமநாதன், சோ்பொன் அருணாசலம் போன்ற நமது அந்நாளைய தலைவர்கள் எவரதும் படங்கள் அங்கு காணப்படவில்லை. அவ்வளவு நிரம்பிய பக்தி நம்மிடம் இருந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோன்று காந்தி படங்கள் இல்லாத வீடுகளே அந்நாளில் இல்லை. காந்திஜின் அகிம்சை வழிப்போராட்டத்தைத் தவிர்த்து, இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்த சுபாஸ் சந்திரபோசின் படங்களும் காந்திஜின் படங்களுடன் அநேகமாக எல்லாப் படிப்பகங்களிலும் காணப்பட்டதை நீங்கள் பார்த்திருக்கிறீா்கள்.
1927 ல் காந்தியும் – நேருஜியும் இலங்கை வந்து இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றினா். 1927- நவம்பா் 26ல் வல்வைக்கு வந்து அம்பாள் வீதியில் சொற்பொழி வாற்றியபோது, காந்தியின் கதராடை இயக்கத்திற்காக அன்று உண்டியல் குலுக்கிச் சேகரித்த பணம் ரூபா 870 சதம் 25 கொண்ட பணமுடிப்பு வழங்கப்பட்டது. அன்றைய நாளின் ரூபா 870/= என்பது, இன்றைய நாளின் எட்டுலெட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியானது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காந்திஜி உயிரோடு இருந்த காலத்திலேயே அவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தவர்கள் நாம். வல்வைப் பெரியார் சி.செல்லத்துரைப்பிள்ளையவர்கள் 1939ல் சிவன் கோவில் ராஜகோபுரத்தைக் கட்டிக் கொடுத்தவா். ஐந்து நிலைக்கோபுரத்தின் தென்புற முதற்தளத்தில் மடி காலிட்டபடி அமர்ந்த நிலையில் காந்திஜிராட்டையில் நூல் நூற்றபடி உள்ள சுதைச்சிற்பம் முழுமையாக அழகாக பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். சுமார் 400 க்கும் அதிகமான அழகான சிற்பங்களால் நிறைந்துள்ள கோபுரத்தில் இத்தனை தெய்வங்களின் சிற்பங்களுக்கு மத்தியில் சரி நிகர்சமனாக, அந்நாளில் நடமாடிய காந்தியின் சிலையை வைத்தமையானது நமது இந்திய பக்தியை வெளிப்படுத்தி நிற்கும் நிலையான சான்று இது.
எல்லாவற்றிற்கும் மேலாக நம்மவர்களில் சிலருக்கு அந்நாளில் அக்கரையில் (தமிழ்நாட்டில் ) “ சின்னவீடு ” இருந்த கதைகள் பகிரங்கமானவை. இது ஒரு ரகம். அக்கரையில் திருமணஞ் செய்து மனைவியரை இங்கே அழைத்து வந்து குழந்தைகள் பெற்றுப் பெருகி வாழ்ந்து மறைந்த சிலரின் கதைகள் இன்னொருரகம், இரு தரப்பாரினதும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இரு கரையிலும் தொடர்புகளை வைத்துச் சொந்தபந்தங்களுடன் பேசிப்பழகி நெருக்கமாக உறவாடுவதை இன்றுங் கூட நாம் காண்கிறோம்.
மகாலிங்கம் அப்பா, வாடி ஒழுங்கைச் சீனி அம்மான், நடராசா வீதி அரு.சபாரெத்தினம், வேம்படி ஒழுங்கை வேற்பிள்ளை போன்ற நமது ஊரவர்கள் பலரும் காந்தியின் கதர் ஆடை இயக்கத்தில் ஈா்க்கப்பட்டு, தமது கடைசி காலம் வரை கதர் ஆடைகளையே அணிந்தார்கள் என்பதும் நம்மிற் பலரும் நேரிற்பார்த்தவை.
பாய்மரக்கப்பல் காலத்தின் பின்னரான இடைக்காலத்தில் ஊரின் செல்வாக்குச் சற்றே குறைந்திருந்த போதும், கடத்தற் தொழில் ஆரம்பித்த காலம் முதல் மீண்டும் வாய்ப்புகளும் – வசதிகளும் – செல்வாக்கும் பெருக ஆரம்பித்தன.
ஒரு சில முதலாளிமார்களின் கைகளில் மட்டுமே கட்டுப்பட்டிருந்த கடத்தற்தொழில் -நடுத்தர குடும்பத்திலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கைக்கும் பரவலாகியது.
தினமும் இக்கரைக்கும் அக்கரைக்கும் போய் வந்த வள்ளங்களில் போவோரும் வருவோருமாக இருந்த இளைஞர்கள் மூலம், தமிழ்நாடு அரசியல் நம் தலையிற் புகுந்து கொண்டன. குறிப்பாக அந்த நாளில் தி.மு.க அரசியலின் பாதிப்பு மிகக்கூடுதலாகவே இருந்தது. இதற்குக்காரணமும் இருந்தது. தி.மு.க தலைவர்களால் அந்நாளில் வெளியிடப்பட்டவிடுதலை, நம்நாடு, நம்தேசம், திராவிடம், திராவிடநாடு, சுயாட்சி, முரசொலி முதலான பல்வேறு பத்திரிகைகளும் வாரம் தவறாமல் வந்து மதவடி விக்னேஸ்வரா வாசிகசாலையிலும், கணபதி படிப்பகங்களிலும் நிரம்பிவழிந்தது.
இதையே வாசித்து வாசித்து நமது மூளையும் தி.மு.க கொள்கைகளால் நிரம்பித் ததும்பியது. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட வேளையில், இங்கே நாம் ஒலிபெருக்கியில் சோக கீதம் இசைத்து – ஒழுங்கைக்கு ஒழுங்கை ,சந்திக்குச் சந்தி இந்திராவின் படங்களை வைத்துக் குத்துவிளக்கேற்றி – பூச்சொரிந்து – மாலை சூட்டி நமது உள்ளுணா்வை வெளிக்காட்டத் தவறவில்லை.
இப்போதும் கூட காந்திஜெயந்தி நாளில் தவறாது காந்தி சிலைகளுக்கு மாலை சூட்டி மரியாதை செய்கிறோம். ஊருக்கு ஊர் உள்ள M.G,R நற்பணி மன்றங்கள் பணிகள் பல புரிவதையும் பார்த்துவருகிறோம்.
1989 ஆகஸ்ட் 2, 3, 4ம் தேதிகளில் வல்வையில் நடந்த சம்பவத்தில் நமது சொந்தபந்தங்கள் 63 பேரின் இன்னுயிர்கள் பறிக்கப்பட்ட சம்பவமே நாம் காலங்காலமாகக் காட்டி வந்த இந்திய பக்திக்குக் கிடைத்த பரிசாகும்.