வாரம் ஒரு பழங்கதை – சாதனையாளர் சத்திவேல் – வல்லையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2015 (புதன்கிழமை)
இவரது முழுப்பெயர் துரைசாமி சத்திவேல். வயது 62. ஊறணியில் இந்திராணி வைத்தியசாலையின் கிழக்குப் புறமாக உள்ள ஒழுங்கையில் இவரது வதிவிடம் உள்ளது. 1971ல் இவர் ஆரம்பித்த குருதிக்கொடையளித்து உயிர்காக்கும் உன்னதப் பணி இன்றுவரை தொடர்கிறது. அதனால் இவரது சாதனையின் பழங்கதையுடன் சற்றுப் பின்னோக்கி நகர்ந்து வந்து – 50 தடவைகள் குருதி கொடுத்த இவரது சாதனைத் தகவல் பற்றிக் குறிப்பது தவிர்க்க முடியாததாகிறது.
துரைசாமி சத்திவேல்
ஊருக்கும் – நமக்கும் சாதனைகள் ஒன்றும் புதியதல்ல. காலத்திற்குக் காலம் பல்வேறு வடிவங்களில் நமது ஊரின் சாதனைப் பட்டியல் தொடருகிறது. இந்த வரிசையில் – இன்றும் நீங்கா இளமையுடன் – நம்மோடு நடமாடி வருகின்ற ஒரு “மனிதனின்” மனித நேய அர்ப்பணிப்பு – மற்றவர்களையும் இப்பணியில் ஊக்குவித்து வரும் அவரது ஆளுமை – யாழ் இரத்த வங்கியுடன் இவருக்கிருக்கும் தொடர்புகள், இவருக்குக் கிடைத்துள்ள கௌரவங்கள் ஆகியவை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஊரவர்கள் எல்லோரதும் வாழ்வுக்கு வழிகாட்டிய சிதம்பரக் கல்லூரி துரைசாமி சத்திவேலையும் அரவணைத்துக் கொண்டது. 1971 ன் நடுப்பகுதி. யாழ் வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் சிதம்பரா மாணவர்கள் மத்தியில் குருதிக்கொடையின் அவசியம் பற்றி விரிவாக எடுத்தியம்பினர். இதனைச் செவிமடுத்த சத்திவேல் – அவர்கள் ஆற்றிய உரையைப் பூரணமாகப் புரிந்துகொள்ள முடியாத அந்த 18வது வயதில் – இன்னும் சில பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து முதன்முறையாகக் குருதியை வழங்கினார். 1973ல் பாடசாலையிலிருந்து வெளியே வரும் வரை இது தொடர்ந்தது.
பாடசாலைக் காலத்தின் பின்னரும் உள்ளூர குருதி கொடுக்க விருப்பமிருந்த போதிலும் எங்கே? எப்படி? எவ்வாறு? இந்தப் பணியினைத் தொடர்வது எனும் விபரம் அறியாத விளையாட்டு வயதினில், 1988 இலேயே இவரது அடுத்த குருதிக் கொடை இடம்பெற்றது. இடைப்பட்ட இந்த 15 வருட காலத்தை எவருக்கும் பயனற்ற வீண்காலமாகத் தான் கழித்து விட்டதை எண்ணி இன்றுங்கூட மிகுந்த கவலைப்படுகிறார்.
யாழ் முன்னாள் அதிபர் திரு.K. கணேஷ் அவர்கள் பதக்கம் அணியும் போது
சரியான விழிப்புணர்வும், வழிகாட்டலும் தனக்குக் கிடைத்திருந்தால் தன்னால் இன்னமும் 30 தடவையாவது குருதியினை வழங்கியிருக்க முடியும் எனும் ஆதங்கம் அவரது பேச்சில் புரிகிறது.
1988, 1989, 1990, 1992 ஆகிய காலப் பகுதியில் வல்வை ஊறணி வைத்தியசாலை – கரவெட்டி முதலான அயல் ஊர்களிலும் இடம்பெற்ற நடமாடும் இரத்தவங்கி முகாங்களைத் தேடிச் சென்று இந்த உயிர் காக்கும் உன்னதபணியில் இணைந்து கொண்டார்.
1990ல் பத்தாவது தடவையாக இரத்ததானம் செய்த சத்திவேல் அவர்களுக்கு யாழ் இரத்த வங்கியாளர் ஒரு பதக்கத்தை வழங்கினர். இது அவருக்குக் கிடைத்த முதல் கௌரவம். அந்தச் சிறு பதக்கத்தை மிகப் பக்குவமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார்.
எல்லோராலும் “முச்சந்தி முரளி” என அழைக்கப்பட்ட உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர் திரு. சுந்தரலிங்கம் அவர்கள் தான் – முதன் முதலாக துரைசாமி சத்திவேல் அவர்களைப் பேட்டி கண்டு வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார். திரு சுந்தரலிங்கம் அந்நாளில் நடாத்தி வந்த “பாவை” எனும் மாதாந்த கலை – இலக்கிய சஞ்சிகைக்காக இவரைப் பேட்டி கண்டு அனைவருக்கும் அடையாளம் காட்டினார்.
போர்ச் சூழழில் பலரும் வன்னி மண்ணுக்கு இடம்பெயர்ந்து போன வேளை இவரும் இடம் மாறி மல்லாவிப்பகுதியில் வசித்து வந்தார். 1996 ல் மல்லாவி- புதுக்குடியிருப்பு வைத்திய சாலைகளிலும் இன்னும் பல்வேறு முகாம்களிலும் பல தடவைகள் இவரது குருதிக் கொடை தொடர்ந்தது.
ஊருக்கு திரும்பி வந்து 2005 ல் மீண்டும் தனது உயிர்காக்கும் பணியினை ஆரம்பித்தார். 21- 09 – 2005 ல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த குருதிக் கொடையாளர் தின வைபவத்தில் 20 தடவைகளுக்கு மேல் குருதி வழங்கிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். யாழ் முன்னாள் அதிபர் திரு.K. கணேஷ் அவர்களினால் நமது கதாநாயகனும் மேடையில் கௌரவம் பெற்றார்.
இந்த வேளையில் அவரது சிந்தனையிலும் மாற்றம் வந்தது. தாமே தற்காலிக இரத்ததான முகாங்களை ஒருங்கமைத்து தன்னைப் போன்று இன்னும் பல இரத்தக் கொடையாளிகளை உருவாக்க வேண்டும் எனும் பேரார்வம் உந்த அம்முயற்சியில் தீவிரமாக இறங்கினார். யாழ். இரத்த வங்கி இவரது முயற்சிக்குப் பூரண ஒத்துழைப்பு நல்க முயற்சி விரிவடைந்து பலன்தர ஆரம்பித்தது.
டாக்டர். க.மயிலேறும் பெருமாள் அவர்கள் சத்திவேலுக்குப்
பொன்னாடை போர்த்தி – நினைவுப் பரிசு வழங்கும் போது
வல்வை ஊறணி வைத்தியசாலையிலேயே இவரது இரத்ததான முகாம்கள் கூடுதலாக ஒருங்கமைக்கப்பட்டன. வல்வை சந்தியில் உள்ள நகரசபைக் கட்டிட மேல்மாடி, வல்வை ச.ச.சே.நிலைய மேல்மாடி, கீழே – பஸ்தரிப்பு நிலையம், கணபதி பாலர் பாடசாலை, பார்வதி இலவச ஆங்கிலக் கல்வி நிலையம் போன்ற இடங்களிலும் முகாங்கள் ஒருங்கமைக்கப்பட்டன.
26 – 03 – 2006ல் ஊறணி வைத்தியசாலையில் நடந்த புலமைப் பரிசில் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில், வைத்திய அதிகாரியாகவிருந்த டாக்டர். க.மயிலேறும் பெருமாள் அவர்கள் சத்திவேலுக்குப் பொன்னாடை போர்த்தி – நினைவுப் பரிசு வழங்குவதனையும் இங்கே காண்கிறீர்கள்.
பரு – சக்கோட்டை தேவாலயங்கள், கொட்டடி கடற்தொழிலாளர் சங்க பணிமனை, பொலிகை குழந்தை யேசு கோவில், வல்வெட்டி சனசமூக சேவா நிலையம், தொண். செவ்வச் சந்நிதி திருவிழாக் கால முகாம் போன்ற ஊரை அண்மித்த பல்வேறு இடங்களிலும் தற்காலிக குருதிக் கொடை முகாங்கள் இவரால் ஒருங்கமைக்கப்பட்டன.
சத்திவேல் அவர்களின் முயற்சியின் பயனாக, இன்று நம் ஊரவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் குருதிக் கொடையளித்து உயிர் காக்கும் உத்தமப் பணியில் இணைந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் சிலர் 20 தடவைகளுக்கும் மேலாகவும், பலர் 10 தடவைகளுக்கும் மேலாகவும் குருதிக் கொடை அளித்தவர்கள்.
மேற்குறித்த பட்டியலில் உள்ள விநாயக மூர்த்தி தியாகலிங்கம் என்னும் அன்பர் வல்வெட்டியைச் சேர்ந்தவராவர். ஏனைய அனைவரும் நம் ஊரவர்கள் என்பது நமக்கும் பெருமையானதே.
பட்டியலில் உள்ள ‘கந்தசாமி முரளி’ 35 தடவைகளுக்கு மேல் குருதி கொடுத்துப் பெருமை பெற்றவர். இவர்களை விட 10 தடவைகளுக்கு மேல் குருதி கொடுத்தவர்கள் 37 க்கும் அதிகமானோர் உள்ளனர். உயிர்காக்கும் இந்த உத்தமர்களின் மனித நேய பணிக்காக நாமும் தலை வணங்குகின்றோம்.
சாதனையாளர் சத்திவேல் அவர்களின் குருதிக் கொடை குறித்த பேட்டிகள் – தகவல்கள் – செய்திகள் வெளிவந்த திகதி விபரங்களும் எழுதப் பட்டிருந்த தலைப்புக்களும்:
· 1994 வைகாசி – ஆடி இதழ் “பாவை” – பேட்டியாக
· 06.11.2015 – வீரகேசரி – இரத்ததானம் செய்து சாதனை படைத்தவர்
· - -- – மானிடன் – சாதனையாளர் சத்திவேல்
· 28.03.2006 – உதயன் – படத்துடன் செய்தியாக
· 14.06.2009 – உதயன் – 60 வயதில் 40 தடவை என்னும் பொருள் பட 60/40 என்னும் தலைப்பில்
· 03.07.2013 – வலம்புரி – குருதிக் கொடையாளரும் சிறந்த ஒழுங்கமைப்பாளரும்
2013 ஜூன் 14 இல் குருதிக் கொடையாளர் தினத்தில் அலரி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ அவர்களினால் – இவரது குருதிக் கொடையையும், குருதிக் கொடை முகாங்களின் சிறந்த ஒருங்கமைப்பாளர் எனும் தகைமையையும் பாராட்டி விருது வழங்கப்பட்டது. நமது பாரம்பரிய உடையான வேட்டி – சேட்டுடன் கம்பீரமாக மேடையேறி விருதினைப் பெற்றுக் கொள்ளும் படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ அவர்களினால் விருது வழங்கும் போது
“பாதியிலே உதிரவிருந்த எண்ணற்ற உயிர்களை உன்னதமான மனித நேயம் கொண்டு காத்து – தேசிய இரத்ததான சேவையுடன் இணைந்து –இடையறாமல் ஈடேற்றிய இலட்சியப் பணியை கெளரவிற்கும் முகமாக – உலக இரத்ததானம் வழங்குவோரின் தினத்தன்று இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மஷிந்த ராஜபக்ஷ அவர்களால் திரு.துரைசாமி சத்திவேல் அவர்களுக்கு இந்த ஞாபகார்த்த விருது வழங்கப்படுகிறது” எனத் தனித் தமிழில் எழுதப்பட்ட விருதினையே 2013-ஜூன் 14 இல் சத்திவேல் பெற்றுக்கொண்டார்.
விருது வழங்கல் நிகழ்வினில் ஜனாதிபதிக்கும் – சத்திவேலுக்கும் இடையே அந்நாளிலின் சுகாதார அமைச்சரும் – இந்நாளைய ஜனாதிபதியுமான கௌரவ மைத்திரிபால சிறிசேனா காணப்படுகிறார். இதையே இந்தப் புகைப்படத்தில் பார்க்கிறீர்கள்.
ஜூன் 14 உலகளாவிய குருதிக் கொடையாளர் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டினில் இத்தினம் விசேடமாகக் கொண்டாடப்படும். 2014 இல் இந்தப் பெருமை இலங்கைக்குக் கிட்டியது. இத்தினத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக “ குருதிக் கொடையினை மேன்மைப்படுத்தும் “ ஊர்தி பவனி மந்திகை வைத்தியசாலையிலிருந்து புறப்பட்டு – நெல்லியடி மார்க்கமாக யாழ்ப்பாணம் செல்லவிருந்தது. கடைசி நிமிடத்தில் ஊர்தி செல்லும் பாதை மாற்றப்பட்டு பரு.ஹாட்லிக் கல்லூரி ஊடாக வல்வெட்டித்துறை சந்திக்கு வந்து, பின்னர் அச்சுவேலி ஊடாக யாழ் சென்றது.
இந்தக் கடைசி நிமிட மாற்றம் துரைசாமி சத்திவேல் அவர்களின் குருதிக் கொடைக்கும் - ஒருங்கமைக்கும் திறமைக்குமான கௌரவமாக இருப்பினும் உண்மையில் அவர் சார்பாக நம் ஊருக்குக் கிடைத்த பெரும் கெளரவிப்பாகவே கருதப்பட வேண்டும். சந்திக்கு வந்த சேர்ந்த ஊர்தி பவனியாளர்கள் – சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் முறைப்படி உபசரிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இவரால் ஒருங்கமைக்கப்பட்ட 50வது இரத்ததான முகாமில் 50வது தடவையாக 24- 05-2015ல் வல்வைச் சந்தியிலுள்ள நகரசபைக் கட்டிட மேல்மாடியில் இரத்தத்தைத் தானமாக்கியமை இவரது உச்ச சாதனை எனலாம்.
யாழ் இரத்த வங்கிக்கு தொடர்ச்சியாக இரத்ததானம் செய்யும் குருதிக் கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 12 – 07 – 2015 அன்று யாழ் போதனா வைத்தியசாலை – தாதியர் பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. அன்றைய விழாவில் நமது ஊரின் முதன்மைக் குருதிக் கொடையாளி “துரைசாமி சத்திவேல்” அவர்களை “கௌரவ விருந்தினராக" அழைத்து மேடையில் அமர்த்தி, 1971 முதலான இவரது சாதனைகள அனைத்தையும் குறிப்பிட்டு “உயிர் காக்கும் உத்தமர்” என வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் யாழ் இரத்த வங்கியினர்.
மேடை ஏறிப் பேசியறியாத சத்திவேல் அவர்களின் அன்றைய உணர்வுபூர்வமான உரை கேட்டு பார்வையாளர்கள் பலரும் கண் கலங்கி நின்றனர். மேடையில் உரையாற்றிய போதும், சாதனை விருதினைப் பெற்றுக் கொண்ட போதும் எடுத்த புகைப்படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய (30 – 07 – 2015) தினக்குரல் பத்திரிகையில் நமது கதாநாயகனின் புகைப்படத்துடன் கூடிய நீண்ட செய்தி வெளியாகியிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
50 முறை குருதி கொடுத்த கௌரவத்திற்கு உரியவர் நம்மவர் என்பதில் நாமும் பெருமைப்படலாம். திரு.துரைசாமி சத்திவேல் அவர்கள் இன்னமும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து பணிகள் பல புரிய நாமும் வாழ்த்துகிறோம்